இன்று

 

55 வயதுக்கு மேல் வேறு யாராவது குழந்தை எழுத்தாளர் ஆகியிருந்தால் அவர்களுக்கு ஒரு காட்பரீஸ. காட்பரீஸ் என்ற சொல் காணாமல் போவதற்குள் சேதி சொல்லவும். அமெரிக்க சந்தை அசுரன் (giant-க்கு சரியான தமிழ்ச் சொல் என்ன?) க்ப்ராஃப்ட் ஃபூட்ஸ் hostile takeover ஆக பிரிட்டன் உலகுக்கு அறிமுகப்படுத்திய முதல் மில்க் சாக்லெட்டை கவர்ந்து போயிருந்தால் காட்பரீஸ் காணாமல் போகலாம்.

இந்த நினைவோடை காட்பரீஸ் பற்றி சத்தியமாக இல்லை. நான் ‘சுட்டி விகடன்’ பத்திரிகையில் எழுத ஆரம்பித்திருக்கும் கம்ப்யூட்டர் பத்தி பற்றி.

சுட்டி விகடன் காலம் எழுதுவதற்கும் இத்தனை நாள் விடாப்பிடியாக ‘வீட்டில் லுங்கி’ ஆசாரத்தைக் களைந்து ஷார்ட்ஸுக்கு மாறியதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.——————————————————————–

மெட்ராஸ் பிளேயர்ஸ் ஆர்.கே.நாராயணனின் ‘சுவாமியும் சிநேகிதர்களும்’ நாவலை மேடையில் கொத்துக் கறியாக்கியதை மால்குடியில் அலையும் ஆர்.கே.என் ஆவி மன்னிக்காது. மாமா வயசு பையன்களை சுவாமியாகவும், ராஜம், மணியாகவும் மேடையில் நிறுத்தி பீட்டர் விட வைப்பதற்குப் பதில், ஷங்கர் நாக் தூர்தர்ஷனுக்காக இயக்கிய ‘மால்குடி டேஸ்’ சி.டி கிடைத்தால் வாங்கி திரைக்காட்சியாக அளிக்கலாம். எல்.வைத்தியநாதனின் தொடக்க இசையே மால்குடியை மனதில் உருவாக்கி விடும்.

———————————————————-

மம்முட்டி நடித்த சி.பி.ஐ டயரிக் குறிப்புகள் சினிமாத் தொடர் மாதிரி கேரளத்த்தில் ஸ்டீரியோடைப் கொலைக் குற்றங்கள் இன்னும் தொடர்வது வியப்பு. செங்கண்ணூர் கார்ணோர் (காரணவர்) வில்லா வழக்கு இப்போதைய பரபரப்பு. நம்ம வடுவூர் ஐயங்காரின் கருங்குன்றத்துக் கொலை வழக்கு இதுக்கு உரை போடக்காணாது.

ஆமா, ஐயங்கார் எகிப்திய ஃபேரோக்கள் வடகலை ஐயங்கார்கள் (or the other way round) என்று நிரூபித்துப் புத்தகம் போட்டிருக்கிறாராமே – நண்பர் திருமலை கட்டுரை. பாரோக்களுக்கு மடிசார் கட்டிய mummy-in-law வாய்த்திருக்க வாய்ப்பு உண்டா?

———————————————————————–

பெட்டி
( ஓர் அறிமுகம்)

‘மூன்று விரல்’ நாவலை நான் எழுதி எட்டு வருடமாகி விட்டது. அந்த உலகம் இல்லை இன்றைக்கு இருப்பது. நானும் தான் மாறி விட்டேன். அனுபவங்களின் கனம், அழுத்தம், அவை மனதில் பூசிப்போன இனிப்பும் கசப்பும் துவர்ப்புமான நினைவுகள் என்று இந்த மாற்றம் ஒரு தளத்தில் நிகழும்போது இன்னொரு புறம் நடை, வடிவம், கலை இலக்கியத் தேடல் எனப் புதிய பாதைகளில் எழுத்துப் பயணமும் தொடர்ந்தபடி தான் இருக்கிறது.

கணினித் துறை பற்றிய மூன்று விரல் நாவல், இண்டெர்நெட் குமிழி உடைந்த 90-களின் கால கட்டத்தைப் பின்புலமாகக் கொண்டது. 2007-ன் பிற்பகுதியில் உலகம் முழுக்க இருட்டுத் திரளாகக் கவிந்த பொருளாதார நெருக்கடியில் சர்வதேச வங்கிகளும் பெரும் நிதி நிறுவனங்களும் ஆடி அலைக்கழிந்து காணாமல் போக, அவற்றின் பக்க பலத்தில் வளர்ந்து கொண்டிருந்த கம்ப்யூட்டர் சாப்ட்வேர் உருவாக்கிப் பராமரிக்கும் தொழிலும் நசித்துப் போக ஆரம்பித்தது. மற்ற முன்னேறும் நாடுகளைவிட இந்தியாவின் இதன் தாக்கம் மிகவும் அதிகம்.

கடும் உழைப்பு, நல்ல ஊதியம், அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா என்று ஒரு கண்டம் விடாமல் கடல் கடந்து சதா பயணம், புது மெகா ப்ராஜக்ட்கள், புது சிநேகிதர்கள், புதிய சவால்கள் என்று உயிர்ப்போடு இயங்கிக் கொண்டிருந்த கணினித் துறையில் சட்டென்று ஒரு தேக்கம். ஆட்குறைப்பு, சம்பளக் குறைப்பு, புது ப்ராஜக்ட்கள் வரவு குறைந்து அறவே இல்லாமலும் போனது என்று நிலைமை மாற, கம்ப்யூட்டர் பெட்டிக்காரர்களின் எதிர்காலம் பற்றிய நிச்சயத்தன்மை குறையத் தொடங்கியது. இன்னும் இது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. விரைவில் மாறும் என்ற நம்பிக்கை இப்போது வந்திருப்பது உண்மைதான். ஆனாலும் காத்திருப்பின் வலிகள் எத்தனையோ கணினி மென்பொருள் ஊழியர்களை ஆழமாக பாதித்திருக்கின்றன. தொழில் ரீதியாக, மனோரீதியாக, தனிமனித, சமுதாய வாழ்க்கை முறை மாற்றங்களாக இவை கணினித் துறையைக் கடந்து இவர்களோடு உறவும், நட்புமாகத் தொடர்புள்ள மற்றவர்களையும் வெகுவாகப் பாதித்திருப்பதும் தவிர்க்க முடியாமல் போய்விட்டது.

மூன்று விரலின் தொடர்ச்சியாக அதே பாத்திரங்களை இப்போது உலாவ விட்டு இந்த அதிமுக்கியமான நிகழ்வை ஒரு கணினித் துறை சார்ந்த எழுத்தாளன் பார்வையில் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று அவ்வப்போது எண்ணம் எட்டிப் பார்ப்பது உண்டு. நண்பர் கிரேஸி மோகன் தொடர்ந்து வற்புறுத்துகிற ஒரு விஷயம் ‘மூன்று விரலைத் தொடர்ந்து மற்ற விரல்களையும் சீக்கிரம் நீட்டி மடக்கவும்’.

பின் நவீனத்துவ நாவல், பத்திரிகைப் பத்தி, சினிமா திரைக்கதை வசனம் என்று என் எழுத்து பாணி மூன்று விரல் காலத்தை விட்டு நிறையவே விலகி வந்திருக்கிறது என்பதை உணர்கிறேன். ஆனாலும் கணினித் துறையைப் பற்றிய நாவலுக்கு அந்தப் பழைய ஓட்டந்துள்ளல் நடை தான் சரிப்படும் என்பது புரிகிறது.

அன்று இறங்கிய ஆற்றில் இன்னொரு முறை நீராட முடியாதாமே. ஆனாலும் ஆறு இன்னும் இருக்கிறது. நானும். அந்தளவுக்கு ஆசுவாசம். திரும்பி வருகிறேன்.

சுதர்சனும், புஷ்பாவும், ராவும், இன்னும் பலரும் விரைவில் உங்களைச் சந்திக்கப் போகிறார்கள். அவர்கள் மூலம் நாம் உரையாடலைத் தொடர்வோம்.

எங்கே? யுகமாயினி சித்தனைக் கேட்க வேண்டும். சித்தன் போக்கு சிவன் போக்கு.

ஞாயிறு 15 நவம்பர் 2009 8:35

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன