அச்சுதம் கேசவம் – அத்தியாயம் பத்து

அச்சுதம் கேசவம் – அத்தியாயம் பத்து

எத்தனைவது முறையாகவோ லண்டன்.

வைத்தாஸ் உலகத்தில் எங்கே இருந்தாலும் தேடிக் கண்டுபிடிக்கப் பட்டு உடன் லண்டன் அனுப்பி வைக்கப் படுகிறான்.

போன வருடம் ஆகஸ்டில் இந்தியா போயிருந்தபோது அப்படித்தான் நடந்தது. அவன் அம்பலப்புழையில் இருந்தது பற்றி வைத்தாஸின் அரசாங்கத்துக்கு மூக்கு வியர்த்து விட்டது. உடனே கிளம்பி லண்டன் போ என்று விரட்டினார்கள்.

மேல்சாந்தியோடு பேச ஆரம்பித்ததை அரைகுறையாக முடித்துக் கொண்டு திரும்ப வேண்டிப் போனது அப்போது.

அம்பலப்புழை மேல்சாந்தி மகன், கிளாஸ்கோவில் வரலாற்றுப் பேராசிரியராக இருக்கிறவன் இன்றைக்கு சாயந்திரம் மழை இல்லாமலிருந்தால் சந்திப்பதாகச் செய்தி அனுப்பியிருக்கிறான். வைத்தாஸுக்கு லண்டன் மழை பற்றித் தெரியும். மேல்சாந்தி மகன் பத்மன் எம்ப்ராந்திரி பற்றித் தெரியாது. மழை கட்டாயம் இருக்கும்.

இல்லாமல் போகவும் அபூர்வமாக வாய்ப்பு இருக்கக் கூடும். அப்படி நிகழ்ந்து பத்மன் கிளம்பி வந்தால், அதற்கு முன்னால் பத்திரிகை சந்திப்பை முடித்துக் கொள்ள வேண்டும்.

வைத்தாஸின் மூன்றாம் நாவலுக்கு திடீரென்று விழித்துக் கொண்டு ஒரு பரிசு அறிவித்திருக்கிறார்கள். நான்கு வருடத்துக்கு முன் எழுதிய நாவல் இப்படித் தாமதமாகத் தேர்வில் சேர்க்கப்பட்டது இதுவரை நடந்ததில்லை.

நான் தான் சேர்க்க வைத்தேன் என்கிறாள் குஞ்ஞம்மிணி டைப் ரைட்டர் விசைகளில் நின்றபடி.

உனக்கும் இலக்கியத்துக்கும் ஒரு தொடர்பும் இல்லைன்னு அடிக்கடி மறந்து போறே.

வைத்தாஸ் சிரிக்கும்போது குஞ்ஞம்மிணிக்கும் சிரிப்பு வருகிறது.

எழுதிண்டிருக்கறதை எப்ப முடிக்கப் போறே?

விட்ட இடத்தில் இருந்து நாவலைத் தொடர நேற்று அரண்மனை போய் வந்த பிற்பாடு முதற்கொண்டு முயற்சி செய்தபடி தான் இருக்கிறான்.

நந்தினி கூட வந்திருந்தால் நாலு பக்கமாவது எழுதினால் தான் படுக்கைக்கு வர முடியும் என்று சொல்லியிருப்பாள்.

இந்தப் பயணம் தனியாகத்தான் என்றாகியது.

கூட்டிண்டு வந்திருக்க வேண்டியது தானேடா கடன்காரா அவளை. எல்லாத்துக்கும் ஒரு சாக்கு.

குஞ்ஞம்மிணி இரைந்தபோது வாசலில் அழைப்பு மணிச் சத்தம்.

பத்திரிகையிலிருந்து வந்திருக்கிறதாக வந்த இருவரும் அறிவித்தார்கள். சின்ன வயசுப் பெண்கள் இரண்டு பேரும். கருப்பினத்துப் பெண்கள்.

உள்ளே வரச் சொன்னான் வைத்தாஸ்.

இதோ வந்துடறேன். காபி ஆர்டர் செய்யட்டுமா?

வேணாம் நன்றி என்றார்கள் வந்தவர்கள்.

பாத்ரூம் கதவைத் திறக்கும்போது திடமாக வேண்டிக் கொண்டான் வைத்தாஸ்.

வார்த்தைகளைக் கொடு. சரஞ்சரமாக வந்தால் போதும். பெரிய தோதில் அர்த்தம் எல்லாம் வேண்டியிருக்கவில்லை. காத்திரமாக, பிய்த்தெடுத்து பெரிய, சிறிய எழுத்துகளில் அங்கங்கே மேற்கோள் காட்ட உபயோகமாக இருக்க வேண்டும்.

தருவேன். ஆனா, நீ முடிச்சு வந்ததும் நாவலைத் தொடரணும்.

டைப்ரைட்டரின் ஒற்றை விசை உயர்ந்து தாழ்ந்தது.

(வைத்தாஸின் பத்திரிகைச் சந்திப்பில் இருந்து)
————————————-
கேள்வி: ஆப்பிரிக்க நாடுகளில் இலக்கியம் மூலம் புரட்சி ஏற்படாதது ஏன்? பொதுவான கல்வியறிவுக் குறைவு தான் காரணமா?

பதில் :அந்த வாழைத் தோப்பு ஒரு போதும் பற்றி எரியப் போவதில்லை. கல்வியறிவு இன்னும் அதிகமாக இருந்தால் இன்னும் அதிகம் பேர் என்னைப் போல் பெட்டியைத் தூக்கிக் கொண்டு லண்டனுக்கும் நியூயார்க்குக்கும் மெல்போர்னுக்கும் தான் வேலை நிமித்தம் அலைந்திருப்பார்கள். அப்புறம் இன்னொன்று. வாழைத் தோப்பு என்றைக்காவது எரிய ஆரம்பித்தாலும் நான் ஒரு குவளை நீர் ஊற்றி அணைக்கப் பார்ப்பேன். சர்க்கார் உத்தியோகஸ்தனுடைய அதிக பட்ச எதிர்வினை அதுவாகத்தான் இருக்கும். நாட்பட்டுக் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்படும் மாற்ற்ங்கள் யாவராலும் வரவேற்கத் தக்கவை. சர்க்கார் உத்தியோகஸ்தன் நிதானமான மாற்றத்தை ஆதரிக்கலாம்.

கேள்வி: உங்கள் நாவல், அகாதமி வெளியிட்ட லாங் லிஸ்டில் திடீரென்று முளைத்து, ஷார்ட் லிஸ்டில் முதலாவதாக நின்றது. நீங்கள் பரிசுக்காக பிரயத்னப்பட்டதன் காரணமா இது?

பதில்: நான் பட்டியல்களில் இடம்பெறுவதை அசௌகரியமாகவே கருதுகிறேன். பரிசுகளையோ சுபாவமாக எதிர்கொள்கிறேன். பட்டியல்களில் என் படைப்புகள் புதைபடுவது தற்செயலானது. மற்றப்படி, நீள் பட்டியல்களும், குறும் பட்டியல்களும் பட்டியலாளரின் போலியான வாசக அனுபவ விரிவைக் கேட்பவர்களுக்கு உணர்த்தவே தொடுக்கப் பட்டவை. அவற்றில் இடம் பெறும், இடம் பெறாத நூல்களும் அவற்றின் ஆசிரியர்களும் முக்கியமில்லை. எண்ணங்களும் கற்பனையும் பெருவெளியில் மிதந்து கொண்டிருப்பவை. மனதை உயர்த்தி அவற்றைக் கையாக்கிக் கொண்டு இன்னொரு எழுத்தாளர் இதே போன்ற இன்னொரு படைப்பை இதனினும் உன்னதமாக உருவாக்கியிருக்க முடியும். பட்டியல்கள் நிலையானவை அல்ல. தொடுக்கும்போதே அவை மாறலாம்.

கேள்வி: பட்டியல்கள் குறித்த விரோதம் ஏனோ?

பதில்: பரிசுகளும் வெகுமதியும் அளிக்க ஒரு குழு உட்கார்ந்து போடும், நீள், குறுகிய பட்டியல்களைப் பற்றித்தான் இப்படிச் சொன்னேனே ஒழிய, பொதுவாகப் பட்டியல்கள் மேல் ஒரு விரோதமும் எனக்கில்லை. என் பட்டியல்களை நீங்கள் படித்ததில்லை போலிருக்கிறது. பட்டியல் உருவாக்குகிறவர்களை வணங்குகிறேன்.

கேள்வி: ஒரு பட்டியலில் எத்தனை பேர் இருக்கலாம்? ஒருவர் குறைந்த பட்சம் எவ்வளவு பட்டியல்களில் இடம் பெறலாம்?

பதில் :எந்தப் பெயரும் இல்லாத வெறும் பட்டியல்கள் வசீகரமானவை. எல்லாப் பட்டியல்களிலும் எல்லாரும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது வெகுளித்தனமானது. இதுவரை வேறு எங்கும் வராத பெயர்கள் இன்னொரு பட்டியலில் ஏறட்டும். ஆயிரமும் அதற்கு மேலும் பட்டியல்கள் மலரட்டும்.

கேள்வி: பட்டியல் போட ஏதும் தகுதி இருக்கிறதா?

பதில்: உங்கள் பட்டியலில் குறைந்தது மூன்று இடங்களில் உங்கள் படைப்புகள் இருக்க வேண்டும் என்பதால், நாலு நாவலாவது எழுதிவிட்டு பட்டியல் போட வாருங்கள். மூன்று போதும் என்று நீங்கள் நினைத்தாலும் சரியே.

கேள்வி: பட்டியலாக இல்லாவிட்டாலும், சிறந்த புத்தகங்கள் இவையென்று நீங்கள் நினைப்பவை எவையெல்லாம்?

பதில்: சிறந்த பத்து உலக எழுத்தாளர்கள், சிறந்த ஏழு இந்திய சமையல்காரர்கள், சிறந்த எட்டு ஐஸ்லாந்து ஓவியர்கள், சிறந்த ஒன்பது ஆஸ்திரேலியா பட்டியல்காரர்கள், சிறந்த ஆறு கொலம்பிய சவ அடக்க நிர்வாகிகள் இன்ன பிற. எந்த வித முக்கியத்துவமும் இல்லாதவை. சவ அடக்க நிர்வாகிகளையும் புத்தகங்களையும் பற்றி யாருக்கும் தெளிவிருக்க வாய்ப்பில்லை. ஒரு வாதத்துக்காக சிறந்த பத்து எழுத்தாளர்களைத் தேர்வு செய்ய முடியும் என்று வைத்துக் கொண்டாலும், சிறந்த பத்து புத்தகங்களாகத் தேர்வாகிறவற்றை அவர்கள் எழுதியிருப்பார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமுமில்லை.

கேள்வி: கேள்வியை மீள்வடிவமைக்கிறோம். படித்ததில் பிடித்த புத்தகங்கள்? ஆங்கிலமாக இல்லாவிட்டாலும்?

பதில்: இல்லாத எழுத்தாளர்களின் எழுதாத புத்தகங்கள் வசீகரமானவை. நான் அவற்றை எனக்குப் பிடித்தவற்றின் பட்டியலில் கடந்த ஐந்து வருடமாகச் சேர்த்து வருகிறேன். அந்த நூல்களின் தேர்வு பலரையும் திருப்தியடையச் செய்கிறதையும், அந்தப் பட்டியல்கள் மேற்கோள் காட்டப் படுவதையும் மகிழ்ச்சியோடு கவனிக்கிறேன். இலக்கியம் ஏற்படுத்தும் களிபேருவகையைப் புறக்கணிக்க வேண்டியதில்லை.

கேள்வி: கட்டுரைகள் குறைவாகவே எழுதுகிறீர்களே. அ-புனைகதை இலக்கியமாகாதா?

பதில்: நான் மரண இரங்கல் கட்டுரைகளை மட்டும் எழுதுகிறேன். அவற்றை அதிகமாக எழுதுவது என் கையில் இல்லை. துக்கத்தையும் மகிழ்ச்சியையும் அளிப்பவை இரங்கல் கட்டுரைகள். இன்னார் பிறந்து இத்தனை நாள் இருந்தார் என்பதை நினைக்கும் துன்பமும், அவர் இப்போது இல்லை என்பதில் எழும் பெருத்த சந்தோஷமும் ஆகும் அது, பலரையும் பொறுத்தவரை.

இரங்கல் பற்றிச் சொல்லும்போது இதையும் சேர்க்க வேண்டியிருக்கிறது. எழுத்தாளர்கள் நிரந்தரமாக இறந்து போவதில்லை. காலமான படைப்பாளிகள் தேவைப்படாத போது எழுப்பி நிற்க வைக்கப்பட்டு, கல் எறிந்து மூக்கும் முகமும் சிதைக்கப்பட்டு திரும்பப் புதைக்கப் படுவது வாடிக்கை.

(வைத்தாஸ் எழுதும் நாவலில் இருந்து)
——————————

வாசல் தட்டியை இறக்கி விட்டு வந்துடறேன். சாரல் முழுக்க நனைச்சுடுத்து.

மேல்சாந்தி வெளியே போனார்.

மனை. எழுபது வருட பழக்கம் உள்ளது என்று சாமு வைத்தாஸிடம் சொன்னான்.

உள்ளே உச்ச சப்தத்தில் ரேடியோவில் தொடர்ந்து ஒரு பெண் பேசிக் கொண்டிருந்தாள். குரலோடு இழைந்தும் அதை விட மேலே சஞ்சரித்தும் ஒற்றை வயலின் முன்னேறிக் கொண்டிருந்தது. அந்தப் பெண் முகத்தில் உணர்ச்சிகள் பிழம்பாக ஒளி விட நின்று கொண்டிருப்பாள் அல்லது ஒலிவாங்கிக்கு மிக அருகே மெல்ல நடந்தபடி பக்கவாட்டில் பார்த்து இதையெல்லாம் சொல்லிக் கொண்டிருப்பாள்.

மழைக்கு முதுகு காட்டிக் கொண்டு வீட்டு முன் வசத்துக் கொடியில் மாக்சியும் லுங்கியும் அலை பாய்ந்து கொண்டிருந்தன. இன்னும் மழை வலுத்தால் சாரல் நீண்டு அவற்றைத் திரும்ப நனைக்கலாம். மழை நேரத்தில் துணி துவைத்தவர்கள் மேல் படியும் சிரத்தையின்மை இந்தத் துணிகளிலும் அங்கங்கே அப்பியிருந்த பழுப்புச் சவுக்காரத் திட்டுகளாகத் தெரிந்தது. எவ்வளவு துவைத்து ஈரம் போகப் பிழிந்து காயப் போட்டாலும், இந்த யுகத்தில் சுக்காக உலர்ந்து போகிற வரம் இந்தத் துணிகளுக்கு இல்லை என்பது நிதர்சனமானதால் ஏற்படும் அலுப்பு அது.

உள்ளே நாற்காலி போட்டு உட்கார்ந்திருந்த யாரோ இருக்கையைத் தள்ளியபடி எழுந்தார்கள். அது கத்திரிப் பூ நிற சேலை அணிந்த முதியவள் என்பதை ஆகாயத்தில் வெளிச்சம் போட்டு உள்ளே கசிந்த கொடி மின்னலில் வைத்தாஸ் உணர்ந்தான்.

அங்கே இருந்தே, யார் என்று கேட்க முயன்றபோது சட்டென்று எழுந்து உயர்ந்து ஒலித்த அடுத்த இடி குரலை அடக்கியது.

வைத்தாஸ் மழையைப் பார்த்தபடி, ஆராதகன் ஒருவன் வழிபாட்டுக்காரர்களைப் பரவசப் படுத்துகிற தொனியில் முணுமுணுத்தது இப்படி இருந்தது.

மழையின் நாவுகள் கருத்த மேகப் பொதியில் சூல் கொண்டு எல்லையற்று நீண்டு நெகிழ்ந்து விரிந்த வானக் கம்பளத்திலிருந்து நிறமற்றுச் சிதறி, இருளின் கருமை கிழித்து மண் நோக்கி உதிர்ந்து அடர்ந்து படர்ந்தன. திரி நாளங்களாக, கூடலை சுவர்க்கப் படுத்தும் ஊற்றுக்கண் சிறு துளிகளாக அவை தம்மில் தம்மில் உயிர்த்துப் பற்றிக் கொள்ள நீருடல் தேடி நெளிந்தன.

மாட்டுச் சாணத்தை எறிந்து பயப்படுத்தாதே.

குஞ்ஞம்மிணி சிரித்தபடி சொன்னாள்.

அடிப்படை இலக்கிய ஈடுபாடோ ஒரு புனைகதையோ படிக்கவோ எழுதவோ செய்யாத யாருக்கும் இது பற்றிக் கருத்துக் கூற உரிமையில்லை. ஒரு வாக்கியம் இலக்கியத் தரமாக எழுதியிருந்தால் கூடப் பேசலாம் தான்.

வைத்தாஸ் குஞ்ஞம்மிணியிடம் தீர்மானமாகச் சொல்லி அவளை ஈரக் கைக்குட்டை கொண்டு அடக்கினான்.

இடிகள் இரைந்தொலிப்பதே அடக்கி ஆளுகிறவர்களின் அதிகாரத்தைப் பிரகடனப் படுத்தத்தான். அவர்களுக்குத் தெய்வங்கள் சலித்துக் கொண்டே கொடுத்த வரம் அது. அந்த ஆட்சியாளர்கள் மண்மூடிப் போய் பல நூற்றாண்டுகள் கழிந்தாலும் ஒலி இன்னும் வானிலிருந்து இறங்கி முடிக்கவில்லை.

சட்டைப் பைக்குள் இருந்து முணுமுணுப்பாக மறுபடி குஞ்ஞம்மிணி குரல் கேட்டது.

வாழைத் தோப்புக்கள் ஒருபோதும் பற்றி எரியாது.

குஞ்ஞம்மிணி சொன்னதா அல்லது வைத்தாஸ் மனம் கட்டி நிறுத்தியதா? எதுவாக இருந்தாலும், இது மற்றவற்றோடு பொருந்தி வரும். இதை கௌரவமான எந்தப் பேச்சு வார்த்தைக்கு இடையிலும் மிடுக்காகச் சொல்லலாம். இந்த வாக்கியத்தோடு வைத்தாஸின் நாவலில் ஒரு அத்தியாயம் தொடங்கும். அநேகமாக அது கடைசி அத்தியாயத்துக்கு முந்தியதாக இருக்கக் கூடும். எல்லா அத்தியாயங்களிலும் இடியும் மழையும் மெய்ப் பொருளாகவோ உருவகமாகவோ வந்து நிறைந்து நின்றால் என்ன?

இவர் இங்கிலாந்தில் இருக்கப் பட்டவர். குடும்ப சாகைகளின் விவரங்கள் சேகரிக்க வந்திருக்கார்.

மேல்சாந்தி மீண்டும் உள்ளே வந்தபடிக்குச் சற்றே குரலை உயர்த்தி, உள்கட்டில் கேட்கச் சொன்னார். சாமு அவசரமாக மடக்கிய குடை பொலபொலவென ஈரம் உதிர வைத்தாஸைச் சுட்டி நீண்டது.

உள்ளே இருந்த முதுபெண் அப்படியா என்று கேட்டபடி ரேடியோவில் திரும்ப கவனத்தை வைத்தாள்.

அங்கே பின்னால் காரோ லாரியோ வேகமாக வரும் ஒலி எழுந்து வந்தது. இதுவரை பேசிய பெண் சத்தமிட்டபடி ஓடிக் கொண்டிருப்பதாக ரேடியோ நாடகம் முன்னால் போகிறதாக இரைச்சல் சொன்னது.

இது நியாயமே இல்லை என்பது போல் முதுபெண் தலை ஆடியது. வைத்தாஸும் துக்கித்தான். கஷ்டப்படும் எல்லோரும் முக்கியமாகப் பெண்கள் பரிவு காட்டப்பட வேண்டியவர்கள். பார்வைக்கு வெளியே உள்ள ரேடியோ நாடகத்தில் என்றாலும்.

முதுபெண்ணின் துயரம் அதிகரிக்க வாய்ப்பு இல்லாமல் ரேடியோ அணைந்து போனது.

நாசம், இனி ரெண்டு மணி நேரம் கரெண்ட் கிடையாது.

அவள் மனித குலத்தின் ஆதி பாவம் உண்டாக்கிய துக்கம் எல்லாம் குரலில் கனக்கச் சொல்லியபடி வெளியே வந்தாள்.

உலர்ந்த நாற்காலியில் உட்காரலாமே.

வைத்தாஸை மாறி உட்காரச் சொல்லி பூமுகத்தில் துணி போர்த்தி வைத்திருந்த மர நாற்காலியைக் காட்டினார் மேல்சாந்தி. மேலே இருந்த நாராயணன் நாமம் வரி வரியாக எழுதிய மஞ்சள் துணி விலக, சுக்காக உலர்ந்த நாற்காலி.

வைத்தாஸ் சுற்று முற்றும் பார்த்தான். ஒரு பழைய சைக்கிள், ஏதோ யந்திரம், பூச்செடித் தொட்டி என்று இன்னும் சிலவும் நாராயணன் நாமம் பாடி நின்றன.

திருமேனி எங்கேயாவது பிரசங்கம் செய்யப் போகும்போது கௌரவம் செய்கிறேன் என்று போர்த்தி விட்டு விடுகிறார்கள், இவற்றால் வேறு உபயோகம் எதுவும் எனக்கு அர்த்தமாகவில்லை.

அந்த முதுபெண் பெரிதாக நகைத்தாள். சாமு இந்த மனையில் சிநேகிதமாகப் புழங்கி வருகிறவன் என்று அறிய வைத்தாஸுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. தேடி வந்த தகவல் கிடைக்காவிட்டாலும், அரசாங்கக் கட்டிடத்தில் அதிகாரிகளிடம் பேசுவது போல் மொறுமொறுப்பான உரையாடலுக்குத் தேவை இல்லை. எதுவும் பேசாவிட்டால் கூட மற்றவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருக்கலாம் என்று நினைக்க நிம்மதியாக இருந்தது.

முதுபெண் சாமு உட்கார உள்ளே இருந்து பிளாஸ்டிக் நாற்காலி கொண்டு வந்து போட்டாள்.

இந்த ஒரு மனை தான் இங்கே சம்பகச்சேரி ராஜாவு காலத்தில் இருந்து இருப்பது. இன்றைய தேதிக்கு எட்டு, பத்து தலைமுறை இங்கே ஜனித்து விழுந்து வளர்ந்தவங்க தான். தாளியோலைகளுக்கும் இங்கே குறையில்லை. ஏதாவது ஒரு ஓலையில் அவர்களோட வம்ச சரித்திரத்தோடு அக்கம் பக்கம் இருந்த உங்க பாண்டிப் பட்டன்மார் குடும்பம் பற்றி வந்திருக்கா பார்க்கலாம்.

சாமு நம்பிக்கை குறையாமல் பேசினான்.

முதுபெண் ஒரு தட்டில் இரண்டு கேக்குகளும், நேந்திரங்காய் வறுவலும் இரண்டு பீங்கான் கோப்பைகளுமாகத் திரும்பி வந்தாள்.

பகல் நேரத்தில் வார்த்தைகளுக்கும், சங்கீத நிகழ்ச்சிகளுக்கும், நாடகங்களுக்குமாக ரேடியோவில் லயித்துக் கண் கலங்கி விதிர்விதிர்க்கிற கிழவியாக, பப்பரப்பர என்று நடுக்கூடத்தில் உட்கார்ந்திருக்கும் சராசரிப் பெண்ணா அவளைப் பற்றி ஒரு பிம்பம், வந்திருக்கும் விருந்தாளி மனதில் ஏற்பட்டிருக்கலாம். அதை உடனடியாக உடைத்துப் போடுவதே இப்போது முதலில் செய்ய வேண்டியது என்று அவள் முடிவு செய்திருந்ததாக அந்தச் செய்கை உணர்த்தியது. முக்கியமாக அவள் எடுத்து வந்த, முட்டை கலந்த அந்தக் கேக்குகள்.

இவள் கொச்சி காலேஜில் லெக்சரராக இருந்து ரிடையர்மெண்டு வாங்கினவள் என்றார் மேல்சாந்தி அவசரமாக. அந்தத் தகவலைச் சொல்லாமல் வைத்தாஸோடு பேச ஆரம்பித்ததற்காக மன்னிப்புக் கேட்கிற தயக்கமான புன்முறுவல் அவரிடமிருந்து புறப்பட்டுக் கொடி மின்னல் போல வைத்தாஸையும் முதுபெண்ணையும் வளைத்தது.

இங்கேயெல்லாம் அம்பத்தைஞ்சு வயசில் சர்ர்கார் இதர உத்தியோகஸ்தர்கள் ரிடையர் ஆக வேணும் என்று நியமம் இருக்கு. அம்பலத்தில் சாந்திக்காரனாகவோ, அதுதான் ஆரம்ப வயசு.

மேல்சாந்தி சிரித்தார்.

போன கரெண்ட் எப்போது வேண்டுமானாலும் திரும்பலாம்.

தாளியோலைகள். உங்கள் பத்தாயப் புறையில் உண்டே. சிரமமில்லை என்றால்.

சாமு விடாமல் பிடித்தான். இங்கே வந்ததற்கு வைத்தாஸ் ஏதாவது பெற்றுப் போக வேண்டும் என அவன் தீர்மானம் செய்திருந்தான். தேநீர் குடித்த பீங்கான் கோப்பை என்றாலும் சரிதான்.

தேத்தண்ணீர் எடுத்து வந்தது உங்களுக்குத் தான். சாப்பிடுங்கள் என்றாள் முதுபெண். சாமு எப்படியோ பல் படாமல் அந்தச் சுடுநீரை வாயில் வார்த்துக் கொள்ள, வைத்தாஸ் தயக்கத்தோடு கோப்பையை வாய்க்கருகே உயர்த்தினான்.

பரவாயில்ல. நீங்கள் பழகிய படிக்கு குடியுங்கள். எங்கள் அசட்டு ஆசாரங்களை உங்கள் மேல் எறிய எனக்கு மனமில்லை என்றாள் முதுபெண்.

கலாச்சார மறுமலர்ச்சியில் நம்பிக்கை வைத்திருக்கும் நம்பூதிரிப் பெண்மணி.

வைத்தாஸ் தேநீர் பருக ஆரம்பித்தான்.

தாளியோலை ஒன்று நான் காலையில் தான் எடுத்து வைத்தேன். இவர் வருவார் என்று தெரியும்.

முதுபெண் குறுஞ்சிரிப்போடு சொல்ல, வைத்தாஸ் சட்டையில் தேநீர் சிந்தியது.

குஞ்ஞம்மிணி.

(தொடரும்)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன