அச்சுதம் கேசவம் – ரயிலில் : அத்தியாயம் 6

அச்சுதம் கேசவம் – ரயிலில் : அத்தியாயம் 6
இரா.முருகன்

ஜனவரி 13, 1964 திங்கள்கிழமை

நேற்று இந்த ரயிலின் சக்கரங்கள் உருள ஆரம்பித்தன.

பழைய தில்லி பஹார் கஞ்ச் சந்திப்பில் இருந்து வண்டி கிளம்பிய போது, குளிர் கவிந்து இருட்டு கூடவே வந்து ஒண்டிக் கொண்ட அந்தி ஆறே முக்கால் மணி.

கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் என்று பெயரை வெள்ளைக்காரன் வைத்து முப்பது வருஷத்துக்கு மேல் ஆகிறது. ரெண்டாயிரத்து எழுநூறு குதிரை இழுப்பு சக்தி கொண்ட டபிள்யூ பி ரெண்டு ரக நீராவி இஞ்சின் இழுக்க வைத்து ஓட்டப் படுவது. இங்கிலீஷ்காரன் விக்னம் தொலைக்க சக்கரத்துக்கு அடியில் ஆரஞ்சு பழத்தை நசுக்கி, அப்போஸ்தலர்களுக்கு வெள்ளாடும், வான்கோழியும் நேர்ந்து கொண்டு முதல் தடவை ரயில் ஓட்டிய போது இந்த வண்டி லாகூரில் கிளம்பி, தில்லி வழியாக உதக மண்டலத்துக்குப் போய்க் கொண்டிருந்தது. லாகூர் இப்போது பாகிஸ்தானில் என்பதால், தில்லியில் கிளம்பி, உதக மண்டலத்துக்கு இந்த வண்டி செல்லாமல், சென்னையோடு முடித்துக் கொள்ள சுதந்திர இந்தியாவின் முதல் ரயில்வே மந்திரி ஆணையிட்டார்.

படித்துக் கொண்டிருந்த இந்துஸ்தான் டைம்ஸ் ஞாயிற்றுக்கிழமை சப்ளிமெண்டை மூடி வைத்தான் சின்னச் சங்கரன். நேற்றைய தினசரி இணைப்பு. நேற்று ராத்திரி சாப்பாட்டு நேரத்தில் கீழே விரித்ததால், வத்தல் குழம்பு, எலுமிச்சை சாத வாடையோடு சாத்வீகமான ஆங்கிலம் மணக்க ரயில் கட்டுரை இருந்தது.

ரெண்டு நாள் முழுக்க ரயில்லே சாப்பிட மூட்டை கட்டித் தரேன் என்றாள் வசந்தி.

வேண்டாம் என்று மறுத்துப் பார்த்தான். ஆசையூட்ட முற்பட்டாள் வசந்தி.

வண்டி ஏறி வேஷ்டிக்கு மாறினதும் சாப்பிட மணக்க மணக்க எலுமிச்சை சாதம். நாளைக் காலை ஆகாரமா மிளகாய்ப்பொடி புரட்டின தோசை, தேங்காய் போட்டா ஊசிடும், போடாம காரசாரமா இஞ்சித் துவையல், நாளை மதியத்துக்கு புளிக்காய்ச்சல் ஊறி, நல்லெண்ணெய் வாசனையோட புளியஞ்சாதம், கூட கட்டை வடாம், ஜவ்வரிசி வடாம். நாளை ராத்திரிக்கு பொடி இட்லி அப்புறம் அடுத்த நாள்.

புண்ணியமாப் போறது சித்ரான்ன தேவதையே, நிறுத்திக்கோ என்றான் சங்கரன்.

ஆமா, நான் ஆரம்பிச்சா உடனே அஸ்து கொட்டிட வேண்டியது. ரயில் போற வழியிலே மூத்திரக் கையாலே தோலானும் லோலானும் கிண்டிக் கிளறி லாலீ பீலீன்னு அழுக்குத் தட்டுலே வச்சு நீட்டுவான் பாருங்கோ அந்தக் கண்றாவி மசாலா, வெளக்கெண்ணெய் பூரி, அவன் வாய் கொப்பளிச்ச கரம் சாயா இதெல்லாம் திவ்யமா இருக்கும். ஊத்தப் பல்லோட அவன் பொண்டாட்டி வந்து எடுத்து நீட்டினா இன்னும் சொர்க்கம். வந்துட்டேன் வந்துட்டேன்னு ஓடிப் போய் வாங்கி வாரி வாரிக் கொட்டிக்கலாம்.

வசந்தி நீட்டி முழக்கிச் சொல்லி விட்டு அவன் முகத்தைப் பார்த்தாள், சிரிடா படுவா என்கிறாள் கண்ணால். சிரிப்பேனா என்கிறான் கள்ளுளிமங்கனாக, இவனானால். போடா கடன்காரா என்று அடுத்த வினாடி அவன் முதுகில் பலமாகத் தட்டிப் பெரிய குரலில் அவள் சிரிக்க சங்கரனுக்கும் உடனே தொற்றிக் கொண்டது.

உலகத்தில் இது தவிர வேறேதும் இல்லை என்று ரெண்டு பேரும் சிரித்துக் கொண்டிருக்க, பொழுது பம்மிப் பம்மி நழுவியது.

இவளோடு சும்மா வார்த்தை சொல்லிக் கொண்டே இந்தக் குளிர்காலமும் அடுத்த குளிர்காலமும் நகர்ந்து போகட்டும். ஊருக்கெல்லாம் போக வேண்டாம். ஆனால், காத்திருக்கிறார்கள் அங்கே. எல்லாரும். எதற்கெல்லாமோ.

வசந்தி ஆர்வத்தில் மண்ணைப் போட வேணுமா? கடைசி மிளகாய் பஜ்ஜியை அவள் டிபன் டப்பாவில் திணித்துக் கொண்டிருந்த போது சங்கரன் வழங்கி வந்தான்.

உனக்குக் கஷ்டம் எதுக்குன்னு தான் வசு. இனிமேல் கொண்டு புளிக்காய்ச்சல் செஞ்சு இறக்க டைம் ஆயிடும்.

உங்களுக்கேன் கவலை. அப்பா எல்லாம் கொண்டு வந்து கொடுத்திருக்கார். எலுமிச்சை சாத எசன்ஸ் கூட உண்டு.

வீட்டுக் கடை ரோட்டுக்கு வந்து எட்டு வருஷமாகிறது. ஆள் அம்பு நிர்வாகம் என்று வசந்தியின் தம்பி ரகு தூள் கிளப்பிக் கொண்டிருக்கிறான். புளிக் காய்ச்சல் பொடி, எலுமிச்சை எசன்ஸ் போக, பாட்டிலில் அடைத்த புளிக் காய்ச்சல் கூட விற்கப் படுகிறது. நம்பூதிரி தந்த சூரணமும். வசந்தி அதை எடுத்து வைத்திருக்கிறாள் இந்தக் கித்தான் பையில்.

சங்கரன் பைக்குள் கை விட்டுப் பார்த்தான். ஒன்றுக்கு இரண்டாக பல்பொடி டப்பா தட்டுப்பட்டது. மெஸ்ஸில் நிறைய விற்கிறதாம். விற்கட்டும்.

சுந்தர வாத்தியார் மெஸ் இப்போது அவன் சாப்பிடப் போனபோது இருந்தது போல் நாலு சாது பிரம்மசாரிகள் சிகரெட் பிடித்த வாடை போக சாக்லெட் மென்றபடி தினசரி வீட்டுச் சாப்பாட்டை உத்தேசித்து வந்த இடம் இல்லை. ஞாயிற்றுக்கிழமை காலை பெல்லாரி வெங்காய சாம்பார் என்று கரோல்பாக் பக்கம் இருந்தும் கல்காஜி, ராமகிருஷ்ணா நகர் என்றிப்படியும் குடித்தனம் இருக்கப்பட்ட தமிழ் பேசும் குடும்பங்கள் வந்து கூடும் இடம் அது இப்போது.

ரயில் ஆடியது. கூடவே, சங்கரன் மனதில் மயில் ஆட ஆரம்பித்தது.

முன் முற்றத்தில் ஆடிய மயில். நீண்டு விரிந்த தோகையில் மனது குவிந்தது. மயிலின் கூர் அலகில் நடுக்கத்தோடு நிலைத்தது அது. செத்து விழுந்து முற்றம் விட்டு வெளியே வீசப்பட்டு, சிறகெல்லாம் உதிர தார் ரோடில் பனி மூட்டத்தைக் கிழித்து ஓடி, அய்யயோ என்று அகவுகிற மயில். சங்கரனுக்கு உடம்பு விதிர்த்தது.

அடித்துப் புரட்டிப் போடும் வேகத்தில் முன்னேறிக் கொண்டிருக்கும் ரயில் வண்டியின் போக்குக்கு எதிரான திசையை நோக்கி உட்கார்ந்து ஆட்டி வைத்தபடி ஆடி, முன்னால் சாடி நிமிர வைத்தபடி நிமிர்ந்து, கண்ணில் கரி விழ கசக்கி எடுத்து, பனிக்கால பூமி கடந்து போகக் குளிர் வாடை மூக்கில் ஊடுருவ, ஸ்வெட்டரைக் காதுப் பக்கம் இம்மி நகர்த்திக் கொண்டு மர ஆசனத்தில் கால் மடித்து இருக்க, மனம் என்னமோ எல்லாம் வித்தை காட்டுகிறது.

வசந்தியோடு சுகித்துக் கிடப்பதாக மனசைக் கற்பனை செய்ய உத்தரவிட, அது மூணு நாள் விலக்கென்று அட்டுச் சிரிப்பு சிரித்தது. வசந்தி உரக்கச் சிரித்தபடி முதுகில் தட்ட, திரும்ப வாசலில் மயில் வந்து இறங்கியது. குளிரும் இருட்டுமாகத் திட்டுத் திட்டாக சுற்றிச் சூழ்ந்து மருட்டியது. சின்னஞ் சிறுவன் போல மருட்சி.

மனம் இந்துஸ்தான் டைம்ஸ் அட்டை போட்ட பாடப் புத்தகத்தில் மயிலாகிறது. எப்போதோ பாடிய பள்ளிக்கூட ப்ரேயர் பாட்டை முழுக்க நினைவு படுத்திப் பாட வைக்கிறது. திரும்ப, முன் முற்றத்தில் ஆடிய மயிலாகிறது. சிரிடா படுவா. ஆபீஸ் மேஜை மேல் ஃபைலாகக் குவிகிறது. பாபிஜி, குளிருக்கு இதமாக, காரசாரமாக ஏதாவது. பிரபவ, விபவ என்று அறுபது தமிழ் வருஷப் பெயர் சொல்லச் சொல்கிறது. போ, செருப்புக் காலோடு உள்ளே வராதே. வசந்தியின் புடவைப் பெட்டிக்குள் போட்டு வைத்த வாசனைப் பொடியின் மணத்தை இழுத்துப் பிடித்துக் கொண்டு வருகிறது. ரெண்டு வாரம் பிக்கல் பிடுங்கல் இல்லாம சந்தோஷமா இருப்பேன். வாரப் பத்திரிகை கடைசி அட்டையில் வாராவாரம் பார்த்து கரோல்பாக் கடையில் வாங்கி வசந்தி பூசிக் கொண்ட ரெமி ஸ்நோ நிறம் கலந்த கபடமான லோஷன் வாசனையாகிறது. வசந்தி தனியாக இருக்க உள்ளே வரும் மயில். வர்ண மயமாக உடுத்திக் கொண்டு பாடும் பஞ்சாபிப் பெண்ணாக, குர்னாம் வீட்டுக்காரி குரலில் மூக்கு நுனி உச்சரிப்பில் ஜாவளி பாடிக் கேட்க வைக்கிறது.

ஆடி விழுந்த மயில். வாசலில் மோதி விழுந்த மயில். ஒரு வினாடி கிடந்தபின் எழுந்து கோணலாக, தாங்கித் தாங்கி மெல்ல நடந்த மயில். அப்புறம் பறந்த மயில். இறந்தும் போயிருக்குமோ?

இனம் புரியாத குளிர்கால சோகமும் லேசான பயமும் இன்னும் கவிய, வாசலில் உயிரை விடும் மயில். எழுந்து, மனசில் பிடித்துக் கிடந்த சடங்கு சம்பிரதாயக் களிம்பு பூசி எண்ணெய் மினுக்க அசுரத் தனமாகச் சுழன்றாடியது அது. எதற்காகவோ கையைக் கூப்பினான் சங்கரன். சுற்று முற்றும் பார்க்க, எல்லோரும் காலை நேரத்துக்கு ஒவ்வாத அரைத் தூக்கத்தில்.

மயில் வேணாம். வேறு எதையாவது நினைக்கலாம். ரயிலில் சத்தம். ஆடிக் கொண்டிருக்கும் ரயில் சங்கிலி. கம்பார்ட்மெண்ட் ஓரத்தில் காத்திரமாகச் சிறுநீர் நெடி. வசந்தி அரிவாள் மணையில் திருவாதிரைக் கூட்டுக்காக பூசணிக்காய் அரிகிறாள். பதினைந்து வருடம் முந்திய சுந்தர வாத்தியார் மெஸ்ஸில் கையலம்பும் இடத்தில் ஊசிப்போன குழம்பு வாடை. மெஸ் உக்கிராணத்தில் பூசணிக்காயையும் உருண்டைப் பரங்கியையும் அலங்காரமாக சுவரை ஒட்டி வைத்திருக்கிறார்கள்.

சின்னச் சங்கரனுக்கு உக்ரமாகப் பசிக்க ஆரம்பித்தது. இவ்வளவுக்கும் காலை எட்டு மணிக்கு போபாலில் கெட்டியாக சாயா, பன்ரொட்டி என்று வயிற்றுக்குத் தீனி போட்டிருக்கிறான். சாப்பிட்ட பின் தூக்கம். எழுந்து அடுத்த பசி.

ஆம்லா ஜங்ஷன் வந்திடுத்தா?

கீழே உட்கார்ந்திருந்த யாரோ யாரையோ கேட்டார்கள்.

இடார்ஸியே வரல்லே. அதுக்குள்ளே என்ன ஆம்லா?

பதிலாக நாலைந்து குரல்கள் எழுந்தன.

சின்னச் சங்கரன் சட்டமாகக் கால் மடித்து அரை பெஞ்சை ஆக்ரமித்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறான். மேலேயும் அவனுடைய சிவப்பு மஞ்சள் பவானி ஜமுக்காளமும், குற்றாலத் துண்டும் அனுபவ பாத்யதை அறிவித்தபடி விரிக்கப் பட்டிருக்கின்றன. நேற்று சாயந்திரமே ஆபீஸ் டவாலி பியாரிலாலும் அவனுடைய ரயில்வே சிப்பந்தி மைத்துனனும் அவனுக்காக அந்த மூட்டை முடிச்சு வைக்கிற பலகையை ஒழித்துக் கொடுத்து, விரிப்பைப் பரத்தியதோடு, சின்னச் சங்கரன் சமுத்திர சேனை அலுவலகத்தில் முக்கிய அதிகாரி, அவசர ஆபீஸ் வேலைக்காகப் போவதால் இந்த சாமானியர் கம்பார்ட்மெண்டில் போகிறார், அவரை எந்தக் காரணம் கொண்டும் தொந்தரவு படுத்த வேண்டாம் என்றும் போகிற போக்கில் பலமாகவே காதில் போட்டு அகற்றி உட்கார்த்தி விட்டார்கள்.

மதராசி ஆபீசர் விமானத்தில் போகலாமே என்று உத்தரப் பிரதேச கிளார்க் ஒருத்தன் ஜன்னல் பக்கம் ஒண்டிக் கொண்டு கேட்டபோது அவனுடைய ரயில் டிக்கட்டை வலுக்கட்டாயமாக வாங்கி ஆயிரத்தெட்டு தடவை பரிசோதிக்கிற மாதிரி பாவனை செய்து மனசே இல்லாமல் திருப்பிக் கொடுத்தார்கள் சங்கரன் கூட வந்தவர்கள். குமாஸ்தா இந்தக் குரங்குப் பயல்கள் மிரட்டலுக்கு மசிந்து வண்டி கிளம்பினதிலிருந்து ஒண்ணுக்கு கூட போகாமல் ஜன்னலே கதி என்று ஒட்டிக் கொண்டு இருக்கிறான்.

இடார்ஸியிலே மெட்ராஸ் மீல்ஸ் ஆரம்பிச்சாச்சு தெரியுமோ? அபாரமா இருக்கு.

ரயில் தரையில் அழுக்கு, தூசி, ரயில் கரி அடை அடையாகப் படிந்து கிடப்பதை லட்சியம் செய்யாமல் நியூஸ் பேப்பர் விரித்து உட்கார்ந்து மூணு சீட்டு விளையாடுகிற ஒரு கூட்டத்தில் மாத்வ ராவ்ஜி என்று பார்வைக்குப் பட்ட ரெட்டை நாடி மனுஷர் புகையிலையைக் குதப்பிக் கொண்டே சொன்னார். நேற்று ராத்திரி பத்து மணி தொடக்கம் சீட்டுக் களி மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. இவர்கள் அங்கங்கே வண்டி நிற்கிற போது சின்னச் சின்ன ஸ்டேஷன்களில் மண் சட்டியில் நிறைத்துத் தரும் சாயாவைக் குடித்தே ஒரு ராத்திரி முழுக்கக் கண் விழித்து, விடிந்து சூரியன் உயர்ந்து பனிரெண்டு மணி வரைக்கும் ஜீவித்து விட்டார்கள்.

சீட்டு விளையாட்டு அப்படி மனதில் லஹரியை ஏற்றி மற்ற எல்லாவற்றையும் மறக்கச் செய்துவிடும் போல் இருக்கிறது. கள்ளு மாதிரி. பெண் பித்து போல.

வரட்டுமா என்று சங்கரன் நினைப்பில் மறுபடி மயில் எட்டிப் பார்த்தது. போ போவென்று சங்கரன் கையசைக்க உள்ளே படிந்து நிரம்பிய கரிப்புகை அலங்கி விலகி திரும்ப அடர்ந்தது. மேலே விரித்த ஜமுக்காளத்தை சீராகத் திரும்ப விரிக்கும் உத்தேசத்தோடு எழுந்தான் அவன்.

பலகையில் விரிப்பை வண்டி ஆட்டத்தைச் சமாளித்து நின்ற படிக்கே சரி செய்ய சிரமமாக இருந்தது. எதையும் பற்றிக் கொள்ளாமல் நின்று, எடுத்து உதறித் திரும்ப விரிப்பதில் இருக்கும் சிக்கல் அது. ஏற்கனவே கரி புரண்டு கிடக்கிற துணி. உதறி விரிக்காமல் முடியாது. எடுத்து மடித்து வைத்தால் வேறு எவனாவது குரங்கு போல் தாவி மேலே ஏறி விடுவான். அப்படி ஏறுகிறவன் அநேகமாக வழியில் ஜான்ஸியோ அதற்கு முன்னால் குவாலியரோ கடந்த போது ஏறியவனாக இருப்பான். அவனுக்கு சின்னச் சங்கரன் சமுத்திர சேனையில் கப்பல் ஓட்டிப் போகிற கதையெல்லாம் தெரியாது. சொன்னாலும் கேட்டுக் கொள்ளப் போவதில்லை. என்னமோ மற்றவர்கள் எல்லாம் சும்மா இருப்பதால் அவர்களை அனுசரித்துக் கேள்வி கேட்காது இருப்பான்.

வரட்டா என்றது மயில்.

எதுக்கு? அது வராமல் இருக்க இப்போது செய்ய வேண்டியது என்ன இருக்கு? சின்னச் சங்கரன் அவசரமாக யோசித்தான். காலையில் வயிறு சுத்தமாகவில்லை. உட்கார்ந்தும் படுத்தும் வந்ததில் அடி வயிற்றில் இறுக்கம். மேலே உட்கார்ந்தபடி கீழே குனிந்து, சாயா விற்க வருகிறவன் நீட்டுகிற மண் சட்டியை வாங்கக் கஷ்டமாக இருந்தது. அவனுக்குச் சில்லறைக் காசு கொடுக்க இன்னொரு தடவை அரை வட்டம் திரும்பி பர்ஸையும் பர்ஸ் வைத்த தோல் பையில் கும்பகோணம் சீவல் டப்பாவில் போட்டு வைத்த பத்து நயாபைசா, ஐந்து நயாபைசா சில்லறையைத் தேடி எடுக்கவும் பின்னும் சிரமம்.

சாப்ஜி, வண்டி கிளம்பப் போறது. ஜல்தி பைசா தேதோ.

அந்தப் பையன்களின் அவசரத்தை சமாளித்து பலகையில் பக்கத்தில் சாயா சட்டி கவிழ்ந்து விடாமல் வைத்து பணம் பைசல் செய்து விட்டு சாயா ஆறுவதற்குள் குடிக்க வேண்டி இருந்தது. ஆறிக் குடித்தால் மண் ஊறி டீயில் அந்த வாடை தான் தூக்கலாக வரும் என்று எத்தனையோ முறை அனுபவமான புத்தி சொன்னது.

கிளம்பு, வேலையை முடிச்சு வந்துடலாம்.

வயிறு முறையிட்டது.

கம்பார்ட்மெண்ட் தரையில் சால் கட்டாத குறையாக அழுக்கும் கெட்ட வாடையுமாகத் தண்ணீர் சின்ன ஓடையாகத் துள்ளி ஓடியது. டாய்லெட்டுக்கு நேர் எதிர் இருக்கையில் ஒண்டிக் கொண்டிருந்த குஜராத்தி சேட் எந்த சிரமமும் தெரியாமல் மாவு பண்டம் எதையோ அள்ளி அள்ளி மென்று கொண்டிருந்தார். இந்தக் கந்தர்கோள மனுஷ மகா சமுத்திரத்தில் விடிந்தும் விடியாததுமாக ஓமப்பொடி சாப்பிட அவருக்கு பிறந்தது முதல் தீவிரமான பயிற்சி மூலம் திறமை சித்தியாகி இருக்கும் என்று சின்னச் சங்கரன் நினைத்தான்.

ஏக் கப் தூத் தேனா.

சேட்ஜி காப்பிக்கார பையனிடம் முறையிட அழுக்குக் கோப்பையில் கொஞ்சம் பால் எடுத்து தேனீருக்காக வைத்திருந்த ப்ளாஸ்கில் இருந்து வென்னீரைக் கவிழ்த்து அவரிடம் நீட்டினான் பையன்.

அந்தத் தேவபானத்தை இக்கு இக்காக ரசித்தபடி அவர் இன்னொரு துணிப்பொதியைத் திறந்து குஜராத்தி சிவ்டா என்று சொல்லத் தக்கத் தரத்தில் இருந்த மற்றொரு படைப்பை அள்ள ஆரம்பித்தார்.

சாய் சாப்?

புதிதாக கம்பார்ட்மெண்டில் நுழைந்த இன்னொரு காப்பிக்காரப் பையன் சின்னச் சங்கரனை விசாரித்து விட்டு பதிலை எதிர்பார்க்காமல் சேட்டிடம் ஆவலாகக் கேட்டான்.

பால் தவிர நான் வேறு எதுவும் எப்போதும் குடிப்பதில்லை என்றார் பொரித்த கடலை மென்றபடிக்கு சேட்.

சாப்ஜி, உங்களுக்கு?

நான் காப்பி தவிர வேறேதும் குடிப்பதில்லை என்றான் சங்கரன் நடந்தபடிக்கு.

காப்பி காப்பின்னு அலையறையே. வயசு பத்து கூட ஆகலே. அப்படி என்ன காப்பிப் பைத்தியம்? விஷம்னா அது. அம்ம மொல குடிச்சு விழுந்ததும் காப்பிக்குடி ஆரம்பிச்சுட்டே படவா. ரொம்ப குடிச்சா மக்காயிடுவே. எதிரகத்து கிரி பாரு. எப்பவும் பால் தான். எல்லா கிளாஸிலும் மொதல்லே வந்து ஆண்டு விழாவிலே ஸ்லோக புஸ்தகம் ப்ரைஸ் வாங்கறான். அவன் குசுவைக் குடி.

பகவதிப் பாட்டியம்மா எந்தக் காலத்திலேயோ சொன்னது.

மயில் அலகால் ரயில் பெட்டிச் சுவரில் தட்டியது. வரலாமா?

சின்னச் சங்கரன் கக்கூஸ் கதவு திறக்க கால் மாற்றி நிற்க, வெளியே ஓட்ட ஓட்டமாகப் போய்க் கொண்டிருந்த மண் தரையில் யாரோ குரிச்சி போட்டார்கள். சேட் மாதிரி உடுத்திக்கொண்டு கடலை மாவு பண்டம் மென்றபடிக்கு கிரி மெதுவாக வந்தான். சயன்ஸ் வாத்தியார் வெருகு வெங்கடேசன் அவனைப் பிடித்துக் குரிச்சியில் உட்கார்த்தி விட்டு பெசீமர் உலையை நிறுவச் சொல்லி சுற்றி நின்று வாய் பார்த்துக் கொண்டிருந்த நான்கைந்து பேருக்கு உத்தரவு பிறப்பித்தார். எதுக்கு பெசீமர் உலை? அது இரும்பை உருக்க இல்லையா? சின்னச் சங்கரன் பயத்தோடு கேட்கிறான். எல்லாம் எனக்குத் தெரியும் என்கிறார் வாத்தியார். பெசீமர் உலையில் இருந்து நீளமான குழாயை எடுத்துக் கொண்டு கிரி பக்கம் வாத்தியார் நடக்க அவன் கலவரமாகப் பார்த்தான். நீ உக்காருடா கிரி, இதைப் பின்னாலே சொருகிட்டு ஆரம்பிக்கலாம் என்றார் அவர். வாடா சங்கரா, கீழே உக்காரு. உங்க பாட்டி சொன்னாளே.

பாத்ரூம் கதவு திறக்க சின்னச் சங்கரன் கக்கென்று சிரித்தான். உள்ளே இருந்து சங்கடத்தோடு வந்த அழகான அந்நிய ஸ்த்ரி ஈரக் கையைப் புடவைத் தலைப்பில் துடைத்துக் கொண்டே சின்னச் சங்கரனை முறைத்தபடி போனாள். அவள் பின்னால் அப்பியிருந்த ஈரம் பாட்டித் தள்ளை சொல்படி அன்னத்ரேஷமாக இருந்தது.

இடார்ஸி. இடார்ஸி. இடார்ஸி.

ஆவேசம் வந்தது போல் கூட்டம் கூவ ரயில் ஓய்ந்து போய் நின்றது. ஆணும் பெண்ணுமாக கரி புரண்ட உடம்பும் கலைந்த தலையுமாக கம்பார்ட்மெண்ட்களில் இருந்து அவசரமாகக் குதித்து வாழ்க்கையில் கடைசி ஆகாரத்தை அள்ளி விழுங்குகிற பசியோடு ஓடினார்கள். பின்னால் தொடரும் குழந்தைகள் எப்படியும் வந்து சேர்ந்து விடும் என்ற இரை கண்ட நம்பிக்கை எங்கும் வியாபித்திருந்தது. மாகாணிக் கிழங்கும் நிலக்கரியும் மணக்க, தண்ணீர் இல்லாத கழிப்பறை வாடை கூடச் சேர, ரயில் சாப்பிடப் போனது.

வரிசை வரிசையாக இலை போட்டு சகலமானதும் பரப்பி வைத்திருந்தார்கள். அடித்துப் பிடித்து வந்தவர்களில் முதல் பத்தில் சின்னச் சங்கரனும் உண்டு. மின்விசிறிக்குக் கீழே இருந்த மேஜையைப் பாய்ந்து பிடித்து கால் கடகடத்த நாற்காலியில் உட்கார்ந்தபோது , டோக்கன் வாங்கிட்டு வாங்க என்றார்கள். கஷ்டம். போனால் வேறே யாராவது இங்கே வந்து சட்டமாக இடத்தைப் பிடித்துக் கொண்டு பாதி சாப்பிட்டு முடித்து விடுவான்.

ஸ்டேஷன் குழாயில் சுத்த நீர் பிடிக்கக் கொண்டு வந்திருந்த பித்தளை கூஜாவை நாற்காலியில் வைத்து விட்டு அதைப் பார்த்துக் கொண்டே சாப்பாட்டு டிக்கட் வாங்கினான். பழைய கூஜா. போனாலும் பரவாயில்லை. ஆனால் சாப்பாடு கைவிட்டுப் போகக் கூடாது.

உடம்பே வயிறாக, வேறு நினைப்பு ஏதுமில்லாது மனம் ஒத்துழைக்க, வியர்வை முகத்தை நனைத்து வடியச் சாப்பிட்டான்.

அவன் திரும்ப கம்பார்ட்மெண்டில் நுழையப் போனபோது மயில் பறந்து வந்து தோளில் இறங்கியது. குன்னக்குடியில் பாலபிஷேகம் பண்ணுடா மயில் தோஷம் போயிடும் என்றாள் பாட்டித் தள்ளை, பெசீமர் ஃபர்னஸை சாணி கரைத்த தண்ணீர் வீசி அணைத்தபடி. மயில், ரயில் கம்பார்ட்மெண்ட் மேல் தாவித் தாவி ஓடித் திரும்பப் பறந்தது. இனி வராது அது. சங்கரனுக்குத் தெரியும்.

சாப், உங்க சட்டையில் ஏதோ அசுத்தம்.

ரயில் நகரும் போது யாரோ சொல்லப் பார்த்தான். எச்சமிட்டுப் போயிருந்த பறவை எது என்று தெரியவில்லை. அது மயில் இல்லை.

(தொடரும்)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன