New Novel ‘1975’ -Excerpts – ஷம்மிகபூர் லாஜிக்கே இல்லாமல் பக்கவாட்டில் திரும்பி போஸ் கொடுத்துக்கொண்டு நிற்கும் படம்

சில வினாடிகளில் அந்த வளர்ப்புத் தேனிக் கூட்டம் முற்றும் விலகி வெளியே பறக்க, கரண்ட் வந்து விட்டது. நாங்கள் மெல்ல முன்னறைக்கு ஜாக்கிரதையாக நகர்ந்து பார்க்க, அங்கே காந்தி படம், நேரு படம், சுபாஷ் படம், ராஜாஜி படம், அப்புறம் பிரதமர் படம் முழுக்கக் கண்ணுக்குத் தெரியவில்லை. அத்தனை தேனீயும் அவர் முகத்தில் தான். கொஞ்சியதோ, கொட்டியதோ, தெரியாது.

“ராணித் தேனி ஒய்வு ஒழிச்சலா வெளியே வந்தா அந்தப் படத்துலே தான் எப்பவும் போய் உட்காரும். கூடவே மத்த சிப்பந்திகளும் அங்கே போயிடும்” கேளு நாயர் விளக்கியபோது, நான் ஜாக்கிரதையாக பாருக்குட்டியிடம் இருந்து விலகி நின்று “அது எல்லாம் மறுபடி இதே பாதையிலே கூட்டுக்குத் வருமா?” என்று பயத்தோடு கேட்டேன். “ஈ வழி திரிச்சு வரில்ல’ என்றாள் கியாரண்டியாக.

கழுகு பறந்து இரையைப் பார்த்து இறங்குவதுபோல் சைக்கிளில் வந்து சேர்ந்த நிருபர் கார்மேகம் ஆபீஸ் முடிந்த சாயந்திரம் என்னிடம் கேட்டது குமரேசன் பற்றி இல்லை. “கேளு நாயர் வீட்டுலே தேனீ எல்லாம் பிரதமர் போட்டோ மேலே தினசரி சாயந்திரம் அஞ்சு டூ அஞ்சரை உக்கார்ந்து வழிபாடு நடத்தறதாமே. ஒரு நியூஸ் ஐட்டம் தமிழ்லேயும் இங்க்லீஷ்லேயும் இருபது வாக்கியத்துலே எழுதிக் கொடுங்க தம்பி. அடுத்த மாசம் ஏழெட்டு கல்யாணம். மொய் எழுத காசுக்காகும்” என்றார். “அது சரி, ஆர்டிஓ இல்லேன்னா கட்சி பிரமுகரோ அதைப் படிச்சுட்டு தேனியைக் கொட்ட விட்டு நடத்தற அவமரியாதைன்னு கேளு நாயரைப் பிடிக்க வந்துட்டா பேஜார்” என்றேன். பேஜார் என்றால் என்ன என்று மட்டும் கேட்டுவிட்டுக் கிளம்பினார் கார்மேகம். சைக்கிளில் ஏறியபடி அவர் சொன்னது, “நம்ம குமரேசன் வந்தாச்சு”. கடையில் தான் இருக்கிறார் என்று துப்பு கொடுத்துப் போனார்.

நட்டநடு நாற்காலியில் உட்கார்ந்து படுசோகமாகக் கடைச் சுவரில் மேல் வரிசையில் காந்தி, நேரு தொடங்கி இந்திரா, பருவா, பூஜாரி வரைக்குமான தலைவர்களின் புகைப்படங்களை வெறித்துக் கொண்டிருந்தார் குமரேசன். அவர் பார்வை கொஞ்சம் கீழே பட்டால், முந்தானை விலகி பக்கவாட்டு போஸில் எல்லா நடிகைகளும் தரிசனமளிப்பார்கள். லாஜிக் இல்லாமல் ஷம்மிகபூரும் பக்கவாட்டில் எதற்கோ திரும்பிப் போஸ் கொடுத்து கொண்டிருப்பார். டிபிகல் சலூன்கடை படங்கள் அவை. அந்தப் படங்களை உற்பத்தி செய்து மலிவு விலையில் விற்க இருபதில் எந்த அம்ச அடிப்படையில் லோன் தரலாம் என்று யோசித்தேன்.

(Excerpt from the novel ‘1975’, being written)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன