New Novel ‘1975’ Excerpt : கொல்லங்கோடு சுதேசி

Excerpt from the novel ‘1975’ being written

“நீங்க வறுமைக்கோட்டுக்கு கீழே இருக்கப்பட்டவர் இல்லையா?” மதுரை நிருபர் கண்ணாடியைத் துடைத்துப் போட்டபடி கேளு நாயரைக் கேட்டார். நாயர் பலமாகத் தலையசைத்து மறுத்து, ‘ஞான் கொல்லங்கோடு சுதேசி’ என்றார்.

“அரசின் மக்கள் நலத்துக்கான நடவடிக்கைகள் உங்கள் வாழ்க்கையில் ஒளியேற்றி வைத்திருக்கின்றன என்கிறீர்களா?”

கேளு நாயர் முழிக்க, ‘இவங்க வீட்டு கூடத்துலே மோதிலால் நேரு, இந்திராம்மா, அப்புறம் அவங்க அத்தை அவஙக் மாதிரியே ஆம்பளை கிராப் பண்ணியிருப்பாங்களே”, என்று பீடிகை போட்டார் நமது நிருபர். விஜயலட்சுமி பண்டிட்டா என்று எடுத்துக் கொடுத்தார் மதுரை நிருபர்.

“இல்லே ஓப்போள் நேரு”.

கேளு நாயர் விடாமல் பிடிக்க, நான் ஓப்போள் என்றால் அக்கா, மலையாள பேச்சு வழக்கு என்றேன்.

என்னென்னமோ விதமாகக் கேட்டுச் சரணம் பாடி, ஒவ்வொரு சரணத்தின் முடிவிலும் பல்லவிக்குத் திரும்பி வருவது மாதிரி, ‘ இந்திரா காந்தியின் இருபது மற்றும் சஞ்சய் காந்தியின் ஐந்தம்சத் திட்டத்தால் விளைந்த நன்மை இது. அப்படித்தானே’ என்று கேட்க, வெறுத்துப் போய் இருபத்தைந்து அம்சத் திட்டத்தால் தான் வீட்டில் தேனீ வளர்த்து அதிகத் தேனும், அதனால் அதிக வருவாயும், அதனால் அதிக உணவும், அதனால் அதிகத் தலைமுடியும் வந்தது என்று கேளு நாயர் ஒப்புக் கொண்டார் ஒரு வழியாக. முடியே போச்சு.

பாருகுட்டியைக் கண் மூடிப் படுத்தபடி புகைப்படம் எடுத்து எமர்ஜென்ஸியில் எல்லோரும் ஆனந்தமாகத் தூங்குகிறார்கள் என்று போடப் போகிறார்களே என்ற முன்யோசனையோடு, அவளைக் கிடந்த கோலத்தில் படம் பிடித்தால் , நெருக்கடி நிலையால் அழகான பெண்கள் வாழ்க்கை அவலமாகிறது என்று அர்த்தம் சொல்லப்படலாம் என்று பயமுறுத்த நிருபர்கள் அதெல்லாம் எதுக்கு போட்டோ, பாத்தா போதாதா எழுத என்று எழுந்து கேளு நாயரின் படத்தைச் சிரித்தபடி போஸ் கொடுக்கச் சொல்லி எடுத்தார்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன