குமார அசம்பவம்

 

ஏதோ ஒரு பக்கம் இரா.முருகன்

‘பரமசிவன் விதவன். தெரியுமா?’

கேட்ட நண்பர் டால்கம் பவுடரையாவது கொஞ்சம் போல் நெற்றியில் பூசாமல் வெளியே புறப்படாத சைவர். ஒன்றுக்கு ரெண்டு பெண்டாட்டி உள்ள பரமசிவனைக் கைம்பிள்ளை ஆகச் சொன்னதின் சூட்சுமம் புரியாமல் விழித்தேன்.

‘காளிதாசனின் குமார சம்பவம் படி’ என்றார் அவர். சிருங்காரச் சுவை கொண்ட கவிதை ஆச்சே. மொழிபெயர்ப்பு கிடைத்தால் யாருடைய மைனர் விளையாட்டு சம்பவங்களை அந்த மகாகவி விவரித்திருக்காரோ, தெரிஞ்சுக்கத் தடை ஏது?
அடுத்த நாளே அவர் திரும்பி வந்து, லிப்கோ வெளியிட்ட கெட்டி அட்டை போட்ட ‘குமார சம்பவம்’ தமிழ் உரை புத்தகத்தை நீட்டினார்.

நான் நினைவு தெரிந்து படித்த முதல் தலகாணிப் புத்தகம் லிஃப்கோ டிக்ஷ்னரி தான். பத்து வயதுப் பையனுக்கு இந்தக் கையில் லிஃப்கோ அகராதி, அந்தக் கையில் ரென் அண்ட் மார்ட்டின் இங்கிலீஷ் இலக்கணப் புத்தகம் என்று ஒன்றுக்கு ரெண்டாக தலகாணிகளை வாங்கிக் கொடுத்தார்கள் வீட்டுப் பெரியவர்கள். தினம் அதில் ஒரு பக்கம், இதில் ஒண்ணு என்று கிரமமாக மனப்பாடம் செய்து வந்தால், வெள்ளைக்காரனையும் தோற்கடிக்கற இங்கிலீஷ் பேசலாம் என்று வேறு ஆசை காட்டினார்கள் டர்பன் கட்டிய அந்தப் பொடிமட்டை வக்கீல் குமஸ்தர்கள்.

மனப்பாடத் தொந்தரவு மிகுந்த காலம் அது. பள்ளிக்கூடத்துத் தமிழய்யா தினசரி ஐந்து திருக்குறள் காணாப் பாடமாகப் படித்து ஒப்பிக்கச் சொல்வார். வரலாறு சொல்லிக் கொடுக்கிற வாத்தியாருக்கு சம்பந்தமே இல்லாமல் சாயந்திரம் தன்னோடு கூட நாங்களும் கோவிலில் ஓதுவார் சொல்லச் சொல்ல ‘நமச்சிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க’ என்று திருவாசகம் முழுக்கச் சொல்ல வேணும் எனப் பிடிவாதம். இன்னும் அல்ஜீப்ரா தியரி, ராகுகால சார்ட், சென்னை எழும்பூரில் இருந்து வரிசையாக ராமேஸ்வரம் வரை போட் மெயில் என்ற ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் நின்று போகிற மெயின் லைன் சாதா ஸ்டேஷன், ஜங்ஷன் பெயர்கள், சரளி வரிசை, ஜெண்டை வரிசை, பிரபவ, விபவ என்று வருடப் பெயர்கள், மேடம், மிதுனம், கர்க்கடகம் என்று மாதப் பெயர்கள் இப்படி எத்தனையோ பட்டியல்களை உருப்போட்ட காலம் அது. கொசுறாக இப்போ லிஃப்கோ, ரென் அண்ட் எவனோ.

லிஃப்கோ டிக்ஷ்னரி கொஞ்சம் அகராதிதான். இங்கிலீஷ் வார்த்தைக்குத் தமிழ் அர்த்தம் கொடுத்து அங்கங்கே கட்டம் கட்டி முக்கியமான சொற்களை எப்படி யார் கையாண்டிருக்கிறார் என்று மேற்கோள் வேறே காட்டியிருப்பார்கள். ‘நல்ல பிள்ளையாக இரு’, ‘தினமும் தியானம் செய்’ போல புத்திமதிகள், பல நாட்டுத் தலைநகர்கள், தலைவர்கள், தேசியப் பறவை, தேசிய கீதம் என்று பல பட்டடைப் பட்டியல்கள் மானாவாரியாகத் தென்படும். அகராதி வாங்கிக் கொடுத்த பெரியவர்கள் மூக்குக் கண்ணாடியோடு போய் வாங்கியிருந்தால், இதையெல்லாம் பார்த்து ஆனந்தக் கண்ணீர் விட்டிருப்பார்கள். அன்னிக்கு ஆரம்பித்து, இன்றைய தேதி வரைக்கும் விடாமல் தினசரி மனப்பாடம் செய்ய அதில் விஷயம் உண்டு.

நல்ல வேளை. குமார சம்பவவம் லிஃப்கோ புத்தகத்தை நீட்டிய அன்பர் இதை மனபப்பாடம் செய்யாவிட்டால் கழுவேற்றுவேன் என்று பயமுறுத்தவில்லை. ‘பையப் பதறாமப் படிச்சுட்டு வேறே யாருக்காவது கொடுங்க, அருமையான நூல்’ என்ற அறிவுரை மட்டும் சொல்லிவிட்டு போனார். வடமொழி அட்சரம் தெரியாதவர் அவர்.

சுவாரசியமான புத்தகம் தான். காளிதாசன் கவிதையை மொழிபெயர்ப்பில் படிக்கும்போது மூல காவியத்தின் கவிதானுபவமும் நாடக அனுபவமும் கிடைக்காவிட்டாலும் கம்பீரமான தொனியும், அருவியாகப் பொழியும் சிருங்காரமும் அவன் மகா கவிஞன் தான் என்று சொல்லாமல் சொல்கின்றன.

இமயவன் மகள் இமவதியை மணந்து, அவள் உயிர் நீத்த பிறகு (அப்படித்தான் இருக்கு) சிவன் ஒற்றையனாகக் காடு, மலைப் பிரதேசங்களில் சுற்றுவதை மகாகவி அழகாக விவரிக்கிற பகுதியின் நான் தேடிய விதவன் தகவலும் வருது.

புத்தகம் முடிய இன்னும் ஒரு அத்தியாயம் தான் பாக்கி. பக்கத்தைப் புரட்டுகிறேன்.

இதென்ன, தமிழும் வடமொழியும் அடுத்தடுத்து இருக்காமல் இந்த அத்தியாயம் மட்டும் முழுக்க சம்ஸ்கிருதத்தில் அச்சாகி இருக்கு? ஏதாவது பிழையா?

அச்சுப் பிழை இல்லை. கருத்துப் பிழை. ஒரு மடாதிபதி சொன்னாராம் – ‘இந்த அத்தியாயத்தில் மன்மதன் அம்பு பட்டு காதல் வசப்பட்ட சிவன் பார்வதியைப் பார்த்து திரும்ப இல்லறச் சுவையில் மூழ்குவதாக வருகிறது. சிருங்காரம் பெருகிச் சொட்டும் இந்த வரிகளை மொழிபெயர்த்துக் கொடுத்தால் படிக்கிறவர்கள் காமம் மிக்கூறிக் கெட்டுப் போய்விடுவார்கள். ஆகவே இதை மொழிபெயர்க்காமல் மூலத்தை மட்டும் கொடுத்துடு போதும். உலகம் உய்யும். நாராயண நாராயண’.

மடத்து உத்தரவை சிரமேற்கொண்டு காளிதாசன் காவியத்தையே சென்சார் செய்து பதிப்பித்தது அறுபதுகளில். அதாவது அயத்துல்லா கொமேனி பட்வாவுக்கு முன்பே இங்கே மட்வா வந்து விழுந்திருக்கிறது என்பது நன்றாகப் புரிகிறது.

ஆனால் இது மட்டும் புரியவில்லை – அதெப்படி வடமொழியில் படித்தவர்களுக்கு காளிதாசனின் வரிகளில் இருக்கும் சிங்காரம் கிளர்ச்சியை உண்டு பண்ணாது, தமிழில் படித்தவர்களை மட்டும் பெண்பித்து பிடித்து அலைய வைக்கும்? வடமொழி படித்தாலும் அரைக்குக் கீழே ஜீவனோடு இருக்க முடியும் என்றே நம்புகிறேன்.

8888888888888888888888888888888888888888888888888888888888888888

புத்தக வெளியீட்டுக்காக லண்டனில் இருந்து வந்திருக்கும் நண்பர் பத்மநாப ஐயரோடு கதைத்துக் கொண்டிருந்தபோது நம்ம ஊர் வித்வான்கள் தமிழிசையை ஒரு கை பார்க்கிறதை எடுத்துக் காட்டினார்.

‘ஒரு பிரபல வித்துவான் காய்ச்சின பால் என்று வரும் இடத்தில் எல்லாம் கச்சின பால் என்று பாடுகிறதைக் கவனிச்சிருக்கீங்களா?’ ஐயர் கேட்டார்.

குறில் நெடில் வித்தியாசம் தெரியாமல் சபா மேடையில் காளிதாசனாக வித்துவான் கச்சு அவிழ்த்ததுக்கு இணையாக மலையாளப் பத்திரிகையில் நம்ம தமிழ்ப் பெயர்களைத் தொடர்ந்து ஒரு வழி பண்ணி எழுதி வருவதைக் குறிப்பிடலாம்.

தமிழாச்சி என்று போட்டிருந்தார்கள். ‘சாரே, ஆச்சியில்லை. அசல் சென்னைத் தமிழ்ச் சேச்சி. குறிலாக்கி, தமிழச்சின்னு போடும்’ என்று மெனக்கெட்டு தொலைபேசியில் விளித்துத் திருத்தம் சொன்னேன். ‘சோரி’ சொன்னார்கள்.

ரெண்டு நாள் கழித்து அதே பத்திரிகையில் எதிர்க்கட்சிப் பிரமுகர் செங்கோட்டையனைப் பற்றிய செய்தி. செங்கோட்டையன் குறிலாக இடையில் குறுகி அவதாரம் எடுத்திருந்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன