நகர் வெண்பாவும் பதில் கவிதையும்

 

மூணே முக்காலுக்கு எழுந்து டி.வியைப் போட்டு, யூ டிவி ஓர்ல்ட் சானலில் ஆர்ட் பிலிம் பார்த்தபடி உடற்பயிற்சி செய்கிற சந்தோஷத்தை விபாசனா உபன்யாசச் சக்கரவர்த்தி (வாஸ்வானி?) கெடுத்துத் தொலைத்தார். சானல் சானலாக தேடி நல்ல படம் செலக்ட் செய்து அப்புறம் உடல் பயிற்சி தொடங்க ஐந்து நிமிடம் அதிகம் பிடிக்கிறது.

இன்றைக்கு மறுபடி செ குவேராவின் வாழ்க்கைக் கதையான ‘ மோட்டார்சைக்கிள் டயரி’ பார்த்து விட்டு வேக நடைக்கு நடேசன் பூங்காவில் நுழைந்தேன்.நடையோடு மனதில் வெண்பா எழுதி எட்டு சுற்று சுற்றி வந்து கொஞ்சம் இளைப்பாறும்போது குறுஞ்செய்தியாக நண்பர்களுக்கு அனுப்புவது நண்பர் கிரேசி மோகன் மூலம் ஒட்டிய பழக்கம் அவர் இப்போது குமார சம்பவம் காவியத்தை வெண்பாவாக மொழிபெயர்த்து ஒரு நாளைக்கு இருபது வெண்பா அனுப்பிக் கொண்டிருக்கிறார். தினசரி திருச்சி வரை நடந்து போய்த் திரும்பி வருகிறார் என்று நினைக்கிறேன்.

இன்றைக்கு நான் எழுதிய நடை வெண்பா – நகர் வெண்பா இது:

கழிப்பறை நிர்வகிக்கும் கால்தளர்ந்த தாயீ
அழிக்கம்பி ஊடேநீர் ஊற்ற – மழித்ததோர்
மொட்டைத் தலையர் குளிப்பாட்டப் பிள்ளையார்
இட்டமுடன் நீராடப் பார்

(நகர் வெண்பா 15 அக்டோபர் – பூங்கா வினாயகருக்குப் பொதுக்கழிவறைக் குழாய் நீர்பிடித்துத் திருமஞ்சனம்)

வெண்பா அனுப்பிய உடனே பதில் கவிதை – திரு.கமல் ஹாசனிடம் இருந்து :

கால் தளர்ந்த தாயம்மாள்
நீர் சுமப்பாள்
சோறு சமைப்பாள்
என் கவிதையைக் குளிப்பாட்டப்
பால் சுமப்பாள்
சேயெனக்குப் பீயள்ள
நாம் பணித்த தாயம்மாள்
எங்கள் வீட்டுக் கழிப்பறைகள்
அனைத்தும் நாறாது காத்த நங்கை
என் சிறுவயது கிழத்தோழி
தாயம்மாள் நினைவாக

அவருடைய ‘தாயம்மாள்’ விகடனில் வெளியாகி இன்னும் விவாதிக்கப் பட்டுக் கொண்டிருக்கிறது. விமர்சனம் செய்யப்படுகிறது. காலையில் தொடங்கிய அவருடைய கவிதை மழை மாலை வரை தொடர்கிறது. இதுவரை மூன்று முழுக் கவிதைகள் படித்துக் காட்டி விட்டார்! எல்லாம் இன்று எழுதியவை.

நகர் வெண்பாவால் இப்படியும் நல்ல விளைவுகள்.

அண்மையில் நடந்தபடி எழுதிய இன்னும் சில வெண்பா – குறட்பாக்கள்

சுப்ர மணியைச் சுமந்துபோய் ரெண்டுநாள்
சப்பரம் நகர்த்தியே சவாரி – அப்பால்
குடம்தாங்கித் தண்ணடியார் கூட்டம் நகரும்
வடம்பிடிக்கப் பின்னால்நீ வா.

(Sivagangai தேர்த் திருவிழா 1980 பற்றி நடைவெண்பா

கிரேஸி மோகன் மெரினா வாக் போனபடி அக்கமகாதேவி கவிதை வெண்பா அனுப்ப, நடேசன் பூங்காவில் நடந்தபடி நம்ம பதில்வெண்பா )

உப்பெடுக்கக் கோலூன்றி காந்தி நடந்ததைச்
செப்புமே சத்யா கிரகமென்றே -இப்புவியும்
காலூன்றி மோகன் கடற்கரை ‘வாக்’போக
மேலெழுமே நெஞ்சில் சிரிப்பு

மச்சாவ தாரம் மறையும் கடலில்
கச்சோடு செம்மீனாய் ஷீல

தெக்கத்தி ஆட்கள் சினிமா வரவரக்
கக்கத்து வாடை அடிக்கி

(WalKuRaL)

பூங்கா சுவர் பற்றிப் பிடித்து
ஓங்கி உயர்ந்து தொப்பை வைத்தவர்
ஒரு மணி நேரமாய்க் காலை உயர்த்தறார்
உயர்த்தி மடக்கி மீண்டும் உயர்த்தறார்
இன்னும் நனையவில்லை சுவர்

(verse libre)

பூங்கா நடையில் புதிதாக ஓர்குரல்
ஏங்கி அழுமோர் குழந்தையை -ஓங்கிச்
சிரசில் குட்டி மிரட்டுரார் தந்தை
‘சிரிடா’. தெரபி சிரிப்பு.

படியேறி மூச்சிறைக்கப் பால்பாக்கெட் வைத்துத்
தடுமாறிப் போகின்றாள் தாயி – நொடியில்
அறையெங்கும் பாலாறு அக்கிழவி பாவம்
குறையொன்றும் இல்லைகண் ணா

(நடந்தபடி நகர்வெண்பா)

கொண்டலப்பக் கோனின் உடன்பிறந்த பெட்டையாம்
அண்டங்காக் கைக்கானை குஞ்சு

பாட்டா’கடை நிர்வாகி பாச்சா அகத்தினில்
லேட்டாகக் கண்ணன்வரக் காலடிகள் நோட்டமிட்டார்
சேட்டாநான் தரவா சொகுசாக soulவைத்த
எட்டாம்சைஸ் sandal செருப்பு

அஞ்சாட்சி செய்யும்வரை ஆன்மா விழிக்குமோ
ஆராய்ச்சி நூறாய்ச்சி ஆயர்மனை – மோராச்சு
பையக் கடைந்து பசுவெண்ணெய் இன்றுண்ண
அய்யங்கார்க் கண்ணாநீ வா

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன