மெதுவாக கட்சிப் பத்திரிகையை நுழைக்கணும்

மலாக்கா ஹௌஸின் முதல் மாடியில் இருக்கும் முதலாவது அறையைத் திறந்துகொண்டு ராகவன் சொன்னார்: “இது தான் ஜனநாயக வாலிபர் கூட்டமைப்பு ஆபீஸ். தோழர் இங்கே படுத்து உறங்கலாம்”. சொல்லியபடி, அவர் ஒரு மெழுகு வர்த்தியை ஏற்றினார். “ஏன் இங்கே முழுக்க மர பெஞ்சு போட்டு வச்சிருக்கு?” என்று ஷெனாய் கேட்டார்.

“சமயத்துலே மூணு நாலு பேருக்குப் புகலிடம் கொடுக்க வேண்டிப் போகும். அதனாலே தான்”

”இங்கே உள்ளூர்க்காரங்க யாரும் வரமாட்டாங்களா?”

“வர்ற வழக்கமில்லே. கட்சியை தடை செஞ்சதாலே அது ஜனநாயக இளைஞர் கூட்டமைப்புன்னு மாறுவேஷத்துலே வந்திருக்குன்னு எல்லாருக்கும் தெரியும். மாதாகோவில் செல்வாக்கு இருக்கப்பட்ட இடம் இது. கடைசி ரூமுக்குப் போறபோது சில இளைஞர்கள் இங்கே பார்த்துக்கிட்டு போவாங்க. அவ்வளவுதான்”.

“கடைசி ரூம்லே என்ன இருக்கு?”, ஷெனாய் கேட்டார்.

”குந்தன் மியூசிக் கிளப். குந்தன் அப்படீன்னா, குந்தன்லால் சைகல். பிரபல இந்தி சினிமா பாடகர்”.

“இங்கேயும் ஆளுங்க வரணும். அதுக்கு என்ன வழி? நாமும் பாடலாமா? நாம பாட்டுப் பாடினா, வர்ற ஜனமும் ஓடிப் போயிடும். அதனாலே, பாட்டுப் பாடறவங்க கூட நாம் ஒரே அணியிலே சேர்ந்து நிற்கணும். குந்தன் மியூசிக் கிளப் ஆளுங்களோடு நட்பாகப் பழகணும். அப்புறம், இங்கே பத்திரிகை வாங்கிப் படிக்கப் போடணும். காலையிலே எர்ணாகுளத்திலே இருந்து வர்ற தீனபந்து. பகல்லே, மதராஸ்லே இருந்து தி ஹிந்து. மாத்ருபூமியும் வரவழைக்கணும். அதிலே எதுகை மோனையோடு நல்ல கவிதைகள் வருது. பத்திரிகை படிக்க, ஆளுங்க மெல்ல வர ஆரம்பிப்பாங்க. அப்போ, எனக்கொண்ணும் தெரியாதேங்கற மாதிரி மெதுவா கட்சிப் பத்திரிகை தேசாபிமானியை நுழைக்கணும்”.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன