அச்சுதம் கேசவம் – அத்தியாயம் பனிரெண்டு

அச்சுதம் கேசவம் – அத்தியாயம் பனிரெண்டு
இரா.முருகன்

1964 ஏப்ரல் 3 வெள்ளிக்கிழமை

சின்னச் சங்கரன் அவன் அப்பா சாமிநாதனுக்கு திவசம் கொடுத்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறான். அப்பா சாமிநாதன் தி செகண்ட். பிள்ளையான இவன் சங்கரன் தி செகண்ட். செகண்டா, இல்லை, ஆறா, ஏழா? தெரியாது. பிரிட்டீஷ் ராஜ வம்சம் மாதிரி, போன தலைமுறையில் வைத்து வழங்கி வந்த பெயர் தான் வம்சம் மேலும் தழைக்க வைக்க உதவும் என்கிறார்கள், பெயர் வைக்கப் பணிக்கப் பட்டவர்கள். சின்னச் சங்கரனுக்குத் தன் நாற்பத்திரெண்டாம் வயதில், ஒரு சின்னச் சாமிநாதனை உலகத்துக்குத் தர முடியுமா என்று தெரியவில்லை.

சங்கரன் சரி, சின்னச் சங்கரனின் தாத்தா பெயர். பகவதிப் பாட்டியை அம்பலப்புழையில் தாலி சார்த்திக் கை பிடித்துக் கூட்டி வந்து, தமிழ் பேசுகிற பிரதேசம் முழுக்க, மெட்றாஸிலும் கூடப் புகையிலைக் கடை வைத்து ஓஹோ என்று இருந்த மனுஷராம் அவர். ராசியான பெயர்தான். ஆனால், சின்னச் சங்கரனின் அப்பாவுக்கு வைத்த பெயரான சாமா என்ற சாமிநாதன்? அது அந்தச் சாமாவின் தாத்தா பெயர் இல்லை. அவருடைய பெரிய தகப்பனார் பெயர். புதிரும் பூடகமுமான அந்த சீனியர் சாமா பற்றி எப்போதாவது பகவதிப் பாட்டி ஒரு வாக்கியம், ரெண்டு வாக்கியம் என்று ஏதாவது சொல்லியது தவிர அவர் யாரென்று தெரியாது சின்னச் சங்கரனுக்கு. இத்தனைக்கும் அவளும் தனக்கு மூத்தாரான அவரை நேரில் பார்த்தது இல்லை. அவள் கல்யாணமாகி அரசூர் வருவதற்குள் அந்த மைத்துனர் சாமிநாதன் என்ற சாமா போய்ச் சேர்ந்து விட்டதாகக் கேள்வி.

பூணூலை வலது பக்கம் போட்டுக்கச் சொல்லி ஃபைவ் மினிட் ஆறது. ஆபிசர் சாருக்கு என்ன பலமான யோஜனை? மாஸ்கோ பத்தியா? மகானுபாவன் குருஷேவ் பரம சௌக்கியமா இருக்கறதாத்தான் தகவல்.

அபயமளிக்கிறது போல கையை விரித்துக் காட்டியபடி தியாகராஜ சாஸ்திரிகள் சிரிக்கிறார். மற்ற புரோகிதர்களும் கூடவே சிரிக்கிறார்கள்.

லௌகீகாளுக்கு ஆயிரம் ஒர்ரி இருக்கும் ஓய். வைதீகாள், நாம தான் சின்னச் சின்ன விஷயத்துலே அட்ஜஸ்ட் பண்ணிண்டு பெரும்போக்கா இருக்கணும்.

விஷ்ணு இலையில் ஆகாரம் பண்ண வந்தவர் நைச்சியமாக மத்தியஸ்தம் பண்ணி வைக்கிற குரலோடு தியாகராஜ சாஸ்திரிகளை இடை வெட்டுகிறார். அப்படியா சங்கரா என்று அவன் தாடையைத் தடவுவதாக சிரித்தபடியே அபிநயிக்கிறார் சாஸ்திரிகள்.

டெல்லியில் ஸ்திர வாசம் செய்யும், சகல சக்தியும் வாய்ந்த மத்திய சர்க்கார் சீனியர் அதிகாரியான சின்னச் சங்கரனுடைய லங்கோட்டி தோஸ்த்தாக, பால்ய காலம் முதல் கொண்டு சிநேகிதனாகத் தனக்கு அந்நியோன்யம் இருப்பதை சபைக்குக் காட்டிக் கொண்டு, கல்யாணப் பந்தலில் மாப்பிள்ளைப் பிள்ளையாண்டான், சங்கோஜமான கல்யாணப் பெண்ணை அடிக்கடி பார்த்து அவள் மேல் சகல பாத்யதையும் கொண்டாடும் விதமாகக் கள்ளச் சிரிப்புச் சிரிப்பது மாதிரி, அவ்வப்போது இப்படிச் சிரிக்கிறார் தியாகராஜ சாஸ்திரிகள்

சங்கரன் பூணூலை வலமாக்கிக் கொண்டு எள்ளையும் நீரையும் இரைக்கும்போது வாசலில் நிழல் தட்டுகிறது. மருதையன் மாமா. அரசூர் ராஜா. அப்பா அப்படித்தான் கூப்பிடுவார். அவருடைய சிநேகிதர். அதே எண்பது வயது. தேகம் தளர்ந்தாலும், மிடுக்கு குறையவில்லை. இத்தனைக்கும் ஆகாரம் ரொம்பக் குறைவு. மதுரைக் காலேஜில் புரபசராக இருந்து ரிடையர் ஆன மகாவித்வான்.

மருதையன் வாசலில் இருந்தபடியே எக்கி, கூடச் சுவரில் மாட்டியிருந்த தாக்கோலை எடுத்துக் கொண்டு, கைப்பிடி வளைவைப் பிடித்தபடி ஜாக்கிரதையாக மாடி ஏறுகிறதை அரைக்கண்ணால் பார்த்துக் கொண்டு பூணூலை நேராக்கி, இன்னொரு தேவதையை எழுந்தருளக் கூப்பிடுகிறான் சங்கரன்.

மாடியில் தான் மருதையன் கிட்டத்தட்ட நாள் முழுக்க இருக்கிறார். அவரும் சின்னச் சங்கரனில் அப்பா சாமாவும் தேடித் தேடிச் சேர்த்த புத்தகங்கள் அலமாரி அலமாரியாக மாடியில் தான் இருக்கின்றன. இங்கிலீஷில் பெரும்பாலும். இரண்டு அடுக்கு நிறைய தமிழும் உண்டு. மர்ரே ராஜம் என்று பெயர் எழுதி அழகான அச்சில் கம்ப ராமாயணம் அங்கே இருந்ததைப் போன முறை வந்தபோது புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது நினைவு வந்தது சின்னச் சங்கரனுக்கு.

டெல்லிப் பெரியவா மந்திரம் சொல்லணும் தயவு செய்து. இப்படி அப்பப்போ ப்ரேக் பிடிச்சா வண்டி மதுரை போய்ச் சேர சாயந்திரமாயிடும், ப்ளீஸ் கோவாப்பரேட்.

தியாகராஜ சாஸ்திரிகள் நைச்சியமாகச் சொல்கிறார். காலையில் வரும்போதே அவர் உரிமை நிலை நாட்டப்பட்டு விட்டது. சாஸ்திரிகளின் பலத்த சிபாரிசு இல்லாமல் இந்தப் பித்ரு காரியம் தடையின்றி நடந்தேறிக் கொண்டிருக்காது.

நியாயமாகப் பார்த்தாலோ, சாஸ்திர சம்பிரதாயப்படி நோக்கினாலோ, சின்னச் சங்கரனின் அண்ணன் சுப்பிரமணியன் தான் சீமந்த புத்திரனாக, சாமாவுக்குத் திவசம் கொடுக்க வேணும். எத்தியோப்பியா தேசத்தில் பள்ளிக்கூட உபாத்தியாயராக அவன் உத்தியோகம் பார்க்கக் குடும்பத்தோடு பயணம் வைத்தது சின்னச் சங்கரன் டெல்லிக்குப் போனதற்கு நாலு வருஷம் முன்பாக.

அப்பா காலமான போது கூட நாலு நாள் கழித்து வந்து சுபசுவீகாரம் முடிந்து கிளம்பி விட்டான் அண்ணா. அவன் குடும்பம் எப்போதுமே வந்ததில்லை. அபிசீனியாக்காரர்களாக அவர்கள் கிட்டத்தட்ட ஆகி விட்டார்களாம். ஆமரிக் என்ற அந்த தேச மொழியைத்தான் அவர்கள் வீட்டிலும் பேசுகிறார்களாம்.

உங்கம்மா சுமங்கலியாப் போயிட்டா. அப்பாவும் எண்பது வயசு இருந்து கல்யாணச் சாவு தான். பித்ரு காரியத்தை மட்டும் குறை வைக்காம பண்ணு. மாசாந்திரம் பண்ணாட்டாலும் பரவாயில்லே. இது வருஷ முடிவிலே வர்றது. பர்ஸ்ட் அனிவர்சரி. மேரேஜுக்கு கொண்டாடறது மாதிரி ஜாம்ஜாம்னு செய்ய வேண்டிய காரியம். உங்கப்பாவும் சந்தோஷப்படுவார் கேட்டுக்கோ. ஷேமமா இரு.

சீனு வாத்தியார் காலையில் வந்ததும் தெற்கிலிருந்து திவசத்துக்கு மூதாதையர் சகிதம் புறப்பட்டு வந்து கொண்டிருந்த சாமாவுக்கும் கேட்கிற சத்ததில் இரைந்து ஆசிர்வாதம் சொல்லி, ஆத்துக்காரியை வரச் சொல்லு என்றார்.

நான் மட்டும்தான் வந்திருக்கேன்.

பம்மிப் பதுங்கிச் சொன்னான் சின்னச் சங்கரன் அப்போது.

சாஸ்திர விரோதமாகத் தான் எந்த நல்ல, அல்லாத காரியத்தையும் இந்த ஜன்மம் எடுத்து ஓடிக் கொண்டிருக்கிற இந்த அறுபத்து ரெண்டு வயசு வரை நடத்தி வைத்ததில்லை என்றும் இனி இருக்கக் கூடிய சொற்ப காலத்திலும் அந்த சீலத்தை மாற்ற உத்தேசம் இல்லை என்றும் இன்னும் பெருஞ்சத்தமாக, சாமா விதிர்விதிர்க்கவும், கூட வந்தபடி இருக்கும் முன்னோர்கள் இது ஏதடா ஏடாகூடமாச்சே, நிலைமை சரியாக என்ன செய்யணுமோ என்று மருகவுமாகச் சொன்னார் சீனு வாத்தியார்.

தியாகராஜ சாஸ்திரிகள் தான் கை கொடுத்தார். தில்லியில் வீட்டு வாசல்படி தாண்டி நகர முடியாதபடி சின்னச் சங்கரன் பெண்டாட்டியின் – மாமி பெயரென்னடா – வசந்தா. வசந்தலட்சுமி உடம்பு ஸ்திதி கொஞ்சம் காஸிங் கன்சர்ண். டாக்டர்கள், சங்கரனும் அங்கேயே இருந்து அவளைக் கவனித்துக்கொள்ள வேண்டியதன் அவசியத்தைக் கண்டிப்பாகச் சொன்னாலும், அக்கம் பக்கத்தில் சொல்லி வைத்து விட்டு, வீட்டோடு இருக்க நர்சம்மாவையும் பெரும் செலவில் அமர்த்தி விட்டு சங்கரன் இங்கே வந்தான். ஆபீசில் லீவு கிடைக்காமல் கடைசி நிமிஷத்தில் அடித்துப் பிடித்துக் கொண்டு புறப்பட்டது, மூணு ராத்திரி ரெண்டு பகல் முழுக்கக் கூட்டமான ரயிலில் நின்றும், கக்கூஸ் பக்கம் ஈரத் தரையில் உட்கார்ந்தும் மெட்றாஸ் போய்ச் சேர்ந்தது, மெட்றாஸில் இருந்து பல பஸ் மாறி ராத்திரி முழுக்கத் தூங்காமல், முழங்கால் வீங்கி உடம்புச் சூட்டில் கண் பொங்கி, தலைக்குள் குடைச்சலான அவஸ்தையோடு அரசூருக்கு வந்து சேர்ந்தது எல்லாமே இங்கே வைதீக காரியம் முடங்காமல் நடத்தித் தரத்தான் என்று ஏகத்துக்கு சங்கரனின் அவஸ்தைகளைப் பட்டியலிட்டார் தியாகராஜ சாஸ்திரிகள். அதில் பலதும் சங்கரனே அறியாதது.

புரோகிதத்துக்கான தட்சணையைக் கணிசமாக உயர்த்தும் உத்தேசத்தோடு சங்கரன் வந்திருக்கிறான். கோதானம் கொடுக்கவும் பணமும் மனமும் உண்டு. வெங்கடாசலக் கோனாரிடம் சொல்லி வைத்து அவர் காராம் பசுவோடு வந்து கொண்டிருக்கிறார். சங்கல்ப தானமாக அவருக்குப் பணம் கொடுத்து பசுவை வாங்கி சீனு வாத்தியாருக்குக் கொடுத்து, ஒரு மணி நேரம் கழித்து சீனு வாத்தியார் கோனாருக்கே, வாங்கினதுக்கு நூற்றைம்பது ரூபாய் குறைவாகப் பசுவை விற்று விடலாம். இதையெல்லாம் உத்தேசித்து, ஒரு தர்ப்பையைக் கிள்ளிப்போட்டு அதை சின்னச் சங்கரன் பெண்டாட்டியாக சங்கல்பித்து, ஆத்திர அவசரத்துக்குத் தோஷமில்லை என்றபடி, எடுத்த காரியத்தை நல்ல படிக்கு நிறைவேற்றி முடிக்க வேண்டியது தான்.

போறது, இவரோட அப்பா சாமா தங்கமான மனுஷர். அப்பேர்க்கொத்தவர், திதிக்கு வந்துட்டு பசியோடு திரும்பினா, என்னடா வைதீகன் நீன்னு என்னையில்லையோ சபிப்பார்? தாங்குவேனா?

சீனு வாத்தியார் அதிகமாகவே நடுநடுங்கி வசந்தியைத் தருப்பையில் சங்கல்பித்து மளமளவென்று வருஷாப்திக காரியத்தை நடத்திப் போய்க் கொண்டிருக்கிறார்.

மீதி இருக்கப்பட்ட நெய்யை எல்லாம் அக்னியிலே விட்டுடுப்பா. எலை போடச் சொல்லு.

சீனு வாத்தியார் அறிவித்ததற்குப் பத்து நிமிஷம் கழித்து வைதீகர்கள் சாப்பிட்டுத் திருப்தி அறிவித்து வாசலுக்குப் போக, கொம்பில் ஜவந்திப் பூ சுற்றி, நெற்றியில் குங்குமம் வைத்து நின்றிருந்த பசு மாடு தானமாகியது.

தெருவில் இருந்த, சாமாவுக்கும், புகையிலைக்கடை குடும்பத்துக்கும் வேண்டப்பட்ட ஒரு முப்பது பேர் பேச்சு நெடுக சுவாதீனமாக சாமாவை நினைவு கூர்ந்தபடி, பெரிய இலையில் விளம்பப்பட்ட நேர்த்தியான வாழைக்காய்ப் பொறியல், இஞ்சித் துவையல், வெல்லப் பாயசம், பால் திரட்டுப் பால், எள்ளுருண்டை, வடை, சுவியன், மிளகூட்டான், புத்துருக்கான நெய், சம்பா அரிசிச் சாதம், மிளகரைத்த காரக் குழம்பு, கெட்டியான மோர் என்று ரெண்டு பந்தியாக இருந்து, திருப்தியாக உண்டு முடித்துக் கிளம்பிப் போனார்கள்.

சின்னச் சங்கரன் இதற்கு நடுவில் குவளையில் கொண்டு போய்க் கொடுத்த பாலை மட்டும் குடித்து விட்டு மருதையன் சுவாரசியமாகப் படித்துக் கொண்டிருந்தார். எல்லோரும் சாப்பிட்டுப் போய், சங்கரனும் உட்கார முற்பட்டபோது அவன் திரும்ப ஒரு தடவை மாடிக்கு ஏறி, கொஞ்சம் பாயசமும், தயிர் விட்டுப் பிசைந்த சாதமும் எடுத்து வரலாமா என்று விசாரித்தான். மருதையன் நீர்க்கக் கடைந்த மோர் மாத்திரம் போதும் என்று சொல்லி விட்டார். அங்கே சாப்பிட விதிக்கப் பட்டவரில்லை அவர் என்று சாமாவுக்கும் தெரியும். மருதையனும் அறிவார்.

அவசர அவசரமாகச் சாப்பிட்டு விட்டுச் சங்கரன் மருதையனைப் பார்க்க திரும்ப மாடிக்குப் போனான். மருதையன் நடு அலமாரிக்கு முன் நின்று புத்தகம் தேடிக் கொண்டிருந்தார்.

மருதையன் மாமாவாவது இந்தப் புத்தகத்தை எல்லாம் படிக்கிறாரே. சங்கரனுக்கு ஆசுவாசமாக இருந்தது.

அவர் இன்னமும் தான் செய்கிறார். மாடி மட்டும் தினசரி புழக்கத்திற்கு அவர் வைத்திருந்தாலும், வேலைக்கு ஆள் அமர்த்தி, வீடு முழுக்கத் தினமும் பெருக்கித் துடைத்து, அவ்வப்போது சின்னச் சின்னதாகப் பழுது பார்த்து வீட்டை நல்ல நிலையில் வைத்திருக்கிறார். அவர் மட்டும் இல்லாவிட்டால் வருடம் ஒரு தடவை சங்கரன் வரும்போது வீடு இருளடைந்து, வௌவால் நிரம்பி, தூசியும் ஒட்டடையுமாக ஓய்ந்து போய்க் கிடக்கும்.

மருதையன் அலமாரியில் இருந்து இன்னொரு புத்தகத்தை எடுத்துக் கொண்டு சாய்வு நாற்காலிக்கு வந்தார்.

இதென்ன மாமா, மலையாளப் புஸ்தகம் மாதிரி இருக்கே?

சங்கரன் ஆச்சரியத்துடன் கேட்டான். இங்கே மலையாளப் புத்தகம் இருப்பதே ஆச்சரியம் என்றால் அதை விடப் பெருத்த ஆச்சரியம், மருதையன் அதைப் படிப்பது.

ஆமா சங்கரா, நானும் உங்கப்பாவும் கிரமமா மலையாளம் படிக்க ஆரம்பிச்சோம் ஒரு காலத்துலே. பகவதியம்மா அண்ணன் மகன். உங்க மாமாத் தாத்தா அப்படித்தானே சொல்லணும்? கோட்டயம் புரபசர் வேதையா. அவர் வரும்போதெல்லாம் சொல்லிக் கொடுப்பார். கோட்டயத்திலே புஸ்தகம் வாங்கி, எனக்கு காலேஜ் அட்ரஸ்லே மதுரைக்கு அனுப்புவார். அதுலே ஒண்ணு.

சங்கரன் புத்தகத்தை மரியாதை நிமித்தம் வாங்கிப் புரட்டிப் பார்த்து விட்டுத் திருப்பிக் கொடுத்தான்.

வேதையன் மாமா எப்படி இருக்கார்? இங்கே வந்திருந்தாரா?

சங்கரன் கேட்க, அவர் போன ஃபெப்ரவரியில் நல்லடக்கம் ஆனதாக மருதையன் அறிவித்தார். கொஞ்ச நேரம் ரெண்டு பேரும் பேசாமல் இருந்தார்கள். தடித்த ப்ரேம் போட்ட மூக்குக் கண்ணாடியும், முழு வழுக்கைத் தலையுமாக வேதையன் மாமா ஞாபகத்தில் இருக்கிறார். இன்னொரு எண்பது சொச்சம் வயதுக்காரர். கிறிஸ்துவராக இருந்தாலும் உறவு தான்.

சரி மாமா நான் கீழே போய் சமையல், சுத்து காரியத்துக்கு பணம் செட்டில் பண்ணிட்டு வரேன். வரும்போது காப்பி எடுத்து வரட்டா? நானும் குடிக்கப் போறேன்.

உங்க அப்பனைக் கொண்டிருக்கே சங்கரா. உங்க தாத்தா, உன் பேர்க்காரர், சின்னப் பிள்ளையிலே பார்த்திருக்கேன். அவரும் சரியான காப்பிப் பைத்தியம்.

அவர் சிரித்தபடியே திரும்ப எழுந்து அவசரமாக அலமாரிப் பக்கம் போனார்.

இரு, போயிடாதே. இதைப் பார்த்துட்டுப் போ. குடும்பப் புதையல். அப்படித்தான் சொல்லணும்.

அவர் திரும்பி வந்தபோது கையில் ஒரு பழைய டயரி இருந்தது.

படிச்சுப் பாரு. அசந்துடுவே.

சங்கரன் அவசரமாகப் புரட்டினான்.

அந்த நாற்காலியை இழுத்துப் போட்டு உக்காந்து படி. முழுக்கப் படிச்சு முடிக்கலேன்னாலும் ஆரம்பமாவது எப்படின்னு பாரு.

இதமான பழைய காகித வாசனை அடிக்கிற டயரி. தெளிவான, கருப்பு மசியில் எழுதிய எழுத்துகளில் சற்றே குழந்தைத் தனம் தெரிந்தது. பெண்ணெழுத்து இது என்று யாரும் சொல்லாமலேயே புலனாகியது.

சங்கரன் படிக்க ஆரம்பித்தான்.

பகவதியின் டயரியில் இருந்து
————————
அரசூர் பொங்கல் கழிந்து நாலாவது சனிக்கிழமை இங்கிலீஷ் வருஷம் 1877

நான் பகவதி. பகவதிக் குட்டியாக்கும் முழுப் பெயர். அம்பலப்புழக்காரி. அங்கே பகவதிக் குட்டி என்றால் வெகு சகஜமான பெயர். இங்கே தமிழ் பேசுகிற பூமியில் குட்டி என்றால் கேலியும் கிண்டலும் பண்ணுவார்களாமே. அம்பலப்புழையிலிருந்து கல்யாணம் கழித்து இங்கே வந்தபோது என் புருஷன் அப்படித்தான் சொன்னார். அவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும். மலையாளம் மட்டும் தெரிந்த எனக்கு தமிழ் சுமாராக தப்பு இல்லாதபடிக்கு எழுத, மலையாள வாடை அதிகம் கலக்காமல் பேசக் கற்றுக் கொடுத்தவர் அவர்தான்.

நாங்கள் இங்கே அரசூரில் இருக்கிறோம். அவர் புகையிலைக் கடை வைத்து நிர்வாகம் செய்கிற பிராமணன். என்ன யோசனை? பிராமணன் புகையிலைக் கடை வச்சிருக்கானா, அடுத்தாப்பல என்ன, அரவசாலை.. ஷமிக்கணும்..கசாப்புசாலை..கசாப்புக்கடை, சாராயக்கடை தான் பாக்கி என்று நினைக்கிற தோதிலா?

புகையிலைக்கடைக்காரனுக்கு எல்லாம் நம்மாத்துப் பெண்ணைக் கல்யாணம் செய்து அனுப்புகிறோமே, காசு வசதி அத்தனைக்கு இல்லாமலா போனது நமக்கு என்று என் அண்ணாக்கள் மூணு பேரும் ஏகத்துக்கு விசனப்பட்டார்கள். இத்தனைக்கும் அவர்கள் யாரும் தாசில்தார், கோர்டு கிளார்க்கர்மார் போல் பெரிய உத்தியோகத்தில் இருக்கப்பட்ட மனுஷ்யர் இல்லை. சமையல்காரர்கள் தான். நாலு பேருக்கு இல்லை, நானூறு பேருக்கு வடிச்சுக் கொட்டி, கிண்டிக் கிளறி, வறுத்துப் பொடித்து வதக்கி, கரைத்து, காய்ச்சி மணக்க மணக்க கல்யாண சமையல் செய்கிற சமையல்காரர்கள். தேகண்ட பட்டன்மார் என்பார்கள் எர்ணாகுளம், கொச்சி பக்கம். பட்டன் என்றால் தமிழ் பேசுகிற தாழ்ந்த ஸ்திதியில் இருக்கப்பட்ட பிராமணன். நம்பூதிரிகள் உயர்ஜாதி தெய்வ துல்யரான பிராமணர்கள். அவர்களுக்கு பட்டன்மார் ஆக்கி வைக்கிற சமையல் ரொம்பவே பிடிக்கும். எங்களை மாதிரி பட்டத்திக் குட்டிகளையும் கூட. எந்த ஜாதி பெண்ணை விட்டார்கள் அவர்கள்? எது எப்படியோ, தமிழ் பிராமணன் அழுக்கு தரித்திரவாசி. போனால் போகட்டும் என்று ரொம்ப தாழ்ந்த ஸ்தானம் கொடுத்து அவர்களையும் பிராமணர்களாக கொஞ்சூண்டு மதிக்கிறார்கள்.

நம்பூத்ரி கிடக்கட்டும். அம்பலப்புழை பற்றி இல்லையோ பிரஸ்தாபம்.

கல்யாணம் கழிச்சு ரெண்டு வருஷம் பாண்டி பிரதேசத்தில் இந்த அரசூரில் குடியும் குடித்தனமுமாக இருக்க ஆரம்பித்த பிற்பாடு கூடசொந்த ஊர் மோகமும், ஈர்ப்பும், பறி கொடுத்த மனசும், அங்கே போகணுமே என்று சதா மனசிலொரு முலையில் நமநமன்னு பிறாண்டி பிராணனை வாங்கறது.

கிடக்கட்டும் அதெல்லாம். அதை எல்லாம் வரிந்து கட்டிக்கொண்டு உட்கார்ந்து எழுத இல்லையாக்கும் எங்களவர் இப்படி கட்டு கட்டாக காகிதமும் கட்டைப் பேனாவும், ஜலத்தில் கரைத்தால் மசியாகிற குளிகையும் வாங்கி கொடுத்ததும் கையைப் பிடித்து உருட்டி உருட்டி தமிழ் எழுத சொல்லிக் கொடுத்ததும்.

தினசரி மனசில் தோணுகிறதை நாலு வரியாவது எழுதி வை. கையெழுத்தும் தமிழ் ஞானமும் மேம்படும். நிறைய எழுத ஆரம்பித்ததும் பட்டணத்தில் வெள்ளைக்காரன் போட்டு விக்கற டயரி வாங்கி வந்து தரேன். தினசரி ஒரு பக்கம் தேதி போட்டு எழுத சவுகரியமாக கோடு எல்லாம் போட்டு வச்சிருக்கும். வருஷா வருஷம் டயரி எழுதி நம்ம சந்ததிக்கு நாலு காசோடு கூட ஆஸ்தியாக விட்டுட்டுப் போகலாம். இதோட மதிப்பு இப்போ தெரியாது. இன்னும் நூறு வருஷம் கழிச்சு தெரிய வரும் அப்படீன்னு சொன்னார்.

இங்கிலீஷ்காரன் பிருஷ்டம் துடைச்சுப் போடுகிற எழவெடுத்தவன். அவன் போட்ட நாத்தம் பிடிச்ச டயரி எல்லாம் வேண்டாம். உங்க பேரை எழுதக் கூட அது தகுந்ததில்லைன்னு சொல்லிட்டேன்.

அய்யோ, மசி தீர்ந்து கொண்டு போறது. நான் இன்னும் விஷயத்துக்கே வரலே. வந்தாச்சுடீயம்மா.

நேற்றைக்கு வெள்ளிக்கிழமையாச்சா? அரசூர் பக்கம் நாட்டரசன்கோட்டையில் கண்ணாத்தா கோவிலுக்கு சாயந்திரம் போய் மாவிளக்கு ஏற்றி வச்சு ஒரு கண்மலர் சாத்திட்டு வரலாமேன்னார். அவர் போன மாசம் கண்ணிலே கட்டி வந்து கஷ்டப்பட்டபோது வேண்டிண்டது.. வெள்ளியிலே கண் மலர்னு சொல்வா இங்கே.. அம்பாள் கண்ணோட சின்ன பிரதிமை.. அங்கேயே விக்கற வழக்கம். வாங்கி கண்ணாத்தா பாதத்தில் வச்சுக் கும்புடணும். ரொம்ப இஷ்டமான காரியமாச்சே. அம்மாவோ அம்மையோ எல்லாம் நீதாண்டி ஈஸ்வரி.

ஆக நான், வண்டிக்கார ஐயணை, பக்கத்தாத்து அரண்மனைக்கார ராணி மாமி. என்ன அதிசயமா அப்படி ஒரு பார்வை? எங்காத்துக்கு அடுத்த வீடு ஜமீன் அரண்மனை. ராஜா இருக்கார். மாமனார் இருந்தா அவர் வயசு. ராணியம்மா உண்டு. ராணி மாமின்னு கூப்பிடுப் பழகிடுத்து. தங்கமான மனுஷர்கள்.

நாங்க தவிர, அரசூர் அரண்மனை ஜோசியர் வீட்டு சோழிய அய்யங்கார் மாமி, அவா பக்கத்து எதிர் வீட்டுலே ரெண்டு பெண்டுகள் .. பெருங்கூட்டம் தான். ஐயணை ஓட்டற ரெட்டை மாட்டு வண்டியிலே நாங்க. பெரிய கப்பல் மாதிரி விஸ்தாரமான வண்டியாக்கும் அது. ராணியம்மா ஏறணும்னா ஏப்பை சாப்பை வண்டி எல்லாம் சரிப்பட்டு வருமா என்ன?

இது ஸ்திரிகள் பட்டியல். ஆம்பளைகளும் நிறைய. எங்காத்துக்காரர், அவருடைய புகையிலைக்கடை ஸ்நேகிதர்கள், அரண்மனை வாசல் ஜவுளிக்கடை மூக்கக் கோனார், அரண்மனை சமையல்காரன் பளனியப்பன் ஆமா பழனியப்பன் இல்லையாம். இப்படி இன்னொரு கூட்டம் புளி மூட்டையாக இன்னொரு பெரிய வண்டியில்.

வெய்யில் தாழ நாலரை மணிக்குக் கிளம்ப உத்தேசிக்க, இவர் புகையிலைக் கடை நெடியும், க்டைத்தெரு புழுதியும் வியர்வையுமாகக் கசகசக்கிறது என்று குளிக்கக் கிளம்பிவிட்டார். கிணற்றில் இரைத்து ஊற்றி, ஊர்க்கதை பேசி ஐயணை குளிப்பாட்டி விட்டபோது ஐந்து மணிக்கு மேலாகி விட்டது. புருஷன் குளித்துக் கிளம்பும்போது பெண்ஜாதி அட்டுப் பிடித்தாற்போல் போகலாமா என்று நானும் நாலு வாளி இரைத்து ஊற்றிக் கொள்ளும்போது மூக்கில் போட்ட நத்து கிணற்றில் விழுந்து தொலைத்தது. வைரத்தோட்டை எடு, மூக்கில் குத்தி ரத்தம் வர திருகு என்று நரக வாதனையோடு அதை போடுவதற்குள் மூத்திரம் ஒழிக்க முட்டிக் கொண்டு வந்தது.

சரி கிளம்பலாம் என்று எல்லோரும் புறபபட மாம்பழப் பட்டுப் புடவையைச் சுற்றிக் கொண்டு அவசரமாக மாட்டு வண்டியில் போய் உட்கார்ந்தேன். பக்கத்து அரண்மனையாத்து ராணிமாமி எனக்கு முன்னாடியே அங்கே இருந்தார். ரொம்ப வாஞ்சை அம்மா மாதிரி. மாமியார் இல்லாத குறையை தீர்க்கவே இவரை தெய்வம் கொண்டு வந்து விட்டதோ என்னமோ. பிராமணாள் இல்லை. சேர்வைக்காரர் வம்ச வாவரசி. ஜாதி என்ன கண்றாவிக்கு? மனுஷா மனசில் அன்போடு பழகினால் போதாதா?

தட்டை, முறுக்கு, திராட்சைப் பழம் என்று நாலைந்து ஆகார வகையறாவை வண்டியிலேயே ராணிமாமி திறக்க மற்றப் பெண்டுகள் வஞ்சனையில்லாமல் தின்று தீர்த்தார்கள். கூட ஆண்கள் இல்லாத சந்தோஷமாக்கும் அது. அப்புறம் பானகம். வேணாம் வேணாம் என்று நான் சொல்ல சங்கிலே சிசுவுக்கு மருந்து புகட்டுகிற மாதிரி தலையைத் திருகி வாயில் ஒரு பஞ்ச பாத்திரம் நிறைய் வார்த்து விட்டாள் ராணி. நான் எட்டிப் பார்த்தேன். ஆண்கள் வந்த வண்டியை எங்காத்துக்காரர் தான் ஜன்மாஜன்மத்துக்கும் வண்டிக்காரனாக ஆயுசைக் கழிக்கிற மாதிரி உற்சாகமாக வண்டி ஓட்டி வந்தார். வாயில் ஏதோ தீத்தாராண்டி பாட்டு வேறே.

நாட்டரசன்கோட்டை போனதும் தெப்பக்குளக் கரையில் ரெண்டு வண்டியும் நின்றது. ஆம்பிளைகள், எங்காத்துக்காரரும் கூடத்தான் வரிசையாக இறங்கி ஓரமாக வேலி காத்தான் புதர் ஓரம் குத்த வைத்தார்கள். எங்க வண்டியிலே மசான அமைதி. பொண்ணாப் பிறந்த ஜன்ம சாபம் அப்போது தான் எல்லாருக்கும் உறைத்தது.

அத்தனை பொம்மனாட்டிகளும் பானகமும் ஊருணித் தண்ணீரும், சீடை முறுக்கு சாப்பிட்ட அப்புறம் பித்தளை கூஜாவில் இருந்து ஏலக்காய் போட்ட வென்னீருமாகக் குடித்து எல்லோருக்கும் வயிறு வீங்குகிற அளவு மூத்திரம் முட்டுகிறது. ஆனா, பெண்ணாப் பிறந்தவ, அவ ஊருக்கே பட்டத்து ராணியா இருந்தாலும், உலகத்துக்கு ஜாதகம் கணிக்கிற ஜோசியர் பெண்டாட்டியாக இருந்தாலும், காசு புரளும் புகையிலைக்கடைக்காரன் ஆம்படையாளாக இருந்தாலும் இடுப்புக்கு கீழே ராத்திரி மட்டும் உசிர் வரப் பட்டவர்கள். மற்ற நேரம், பொண்ணாப் பொறந்தாச்சு, பொறுத்துக்கோ.

சந்நிதிப் படி கடக்கும்போது எங்கே புடவையை நனைத்துக் கொண்டு விடுவேனோ என்று ஏக பயம். அதோடு கண்ணாத்தாளைத் தரிசிக்க, அவள் சிரித்தாள். என்ன அய்யர் ஊட்டுப் பொண்ணே, ரொம்ப நெருக்குதா? என்றாள். ஆமாடி ஆத்தா.

ஒரு நாள் இப்படி வாயிலே நுரை தள்ளுதே நான் வருஷக் கணக்கா இப்படித்தானே நிக்கறேன்னாளே பார்க்கணும். இல்லை எனக்கு மட்டும் கேட்டுதா?

அவசரமே இல்லாமல் பூசாரி தமிழ், கொஞ்சம் கிரந்தம், அப்புறம் ஏதோ புரியாத பாஷை எல்லாத்திலேயும் மந்திரம் சொல்லி சிரித்தார். தமிழில் நெஞ்சு உருகப் பாடினால் வேணாம் என்றா சொல்லப் போறா? அவ கிடக்கா. எனக்கு இப்படி முட்டிண்டு.

அப்புறம் ஒரு மணி நேர்ம் கூடுதல் சித்தரவதையோடு ஊர் திரும்ப வண்டி கட்டினார்கள். போகிற வழியில் ஆம்பிளைகள் திரும்ப குத்தி உட்கார்ந்து இன்னொரு தடவை நீரை எல்லாம் இறக்க, கால் வீங்கிப் போய் நாங்கள் சிவனே என்று வண்டியிலேயே உட்கார்ந்திருக்க வேண்டிப் போனது. பிரம்மா படைச்சபோது ஒரு குழாயை கூடவே கொடுத்திருக்கக் கூடாதா? நாளைக்கு விக்ஞானம் வளரும்போதாவது பிரம்மாவாவது புடலங்காயாவது என்று தூக்கிப் போட்டு விட்டு இந்தக் குழாய் சமாசாரத்தைக் கவனிக்கக் கூடாதா?

வீட்டுக்க்குள் வந்து பின்கட்டுக்கு ஓடி ஒரு பத்து நிமிஷம் பெய்து தீர்த்தேன். எதுக்கோ உடனே குளிக்கத் தோன்ற கிணற்றில் இரைத்து இன்னொரு ஸ்நானம். உள்ளே வந்து புடவையை மாற்றிக் கொண்டு பிரம்மாவுக்கும் சரஸ்வதிக்கும் நமஸ்காரம் பண்ணினேன். தப்பாச் சொல்லிட்டேனேப்பா உன்னை. பொண்ணு என்ன சொன்னாலும் எப்பச் சொன்னாலும் தப்பாச்சே. குழாய் எல்லாம் வேண்டாம்.
—————–
எப்படி இருக்கு?

சங்கரன் பிரமை பிடித்தது போல் மருதையனையே பார்த்துக் கொண்டிருந்தான்.

டயரியை மார்போடு அணைத்தபடி சங்கரன் சொன்னான் –

இது பகவதிப் பாட்டி இல்லே மாமா. எனக்கு அர்த்தமாகிற சிநேகிதி பகவதிக் குட்டியம்மா.

(தொடரும்)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன