பிரியாணியின் கதை

மொழிபெயர்த்துக் கொண்டிருக்கும் நூலில் இருந்து ஒரு சின்னஞ்சிறு பகுதி

எட்வின்சேட்டன் சற்றுநேரம் ஏதும் பேசாமலிருந்தார். பிரியாணி அவர் மனதை விட்டு வெளியே போகவில்லை. மூன்று விரல்கடை ரம் கிளாஸ்களில் ஊற்றிக் கொண்டு அப்பன் கேட்டார் : “எட்வினே, நீர் பிரியாணி செய்ய எங்கே கத்துக்கிட்டீர்?”

“எங்க அப்பன்கிட்டே தான். இல்லாம வேறே எங்கே? சாட்சாத் வெடியிறைச்சி விந்தாலு தோபியாஸ் பக்கத்திலேயே இருந்துதான். அப்பனுக்கு பிரியாணி செய்யறதோட தியரியும் தெரியாது. பிராக்டிகலும் தெரியாது. ஒரு பாரசீகத்தான் அவருக்கு அதை கத்துக்கொடுத்தான். பிரியாணிக்கு ரெண்டு பாணி உண்டுன்னு அப்பன் சொல்லிக் கேட்டிருக்கேன். முதலாவது வடக்குப்பாணி. லக்னோ ஸ்டைல். அவர் இறைச்சியும், சோறும் தனித்தனியா வேகவச்சு அசெம்பிள் செய்து தம் வச்சு பிரியாணி செய்யறது. இன்னொண்ணு தெற்குபாணி. தெற்கிலே நிஜாம் நாடு ஹைதராபாத் ஸ்டைல். எல்லாத்தையும் அவியல் மாதிரி ஒண்ணாப் போட்டு வேகவிடுவாங்க. நாம இங்கே செய்யறது வடக்கு ஸ்டைல் பிரியாணி”.

“அப்போ அரபிகள்? அவங்க இல்லையோ கள்ளிக்கோட்டைக்கு பிரியாணி கொண்டு வந்தது?”

“சொன்னா நம்ப மாட்டீர், வலிய ஆசாரி. அரபிக்கு பிரியாணி செய்ய கத்துக் குடுத்தது யாரு? நம்ம மலையாளி முஸ்லீம் ஆளுங்க தான். இல்லேன்னா யாரு? அரபிகளோட முட்டாப்பய ஊர்லே இருந்து லொட்டு லொடுக்குன்னு அவங்க கொண்டு வரது என்ன? பேரீச்சம்பழம்.. இங்கே இருந்து அவங்க கொண்டு போறது? மரத் தடி, ஓடு, பிரியாணி செய்ய வேண்டிய சரக்குகள். ஒட்டகத்து மேலே உக்காந்து குலுங்கிக் குலுங்கி பொழுது சாய கூடாரத்துக்குப் போனதும் இம்புட்டு பிரியாணி கிடைச்சா அவங்களுக்கு சொர்க்கம் மாதிரி.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன