அச்சுதம் கேசவம் – பம்பாய் : அத்தியாயம் 8

அச்சுதம் கேசவம் – பம்பாய் : அத்தியாயம் 8

மார்ச் 11 1964 புதன்கிழமை

திலீப்.

டைப்ரைட்டரோடு உட்கார்ந்திருந்த பெண் கையை நீட்டி டெலிபோன் ரிசீவரை பத்திரமாக அதனிடத்தில் வைத்துவிட்டுக் கண்ணாடிக் காரர் பக்கம் திரும்பிச் சொன்னாள்.

திலீப்.

மூடிய கதவு ஓரமாக மர மேஜை போட்டு இருந்த கண்ணாடிக்காரர் குரல் நடுங்கக் கூப்பிட்டார்.

திலீப் எழுந்து நின்றான். அங்கே நீள பெஞ்சுகளில் காத்திருந்தவர்களுக்கு இடையில் இருந்து இன்னும் ஐந்து பேர் எழுந்து நின்றார்கள்.

பம்பாயில் இருக்கப்பட்ட எல்லா திலீபும் இங்கே வந்தாச்சு. நாசம்.

கண்ணாடிக்காரர் டைப் ரைட்டர் யுவதியிடம் சற்று உரக்கவே சொன்னார். அவளுக்கு அந்த நகைச்சுவை போதுமானதாக இருந்ததோ என்னவோ, டைப்ரைட்டரில் இருந்து காகிதத்தை உருவி எடுத்தபடி அழகாகச் சிரித்தாள்,

திலீப் அழகான அவள் சிரிப்பில் கலந்து கொண்டான்.

திலீபோ இல்லையோ, எல்லோரும் அழகான அவள் சிரிப்பில் கலந்து கொண்டார்கள்.

அழகான உதடுகள். திலீப் நினைத்தான். அழகான உதடுகள் என்றார்கள் எல்லா திலீப்களும். நான் மட்டும் தான் சொல்வேன் என்றான் திலீப். அந்தப் பெண் டைப் செய்த காகிதத்தை மேஜை டிராயரைத் திறந்து உள்ளே போட்டபடி கண் ஓரத்தால் திலீபைப் பார்த்தாள். அவனுக்குத் தெரியும். அவனைத் தான் பார்த்தாள்.

திலீப்கள் காத்திருக்க, கண்ணாடிக்காரர் அவர்களைப் பொறுமையாக இருக்கச் சொன்னார்.

நான் திலீப் காலே. தினப் பத்திரிகை கையில் வைத்திருந்த ஒருத்தன் சொன்னான். திலீப் ஷிவ்டே, திலீப் கோர்படே, திலீப் சிஞ்வாட்கர், திலீப் காவ்கர் என்று மற்ற திலீப்-கள் அடையாளம் காட்டிக் கொண்டார்கள்.

நீங்க?

மெலிந்து கன்னத்து எலும்புகள் சற்றே துருத்திய முகத்தில் எடுப்பான உதடுகளோடும் பெரிய கண்களோடும் இருந்த டைப்ரைட்டர் பெண் திலீப் பக்கம் தலையைச் சாய்த்து விசாரித்தாள். அவனுக்கு அல்லது பொதுவாக யாரோ ஒருவருக்கு எந்த விதத்திலாவது ஒத்தாசையாக இருக்க அவள் காலையில் உதட்டுச் சாயம் தடவிக் கொண்டபோது முடிவு செய்திருப்பாள். அழகான உதடுகள். அவளைச் சந்திக்கத்தான் திலீப் வந்திருக்கிறான். வேறே எதற்காகவும் இல்லை.

ஹலோ, நீங்க?

திலீப் பரமேஸ்வர். சொல்ல உத்தேசித்ததை நிறுத்திச் சுதாரித்துக் கொண்டு சத்தமாகச் சொன்னான்.

மோரே. திலீப் மோரே.

உங்களைத் தான் கூப்பிட்டது. உள்ளே போங்க.

அந்தப் பெண் உரக்கச் சொல்ல, கூட்டமே அவனை அசூயையொடு பார்த்தது.

சார் வெளியே கிளம்பிட்டிருக்கார். சீக்கிரம் ஆகட்டும்.

அந்தப் பெண் சொல்ல, அவன் உள்ளே ஓடினான்.

செருப்பை விட்டுட்டுப் போங்க.

அவசரமாகத் திரும்பி வந்து, எங்கே செருப்பை விடுவது என்று கொஞ்சம் தடுமாறி, அவள் இடத்துக்குப் பக்கமாகவே சுவாதீனமாகக் கழற்றிப் போட்டான்.

அவள் காலருகே தன்னுடைய பழைய ஹவாய்ச் செருப்பு பொருத்தமே இல்லாமல் தெரிந்ததால் மேஜைக்குக் கீழே அதை நெட்டித் தள்ளி விட்டு ஓடினான்.

பின்னாலேயே அவளும் ஓடி வந்தாள்.

சுனியே ஜீ..

ரகசியம் பேசுகிற குரலில் அவனை அழைத்தபடி, உள்ளறைக்குப் போவதற்கு முந்திய இடைநாழிக்குள் அவளும் வந்தாள்.

இத்தனை நெருக்கத்தில், டால்கம் பவுடர் மணமும், தலையில் வாசனைத் தேங்காய் எண்ணெய் வாடையும், செதுக்கிய உதட்டில் கச்சிதமாகக் கவிந்த உதட்டுச் சாயமுமாக ஒரு பெண்ணை திலீப் இந்த நிமிடம் வரை பார்த்ததில்லை. இந்தக் குரலுக்காக, கிசுகிசுத்த அழைப்புக்காக திலீப், பித்த வெடிப்போடிருந்தாலும் அவள் பாதத்தில் சதா முத்தமிட்டபடி இனி மிச்சம் உள்ள ஆயுளைக் கழிப்பான். அவள் அப்படிச் செய்யென்று ஒரு வார்த்தை சொன்னால் நன்றாக இருக்கும். சொல்லப் போகிறாள்.

திலீப் ஜி.

சொல்லுங்க.

அவள் உள்ளே கைகாட்டினாள்.

அவர் யாரை என்று குறிப்பாக வரச் சொல்லலை.

அப்படியா?

வெளியே போகிற அவசரத்தில் இருக்கார். ரெண்டே நிமிஷம் பார்க்கலாம்.

ரெண்டு நிமிஷம் மட்டும் எடுத்துக்கறேன் என்றான் சிரித்தபடி திலீப்.

நீங்க பார்க்க தேவ் ஆனந்த் மாதிரி இருக்கீங்க. சிரிப்பு கூட அவர் மாதிரி. அதான் உங்களை உள்ளே போகச் சொன்னேன்.

அவள் சிரித்தபடி வந்த வழியே திரும்பப் போனாள்.

அவன் தேவ் ஆனந்தையும் இதர தெய்வங்களையும் மனதில் துதித்து நன்றி சொல்லி உள்ளே போனான்.

அறைக் கோடியில், மேஜையைப் பூட்டி விட்டு எழுந்து நின்றவர் அவனைப் பார்த்தபடி ஓரமாக இருந்த கதவைத் திறந்தார்.

அவன் இருகையும் கூப்பி மெய்மறந்து கும்பிட்டான்.

தலைமை வகிப்பவர். உய்விக்க வந்தவர். தேவ் ஆனந்த் போன்ற கடவுள்களை வாழ வைப்பவர். உதட்டழகி டைப்பிஸ்ட் பெண்களுக்கு மாசாந்திர சம்பளம் அளிப்பவர். நகைச்சுவையும் கிண்டலும் பொங்கிப் பெருகி வழியும் பத்திரிகை நடத்துகிறவர். சீக்கிரத்திலேயே தேசத்தை ஆளப் போகிறவர்

எந்த ஏரியா?

சொன்னான். அவர் காதில் வாங்கிக் கொண்டது போல் தெரியவில்லை. வெளியே போய் விட்டார்.

பாதி திறந்த கதவுக்கு வெளியே காத்திருந்து, உள்ளே வந்து மேஜை மேலிருந்த காகித அடுக்கை எடுத்தவன் அவனையே பார்த்தான்.

வேலைக்கு சிபாரிசா?

ஆமா. மில் வேலை. ஆறு மாசம் அனுபவம் இருக்கு.

மில் வேலைன்னா டாக்டர் கிட்டே போக வேண்டியதுதானே?

இல்லே, நம்ம சார் அவரை விட பெரியவர்.

சந்தோஷம். உங்க ஏரியாவிலே அவங்க கடை, ஓட்டல்லாம் எத்தனை இருக்கு தெரியுமா?

அவங்க யார் என்று திலீபுக்குத் தெரியும். அவங்க நடத்தும் ஓட்டலும் கடையும் எத்தனை என்றும் தெரியும்.

அங்கே எல்லாம் வேலை கிடைக்காதா உனக்கு?

கிடைக்கும். திலீப் இந்த ட்வீட் பேண்டைக் களைந்து விட்டு மதராஸ்காரப் பிள்ளை சாமி கும்பிடப் போவது போல் வேட்டியைக் கச்சம் கட்டாமல் தட்டுச் சுற்றாக உடுத்திக் கொண்டு நெற்றியில் பட்டையாக வீபுதியோடு போனால் அவனுக்கு அங்கே வேலை கிடைக்கலாம்.

இன்னும் ஒன்று கூட உண்டு. திலீபுக்குத் தமிழ் சரளமாகப் பேசத் தெரியும்.

மெட்றாஸ் நுங்கம்பாக்கம் நீலகண்டனின் மூத்த மகன் பரமேஸ்வரனுக்கு ஒரே புத்திரனான திலீப் என்ற வைத்தியநாதனுக்குத் தமிழ் வராதா என்ன?

ஆனாலும் அவன் ஷாலினி மோரே மகன். லாவணி ஆட்டக்காரியாக மாநிலம் முழுக்கச் சுழன்றாடிய ஷாலினிக்கும் எந்தக் காலத்திலேயோ பாட்டுக்காரனாக ஆர்மோனியப் பெட்டியோடு பம்பாய் வந்த பரமேஸ்வரனுக்கும் பிறந்த பிள்ளை.

திலீப் பரமேஸ்வரனுக்கு இங்கே வரவேற்பு கிடையாது.

கூட்டத்துக்கு எல்லாம் தவறாம வா. அவங்க கடையிலே எதுவும் வாங்காதே. செவ்வாய்க்கிழமை விரதத்துக்கு சாபுதானா வடை போட்டுக் கொடுப்பான். நல்லா இருக்கும்னு நாக்கிலே நொட்டை விட்டுட்டு சாப்பிடப் போகாதே. போறவங்களை திருப்பி அனுப்பு. நாம சத்ரபதி பரம்பரை. அவங்க ட்ரங்க் பெட்டியோட ரயிலேறி வந்தவங்க. நம்ம காலைத் தொட்டுக் கும்பிட்டுக் கணக்கெழுதிக் காசு வாங்கினவங்க. வீடு, ஆபீஸ், துணி மில், பேக்டரி, கடை, ஓட்டல். நமக்கு மிஞ்சித்தான் அவங்களுக்கு. புரியுதா?

ஆமா.

பத்திரிகை வாங்கிப் படிக்கிறியா?

தினம் வாங்கறேன். இன்னிக்குக் கூட கார்ட்டூன்லே.

சரி, அப்புறம்?

எனக்கு வேலை.

சார் நாக்பூர் போய்ட்டு அடுத்த வாரம் வந்துடுவார். வந்து பாரு. லெட்டர் கொடுப்பார்.

அவன் வாசல் பக்கமாகக் கையைக் காட்டினான்.

கடவுளோடு ரெண்டு நிமிஷம், பரிவார தேவதையோடு அஞ்சு நிமிஷம். இந்த தினத்துக்குக் கட்டாயமாக ஒரு அர்த்தம் இருக்கும். அந்தப் பெண் கொடுத்தது தவிரவும்.

வாசல் பெஞ்சுகள் வெறுமையாக இருந்தன. அவள் இன்னும் மும்முரமாக டைப் அடித்துக் கொண்டிருந்தாள்.

அவன் தயங்கி நின்றான். இவள் தமிழோ மலையாளமோ பேசினால் எப்படி இருக்கும் என்று ஒரு வினாடி தோன்றியது. என்ன பயித்தாரத்தனம். அப்படியே பேசினாலும் பதிலுக்கு அதே படி பேசிக் காரியத்தைக் கெடுத்துக் கொள்ள திலீப் தயாரில்லை.

என்ன, வந்த வேலை முடிஞ்சுதா?

அவள் தமிழில் கேட்டாள்.

ஒரு வினாடி ஆச்சரியம். தான் இதை எதிர்பார்த்ததைப் பற்றி.

வார்த்தையாக இல்லாமல் ஹும் என்றபடி சிரித்தான்.

பாண்டுப் சர்வ மங்கள் சால் தானே. ரெண்டாவது பில்டிங், முதல் மாடி. வாசல்லே டால்டா டப்பாவிலே துளசிச் செடி. உள்ளே மெல்லிசா ஆர்மோனிய சத்தம்.

ஆமா, அம்மா லாவணி ஆடுவா. வயசாகி ஆட்டம் எல்லாம் க்ளோஸ். அப்பா ஆர்மோனியம் வாசிச்சுப் பாடுவார். உச்ச ஸ்தாயிலே குரல் கிட்டப்பா மாதிரி இருக்கும். அவர் ரயிலேறும் போது தடுக்கி விழுந்து ரெண்டு மாசம் முந்தி காலை எடுத்தாச்சு. நான் படிச்சுட்டு வேலை இல்லாம சுத்திட்டிருக்கேன். இன்னிக்கு காலையிலே காமத் ஓட்டல்லே ஜவ்வரிசி வடை சாப்பிட்டேன்.

அவன் நிதானமாகச் சொன்னான். அவள் நிமிர்ந்து பார்த்த பார்வையில் சிரிப்பும் சிநேகமும் தெரிந்தது.

உள்ளே இருந்து கூட்டமாக வெளியே வருகிற சத்தம்.

அவள் திலீபிடம் மராத்தியில் இரைந்தாள்.

செருப்பை இப்படி மேஜைக்குக் கீழே விசிறிப் போட்டுப் போய்ட்டீங்களே. சார் வரும்போது இதான் முதல்லே அவர் கண்ணுலே படும். ரொம்ப தப்பு. முதல்லே எடுங்க.

சாரி மேடம்.

திலீப் கண்ணால் சிரித்தபடி செருப்புக்காகத் துழாவினான்.

(தொடரும்)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன