விடுபட்டவை

 

லேப்டாப் உபயோகிக்க ஆரம்பித்தவுடன் (ஆச்சு, அதுவும் நாலு வருஷமாக) வீட்டுக் கணினி எப்போதாவது பிரிண்ட் அவுட் எடுக்க, ஸ்கேன் செய்ய மட்டும் பயன்பட்டு வந்தது.

இன்றைக்கு என்னமோ தோன்றியது. அந்தக் கணினியில் பழைய .pst கோப்பை அவுட்லுக்கில் திறந்து பார்ர்க, திறக்காமலே போன ஒரு கடிதம். சுஜாதா சார் எழுதிய இதை எப்படி தவற விட்டேன்?

From: rangarajan S [mailto:writer_sujatha@hotmail.com]
Sent: Thursday, July 07, 2005 2:11 PM
To: $$$$@sify.com
Subject: RE: hi from era.murukan (with an interesting blog entry I read today)

send one book first preferably a poetry collection if any. I know you re a
versatile writer I have read your bombay based story sometime back
Come to ambalam 19 cathedral garden rd on saturday 11 30 if you re free
Desikan also might be there let us meet and talk about cabbges and kings
Sujtha

நான் என்ன கேட்டிருந்தேன்? யாருடைய கவிதைத் தொகுப்பு? என் எந்தக் கதையைச் சொல்கிறார்? முட்டைகோசும் அரசர்களும் – என்ன விஷயமாக பேசிக் கொண்டிருந்தோம்? *****ஒன்றுமே நினைவில் இல்லை. ஆனாலும் உறுத்துகிறது.

வாத்தியாருக்கு ஒரு வரி பதில் எழுதியிருக்கக் கூடாதா?

இந்த வாரம் இன்னொரு மனக் குமைச்சலும் கூட உண்டு.

போன திங்களன்று மிக நேர்த்தியாக வடிவமைத்த நாவல் ஒன்று தனியஞ்சலில் வந்து சேர்ந்தது. நித்தியகீர்த்தி எழுதிய ‘தொப்புள்கொடி’.

அட்டையில் போட்டிருந்த இளம்பெண் நித்தியகீர்த்தியா என்று சம்சயம். தெரிந்த முகமாக, ரஜனி திரணகமவின் அன்பு மகள் சாரிகா போல இருந்தது.

ஆற அமரப் படிக்கலாம் என்று மேசையிலேயே வைத்து விட்டு வேறு வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்தேன். வலையில் வேறு ஏதோ தேடப்போக திருமதி சந்திரவதனா பதிவு கண்ணில் பட்டது – ‘தீபாவளி அன்று நித்தியகீர்த்தி மாரடைப்பால் காலமானார்’.

ஒரு வரி, ஒரே ஒரு வரி அவருக்கு கடிதம் எழுதிப் போட முடியாமல் அப்படி என்ன வெட்டி முறித்தேன்?

அசோகமித்திரன் சிறுகதை நினைவு வருகிறது. கீழ் போர்ஷன் காரரைப் பார்க்க வந்து கதவு தட்டி அலுத்துப் போன ஒருத்தர் மேல் மாடியில் இருக்கிற கதைசொல்லியோடு உரையாடுவார். காது சரியாகக் கேட்காத கீழ் போர்ஷன்காரருக்கு ஒரு வேலைக்கான உத்தரவு காத்திருப்பதாகவும் இன்னாரை சந்திக்க வேண்டும் என்றும் செய்தி. மேல் போர்ஷன்காரர் அவரைச் சந்திக்கும்போது சொல்லி அனுப்பி வைக்கக் கோரிக்கை. அவர் மறந்து விடுவார். அடுத்த நாள் கீழ்ப்போர்ஷன் வாசி இறந்ததாகத் தெரிய வரும் . சொல்ல மறந்து போன தகவலின் கனம் அழுத்த கதைசொல்லி மனக்குமைச்சலோடு நிற்பதோடு கதை முடியும்

புரிகிறது, அசோகமித்திரன் சார்.

*********************************

சாயந்திரம் ஸ்ரீநிதி சிதம்பரம் தலைமையில் ஒரு நடன அரங்கேற்றம். நீலாம்பரியையும் மத்யமாவதியில் ஹரிவராசனத்தையும் கேட்டபடி நாட்டியத்தில் ஒரு கண்ணும் மனதில் உள்பார்வை பார்த்தபடி மற்ற்துமாக அரையிருட்டில் அமர்ந்திருக்க மசங்கலாக நினைவு வருகிறது.

1) யார்க்ஷையர் காடாறு வருஷம் கழித்து வந்திருந்த நேரம் அது. லண்டனில் நண்பர் பத்மநாப அய்யர் தாய்வீட்டு சீதனமாக கட்டி அனுப்பியிருந்த புத்தகங்களின் பட்டியலையும் ஒவ்வொன்றைப் பற்றிய சிறுகுறிப்பையும் வாத்தியாரோடு பகிர்ந்து கொண்டேன். அவர் கடித்த்தின் முதல் வாக்கியம் அதைக் குறித்து.

2) அரசூர் வம்சம் நாவல் முடித்த கையோடு அதன் தொடர்ச்சியாக இரண்டு நாவல் எழுதத் திட்டமிட்டு கள் ஆய்வும் படிப்புமாக ஏகப்பட்ட தகவல் சேகரித்திருந்தேன். இத்தனையும் வந்தால் நாவல் தகவல் குப்பையாகி விடாதா, எப்படி எழுதப் போகிறேன் என்று அவரோடு கவலையைப் பகிர்ந்து கொண்டிருந்தேன். அவர் க்டிதத்தின் அடுத்த வாக்கியம் நம்பிக்கை டெக்ஸ்ட்ரோஸ் ஐ.வி ஏற்றுகிற ரகம். அந்த மருந்து வேலை செய்ய ஆரம்பித்து ‘விஸ்வரூபம்’ முடிகிற கட்டத்தில் இருக்கிறது. இன்னொரு ஷாட் ஊசி ஏற்றத்தான் டாக்டர் இல்லை.

3) மந்திரவாதியும் தபால் அட்டைகளும் மற்றும் ஐம்பது பைசா சேக்ஷ்பியர் ஆகிய என் சிறுகதைத் தொகுப்புகளை அதற்கு ஒரு வருடம் முந்தி அனுப்பியிருந்தேன். மும்பாய் பின்னணியில் பகல் பத்து ராப்ப்த்து குறுநாவல் தொகுப்பு தவிர இந்தப் புத்தகங்களில் நாலைந்து மும்பாய்க் கதைகள் உண்டு. மும்பை மழைக்காலப் பின்னணியில் ஒரு குறுநாவல் எழுதக் கூட திட்டமிட்டிருந்த நினைவு. அது சம்பந்தமாக இருக்கக் கூடும் அடுத்த வாக்கியம்.

ஆனாலும் அந்த கிங்க்ஸ் அண்ட் காபேஜஸ் இன்னும் நினைவு வரவேயில்லை..

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன