ஏதோ ஒரு பக்கம்

 

சமீபத்திய சந்தோஷங்களில் ஒன்று ‘ரெட்டைத் தெரு’ குறும்பட வெளியீடு. பொது நிகழ்ச்சிகள் நடத்துவதில் சென்னை வழக்கத்தை விட மற்ற ஊர் வளமுறை கொஞ்சம் இறுக்கம் தளர்ந்திருப்பது வாடிக்கை. அது சில சமயம் ஓர் ஆசுவாசம் தரும். பல நேரங்களில் எரிச்சலையும் உண்டாக்கும். இந்த ‘சரி, செஞ்சுடலாம்’ ரிலாக்சேஷன் அரசுத் துறை அதிகாரிகளில் இருந்து ஆரம்பிக்கும்.

ஒரு பிற நகர் கூட்டத்தில் கலந்து கொண்டபோது ஏழெட்டு வயசுப் பிள்ளைகள் அணி அணியாகப் பொரிவெய்யிலில் பழைய மரபெஞ்சுகளில் காத்திருந்தார்கள். குறுக்கும் நெடுக்குமாக நடைபழகிய நாலைந்து வாத்தியார்கள் காதில் இந்தப் பிஞ்சுகளின் ‘சார், தண்ணி சார் தண்ணி’ கோரிக்கை விழவே இல்லை. பசியும் தாகமுமாக இப்படி இளைய தலைமுறை ஒரு மணி நேரம் தவித்துக் கொண்டிருக்க, சர்க்கார் சிங்கம் பொறித்த அம்பாசிடர் கார் வந்து நின்றது.ஆபீசர் குதித்து இறங்கி கெத்தாக மேடைக்கு நடக்கிறார். பளபள என்று பித்தளை வட்டு மின்ன குறுக்கு வாட்டில் டவாலி அணிந்த சேவகர் ஏழெட்டு ஃபைல் கட்டுகளை சுமந்து நாலு அடி தள்ளி ஓட்டமும் நடையுமாக பின்னாலேயே வருகிறார். அதிகாரி மேடைக்கு நாலு அங்குலம் முன்னால் நட்டமாக நிற்க, டவாலி பாய்ந்து முன்னால் ஏறி சர்க்கார் காகித மூட்டையை ஒரு ஓரமாக வைத்து விட்டு நாற்காலியை நேராகப் போடுகிறார். ஆபீசர் அப்புறம் தான் அதில் ஆரோகணிக்கிறார். கூட்டம் தொடங்கலாம் என்று அவர் பெரிய மனசு பண்ணித் தலையசைத்தபோது கிட்டத்தட்ட ரெண்டு மணி நேரம் தாமதமான ஆரம்பம். ‘சார், தண்ணி’ குரல்கள் எல்லாம் வாத்தியார்களால் அடைக்கப்பட்டு மயான அமைதி.

அதிகாரிக்குக் கொடுத்த மாலை ஒரு வினாடி கழுத்தில் இருக்க, அப்புறம் தொடர்ந்தால் தோள்பட்டை வலிக்கும் என்று பட, அவர் டவாலியிடம் கண்காட்டுகிறார். உடனே, கையில் மரியாதையோடு அந்த மாலையைப் வாங்கி டவாலி அரசுப் பணியாற்றுகிறார். தொடர்ந்து பொன்னாடை, வெளியிட்ட புத்தகம், பூச்செண்டு என்று எல்லாமே அவரிடம் அடைக்கலம் ஆகின்றன. ஆபீசர் குளித்து விட்டுக் கோவணம் துவைக்கக் கூட டவாலி சகாயம் வேணும் போல் இருக்கு.

அதிகாரி ‘திருவள்ளுவர் அன்றே சொன்னார் கற்க கசடற’ என்று அவருக்குத் தெரிந்த ஒரே திருக்குறளை கார்வையோடு மைக் முன்னால் எடுத்து விடும்போது சட்டைப் பையில் இருந்து செல்போன் சத்தம். மேடையில் நின்றபடிக்கே செல்போனை எடுத்து, ‘அலோ, சொல்லுங்க. நேத்தே அனுப்பிட்டேனே, டெஸ்பாட்ச் கிளார்க் கிட்டே விசாரியுங்க, அப்புறம் மிசஸ் புகார் சொல்றாங்க. எதுங்க, ஆமா, வல்லாரை லேகியம்தான். வாங்கி அனுப்பிடுங்க’ என்று முழுக்கூட்டத்துக்கும் திருமதியின் மலச் சிக்கல் பற்றித் தகவல் சொல்லி விட்டு திருவள்ளுவரை திரும்ப தாடியைப் பிடித்து இழுக்கிறார். ‘கற்க கசடற கற்பவை கற்றபின்’. மறந்து போச்சு. ‘இந்த அருமையான குறளுக்கு என்ன உட்பொருள், சிந்தித்துப் பார்த்தோம் என்றால்’. அலட்டாமல் தொடர செல்போனில் அடுத்த அழைப்பு. ‘என்ன ஜேம்ஸ், டெண்டர் நோட்டீஸுக்கு ஒரு காரிஜெண்டம் போட்டு பத்திரிகைக்கு கொடுத்திடுங்க, டேவணித் தொகை குறைச்சுப் பார்க்கலாம். வந்து கையெழுத்துப் போடறேன். என்ன உட்பொருள் என்றால், செய்கிற காரியத்தைத் திருந்தச் செய்’. அவர் நிறுத்தி டவாலியைப் பார்க்க, அன்னார் பிளாஸ்கில் இருந்து சுக்கு வெள்ளத்தையோ திப்பிலி கஷாயத்தையோ மரியாதையோடு ஸ்டீல் டம்ளரில் வார்த்து நீட்ட திருவள்ளுவரும், கூட்டமும், ‘சார் தண்ணி’ பசங்களும் இன்னும் காத்திருக்க வேண்டிப் போனது. ஆனாலும் அடுத்தநாள் உள்ளூர் எடிஷன் செய்தித்தாளில் அதிகாரி பேசி முடிக்காத முழுப் பேச்சும் அவர் பேசுகிற புகைப்படத்தோடு வந்திருந்தது. வல்லாரை லேகியத்தைக் காணோம் அதில்.

‘ரெட்டைத் தெரு’ கூட்டம் இந்த இடையூறுகள் எதுவும் இன்றி நடந்தது. வெளியிட்ட போலீஸ் கமிஷனர் படத்தை முன்பே பார்த்து கவனமாக குறிப்புகள் தயார் செய்து வந்திருந்தார். திரைப்பட இயக்குனர் ஜனநாதனும், ஆய்வாளர் திருநாவுக்கரசும் அதேபடிக்கு. ‘எழுத்தாளர் நடித்த திரைப்படங்கள் உண்டு. ஆனால் உலகக் குறும்பட வரலாற்றிலேயே எழுத்தாளர் எழுதி நடித்த முதல் குறும்படம் ரெட்டைத் தெரு தான்’ என்று திருநாவுக்கரசு சொல்லி விட்டு உட்கார்ந்தார். என் டீஷர்ட் கழுத்தை இறுக்கிப் போட்ட பொத்தான் அவிழ்க்க முடியாத காரணத்தால் அவர் சட்டைக் காலரைத் தூக்கி விட்டேன்.

மதியம் எழுத்தாளரோடு கலந்துரையாடல் என்று அறிவித்துவிட்டு அடுத்த நிமிஷம் கூட்டமே காணாமல் போனது. மதுரை பக்கம் முன்பெல்லாம் ‘சாப்பிடறீங்களா’ என்று விசாரிப்பார்கள். இப்போது அதெல்லாம் கிடையாது போலிருக்கு. நாலு கிளாஸ் பச்சை வெள்ளம் குடித்து நான் வெற்று அரங்கத்தில், அவர்கள் எல்லோரும் விருந்து சாப்பிட்டு வரக் காத்திருந்தேன். அப்புறம் ரெண்டு மணி நேரம் பேசி, விஸ்காம் மாணவர்களைக் கேள்வி கேட்க வைத்து பதில் சொன்னேன். இலக்கிய, கலைச் சேவை எப்படி எல்லாம் செய்ய வேண்டி இருக்கு!

8888888888888888888888888888888888888888888888888888888888888888

சிவகங்கை நான் பார்க்காத ஐந்து வருஷத்தில் ஏகமாக மாறிவிட்டது. மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் தொகுதி. ஊரில் பெயருக்குக் கூட ஒரு தெரு இல்லை. வெட்டி, மண் குவித்து, மழை பெய்து குளமாகித் தேங்கி ஒரு அழகான ஊர் அவலட்சணமாக மாறி இருக்கிறது. ரெண்டு வருஷமாக பாதாளச் சாக்கடை தோண்டுகிறேன் என்று இப்படித்தான் தொடர்ந்து கொண்டிருக்கிறதாம். மானம் காத்த மருது பாண்டியர்களின் வாரிசுகள் ரொம்ப பொறுமையோடு அதையெல்லாம் தாண்டி குதித்து ஆறுமுகம் மிட்டாய் ஸ்டாலில் அல்வா சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதுதான் ஏகமாகக் கொடுக்கப்படுகிறதே.

ஆசிரியர் முகுந்தன், பாலு சார் இருவரையும் சந்தித்தபோது எனக்கு நாற்பது வருடம் முன் வகுப்பெடுத்த பள்ளி, கல்லூரி ஆசிரியர்களின் இன்னும் உயிரோடு இருக்கும் நல்லோர் ஒவ்வொருவராக தேக சிரமத்தையும் பொருட்படுத்தாமல் தேடி வந்து பொன்னாடை போர்த்துகிறார்கள். ரெட்டைத் தெரு படத்தை இங்கேயே வெளியிட்டிருக்கலாமோ? கிட்டன் கடை இட்டலியாவது கிடைத்திருக்கும்.

பாலு சார் சிவகங்கை சரித்திரத்தை ஆங்கிலத்தில் எழுதிய புத்தகத்துக்கு நான் அளித்த ஆங்கில முன்னுரையை அவசர அவசரமாக ப்ரூப் பார்க்கிறேன். வேலு நாச்சியாரின் இறுதிக் காலம் பற்றி இதுவரை நான் கேள்விப் படாத தகவல்களை முகுந்தன் அடுக்குகிறார். நடமாடும் வரலாற்றுக் களஞ்சியம் இவரும் பாலு சாரும்.

‘கான்சாகிப் சண்டை’ நாட்டுப் பாடல் புத்தகம் இந்த இரட்டையர்களால் அன்பளிக்கப் படுகிறது. புரட்டிய பக்கத்தில் 1730-களின் சிவகங்கை பற்றிய வர்ணனை கண்ணில் படுகிறது.

ஆரேழு பார்ப்பார வீடுமங்கேயுண்டு
கூவவங்கே கோழி கிடையாது வந்து
குலைக்கவும் நாய் இல்லை.

சிவகங்கை அந்தக்காலப் பார்ப்பனச் சேரியோ என்று தெரியவில்லை. ஆனால் 27.1.1730 அன்று நகர் நிர்மாணிக்கப் பட்டது மட்டும் நிச்சயமாகத் தெரிகிறது.

அடுத்த ஜனவரி சிவகங்கை நகர் பிறந்த நாள் கொண்டாட வேண்டும் என்று யாருக்குக் கோரிக்கை வைக்க வேண்டும்? ப.சி ரொம்ப பிசி. சிவகங்கையை ஒரே ஒரு தடவை வந்து பார்த்து விட்டுப் போகும்படி அவரைக் கேட்டுக் கொள்ளலாம். கவனிக்கா விட்டால், இன்னும் பத்து வருடம் கழித்து ஜனவரி 27-ல் பிறந்த நாள் கொண்டாட அந்த அழகான ஊர் இருக்குமா என்பதே சந்தேகம்.

(yugamaiyini Sep 2010)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன