அச்சுதம் கேசவம் – அத்தியாயம் பதினொன்று

அச்சுதம் கேசவம் – அத்தியாயம் பதினொன்று
இரா.முருகன்

ஏப்ரல் 2 1964 வியாழக்கிழமை

அரசூர் ஜீவித்திருந்தது. காலம் கடந்து ஜீவித்திருந்தது. எல்லோருக்கும் ஏதாவது ஒரு கணத்தில் பிரியமாகும் கிழவனைப் போல. நித்தியப்படிக்குக் கரித்துக் கொட்டி, எப்போ ஒழிவானோ, எழவு ஓயுமோ என்று அங்கலாய்க்கிற சகலமானவருக்கும் பிருஷ்டத்தைக் காட்டிக் கொண்டு, நிதானமாக வேட்டி திருத்திக் கட்டிக் கொள்கிற சோனியான கிழவன் போல. எல்லோரிடமும் நேசத்தை யாசித்து, ஒரு வெகுளிச் சிரிப்போடு தளர்ந்து நிற்கிற வயசனாக. வயோதிகச் சிரிப்பின் வசீகரத்தோடு நிற்கிற ஊர்.

ஊருணிக் கரையில் பசும்புல்லும், கை கோர்த்து நிற்கிற ஒதிய மரங்களும், ஒற்றை ஆலும் விட்டு விட்டுத் தழைத்துப் பூ உதிர்க்கும் வேம்புமாக மனசை அள்ளுகிற ஊர் வனப்பு.

அரசூர்த் தெருவெல்லாம் கெட்ட வாடையோடு சாக்கடை தேங்கி நிற்க, லைபிரரி சுவரில் செங்கல் இடிந்து, பள்ளத்துச் சகதியில் புரண்ட பன்றிகள் பக்கத்தில் தாவளம் கட்டி உறங்கிக் கிடக்கின்றன.

எல்லாக் கட்டிடங்களும் புழுதி வாரி அடித்த செம்மண் பூசி, நூறு வருடம், அதுக்கு முந்தி என்று நினைவைச் சுமந்து கொண்டு வா வா என்று கூவுகின்றன. சின்னச் சங்கரனுக்கு அவை விடுக்கும் அழைப்பு அது. வான்னா வரணும். கண்ணு இல்லியோ, வா தங்கம். வாடா, சரிதான்.

ஒவ்வொரு வருடம் வரும்போதும் ஊர் கொஞ்சம் போல் கூடுதலாக உள் நோக்கிக் கவிகிறது. கனவில் கண்ணைச் சிறுத்துக் கொண்டு நடந்து போகும்போது எதிரே தெரிகிற காட்சி மாதிரி, வரிசையில்லாத அழுக்கு வெளுப்புச் சுவர்கள் நீளும் தெருக்களும், உயரமான வாசல்படிகள் இருட்டுக்குள் ஏறி நுழையும் வீடுகளும் அழுந்தச் சூழ்கின்றன. அவை, எழுதாத, பேசாத ஏதோ துக்கத்தைக் காற்றில் தூறல் போல் பரத்துகின்றன.

இந்தத் தெருவுக்கு என்ன பெயர்? நடக்க ஆரம்பித்த தெருவில் ஓரமாக நின்றபடி நினைவுக்குக் கொண்டு வர முயற்சி செய்தான் சின்னச் சங்கரன். பகவதிப் பாட்டியின் கைபிடித்துக் கொண்டு எப்போதோ நடந்த பழைய தெருவும் எதிரே விரிகிறதும் கலந்து பின்னிய பிம்பமாக ஊருணிக் கரை நோக்கி ஓடும் பாதை இது.

பெயர் என்னவாக வேணுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும். அது இல்லாமலேயே நினைக்கவும், சொப்பனத்தில் மசமசவென மங்கலாக வரவும் இந்தத் தெருவுக்கு முடியும். எதற்காகப் பகவதிப் பாட்டி கையைப் பிடித்துக் கொண்டு எப்போதோ இங்கே வந்தது?

பொங்கல் நேரத்தில் இங்கே யாரையோ தேடி வந்த நினைவு. யாராக இருக்கும்?

மனதில் வரும் முகங்களைத் தெருவில் நிறுத்திப் பார்க்க சுவாரசியமாக இருந்தது. முதலில் வந்து நின்ற சர்தார் குர்னாம் சிங் இங்கே எதுக்கு வந்தார்? பழைய டெல்லி பகட்கஞ்சில் மோடா கடை வைத்திருக்கிறவராச்சே அவர். அவரிடம் தள்ளுபடி விலையில் வாங்கி ஊருக்குக் கொண்டு வருவதற்காக எடுத்து வைத்திருந்த ரெண்டு மோடாவுக்கு, தில்லி திரும்பியதும் தேடிப் போய்க் காசு கொடுத்து விட வேண்டும். மோடா ஊசிப் போகாது. தில்லியில் புதுசாகக் குடித்தனம் வரும் நம்மளவர் யாருக்காவது போன விலைக்குக் கொடுத்து விடலாம்.

யாரைத் தேடி வந்தது இங்கே? எதிர் வீட்டு மாடியில் சிரிக்கும் வடிவான பஞ்சாபிக்காரி லாஜ்வந்தி, கோல் மார்க்கெட் வங்காளி இனிப்பு மிட்டாய்க்கடை சிப்பந்தி ரொபீந்த்ர கோஷ், பிரஸ் டிரஸ்ட்டில் டைபிஸ்ட்டும் டவுன் பஸ்ஸில் சக பயணியுமான ரெட்டை நாடி சரீரம் கொண்ட பிடார் ஜெயம்மா, கரோல்பாக் அஜ்மல்கால் வீதி ஓரம் சின்னப் பலகையடைத்து ஒண்டிக் கொண்டு வெற்றிலை பாக்கும் பத்திரிகையும் விற்கிற கேளு நாயர் என்று யார் யாரையோ இது தான் சாக்கென்று மனம் கொண்டு வந்து குறுகலான அரசூர் தெருவில் நிறுத்தப் பின்னால் யாரோ சைக்கிள் மணி ஒலிக்கிற சத்தம்.

’சங்கரா, நடுத் தெருவிலே ராபணான்னு நின்னுண்டு என்ன பண்றே?’

சைக்கிளை நிறுத்திக் கால் ஊன்றப் பார்த்த சாஸ்திரிகள் ஒருத்தர் கால் நிலத்தில் பதிவதற்குள் அவசரமாக அலை பாய்ந்து சைக்கிளைச் சரித்துக் கொண்டு மட்ட மல்லாக்கக் கிடந்தார். சின்னச் சங்கரன் ஓடிப் போய்க் கை கொடுத்தான்.

இதென்ன, தினசரி நாலு தடவை கிரமமாக நடக்கிறதுதானே என்ற சகஜ பாவத்தோடு அவர் எழுந்து நின்று சைக்கிளை ஸ்டாண்ட் போடும்போது தான் சங்கரனுக்கு வந்து எழுந்தருளியது யாரெனப் புரிந்தது.

தியாகராஜன் தானே?

சந்தேகமில்லாமல் நிச்சயப்படுத்திக் கொள்ளக் கேட்டான் சங்கரன்.

ஆமடா, ராஜா தலையை வெட்டித் தாம்பாளத்திலே வச்சுண்டு வரும்போது விழுந்தேனே இதே மாதிரி.

நாலு தெருவுக்குக் கேட்கிற மாதிரி சத்தம் போட்டுச் சிரித்தார் தியாகராஜ சாஸ்திரிகள். கூடச் சிரிக்கும்போது சின்னச் சங்கரனுக்கு மனசே லேசாகி விட்டிருந்தது. எல்லாம் முப்பத்தஞ்சு, நாற்பது வருஷத்துக்கு முற்பட்ட விஷயம்.

எலிமெண்டரி ஸ்கூல்லே தான் இன்னும் படிக்கறியா?

தியாகராஜனின் தோளில் தட்டினான் சின்னச் சங்கரன். சாஸ்திரிகள் குளித்து மாரிலும் தோளிலும் வீபுதி பூசி நிற்கிறார். அட்டுப் பிடித்த சங்கரன் எப்படித் தட்டப் போச்சு.

அடடா என்று சொல்லிச் சங்கரன் கையை விலக்க, சாஸ்திரிகள் பரவாயில்லேடா என்றார். ஏகத்துக்கு வருஷம் கழித்துப் பார்க்கும் சிநேகிதன் தோளில் தட்டினால் தோஷமில்லை என்ற சகஜ பாவம் முகத்தில்.

முப்பது வருஷம் முந்தி, சிவராத்திரி நேரத்தில் நாடகம் போட சங்கரனை ராஜாவாகவும், தியாகராஜனைப் புலவராகவும் எலிமெண்டரி ஸ்கூல் வாத்தியார்கள் ஸ்தானிஸ்லாஸ், ராமநாதன், யோகாம்பாள் ஆகியோர் வேஷம் கட்டி விட்டிருந்தார்கள். சங்கரனுக்கு முண்டாசு வைக்கப்பட்டது. மீசை எழுதி ராஜ முழி முழித்தபடி அவன் நிறுத்தப் பட்டான்.

இன்னும் சின்னதாக ஒட்டு மீசையும், காதில் தோடுமாகப் புலவன் வேஷத்தில் தியாகராஜன். தேங்காய் நார் அடைத்து ஒரு மண்டையைச் செய்து பழுக்காத் தட்டுத் தாம்பாளத்தில் வைத்து, சிவப்பு மசி கரைத்துத் தெளித்து, புலவர் கையில் கொடுத்தானது.

பத்திரமாகப் பிடிச்சுக்கடா, ராஜாவைக் கொன்னு மந்திரி உன் கிட்டே கொடுத்த தலையோட காளி கோவிலுக்குப் போறே என்று தியாகராஜனிடம் விளக்கிச் சொல்லப்பட்டது.

காளி கோயிலுக்குப் போகும்போது புலவர் வேட்டி தடுக்கி விழுந்து தலை எகிறி மேடைக்கு வெளியே விழுந்து விட்டது. தியாகராஜன் என்ன செய்வதென்று புரியாமல் அழ ஆரம்பிக்க, ஸ்தானிஸ்லாஸ் வாத்தியார் நீளமாக விசில் ஊதி படுதாவை இறக்க வைத்தார். ஓரமாக சும்மா நின்று பார்த்தான் சங்கரன் அப்போது.

என்ன செஞ்சிட்டிருக்கே என்றான் சின்னச் சங்கரன்.

ஏண்டா, பார்த்தாத் தெரியலே? நான் என்ன பலசரக்குக் கடைக்காரன் மாதிரியா இருக்கேன். வைதீகத்தைத் தொழிலா வச்சுண்டேன். உங்க கொள்ளுத் தாத்தாவோ, எள்ளுத் தாத்தாவோ மதகூர்லே ஏற்படுத்தினாளே வேத பாடசாலை, அங்கே தான் அத்தியாயனம். நான் முடிக்கற முந்தி நீ டெல்லிக்கு போய்ட்டே.

டெல்லியிலே போய் உக்கார்ந்து இருபது வருஷத்துக்கு மேலே ஆயிட்டுதுப்பா.

நான் இங்கே கல்யாணம், காதுகுத்து, சீமந்தம், ஆவணி அவிட்டம்னு ஓடிண்டே இருக்கேன். நீ உக்காந்து வேலை பார்த்து சம்பளம் வாங்கிண்டு இருக்கியாக்கும்.

என்னத்தை உட்கார்ந்து சம்பளம் வாங்க. சுதந்தரம் வந்ததும் வெள்ளைக்காரத் துரைகள் போயொழிஞ்சு உள் நாட்டுச் சிவப்பு, கறுப்பு துரைகள் வந்தாச்சு பார்த்துக்கோ. சகலமான பிசாசுகளுக்கும் சேவகம் செஞ்சு தான் காலத்தை ஓட்டிண்டிருக்கேன்.

இருக்கப்பட்ட நிலைமைக்குக் கூடுதலாகவே இறக்கிச் சொன்னான் சின்னச் சங்கரன். தியாகராஜ சாஸ்திரிக்கு கொஞ்சம் போலாவது மனசில் ஆசுவாசம் கிடைக்கட்டும். சைக்கிளைப் போட்டுக் கொண்டு விழுந்திருக்கான் பாவம்.

சுதந்திரம் வந்த அன்னிக்கு பெருமாள் கோவில் தெரு சுப்பாமணி சிரார்த்தம். நடுத்தெரு ராஜப்பா பேத்தி காதுகுத்து, அனுமார் கோவில் ராயர் சமாராதனை.

தியாகராஜன் கவனமாகச் சொல்ல சங்கரன் மட்டும் இன்னொரு தடவை சிரித்து ஓய்ந்தான். ஊருக்குத் திரும்பியதும் வீட்டுக்காரியிடம் சொல்ல வேண்டும். முதல் சுதந்திர தினத்தைப் பற்றி இப்படியும் ஒரு பார்வை இருக்கிறது. இந்துஸ்தான் டைம்ஸ் நிருபர் குரியன் ஜோசப், பிரஸ் டிரஸ்ட் பிடார் ஜெயம்மா, தைனிக் ஜாக்ரன் குப்தாஜி எல்லோரிடமும் சொல்லணும். ஏன், மாமனாரிடம் சொல்லி அவர் என்ன செய்து கொண்டிருந்தார் அன்றைக்கு என்று கேட்கணும்.

ரஷ்யாக்கார கபோதிகள் பத்தி தில்லியிலே என்ன பேசிக்கறா?

தியாகராஜ சாஸ்திரிகள் ஆர்வமாக விசாரித்தார். சோவியத் யூனியனோடு அவருக்கு என்ன விரோதம் என்று சின்னச் சங்கரனுக்கு அர்த்தமாகவில்லை.

ரொம்ப நல்ல அபிப்பிராயம். ரஷ்யான்னு சொல்லாதே. சோவியத் தேசம். நேருவுக்கு ரொம்ப பிடிச்சது.

ஆமா, அந்த நேரு கடன்காரன், பம்பாய்லே ஒரு கூத்தாடி இருக்கானே பேரென்ன, ராஜ கர்ப்பூரம்னு வருமே, அந்த எழவெடுத்தான். எல்லோருக்கும் அந்த தேசம்னா வெல்ல அச்சு மாதிரி இஷ்டம். கும்புட்டு விழுந்து அபிவாதயே சொல்லிண்டு நிப்பான் கேட்டுக்கோ.

அதுக்கு என்னை என்ன பண்ணச் சொல்றே என்றான் சங்கரன். நேருவைக் கண்ணுமண்ணு தெரியாமல் எதிர்க்கிறவர்கள் அரசூரிலும் இருக்கிறார்கள். புரோகிதத்துக்கு ஓடிய நேரத்துக்கு நடுவிலும் அவர்களுக்குப் பிரதம மந்திரியைச் சபிக்கச் சமயம் வாய்த்து விடுகிறது.

போன வாரம் சுக்கிரனுக்கு ராக்கெட் விட்டான் பாரு. ரஷ்யாவிலே துஷ்டன் துராக்கிதன் சப்ஜாடா சேர்ந்து. என்ன ஆச்சு?

சின்னச் சங்கரனுக்கு அதெல்லாம் தெரியாது. பைல் புரட்ட, நோட் போட்டு மேலே அனுப்ப, வந்ததைக் கட்டி வைக்க, வத்தக்குழம்பும் சுட்ட அப்பளமுமாகச் சாப்பிட, பெண்டாட்டியைக் கட்டிக் கொண்டு, குளிருக்கு ரஜாய் போர்த்திக் கொண்டு, தலகாணியில் எச்சில் வழியத் தூங்க. இதுதான் வாழ்க்கை. இதில் ரஷ்யாக்காரனும், சுக்கிரனுக்கு விடும் ராக்கெட்டும் எங்கேயும் வருவதற்கில்லை. அதெல்லாம் அரசூரில் புரோகிதம் செய்து ஜீவிக்கிற தியாகராஜ சாஸ்திரி போன்ற வேத விற்பன்னர்களுக்கும் மற்ற மேதைகளுக்குமானது.

போறது சங்கரா, சுக்ரனுக்கு இங்கிலீஷ்லே வீனஸ் தானே?

தியாகராஜ சாஸ்திரிகள் கேட்டார். இல்லாவிட்டால் தான் என்ன போச்சு? அமாவாசை தர்ப்பணத்தில் சுக்ரன் வருமா என்ன?

சின்னச் சங்கரன் விஷயம் ஏதும் அர்த்தமாகாமல், சும்மா தலையாட்டி வைத்தான்.

அந்த ராக்கெட் விட்டது சுக்ரனுக்கு இல்லே சங்கரா. அமெரிக்காவிலே அதே நாளிலே. அன்னிக்கு குட் ப்ரைடே. அவாளுக்கு மங்களமான தினம். மேரியோ அவாத்துக்காரரோ அவதரிச்ச ஜன்ம நட்சத்திரம்.

இல்லேப்பா ஜீசஸை சிலுவையிலே அரைஞ்ச நாள் என்று மகிழ்ச்சியோடு திருத்தினான் சின்னச் சங்கரன். இந்த மாதிரி சின்னச் சின்ன சந்தோஷங்கள் தில்லி கடந்து தெற்கே அதுவும் சொந்த ஊருக்கு வந்தால் தான் கிடைக்கும்.

எதோ ஒண்ணு. அந்த ரஷ்யாக் கபோதிகள் அனுப்பிச்ச ராக்கெட் காக்கா குருவி பறக்கற மாதிரித் தாழப் பறந்து அப்புறம் விழுந்து நொறுங்கிடுத்துன்னாளே, அது தகிடுதத்தம், மாய்மாலம், ஏமாத்து, தெரியுமோ?

அப்படியா?

பின்னே? ஜமுக்காளத்திலே வடி கட்டின பொய்யாச்சே. அந்த ராக்கெட்டை கடன்காரன் அப்படியே நாசூக்கா அமெரிக்காவுக்கு திருப்பி விட்டுட்டான். அலாஸ்காவில் அது மண்ணுக்குள்ளே போய், பெரிய பூகம்பம் தெரியுமோ. ஆயிரம் பேர் அவுட். போன வாரம்.

அட அப்படியா தெரியாதே?

நிஜமாகவே ஆச்சரியப்பட்டான் சின்னச் சங்கரன்.

அது கிடக்கு. நம்மூர் ஆச்சரியம் ஒண்ணு கவனிச்சியா?

தியாகராஜ சாஸ்திரிகள் விசாரிக்க ஆவலோடு காது கொடுத்தான் சங்கரன்.

போன வருஷம் சிவராத்திரிக்கு அப்புறம் நம்மூர்லே ஒரு சாவு கூட விழலே தெரியுமோ?

சாஸ்திரிகள் அவனுடைய திகைப்பை ரசித்தபடி சைக்கிளில் ஏறினார்.

சிவராத்திரிக்கு அடுத்த நாள் உங்கப்பா போனார், அதுக்கும் அடுத்த நாள் ஸ்தானிஸ்லாஸ் வாத்தியார் போய்ச் சேர்ந்தார். அதோட சுபம் போட்டாச்சு. சாவே இல்லே அரசூர்லே. சந்தேகம்னா வேறே யார் கிட்டே வேணுமானாலும் கேளு.

சரி.

சின்ன ஊரிலும் சுவாரசியத்துக்குக் குறைச்சல் இல்லை. இதெல்லாம் சங்கரன் வந்து கேட்க, நம்ப என்று கட்டப்பட்டது. செங்கல் வைக்காத மண் சுவர் மாதிரி. அது பாட்டுக்கு நிற்கட்டும். சங்கரனுக்கு அதுவும் வேண்டித்தான் இருக்கிறது.

நினைவு வந்து விட்டது. இந்தத் தெருப் பெயர் சம்பானூர் மடத்துச் சந்து. தெருவெல்லாம் இல்லை. கொஞ்சம் பெரிய சந்து. அவ்வளவு தான்.

தெம்பாகப் பார்த்தான் சங்கரன்.

நாளைக்கு பார்க்கறேன் சங்கரா. நானும் உங்கப்பா வருஷாப்திக்கு வரேன். பிராமணார்த்தம். விஷ்ணு எலைக்கு நடராஜ வாத்தியார். பண்ணி வைக்க சீனு கனபாடிகள். நான் செகண்ட் இன் கமாண்ட்.

சொல்லியபடிக்கு, தியாகராஜ சாஸ்திரிகள் சைக்கிள் விட்டுக்கொண்டு போனார்.

ஒரு வருஷமா ஒருத்தர் கூடவா சாகலே?

சின்னச் சங்கரன் கேள்வி, பதில் கிடைக்காமல் வெட்டவெளி வெய்யிலில் சுழன்று கொண்டிருந்தது.

(தொடரும்)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன