அச்சுதம் கேசவம் – சென்னை – அத்தியாயம் 7

அச்சுதம் கேசவம் – சென்னை : அத்தியாயம் 7

திரும்பவும் போயாச்சா? பேஷ்

கற்பகம் காட்டுக் கூச்சலாகச் சத்தம் போட்டாள்.

அடிக்காதேடி. அடிக்காதேடி. தெரியாமப் பண்ணிட்டேன்.

ஹாலில் பிரம்பு நாற்காலியைப் பிடித்துக் கொண்டு குனிந்து நின்றார் நீலகண்டன். பயத்தோடு அவளைப் பார்த்தார்.

அவசரமாக உள்ளே போனாள். அது உள் பக்கமா, வெளியே போகிற பாதையா?

எதோ ஒன்று. அங்கே சுவரில் ஆணி அடித்து நீலகண்டனின் சட்டை தொங்கும். பக்கத்தில் நீளமாகக் கயிறு கட்டி பெயர் மறந்து போன எதுவோ கூடவே தொங்கும். தேதி போட்டு. அதற்கு ஒரு பெயர் உண்டு. அதுதான் மறந்து போனது.

நாயுடுவைக் கேட்டால் சொல்வான். ஹைகோர்ட் போய் அவனை விசாரித்து விட்டு வரலாமா? வெளியே எப்படிப் போக? கற்பகம் இருப்பாள். ஆணிக்குக் கீழே,

சட்டைக்கு நேர் கீழே நீளமான பிரம்பு வைத்திருக்கிறாள். எடுத்து வரப் போகிறாள். முதுகில் அடிப்பாள். ஓங்கி ஓங்கி ஓங்கி ஓங்கி அடிப்பாள்.

கற்பகம் திரும்ப வந்தாச்சு. கையில் இலுப்பச் சட்டியோடு நிற்கிறாள். இதுக்குப் பெயர் இரும்பு வாளி இல்லையோ. குளிச்சு விடப் போகிறாளா? வெந்நீர் தானே?

கொஞ்சம் இருடியம்மா, வேட்டியையும், ஜாக்கெட்டையும். அதானே பெயர். இல்லை பனியன். பனியனையும் எடுத்து விட்டு.

எதுக்கு வேட்டியை அவுத்தாறது?

கற்பகம் சத்தம் போட்டுக் கொண்டே வாளியோடு நீலகண்டன் பக்கத்தில் வந்தாள். அதை நீலகண்டன் தலையில் மாட்டி இழுத்துப் போய் ஆணியில் அவரைக் கட்டப் போகிறாள். பிரம்பு அங்கே உண்டு. அடித்தால் வலிக்கும்.

அடிக்காதேடி அடிக்காதேடி. தெரியாமப் பண்ணிட்டேன்.

அவர் இன்னும் குனிந்து உடம்பு நடுங்க தரையில் இருந்து அள்ளி எடுத்து வேட்டியில் முடிந்து கொண்டார்.

கற்பகம் கையை ஓங்கியபடி அவரை முறைத்துப் பார்த்தாள்.

நீலகண்டன் கை நடுக்கத்தில் கையில் அள்ளியது கூடமெல்லாம் சிதறியது. சுவரில் அப்பியது. பொறுக்க முடியாத துர்வாடை.

நடுக் கூடத்தில் கழிஞ்சது போறாதுன்னு அதை சுவத்திலே பூசி, தரையிலே பரத்தி. பிராணனை வாங்கறேளே. சாவு வராதா. எனக்கு.

வாளியைத் தரையில் வைத்து விட்டுத் தலை தலையாக அடித்துக் கொண்டு அழுதாள் கற்பகம்.

அழுகிறாள். அடிக்க மாட்டாள். நீலகண்டனுக்கு நிம்மதியாக இருந்தது. இப்படியே போய்க் கட்டிலில் படுத்துத் தூங்கி விட்டால் பங்குனிக்கிழமை சாயந்திரம் எழுந்து விடலாம். அது பங்குனிக்கிழமை தானே? இன்னிக்கு நாள்?

சுவரைப் பிடித்துக் கொண்டு நடக்கும்போது கை பதிந்து திட்டுத் திட்டாக இன்னும் அசுத்தம் ஒட்டியது.

எழவே ஒரு இடமா உக்கார மாட்டியா?

கற்பகம் ஓடி வந்து நீலகண்டன் முதுகில் அடித்தாள். பிரம்படியை விட இது இன்னும் வலித்தது.

அடிக்காதேடி இவளே,. இனிமே இங்கே பல் தேய்க்க மாட்டேன்.

அவர் அலறினார்.

பல்லு தேச்சு பாழாப் போக. இது கொல்லைக்குப் போன கொடுமை. கொடுமை.

அதாண்டி சொல்ல வந்தேன். வாய் தவறிடுத்து. இனிமே சமையல்கட்டுலே போய்ப் போறேன். இந்த ஒரு தடவை மட்டும் மன்னிச்சுடு.

நீலகண்டன் முடிக்கும் முன் திரும்ப முதுகில் அடி விழுந்தது.

சமையல்கட்டுலே வந்து கழிவே? எங்கே வா. செய் பாக்கலாம்.

நீலகண்டன் முகத்துக்கு அருகில் குனிந்து கொண்டு கண்ணை உருட்டினாள் கற்பகம். ஆடப் போகிற பசுமாடு. கழுகு. ஆடப் போகிற மயில். மயில் நிற்கிற மாதிரி பின்னால் தள்ளிக் கொண்டு நிற்கிறாள். மயில் கண்ணை உருட்டுகிறது. பயமாக இருந்தது நீலகண்டனுக்கு.

நான் அங்கே எல்லாம் போகலே. ஊஞ்சல்லே போய் உக்காந்துடறேன். கை காஞ்சு போன அப்புறம் அலம்பி விடு.

நீலகண்டன் ரெண்டு கையையும் மேலே தூக்கிக் கொண்டு எந்தப் பக்கம் போக வேணும் என்று தெரியாத பதட்டத்தோடு தள்ளாடி நடந்து தரையில் விழுந்தார்.

ஈஸ்வரா என்றாள் கற்பகம். ஹால் கோடியில் டெலிபோன் விட்டு விட்டு அடிக்கிற சத்தம். யார் இப்போ பார்த்து கூப்பிடறது? கற்பகம் வரமாட்டாள்.

நீலகண்டனை ஓடிப் போய்த் தூக்கி நிறுத்தினாள். மூச்சு வாங்குகிறது. வயதாச்சே அவளுக்கும். இன்னும் எத்தனை காலம் இந்தக் கஷ்டமோ.

ஊஞ்சல்லே உக்காந்து தானே கல்யாணம் செஞ்சுண்டேனே. ஞாபகம் இருக்கோ. நீயும் உக்காந்திருந்தியே. எங்கே போட்டிருக்கே ஊஞ்சலை? சொல்லேன்.

அவர் நைச்சியமாகக் கேட்க, கற்பகம் கண் நிறைந்தது.

அழாதேடி.

கண்ணைத் துடைக்க நீண்ட அசுத்தமான விரலை அவசரமாக விலக்கிய போது வாசல் பக்கம் நிழல். கலசலிங்கம். மேல் நர்ஸ்.

திரும்பவும் டெலிபோன் அடிக்க ஆரம்பித்திருந்தது.

அம்மா நீங்க போய் அதை எடுங்க. சாரை நான் பாத்துக்கறேன்.

இதெல்லாம் என்ன கஷ்டம் என்பது போல் சகஜமாகச் சிரித்துக் கொண்டு லிங்கம் நீலகண்டனை தோளில் இறுகப் பற்றிப் பிடித்தபடி சொன்னான்.

குட்மார்னிங் சார்.

நீலகண்டன் சந்தோஷமாகச் சிரித்தார்.

நாயுடு, வெங்காய வடையும், சர்பத்தும் வாங்கி வரச் சொல்லுடா. கற்பகத்துக்குத் தெரிய வேண்டாம்.

சொன்னாப் போகுது.

லிங்கம் மெல்ல பாத்ரூமுக்கு நடத்திப் போக, கற்பகம் போன் சத்தம் நிற்பதற்குள் கொஞ்சம் வேகமாக நகர்ந்து போய் எடுத்தாள். ரிசீவர் தொப்பென்று கீழே விழ, புடவைத் தலைப்பால் துடைத்தபடி காதில் வைத்து, யாரு என்றாள்.

ஏன் பாட்டி, ஜாலியா வடாம் பிழிஞ்சுண்டிருக்கியா?

கற்பகத்தின் பேத்தி ஜனனி. பம்பாயிலிருந்து கூப்பிடுகிறாள்.

நான் எங்கேடி வடாம் பிழிய? உங்க தாத்தா தான் எனக்கும் சேர்த்து பண்றாரே.

ஜனனி சிரிக்க ஆரம்பித்தாள்.

சிரிடி. சிரிக்க மாட்டே. நானானா இங்கே கெடந்து பீ வாரிக் கொட்டிண்டு அவதிப் படறேன். விடிக்கறது தான் விடிக்கறார் இந்தக் கெழவர். மல்லியப் பூ வாசனையோட, தாழம்பூ மணத்தோட, அட ஒரு கந்தமும் இல்லாமப் போகக் கூடாது? எடுத்துப் போட்டா எட்டூருக்கு குமட்டிண்டு அடிக்கறது.

ரொம்ப குசும்புடி உனக்கு.

ஆமா அதான் வாயையும் மூக்கையும் மத்த எல்லாத்தையும் பொத்திண்டு இங்கேயே சகலமும்னு உக்காந்திருக்கேன்.

நீ வாயடிச்சு அடிச்சு தாத்தாக்கு டிமென்ஷியா முத்திடுத்து.

பேத்தி வாயைக் கிண்ட கற்பகத்துக்கு மனசில் சந்தோஷம் பெருகி வழிந்தது. போன நிமிஷத்து துக்கமும் வாதனையும் போன இடம் தெரியவில்லை.

ஆமாடி, குசும்பு எனக்குத்தான். திமிர் எனக்குத்தான். நான் பேசிப் பேசித்தான் தாத்தா மடியிலே நரகலை வச்சுக் கட்டிண்டு நிக்கறார்.

தாத்தாவை டோண்ட் டச் ஓல்ட் கேர்ல். அவர் அப்படித்தான் இருப்பார். நீ அலம்பி விடு. நிச்சயம் சொர்க்கத்துக்குப் போவே.

நூத்துக் கெழவி. சொன்னா கேட்டுக்கணுமோ கோடி நமஸ்காரம் பண்ணி. போடி சரித்தான்.

செல்லமாக போன் மேல் தட்டினாள் கற்பகம்.

இதென்ன இங்கேயுமா இன்னொரு டிமென்ஷியா?

ஆல்ரைட் கெழவி. நீ என்னை எப்படி இருக்கே, படிப்பு எப்படிப் போறது கால்லே அடி பட்டது எப்படி இருக்குன்னு எல்லாம் கேட்டியோ, கேட்க மாட்டே.

ஜனனி சொல்லி விட்டுக் காவாலித் தனமாக விசிலடித்தாள்.

விசில் அடிக்காதேடி பிசாசே. நீ மட்டும் என்னை தூங்கினியா எழுந்தியா குளிச்சியா சாப்பிட்டியான்னு பேச்சுக்காவது கேட்டியோ? பேத்தின்னு பெத்த பேரு. தாக நீளு லேது.

அவுனும்மா கற்பகம். ஒக்க சரி. ராத்திரி தூங்கினியா தாத்தாவைக் கட்டிப் பிடிச்சுண்டு? தூரம் குளிச்சியா? பூ வச்சுப் பின்னிண்டியா? புளியம்பழம் தின்னியா?

சீ போடி கழுதை.
கற்பகத்துக்கு எல்லாம் இஷ்டமாக இருந்தது.

நீலகண்டன் முந்தின ஜென்மம் எதிலோ அவளை இழுத்து மடியில் போட்டுக் கொஞ்சிக் கொஞ்சிக் கூடிக் கலந்த சந்தோஷம் போல இது வியாபிக்கிறது எல்லா திசையிலும் சூழ்ந்து.

கற்பகத்துக்கு வாரணமாயிரம் பாட வேண்டும் போல் இருந்தது. இந்த வாசனைக்கு ஆண்டாளும், ஆண்டவனும் நெட்டோட்டம் ஓட மாட்டார்களோ.

பாட்டி,பொங்கல் வச்சியோ?

ஆமாடி. பொங்கல் இன்னிக்கு. பீ வார்ற மும்முரத்திலே அதுவும் நினைவு வரலே. நீ பண்ணினியோடி?

கன்சர்ன்லே போய் சாப்பிட்டேன். ஸோ ஸ்வீட். ஆமா, உன் பிறந்த நாள் நாளைக்கு இல்லே?

உங்கப்பன் எப்பவோ கேட்டு டயரியிலே குறிச்சுண்டு போனான். எது மறந்தாலும் இதையும், உங்க தாத்தா ஜன்ம தினத்தையும் மறக்க மாட்டான்.

அப்பா நாக்பூர்லே சத்சங்கம்னு போற போது உன்னைக் கூப்பிட்டுப் பேசச் சொன்னார்.

இல்லாட்ட மாட்டியோ.

நீ உன் பிறந்த நாளுக்கு எனக்குக் காசு கொடுத்தா பேசுவேன். எண்பத்து ரெண்டாவது பர்த் டே. வருஷத்துக்கு பத்து போட்டா, எண்ணூத்து இருபது ரூபா. முழுசாக்கி ஆயிரத்துக்கு மணியார்டர் அனுப்பு. சில்லுண்டி செலவுக்காகும்.

காலேஜ் படிக்கற பொண்ணுக்கு என்னடி செலவு?

இல்லாம என்ன? பானி பூரி வாங்க, பேல் பூரி வாங்க. காதிலே போட்டுக்க ஸ்டட், நெத்தியிலே வச்சுக்க பிந்தி, பிங்க் கலர் சூரிதார், சண்டிகர் பைஜாமா, ஜிம் ரீவ்ஸ் ரிக்கார்ட், ராஜ்கபூர் படத்துக்கு சிநேகிதியோட போக டிக்கெட், கரும்பு ஜூஸ், கோலாப்பூரி செருப்பு, பெர்ரி மேஸன் நாவல், சித்தி விநாயகருக்கு காணிக்கை, ஐஸ்கிரீம், ஆப்கன் ஸ்நோ, பிரஞ்ச் செண்ட், மாடுங்கா கடையிலே தேங்குழல்.

ஏ’யப்பா, எனக்கு வயசு எண்பத்து ரெண்டுன்னா உனக்கு நூறு விஷயம் செலவு பண்ண இருக்கேடி.

தாத்தாவுக்கு அடுத்த மாசம் எண்பத்தி ஏழு வருதே. அப்போ பார்.

ஒரு வினாடி தொண்டை அடைக்க நின்றாள் கற்பகம்.

ஏய், இருக்கியா போய்ட்டியாடி அகில்? உன் ஸ்வீட் ஹார்ட் பெறந்த நாளுக்கு இன்னும் பெரிய லிஸ்டோட கூப்பிடறேன். சரியா.

அதுக்குள்ளே பகவான் என்னைக் கூப்பிடட்டும்னு வேண்டிக்கோடி கொழந்தே.

ஹலோ ஹலோ என்று அந்தப் பக்கம் பேத்தி கூப்பிட்டபடி இருக்க, கற்பகம் சன்னமாகச் சொன்னாள்.

அப்புறம் பேசறேண்டி செல்லம். உங்க தாத்தா விழுந்து எழுந்திருந்திருக்கார்.

அவள் போனை வைத்து விட்டு நிமிர்ந்தபோது, பாத்ரூமில் தண்ணீர் விழும் சத்தம். லிங்கம் நீலகண்டனுக்குக் குளித்து விட்டுக் கொண்டிருக்கிறான். வாளி வாளியாகக் குழாயில் தண்ணீர் பிடித்து டெட்டாலைக் கொட்டிக் கலந்து மேலே அடித்துக் கழுவி இன்னும் ஐந்து நிமிஷமாவது விடாமல் செய்வான்.

இதெல்லாம் போன புரட்டாசி வரை கற்பகம் தான் செய்தது. ரத்த அழுத்தமும், நரம்புத் தளர்ச்சியும் அவளை ஓய்த்த போது பம்பாயிலிருந்து பிள்ளைகள் ரெண்டு பேரும் வந்தார்கள். அவளை பம்பாய் கூட்டிப் போவதில் அக்கறை காட்டினார்கள்.

அப்பாவை இங்கே ஆஸ்பத்திரியிலே விட்டுட்டுப் போயிடலாம்.

சித்தப்பிரமையோட, உடம்பு ஷீணத்தோட இருக்கார் அவர். இப்போ தான் நான் கூட இருக்க வேண்டியிருக்கு. எங்கேயும் வரலே.

கற்பகம் தீர்மானமாகச் சொல்லி விட்டாள். அடித்தாலும் திட்டினாலும் நீலகண்டனுக்கு கற்பகம் இல்லாமல் முடியாது.

நாற்பது வருஷம் முன்பு மோகாவேசத்துடன் இடுப்பைப் பிடித்து இழுத்து மடியில் போட்டுக் கொஞ்சிக் கலந்த, சதா சர்வ காலமும் போகம் போகம் என்று அலைந்த நீலகண்டன் இல்லை இப்போது நடு வீட்டில் மலம் கழிக்கிற நீலகண்டன்.

அவருக்கு நாள் நட்சத்திரம் பகல் ராத்திரி எதுவும் கணக்கில்லை. கற்பகம் மட்டும் மனசில் எப்போதும் உண்டு. அந்தப் பெயரும் நினைப்பும் கூட இன்னும் கொஞ்ச நாளில் மறந்து போகலாம்.

கல்ப்பு. தொடச்சு விடுடி. குளிர்றது.

பாத்ரூம் வாசலில் ஈரம் சொட்டச் சொட்ட நிற்கிற நீலகண்டன் சத்தம் போட்டார்.

வாளியில் தண்ணீர் சேந்தி வந்து ஹால் சுவரை எல்லாம் கவனமாகத் துடைத்தான் லிங்கம். ஒரு சின்ன அருவெறுப்பும் இன்றி ஈரத் துணியை பாத்ரூமில் பிழிந்து அலசி திரும்ப டெட்டால் ஊற்றி எடுத்து வந்தான் அவன்.

அஞ்சலை இருந்தாள் இதையெல்லாம் செய்ய. அவளும் இப்படித்தான். கொடுத்த காசுக்கான வேலை இல்லை அவள் செய்ததும். கற்பகம் மேல் கரிசனமும், அவள் வயசும் தள்ளாமையும் குறித்த பரிதாபமுமாக அஞ்சலை நாள் முழுக்க இங்கே இருந்திருக்கிறாள். நீலகண்டன் உடுப்பெல்லாம் கழட்டிப் போட்டுவிட்டு பாத்ரூம் வாசலில் நின்று அஞ்சலை தான் குளிப்பாட்டணும் என்று அடம் பிடித்த தினத்தில் வெளியே ஓடியவள் தான். திரும்பி வரவேயில்லை.

லிங்கம் மேல்நர்ஸாக அடுத்த வீட்டு டாக்டர் மூலம் கிடைத்தான். அண்டை அயலில் எல்லோருக்கும் கற்பகம் வீட்டு நடவடிக்கைகள் வேடிக்கை பார்க்க, அவ்வப்போது கரிசனம் காட்ட வேண்டிய நிகழ்ச்சிகள்.

பம்பாய்லே உங்க் பிள்ளை ஆள் அம்பு அரசியல்னு பிரபலமா இருக்கார். காவியும் காக்கியுமா உடுத்திண்டு எல்லா பம்பாய்ப் பேப்பர்லேயும் பொழுது போய்ப் பொழுது விடிஞ்சா அவர் படம் தான். ஷ்யாம் க்ருஷண் மோட்வானி, கோபால்ராஜ் மதோக், சுனில் சோனின்னு யார்யார் கூடவோ இங்கேயும் கூட்டம் வராத மீட்டிங் எல்லாம் போட வரார். அவர் பிரசித்திக்கு நீங்க இங்கே இல்லே எங்கேயும் கஷ்டமே படாம ஹாய்யா இருக்கலாம். மும்பாய்க்கே போயிடுங்கோளேன். நாங்களாச்சு, நீலு மாமாவை அப்பப்போ ஆஸ்பத்திரியிலே போய்ப் பார்த்துக்கறோம்.

இதெல்லாம் கற்பகம் பிள்ளை சொல்லி வைத்து அவர்கள் பேசினது. அப்படித்தான் கற்பகம் நினைக்கிறாள். தப்பு சொல்ல முடியாது. அவள் அந்தப் பக்கம் இருந்தாலும் இதேதான் பேசுவாள்.

அம்மா, ஐயா போட்டுக்க டயாபர் கொடுங்க.

லிங்கம் கேட்டான்.

எதுக்கு அது லிங்கம்? ஓரமாப் போய் அவுத்துப் போட்டுட்டு அக்கடான்னு கட்டில்லே படுத்துண்டாறது. ஒண்ணுக்குப் போய் நனைஞ்ச பெட்ஷீட்டை பாத்ரூம் ஓரமா குவிச்சு வச்சிருக்கேன் பாரு.

பாவம், குழந்தை மாதிரி ஆயிட்டார். நான் அலசிடறேம்மா.

அவனுக்குச் சலிப்பு வருவதில்லை. வேலைக்கு அவன் சளைப்பதே இல்லை.

இன்னும் மூணு மாசம் கழித்து வெய்யில் ஆரம்பிக்கும்போது தண்ணீர்க் கஷ்டமும் வந்துவிடும். தினசரி நீலகண்டனுக்காக இவ்வளவு செலவு பண்ண முடியாது.

கற்பகம்.

நீலகண்டன் டயாப்பரும் மேலே பனியனுமாக பெரிய சைஸ் குழந்தை போல் கட்டிலில் நிமிர்ந்து உட்கார்ந்து ஒரு கையைத் தூக்கினார்.

என்ன வேணும் இப்போ?

ரசம் கொடுடீ கல்ப்பு. நாயுடு ஹைகோர்ட்டுலே வச்சு வெங்காய வடை வாங்கிக் கொடுத்தான். கூடவே முட்டாய் மாதிரி தித்திப்பா எலுமிச்சம்பழ சர்பத்தும். சாப்பிட்டது இன்னும் ஏப்பம் ஏப்பமா வருது. படுத்துக்கறேன். ராத்திரியாயிடுத்து.

டெலிபோன் அடித்தது.

ராத்திரியா? ஜன்னல் பக்கம் பாருங்க. சூரியன் கண்ணைக் குத்துது. காலை நேரம். நாஷ்தா பண்ற டைம் சார்.

லிங்கம் சிரித்தான். சும்மா இருடா நாயுடு என்றார் சார்.

சாப்பிட்டுட்டு தூங்குங்கோ. ரசஞ்சாதம் பிசைஞ்சு தரேன். லிங்கம் ஊட்டி விடுவான்.

கற்பகம் நிதானமாக நடந்து போய் ஃபோனை எடுத்தாள்.

பாட்டி, எலக்ட்ரிக் ட்ரெயின்லே.

கரகரவென்று சத்தத்தோடு டெலிபோனில் ஜனனி குரல்.

என்ன ஆச்சு? ஏண்டி ஜனனி. சத்தமாப் பேசுடி.

போனைக் காதோடு வைத்துக் கொண்டு தீனமாகக் குரல் கொடுத்தாள் கற்பகம்.

ஓடற எலக்ட்ரிக் ட்ரெயின்லே இருந்து தவறி விழுந்துட்டார் சித்தப்பா. ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போயிருக்கு.

ஜனனி ஜனனி என்று கற்பகம் திரும்பத் திரும்பச் சொல்ல, அந்தப் பக்கம் சத்தமே இல்லை.

பெருஞ் சத்தத்தோடு கடியாரம் ஒன்பது மணி அடித்தது.

நீலகண்டன் நிம்மதியாக உறங்க ஆரம்பித்திருந்தார்.

(தொடரும்)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன