அச்சுதம் கேசவம் – அத்தியாயம் ஒன்பது

அச்சுதம் கேசவம் – அத்தியாயம் ஒன்பது
இரா.முருகன்

மார்ச் 26 1964 வியாழக்கிழமை

அது பிசாசு பிடிச்ச வண்டி ஒண்ணும் இல்லை என்றார் அமேயர் பாதிரியார்.

ரொம்பத் தெளிவான வார்த்தைகள். அவர் இருக்கப்பட்ட பிரதேசத்தில் இப்படியான சில்லுண்டி வினோதம், வேடிக்கை எதுவும் நடக்காது. நடக்கிற எல்லாவற்றுக்கும் காரண காரியம் இருக்கும். அற்புதங்கள் ரோம் நகரில் இருந்து மடாலய அறிவிப்போடு ஞாயிற்றுக்கிழமை தவிர்த்த பிற தினங்களில் எப்போதாவது நிகழக் கூடும். அவற்றில் யந்திரங்கள் சம்பந்தப்பட்டிருக்காது.

அவர் முன்னால் நின்றபடி மாமிசம் அரிந்து கொண்டிருந்தவன் பாதிரியார் சொன்னதை ஆதரித்துத் தலையைத் தலையை ஆட்டினான். அவன் வெட்டிச் சாய்த்த ஆட்டின் தலை கூட அந்தக் காலை நேரத்தில் வினோதமாக ஆடிக் கொண்டிருந்தது. விடிகாலையில் பரலோகம் போன ஆடானால் என்ன சும்மா வெறுமனே வாய் பார்த்து அங்கேயும் இங்கேயும் சுற்றித் திரிகிற மனுஷனானால் என்ன? இது ஆச்சரியகரமானது என்று ஊரோடு சொல்கிறதை பாதிரியார் மறுக்கிறாரே. அந்த வார்த்தைக்கு மதிப்புக் கொடுப்பது அவசியமில்லையா?

விஷயம் வேறொன்றுமில்லை. கொச்சு தெரிசா வீட்டுக்காரன் ஒரு கார் வாங்கி இருக்கிறான். கால்டர்டேல் தொடங்கி, சந்தைப் பேட்டை வரை இதுதான் பேச்சாக இருக்கிறது ஒரு வாரமாக.

கொச்சு தெரிசா அளவுக்கு அவள் வீட்டுக்காரன் பிரசித்தமானவன் இல்லையென்று இருந்ததை இந்தக் கார் வந்து மாற்றிப் போட்டது.

அதைத் தான் பிசாசு பிடிச்ச வண்டி என்றார்கள் எல்லோரும். இல்லை என்கிறார் அமேயர் பாதிரியார். அவர் வீட்டில் பிரஞ்சும் வெளியே இங்கிலீஷும் பேசுகிற கத்தோலிக்கர். இந்தக் கொச்சு தெரிசா வீட்டுக்காரனோ சுத்த சுயம்புவான இங்கிலீஷ் பேசும் பரம்பரையில் வந்த பிரிட்டீஷ்காரன், அதுவும் யார்க்‌ஷையர் பிரகிருதி என்பதால் எடுத்தெறிவதும், ஏளனமும் பேச்சில் நிறைந்து அவமரியாதை கரைபுரண்டு ஓடும். அவன் இந்தியாக்காரி கருப்பியைக் கல்யாணம் செய்த இங்கிலீஷ்காரன். அதற்கான மனோதிடம் இருக்கப்பட்டவன். அந்த விதத்தில் அமேயர் பாதிரியார் அவனை எப்போதும் மதிப்பார். அவன் போக்கிரி என்றாலும்.

சரி, அவரை யார் போய்க் கேட்கிறார்கள்? போனால், சர்ச்சுக்கு ஏன் வரலை என்று துளைத்தெடுப்பார். உயிர்த்தெழுதல் தினத்தில் ஆவிக்கு யார் சாட்சி நிற்பார்கள்? அவர் டீ குடித்துக் கொண்டே பயம் காட்டுவார். சர்ச் வளாகத்துக்குள் ஓரமாகக் கட்டி வைத்து சதா சுவரை நனைக்காமல் கால் தூக்கும் அவருடைய லாப்ரடார் நாய்கள் பல்லைத் துருத்தி அவரையோ வந்தவனையோ ரெண்டு பேரையுமோ அழகு காட்டும். அதுகளுக்கு மறு உயிர்ப்பு நாள் பிரச்சனை எல்லாம் இல்லை. உயிர்த்தால் அவை கோயில் உத்யோகஸ்தராகும் என்பார் பாதிரியார்.

அமேயர் பாதிரியார் கொச்சு தெரிசா வீட்டுக்காரன் மேல் கொஞ்சம் போல பொறாமை கொண்டவர் தான். கால்டர்டேலில் பழைய வீட்டை வாங்க, விற்க, மற்றும் குடித்தனத்துக்கு ஆள் பிடித்து விட என்று உத்யோகத்தை ஏற்படுத்திக் கொண்டு மெட்காப் என்று பெயர் வாய்க்கப் பட்ட அந்த மனுஷன் சீலமும் செல்வமும் கொழிக்க ஜீவிக்கிறான்.

கால் பக்கம் அழுக்கான அங்கியை மாட்டிக் கொண்டு பூசை வைக்க நடந்தே அமேயர் பாதிரியாரின் வாழ்க்கை சூரியாஸ்தமன நாட்களுக்கு வந்தானது. ஒரு ஐநூறு பிள்ளைகளுக்குக் கிறித்துவப் பெயர் வைத்து ஆசிர்வதித்தும், முன்னூறு கல்யாணங்களை நடத்திக் கொடுத்தும், மூவாயிரத்துச் சொச்சம் ஞாயிறு திருப்பலி கொடுத்துப் பிரசங்கித்தும் கடவுள் ராஜ்யத்துக்கு இந்தப் பிரதேசத்தில் ஆழமாக அடித்தளம் போட்டிருக்கிறார் அவர்.

கொச்சு தெரசாவின் வீட்டுக்காரனான கள்ளன் மெட்காப் மாதிரி பேர்வழிகளும் ஒரு துரும்பையும் நகர்த்தாமல், அமேயர் பாதிரியாரின் பிரார்த்தனை மூலம் அற்புத சுகம் அடைந்து ஆத்ம சரீர இளைப்பாறுதல் பெறுவார்கள் போல் இருக்கிறது. அது என்ன விதத்தில் நியாயமாகுமோ.

பாதிரியார் பிழைப்பில் இது ஒரு கஷ்டம். அடுத்தவன் நாசமாகப் போகட்டும் என்று பிரார்த்திக்க முடியாது. நல்லது வேண்டித் தினசரி சிறிய, பெரிய அசௌகரியங்களைக் கருதாது செய்த ஊழியத்துக்குச் சம்பளமும் சொல்லொணாத் தரத்தில், கால்டர்டேல் பஸ் நிறுத்தத்தில் தொப்பியை நீட்டுகிற ஜேம்ஸ் இவானுக்குச் சமமான, சொல்லப் போனால் அதுக்கும் குறைவாக அன்றோ கிடைக்கிறது. பாதிரியார்கள் மில் தொழிலாளர்கள் போல் தொழிற்சங்கம் எல்லாம் வைக்கக் கூடாதென்று சட்டம் சொல்லுகிறதாம். அவர்களுடைய முதலாளி இங்கே பிரத்யட்சமாக, சதா எல்லோருடைய கண்ணிலும் படுகிற மாதிரி இருந்தால் தான் தொழிலாளி முதலாளி உறவு சட்ட பூர்வமாக அங்கீகரிக்கப் படுமாம். கர்த்தரை எப்படி கால்டர்டேல் அழைத்து வருவது என்று அமேயர் பாதிரியாருக்குத் தெரியாது.

கள்ளன் மெட்காபுக்கு அந்த கர்த்தரின் கரிசனமும் பரிபூரண் ஆசியும் அதிகமாகவே இருப்பதாக அமேயர் பாதிரியார் கருதினார். தேவைக்கு மேலே, தினசரி மூக்கு முட்டக் குடித்து, வாயோயாமல் தின்று தீர்த்து, புகைச் சுருட்டாக ஊதியும் விட்ட பிறகு அந்தக் களவாணியிடம் சாக்கிலும் முறத்திலும் கொட்டிக் கொட்டிக் கட்டி வைக்க ஏராளமான காசு இருக்கிறது. நினைத்துக் கொண்டாற்போல லண்டன் போகிறான். மேன்செஸ்டரில் கால்பந்து பார்த்து, சுற்று வட்டாரத்தில் செம்மறியாட்டுக் கிடா மாதிரி மதர்த்துத் திரிந்து விட்டு வருகிறான். ரெண்டு வீடு ஒரே நேரத்தில் வாங்கி, இடித்துப் பொளித்து பெரியதாக புதுவீடு அமைத்துக் கொண்டு அங்கே ஆசிர்வாதம் செய்யக் கேவலம் பத்து பவுண்ட் மட்டும் தட்சணை கொடுத்து அமேயர் பாதிரியாரைக் கூப்பிட்டு விட்டு வேலை வாங்குகிறான். இப்போதானால், நூதனமான ஒரு காரை வாங்கி ஊர் முழுக்க அதைப் பற்றியே பேச வைத்திருக்கிறான்.

போன வாரம் அந்தத் தடியன் லண்டனுக்கே போய் இந்தக் காரை வாங்கிக் கொண்டு வந்தான். போவதற்கு முந்தைய நாள் ராத்திரி கூட கொலாசியம் மதுக்கடையில் முட்ட முட்டக் குடித்தபடி லண்டன் போகிற திட்டத்தை ஒரு பிள்ளை மிச்சமில்லாமல் பகிர்ந்து கொண்டான் அவன்.

மழை பெய்ய ஆரம்பித்த ராத்திரியில் குடையை அரைகுறையாக விரித்துப் பிடித்துக் கொண்டு அமேயர் பாதிரியார் கொலாசியம் மதுக்கடையைக் கடக்க முற்பட்டபோது உள்ளே இருந்து அவன் குரல் அவர் முன்னால் போகவொட்டாமல் தடுத்து நிறுத்தியது.

எனக்கு வேண்டிக் கொள்வதை சரிபாதியாகக் குறைத்துக் கொண்டு என் காருக்கு மிச்ச வேண்டுதலைச் செலுத்துங்க. உங்க கால் ஆணி மற்றும் நாட்பட்ட ஆஸ்துமா சொஸ்தமாக நான் ரோமாபுரி போய் போப்பரசரிடம் வேண்டிக்கறேன்.

அமேயர் பாதிரியார் மதுக்கடையைக் கடந்து போகும்போதெல்லாம் தனக்குக் காது கேட்காது, கண்ணு ரெண்டும் பார்க்காதொழிந்தது என்ற பாவனையிலேயே நடந்து போவார். பூசை வைக்கிற நேரத்தில் கோவிலில் பவ்ய ஜீவன்களாக கடைசி வரிசையில் உட்கார்ந்து கருதலோடு ஜபம் செய்கிற நல்லாட்டுக் குட்டிகள் கூட, ஒரு திராம் மது உள்ளே போனால் சாத்தான் சகவாசம் கிடைத்த பெருச்சாளிகளாகிற ஆச்சரியம் சொல்லி மாளாதது. இந்த கொச்சு தெரசா புருஷனோ நல்ல நேரத்திலேயே வாயைக் கிண்டி வேடிக்கை பார்க்கிறவன்.

இந்த மாதிரி வல்லடி வம்படிக்காரர்கள் எல்லோரும் அவருடைய கோவிலில் பூசை பங்கு வைப்பவர்களாக அமைந்து போகிற ஆச்சரியம் சொல்ல ஒண்ணததே. நாலு ரெண்டு பேராவது புராட்டஸ்டண்டு, பெந்தகொஸ்தேக்களாகாமல் இவருடைய குடை நிழலில் பம்மிப் பதுங்கி வரும் ரகசியமும் என்னவோ தெரியலை.

கொச்சு தெரிசா புருஷன் சொன்னதற்கு மறு வார்த்தையாக, ரொம்ப சரி ரொம்ப சரி என்று குரல் உயர்த்திச் சொல்லி விட்டு குடையை முழுவதுமாகப் பிடித்துக் கொண்டு போன வாரம் மழை ராத்திரியில் நடந்து போனார் பாதிரியார்.

அப்படியாகக் கேட்டு வாங்கிய ஆசிர்வாதத்தோடும், இன்னும் ரெண்டு சக குடிகாரர்களோடும் அடுத்த நாள் கால்டர்டேலில் அவன் ரயிலேறும் போது அமேயர் பாதிரியாரும் அசம்பாவிதமாக அதே ரயிலில் போக வேண்டிப் போனது.

மடத்திலிருந்து அவசரக் கூட்டம் என்று கூப்பிட்டு விட்டதால் அமேயர் பாதிரியார் உடனே கிளம்ப வேண்டிப் போனது. கைப்பணம் செலவழித்துத் தான் பயணம். நாலு காகிதத்தில் இந்தத் தகவல் எல்லாம் பதிந்து, டிக்கெட்டையும் இணைத்து அனுப்பினால் செலவழித்த பணம் திரும்பக் கைக்கு வரும். அதற்கு இரண்டு மாதம் கூடப் பிடிக்கும். தேவ ஊழியமானதால் கறாராக இருக்க முடிவதில்லை.

கால்டர்டேலில் வண்டி ஏறும்போது ஜாக்கிரதையாக அந்தத் தடியன் ஏறுகிற பெட்டியைத் தவிர்த்து வேறே பெட்டியில் ஏறினார் பாதிரியார். வண்டியா அது? மாட்சிமை தாங்கிய ராணியம்மாள் சீரோடு ஆட்சி புரிந்த இருண்ட கண்டமான ஆப்பிரிக்கா, அஞ்ஞான இருட்டில் கிடந்து சொல்லொணத் துயரம் எய்தியிருந்த பரத கண்டம், மொட்டைக் கட்டையாக ஆணும் பெண்ணும் திரிகிற டிம்பக்டுவோ வேறே எதோ பெயரிலோ கூப்பிடப்படும் பிரதேசம் இங்கேயெல்லாம் பிரிட்டீஷ் சாம்ராஜ்யம் நீள நெடுக ஏற்படுத்தி செயல் பட்டுக் கொண்டிருக்கும் ரயில்வேக்களில் கூட இந்த பிரிட்டீஷ் ரயில் போல அட்டப் பழைய கம்பார்ட்மெண்ட்களும், அதிலெல்லாம் தண்ணீர் படாது மூத்திர வாடை மூக்கில் குத்தும் கழிப்பறைகளும் இருக்காது.

நீராவியால் போக்குவரத்துக்கு வாகனம் ஏற்படுத்தி ஜனங்களை ஏற்றிப் போகலாம் என்று நிச்சயித்து முதலில் இரும்படித்து, மரம் அறுத்துச் செய்த பெட்டிகள் அல்லவோ இவையெல்லாம் என பாதிரியார் ஆழமான சிந்தனையில் மூழ்கி இருந்த போது ஓசைப்படாமல் கொச்சு தெரிசா வீட்டுக்காரனான அந்தக் களவாணி அவருக்கு முந்திய இருக்கையை ஆக்கிரமித்துக் கொண்டான்.

மெட்காபே, நீர் என்ஞினுக்கு அடுத்த பெட்டியிலே ஏறினீர் அல்லவோ. எப்படி இங்கே வந்து சேர்ந்தது?

பாதிரியார் விசாரிக்க மனசில் உத்தேசிச்சது அடே திருடா, என்னத்துக்கு இங்கே வந்து என் பிராணனை வாங்கறே.

நான் அங்கே வண்டி ஏறினது உண்மைதான் அப்பன். சிநேகிதர்களும் கூட வந்திருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் சேர்ந்து அபிப்பிராயப்பட்டது என்னவெனில் அப்பன் இப்படி தனியாக ஒரு பெட்டியில் ஒற்றையனாக இருக்க, நாம் ஐந்து பேர் இங்கே கூத்தும் கும்மாளமுமாக பயணம் போகலாகாது என்றபடிக்கானது. சொன்னது மட்டுமல்லாமல் என்னையே ஐர்ஷயர் வரும்போது வண்டி மாற்றி ஏறச் சொல்லி வற்புறுத்தினார்கள் அவர்கள் எல்லாரும்.

கொச்சு தெரிசா வீட்டுக்காரன் உதட்டோரம் கள்ளச் சிரிப்போடு இதைச் சொன்னதைப் பாதிரியார் கவனிக்கத் தவறவில்லை. கள்ளன் டிக்கெட் பரிசோதகருக்கு பின்புறத்தை ஆட்டிக் காட்டிவிட்டு காசு செலவில்லாமல் பிரயாணம் செய்கிறவனாக இருப்பானோ என்று ஒரு கணம் நினைத்தார் அவர்.

ஆனாலும் அதிக சல்யப்படுத்தாமல் அவன் நீட்டி நிமிர்ந்து உறங்க ஆரம்பித்தான் பயணம் போன அன்று. பாதிரியார் ஏறியதாலோ என்னமோ அவனைத் தவிர இதர விஷமிகள் ஏறாமல், எந்த ஆபாசப் பேச்சும், அதற்கு அனுசரணையான எக்காளச் சிரிப்புச் சத்தமும், புகைவலிப்பதும், தகரக் குடுவைகளில் இருந்து பியர் மாந்தி இன்புறுவதும் இன்றி அந்தப் பெட்டி சாந்தமாகவே இருந்தது.

லண்டனில் வண்டி இறங்கும்போது இன்னொரு முறை தனக்காகவும் தன் புதுக் காருக்கும் பிரார்த்திக்கச் சொல்லி விட்டுப் போனான் கொச்சு தெரசா வீட்டுக்காரன். பாதிரியார் நேற்று மாலை தான் சர்ச் வியவகாரங்கள் குறித்த பேச்சு எல்லாம் முடிந்து, தலைமை ஆயர் சொல்லி அனுப்பியிருந்த திட்டம், வழிமுறை, செயல்படுத்தக் கொஞ்சம் போல் முன்பணம் இதெல்லாம் எடுத்துக் கொண்டு திரும்பி வந்தார். கொச்சு தெரிசா வீட்டுக்காரன் முந்தாநாளே வந்து விட்டான் என்று தெரிந்தது அவர் ரயில் இறங்கி வெளியே நடக்கும்போதே.

ஒரு பழைய எனினும் பளபளப்பாகத் துடைத்த பெரிய காரை அவன் கெத்தாக ஓட்டியபடி, நீளமாக ஹாரன் முழக்கிப் போனான். பக்கத்தில் யார்? வேறே யார். மதுக்கடைக் காரன் செபஸ்தியன்.

கோவில் சுத்தமாக்கக் காலையில் வந்த ஜென்சனும், தோட்டத் தெருவில் ஒரு வயசன் ராத்திரி மரித்த வகையில் கல்லறை ஏற்படுத்த கோவில் கல்லறை வளாகத்தில் இடம் தேட வந்திருந்த சவ அடக்க நிர்வாகம் செய்கிற ஹார்பரியும் வந்த வேலையைக் கூட ஒரு நிமிடம் நிறுத்தி அவரிடம் பகிர்ந்து கொண்டார்கள்-

கொச்சு தெரிசா வீட்டுக்காரன் லண்டன் டாக்யார்டில் யாரிடமோ சொல்லி வைத்து வாங்கி வந்திருந்த பழைய பெரிய கார் பெட்ரோலில் ஓடுவதில்லை.

அவன் பெட்ரோல் அடைக்கிற இடத்தில் வண்டியை நிறுத்தி பத்து காலன் போடச் சொல்லி அடைத்துக் கொண்டு புறப்பட்ட போது ஏக களேபரமாக சத்தமிட்டு அந்த வாகனம் தெருவோரம் அப்படியே நின்று விட்டதாம். ஒரு மணிக்கும் மேலாக வில்லியம் ஹட்டன் பட்டறை மெக்கானிக்குகள் அதன் இஞ்சினைப் பரிசோதிக்கிறேன் என்று குடைந்து விட்டு, இந்த ரக இஞ்சின் இந்த நாட்டிலேயே கிடையாது என்று சொல்லி விட்டார்களாம். போகிற போக்கில், அடைத்திருந்த பெட்ரோலையும் நீளக் குடுவைகளிலும், ஓவல்டின் அடைத்து வந்த டப்பாக்களிலும் அவர்கள் எடுத்துப் போய்விட்டார்களாம். கொச்சு தெரிசா கோபத்தோடு ஒரு வாளி தண்ணீரை வண்டியில் பெட்ரோல் இருந்த இடத்தில் வீசிப் பொழிய அடுத்த நிமிஷம் ஆக்ரோஷத்தோடு வண்டி கிளம்பி ஊர ஆரம்பித்ததாம்.

இந்தப் படிக்குத் தான் அப்பன் கொச்சு தெரிசா வீட்டுக்காரன் வாங்கிய கார் ஊரெல்லாம் பேசப்பட ஆரம்பித்தது.

பெர்னாந்தஸ் பாதிரியாருக்காக அரை ராத்தல் ஆட்டுக் கறியை நிறுத்து, துணிப்பையில் போட்டுக் கொடுத்தபடி சொன்னது அவர் ஊரில் இல்லாத நேரத்தில் நடந்த அற்புதத்தை அவன் பங்குக்கு கோவில் பிரதிநிதி காதில் போட்டு வைக்க மட்டும் இல்லை. கார் வாங்கப் போனவனோடு பாதிரியாரும் பட்டணம் போயிருந்தாரே, அங்கே இந்த அமேயர் பாதிரியாரோ, சபையில் அங்கம் வகிக்கிற அவருக்கு மூத்த குருமார்களோ கொச்சு தெரிசா வீட்டுக்காரன் மேல் பிரியப்பட்டு கூட்டு ஜபமும் வேண்டுதலும் நடத்தி அவனுக்கு இந்த நூதன வாகனத்தை இப்படியான சௌகரியத்தோடு ஏற்படுத்திக் கொடுத்தார்களோ என்று தெரிந்து கொள்ளவும் தான்.

பாதிரியார் ஜாக்கிரதையாகத் தன்னை அந்த இரும்பு ரதத்தின் ஈர்ப்பிலிருந்து விடுவித்துக் கொண்டவராக, புதிய விஞ்ஞானத்திலும், தொழில் நுட்பத்திலும் ஆர்வம் மிகுந்த தெய்வீகப் பணியாளராகத் தன்னை இனம் காணும் உற்சாகத்தோடு சொன்னார் :

அது பிசாசு இல்லே. அந்தக் காரில் மந்திரமொண்ணும் இல்லே பெர்ணாந்தஸே, புது ரக யந்திரம் காரணமாக இருக்கும் இப்படி அது செயல்படுவது. நம் பிரதேசத்தில் இல்லாவிட்டாலும் இப்படியான நூதன வாகனங்கள் அமெரிக்கா இன்னும் இதர பிரதேசங்களில் உண்டு. ஆஸ்திரேலியாவில் காற்று மட்டும் அடைத்து ஓட்டிச் செல்கிற வாகனம் வந்திருக்கு. பத்திரிகையில் படித்தேன்.

ஆனால், ஆஸ்திரேலியாவில் என் மருமகன் இருக்கானே. அடுத்த மாதம் கடிதாசு எழுதும்போது, அந்த ஊர் வம்பு தும்பு விவகாரங்களோடு இந்த விஷயமாகவும் எழுதச் சொல்லணும் என்று பெர்னாந்தஸ் ஆர்வமாகச் சொல்ல, அமேயர் பாதிரியார் சுதாரித்துக் கொண்டார்.

ஆஸ்திரேலியான்னு சொன்னால் ஆஸ்திரேலியா தானா. பக்கத்துலே நியூசிலாந்து இன்னும் சின்னதும் பெரிசுமாக அங்கே இருக்கப்பட்ட தீவுகள். உலகம் பெரிசு.

அவர் உற்பத்தி செய்த செய்தியை ஊர்ஜிதப் படுத்திக் கொண்டிருந்தபோது, சைக்கிளில் வந்து இறங்கிய கோவில் ஊழியன் பாதிரியாரிடம் களேபரமாக அறிவித்தான் :

கொச்சு தெரிசா வீட்டு முகப்பில் வினோதமான ஒரு பறவை ஆடிக் கொண்டிருக்கு. வர்ணமயமான றெக்கைகளும், குரோதத்தோடு நீண்ட அலகுமாக அழகும் ஆபத்துமாக ஒரு பறவை. அப்பன் ஒரு முறை பார்த்து மேற்கொண்டானதைச் செய்ய வேணும். எல்லோரும் தெரு முனையிலேயே காத்திருக்கிறார்கள். பிசாசு பிடித்த கார் கூட அங்கே தான் நிற்கிறது.

பாதிரியார் கையில் பிடித்த ஆட்டுக் கறிப் பையோடு சைக்கிளின் பின் இருக்கையில் உட்கார, வந்தவன் வண்டி மிதித்துப் போனான்.

கொச்சு தெரிசா வீட்டில் ஆடும் பறவையைப் பாதிரியார் அறிவார். அவர் கனவில் விடிகாலையில் அந்த மயில் ஆடிக் கொண்டிருந்தது.

சொப்பனங்கள் பற்றி மனத்தத்துவ நிபுணர்கள் எழுதிய புத்தகங்களில் இப்படியான கனவுகளும் அவை பின்னால் நடக்கிறதும் அங்கே இங்கே என்று உண்டு. இதெல்லாம் வினோதமோ வேடிக்கையோ இல்லை.

அமேயர் பாதிரியார் சைக்கிளின் பின் இருக்கையில் அமர்ந்து தனக்குத் தானே உறுதி சொல்லிப் போய் கொச்சு தெரிசா வீட்டு வாசலில் குதித்து இறங்க, அந்தப் பறவை பெருஞ் சத்தமிட்டபடி குளிர்ந்த புகைப் போக்கிகளின் ஓரமாகப் பறந்து மேலே உயர்ந்தது.

அவர் குரலைத் திடப்படுத்திக் கொண்டு அறிவித்தார்.

அது ஒரு வித அன்னப் பறவை.

(தொடரும்)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன