கை நடுக்கம் போனால் கலையும் போகும்

மொழிபெயர்த்துக் கொண்டிருக்கும், திரு.என்.எஸ்.மாதவன் எழுதிய ‘லந்தன் பத்தேரியிலெ லுத்தினியகள்’ நாவலில் இருந்து ஒரு சின்னஞ்சிறு பகுதி

மசாலாப்பொடியை எட்வின்சேட்டன் நகமுனையால் அளந்து, வெந்த இறைச்சி மேல் தூவினார். அதன் மேல் மூன்றில் ஒருபாகம் சோற்றைப் பரப்பினார். தண்ணீர் விட்டுக் கரைத்திருந்த மஞ்சள்பொடியை அவர் சோற்றின் மேல் தெளித்தார். அதன் மேல் எட்வின்சேட்டன் இன்னொரு மெல்லிய அடுக்கு சோற்றைப் பரப்பினார். அதன்மேல், வறுத்த முந்திரிப் பருப்பும், உலர்ந்த திராட்சையும், வெங்காயமும். இன்னொரு நகக்கண் அளவு மசாலாப்பொடி. மேலே, இன்னொரு அடுக்கு சோறு. மஞ்சள்பொடி கரைத்த நீர். மேலே, மிச்சமிருந்த சோறு. ரோஸ்வாட்டர். மேலே தம் மசலாப்பொடி கொஞ்சம் போல. மாதாகோவிலில் பூசை வைக்கிறதை நோக்குவது போல, கூடியிருந்தவர்கள் எட்வின்சேட்டன் சமையல் செய்வதை நோக்கி நின்றார்கள்.

அரிசிமாவை நீர்விட்டுப் பிசைந்து விரலளவு கனத்தோடு கூடியதாக நீட்டி எடுத்து, வேலையாட்கள் எட்வின்சேட்டனிடம் கொடுத்தார்கள். வாணலியின் மேல் அடைத்து மூடி, சட்டியும், மூடியும் தொட்டுப் போகும் வரையை முழுவதுமாக அரிசி மாவு நாடாவால் அடைத்தார் எட்வின்சேட்டன். அது முடிந்ததும், கொஞ்சம் எரியும் தீக்கங்கு எடுத்து மூடி மேல் வைத்தார். கூடி நின்றவர்களைப் பார்த்துச் சொன்னார் எட்வின்சேட்டன் : “இதான் தம். வாணலிக்குள்ளே இப்போ சித்திரையிலே கத்தரி வெய்யில் அடிக்கறதுக்கு பத்து மடங்கு அதிகமான சூடு இருக்கும். இறைச்சியோட ஜூசும், வாசனை திரவியங்களும் ஒண்ணோட ஒண்ணு தீவிரமா முட்டிமோதி ஒரு கைகலப்பு நடக்குது அங்கே. நான் இதுவரைக்கும் மூவாயிரத்துக்கு மேல் பட்ட இடங்கள்ளே பிரியாணி சமைக்க தம் வச்சிருக்கேன். இருந்தாலும், என் அன்பர்களே, தம் வைக்கும் போது கை நடுங்காமல் இருந்ததில்லே. கை நடுக்கம் போனால் கலையும் போகும். தம் வச்சு முடிச்சு திறக்கற போது என்ன ஆகியிருக்கும்னு எனக்கு இப்போவும் தெரியாது. நாம மனுஷ இனமாச்சே. என்ன நடக்கப் போகுதுன்னு முன்கூட்டியே தெரிஞ்சா, வேதப் புஸ்தகம் எதுக்கு?”

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன