தியூப்ளே வீதி – 4

 

  

தியூப்ளே வீதி – 4 இரா.முருகன்

வேகுவேகுவென்று சைக்கிள் மிதித்துக் கொண்டு போனோம். மண்டையைப் பிளக்கும் வெய்யில் நெற்றியில் வியர்வையைப் படர்த்தியது. அது கண்ணை மறைத்து வழிய காலேஜுக்குப் பறக்கும்போதுதான் தங்கு ரிக்ஷாவைப் பார்த்தோம்.

தங்கு என்ற தங்கசாமியை எல்லோருக்கும் தெரியும். வேலிக்காத்தான் செடிகளுக்கு ஊடாக தனித்துத் தெரியும் தரிசு பீடபூமியான ஆவாரங்காடு பகுதியில் பிறந்து வளர்ந்தவன். ஆனால் அவன் சைக்கிள் ரிக்ஷா ஊருக்கே புதுசு.குதிரை வண்டிகளின் ஏகாதிபத்யம் கிழக்கிந்தியக் கம்பெனி காலத்தில் இருந்தே நிலைத்திருக்கும் பிரதேசம் நம்ம ஊர். அதுவும் நாலு தலைமுறையாக ரெட்டைத் தெரு வக்கீல்களும் ரெண்டு தலைமுறை சிவன்கோவில் தெரு டாக்டர்களும் கௌரவமாக ஏறி அமர்ந்து நாலுதிசையிலும் போகவர ஏற்பட்ட வாகனம் அது.

கண்ணுக்கினியான் டாக்டர் தன் மெய்க்காப்பாளனும் படைத்தலைவனுமான கம்பவுண்டர் வைரப்பனோடு குதிரை வண்டி ஆம்புலன்சில் யாருக்காவது மோட்ச தீட்சை கொடுக்கப் போகும்போது அந்தக் குதிரை முகத்தில் கூட கடமையின் அழுத்தம் தெரியும். வக்கீல்களின் குதிரைகள் குமாஸ்தாக்கள் மறந்த லா பாயிண்டையும் எடுத்துக் கொடுக்கக் கூடியவை. இது தவிர, ராமேஸ்வரம் வரை போகிற போட் மெயிலில் மெட்ராஸில் இருந்து கெத்தாக வந்து சேர்ந்த ஊர்க்காரர்களின் ஊர்ப் பிரவேசம் குதிரை வண்டியில் செய்தாக வேண்டியிருந்தது.

இல்லாவிட்டால், ‘ஏம்பா, மெட்றாஸ்லே கொடிகட்டிப் பறக்கறே. ஸ்டேஷன்லே இருந்து ஒரு குதிரை வண்டி வச்சுக்கிட்டு வந்திருக்கலாமில்லே? ஏதாச்சும் பண மொடையா?’ என்று ஊரே துக்கம் விசாரிக்கும். குதிரைச் சாண வாடை இல்லாத காந்திவீதியையும் ரெட்டைத் தெருவையும் கற்பனை செய்வது கூட மகாபாவம்.

இந்த குதிரைப் பட்டணத்தில் தங்கு சைக்கிள் ரிக்ஷாவை அதிரடியாக அறிமுகப் படுத்தி இருக்கிறான். அதிலும் யாரோ சட்டமாக ஏறி உட்கார்ந்து கொண்டு போகிறார்கள். மேலரதவீதி முத்தையா எண்ணெய்க் கடை வாசலில் சைக்கிளில் இருந்தபடியே யாரென்று ஒரு வினாடி கால் ஊன்றிப் பார்த்தேன். அட, மாதவன்.

சட்டென்று அங்கு ரிக்ஷா மேலே கட்டிய கூம்பு ஒலிபெருக்கியில் இருந்து ‘ரோஜா மலரே ராஜகுமாரி’ பாட்டு கேட்டது. மாதவன் ஏதோ அறிவிப்பை வெளியிடப் போகிறான். அம்மை குத்த, வீட்டுச் சுவரில் கட்டம் போட்டு மலேரியா இன்ஸ்பெக்டர் வந்துபோன தேதி விவரம் குறிக்க இப்படி ஏதோ சர்க்கார் உத்தரவை சத்தம் போட்டு ஒலிபெருக்கியில் படிக்கப் போகிறான் அவன்.

வந்து சேர்ந்த சர்க்கார் உத்தரவு வெற்று வெள்ளைப் பேப்பராக இருந்தாலும் பரவாயில்லை, ஊரில் அதைப் பரப்ப மாதவன் தான் அங்கங்கே கூட்டம் சேர்த்து சேதி சொல்ல வேண்டும். கூடவே, தட்சிணா ஆசாரியாரின் சவுண்ட் சர்வீஸ் வழங்கும் தேச சேவையாக, சர்க்கார் சங்கீதமான ‘ரோஜமலரே ராஜகுமாரி’ முன்பாரம் பின்பாரமாக 78 ஆர்.பி.எம் ரிக்கார்ட் உருவத்தில் சுழல வேண்டும்.

பழனி குதிரைவண்டி இம்மாதிரி சர்க்கார் சேவைக்கு பயன்பட்டுவந்தது. ஆனால் சர்க்கார் உத்திரவை வாசிக்க ஆரம்பித்ததுமே வண்டிக் குதிரை முன்னங்காலை தூக்கி ஆக்ரோஷமாகக் கனைத்து போன மாதம் தன் எதிர்ப்பை வெளிப்படுத்தியதால் அது விலக்கப்பட்டது. ‘கூடுதல் வீட்டுவரியை இந்த மாதம் செலுத்த வேண்டும்’ என்ற அறிவிப்பு அது. பழனியும் குதிரையும் எதிர்க்கட்சிதான்.
‘வரும் செப்டம்பர் மாதம் நடக்க இருக்கிற நகராட்சி தேர்தலுக்காக திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் நகராட்சி அலுவலகத்தில் பார்வைக்காக வைக்கப் பட்டிருக்கிறது. விட்டுப்போன நபர்கள் நாலாம் தேதிக்குள் மனுச்செய்து’.

மாதவன் வழக்கம் போல் டைப் அடித்த பழுப்புக் காகிதத்தை தலைகீழாகப் பிடித்துக்கொண்டு அறிஞர் அண்ணா குரலில் அறிவித்தான். அடுத்த முறை அது நம்பியார் குரல், அப்புறம் சிவாஜி குரல் என்று வரும். பலகுரல் மன்னன் அவன். அலுப்பான அறிவிப்பைக் கூட காதுகொடுத்துக் கேட்க வைக்கும் உத்தி இது.

வண்டியை மிதித்தேன். காலேஜுக்கு நேரமாகிவிட்டது. ஓட்டுப் போட வயசு வர இன்னும் ஐந்து வருஷம் காத்திருக்க வேணும். அதற்குள் படித்து முடித்து வேலைக்குப் போய், மேகலாவைக் கல்யாணம் செய்துகொண்டு, வீடு பார்த்து, சமைக்கக் கற்றுக் கொண்டு… அவள் சம்மதித்தால் ஊர் வழக்கப்படி ஓடிப்போய் விடலாமா? என்.சி.சியில் இருக்கப்பட்ட பெண். என்னை விட வேகமாக ஓடினால்?

காலேஜில் மணி முழங்கும் சத்தம். முதலில் கால்குலஸ் கிளாசுக்கு ஓடணும். இல்லாவிட்டால் புரபசர் பாலபாஸ்கரன் குரலை உயர்த்தாமல் கண்டிப்பார். அது நிச்சயம் பள்ளிக்கூடத்தில் லேட்டாகப் போனால் கெமிஸ்ட்ரி கரடி ஐயங்கார் சார் பேயறை அறைந்து வரவேற்கிற மாதிரி இருக்காது. ஆனாலும் முன்வரிசை இரண்டிலும் பெண்கள் இருப்பதால், நொடியில் மானம் போய்விடக் கூடிய அபாயம்.

‘செயின் ரூல் தெரியுமா சார்?’ புரபசர் பாலபாஸ்கரன் என்னைப் பார்த்துத்தான் கேட்கிறார். வாழ்க்கையிலேயே முதல் முறையாக சார் பட்டம் எனக்கு. மேலும் செயின் ரூல், ரிங் ரூல் எதையும் இதுவரை கேள்விப்பட்டதே இல்லை. பேய்முழி முழித்தபடி எழுந்து நிற்க புரபசர் பயந்து போய் உட்காரச் சொல்லிவிட்டார்.

‘செயின் ரூல்னா டிபரன்ஷியேஷனுக்கு பயன்படுத்தறது சார். எதை டிபரன்ஷியேட் பண்ணனும்னு கேட்கறீங்களா? ரெண்டு பங்க்ஷனோட கலவையை. ஒய் ஈக்வல் டூ எஃப் ஆஃப் ஜி ஆஃப் எக்ஸ். இதான் காம்போசிஷன் ஆஃப் டூ பங்க்ஷன்ஸ். வெரி சிம்பிள் சார். ஒருதடவை படிச்சா வாழ்க்கை முழுக்க மறக்கவே மறக்காது சார்’.

திரும்ப உலகம் பிரகாசமானது. இப்படிப் புகட்டினால் அடுத்த வருடம் எஞ்சினியரிங் காலேஜில் சேரக்கூட யார் தயவும் வேண்டி இருக்காது. வாழ்க்கையிலேயே முதல் முறையாக ‘சார்’ பியுசியில் நிச்சயம் ஸ்டேட் ஃபர்ஸ்ட்!

வகுப்பு முடிந்தபோது கனமான சத்துணவு சாப்பிட்ட மாதிரி இருந்தது. அடுத்த கிளாஸ் ஓமப்பொடி கொறிக்கிற மாதிரி. ரொம்ப உழைக்க வேண்டாம். இங்கிலீஷ். அதுவும் இங்கிலீஷ் உரைநடை. இங்கிலீஷ் கவிதை என்றால் பேராசிரியர் தருமபுத்திரனின் இடி முழக்கத்தைக் கேட்கவே கூட்டம் நிரம்பி வழியும். இடதுசாரி ஆதரவாளர் என்பதால் தாரா செஷன்கோவ், ஆண்டன் செகோவ், மிக்கயில் ஷோலகோவ் என்று நிறையச் சொல்வார். சந்தைக்கடை நேரத்தில் பக்கத்து கிராமத்து பெண்கள் ‘யக்கோவ்’ என்று கூவி அழைத்துப் பேசிக் கொண்டு போகும்போது சோவியத் இலக்கியம் மசங்கலாக நினைவு வர இவர்தான் காரணம்.

உரைநடை நம்ம மௌலி. நம்ம ரெட்டைத் தெருக்காரர். அதுவும் எங்களுக்கு ரெண்டு வீடு தள்ளி. ‘தெலுங்கு வக்கீல் பிள்ளை’ என்று பாட்டி அவ்வப்போது குசலம் விசாரிக்கும்போது குடை பிடித்தபடி தெருவோடு நடந்து போகிற மௌலி மவுனமாகப் புன்னகைப்பார். பேசியே பார்த்ததில்லை. அதனால் அவர் காலேஜ் வாத்தியார் உத்தியோகம், அதுவும் இங்கிலீஷ் சொல்லிக் கொடுக்கிறவர் என்ற விவரமே தெரியாது. மதுரை முக்கில் பஸ் பிடித்து தினசரி மதுரை போய் கலெக்டர் ஆபீசில் ஹெட் கிளார்க் வேலை செய்வதாக ஏனோ நினைத்திருந்தேன்.

மௌலி மதுரைக்குப் போய்த்தான் வந்து கொண்டிருந்தார். அங்கே காலேஜில் இங்கிலீஷ் வாத்தியாராக இருந்தவர் நான் ராஜா கல்லூரியில் சேர்ந்தபோது எனக்கு நோகாமல் நோன்பு நூற்க வாகாக ஊருக்கே மாற்றலாகி வந்துவிட்டார். அதற்குள் ‘நாலாவது மூத்திரச் சண்டை’ நிகழ்ந்த காரணத்தால் தகவல் என் காதுக்கு எட்டவில்லை. குண்டுராஜுவும் சொல்ல விட்டுப்போன செய்தி அது.

வருடம் ஒருமுறை அனேகமாக மார்கழியில் பாட்டி அண்டை அயலில் யாரோடாவது மூத்திரச் சண்டை தொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தாள். ‘விடிகாலையிலே, கோலம் போட்டு லட்சுமி வீட்டுப்படி ஏறுவாளே அந்த பிரம்ம முகூர்த்தத்திலே இந்த மனுஷர் நம்ம வீட்டு வாசலுக்கு நாலு அடி தள்ளி குத்த வச்சார்’. இப்படி வருடா வருடம் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பட்டியலில் ரிடயர்ட் ஸ்டேஷன் மாஸ்டர், ஸ்டாம்ப் வெண்டர் என்று புதுசு புதுசாக யாராவது மாட்டுவார்கள். போன மார்கழியில் நாலாம் சண்டை. தெலுங்கு வக்கீல் குற்றவாளி.

பாம்பு போல ஏதோ சரசரவென்று ஊர்ந்து போன சத்தம் கேட்டதால் என்ன என்று கவனித்துப் பார்க்கத் தான் தன் வீட்டு வாசல் ஓரம் குத்த வைத்து உட்கார்ந்ததாகவும், தகாத செயல் ஏதும் தான் செய்யவில்லை என்றும் நிரூபிக்க வக்கீல் செய்த பிரயத்தனங்கள் தோல்வியில் முடிந்தன. பாட்டி மாதிரி பேச்சு வல்லமை மிக்க வக்கீலை வெல்ல சோவியத் யூனியனில் தான் ஆள்தேட வேண்டும்.

தெலுங்கு, தமிழ், இங்கிலீஷ் இப்படி மும்மொழியிலும் தெலுங்கு வக்கீல் அளித்த தன்னிலை விளக்கங்கள் தள்ளுபடி செய்யப்பட, அவர் இறுக்கமான முகத்தோடு வீட்டுக்குள் நுழைந்த காட்சி மறக்க முடியாதது. தெலுங்கர் இனி வாழ்நாள் முழுதும் அற்ப சங்கைக்கு ஒதுங்கவே மாட்டார் என்ற உறுதி அதில் தெரிந்தது. வக்கீல் பிள்ளை மௌலி எங்க காலேஜ் மௌலி சார் என்ற விஷயம் வீட்டில் சொல்லப்படாமல் போனதற்கு சண்டையால் சீர்குலைந்த நட்புறவுகளும் காரணம்.

மௌலி மெலிசான குரலில் ரொபீந்தர்நாத் தகோர் (அப்படித்தான் சொல்ல வேணும் என்று சொல்லியிருந்தார்), ஈ.எம்.பாஸ்ட்டர், வின்ஸ்டன் சர்ச்சில் இன்னோரன்ன பிரமுகர்கள் எழுதிய கட்டுரைகளைப் பாடப் புத்தகத்தில் வாசித்து விளக்கம் சொல்லும்போது, ஜிலுஜிலுவென்று தூக்கம் வரும். தூங்கினாலும் பாதகமில்லை. மௌலி வந்து விட்டால், கொஞ்சம் இளைப்பாறிக் கொள்ளலாம். எங்கே போனார்?

மௌலியை எதிர்பார்த்துக் காத்திருக்கும்போது எதிர்பாராத விதமாக பிசிக்ஸ் தலைமைப் பேராசிரியர் வடுவூர் ராமசாமி வகுப்புக்குள் நுழைந்தார். இங்கிலீஷ் கிளாசுக்கு இவர் எப்படி வந்தார்? ஏன் வந்தார்? ரொம்ப கண்டிப்பானவராச்சே.

வடுவூர் கிளாசுக்குப் போனால், பரீட்சைக்குப் படிக்காமலேயே பாஸ் ஆகி விடலாம் என்று பரவலான நம்பிக்கை. பாலபாஸ்கரனும் இவரும் ஒரே நாளில் கல்லூரியில் சேர்ந்ததாகத் தெரிந்தது. ஒரே மாதிரி சைக்கிள் வைத்திருப்பார்கள்.

‘ப்ரேயர்’. மிடுக்கான குரலில் அறிவித்தார் வடுவூர். வழக்கமாக, அந்த தினத்தில் முதல் வகுப்பு என்றால் இப்படி குரல் கொடுத்து எல்லோரையும் எழுப்பி நிற்க வைத்து, ஒரு நிமிடம் கண்ணை மூடியபடி பிரார்த்தித்து விட்டு, திரும்ப உட்காரச் சொல்லிக் கைகாட்டிய பிறகு கெப்:ளர் தியரிக்குள் கடந்து போய்விடுவார் அவர்.

வழக்கமில்லாத வழக்கமாக வடுவூர் இரண்டாவது வகுப்பில் பிரார்த்தனைக்குக் குரல் கொடுக்கிறார். மறந்து போய்விட்டாரா? பக்கதில், தூரத்தில் இருந்த மற்றவர்களைப் பார்த்தேன். யாரும் எழுந்திருக்கவே இல்லை. தலையில் சூட்டிய மல்லிகைப்பூ பாதி உதிர்ந்து போன முன் வரிசை பெண்களும் இதில் அடக்கம்.

‘சொன்னேனே, காதுலே விழலியா?’

வடுவூரார் இடிமுழக்க அவசரமாக எழுந்து நின்றோம்.

‘இங்கிலீஷ் லெக்சரர் சந்திரமௌலீஸ்வரன் இன்று காலை தாழையூத்து பக்கம் நடந்த ஒரு பஸ் விபத்தில் உயிரிழந்தார் என்பதை வருத்தத்தோடு சொல்லிக் கொள்கிறேன். அவர் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்’.

வடுவூர் குரலில் நடுக்கத்தை கட்டுப்படுத்தி திரும்பக் கெட்டிப்படுத்தியபடி சொன்னார்.

சத்தியமாக இந்தத் திருப்பத்தை எதிர்பார்க்கவே இல்லை.

சாவு என்றாலே மனதை நோகடிக்கும் விஷயம். அதுவும் நன்றாக அறிந்தவர்கள், பழகியவர்கள் இப்படி விபத்தில் உயிரைப் பறிகொடுப்பது.

மௌலி என்னை விட, என்ன, பத்து பனிரெண்டு வயது பெரியவராக இருப்பாரா? ஒரு தடவையாவது அவரோடு பேசி இருக்கிறேனா?

தெலுங்கு வக்கீலோடு பாட்டி செய்த எதிர்வாதம் கிடக்கட்டும். குடையைப் பிடித்துக் கொண்டு தினசரி காலேஜில் இருந்து நடந்தே வீட்டுக்கு வரும்போது, ஒரு முறையாவது சைக்கிள் பின் காரியரில் உட்காரச் சொல்லிக் கேட்டிருக்கிறேனா? போலீஸ்காரர் நின்றாலும் பாதகமில்லை. பக்தவத்சலத்தைத் தோற்கடித்து வந்த அண்ணாவுக்கு அடுத்து கலைஞர் வந்த புது ஆட்சியில் சைக்கிளில் ரெண்டு பேராகப் போவது பெரிய குற்றமாகப் பார்க்கப்படுவதில்லை.

மௌலி வகுப்பில் தூங்கி வழியாமல் அவர் மென்மையாகச் சொன்னதை உன்னிப்பாகக் கேட்டுக் குறிப்பு எடுத்திருக்கலாம். வீட்டில் அதைப் படித்து, காலை நேரத்தில் மூத்திரச் சண்டை போடாமல் அவர் வீட்டுப் படியேறி பாடத்தில் சந்தேகம் இருந்தால் கேட்டுத் தெளிவடைந்து வந்திருக்கலாம். அவருக்கு சைக்கிள் ஓட்ட குண்டு ராஜூவும் நானும் சேர்ந்து சொல்லிக் கொடுத்திருக்கலாம்.

வாழ்க்கையில் முதல் தடவையாக வகுப்பில் பிரார்த்தனை செய்தேன். மௌலிக்கு.

‘இந்த வகுப்போடு, லெக்சரர் மௌலிக்கு அஞ்சலி செலுத்த கல்லூரி இன்று விடுமுறை விடப்படுகிறது. இரவு அவருக்கு மரியாதை செலுத்த நீங்கள் விரும்பினால் போக வேண்டிய விலாசம்’.

வடுவூர் எங்கள் தெருப்பெயரை, நான் நன்றாக அறிந்த அண்டை வீட்டுத் தெலுங்கு வக்கீல் விலாசத்தை போர்டில் எழுதினார். ரெண்டு எண் குறைத்தால் எங்க வீட்டு எண். ஒருநாள் என் பெயரும் விலாசத்தோடு இங்கே எழுதப்படுமோ? மௌலி பஸ்ஸில் எதற்கு தாழையூத்து போனார்? எதற்காக அவருக்கு லீவு கொடுத்தார்கள்?

வீட்டுக்கு வரும்போது திரும்ப தங்கு ரிக்ஷா எதிர்ப்பட்டது. மாதவன் உள்ளே உட்கார்ந்திருந்தான். ரோஜா மலரே ராஜகுமாரியும் சர்க்கார் உத்தரவும் இல்லை. லெக்சரர் மௌலியின் சாவுச் செய்தியை ஊர் முழுக்க ஒலிபரப்பியபடி போனான் அவன். ஒரே குரலில், தன் குரலில் மட்டும் துக்கத்தைச் சொன்னான் மாதவன்.

சாயந்திரம் ரெட்டைத் தெருவில் ஊரே கூடியிருந்தது. மௌலிக்கு கல்யாண ஏற்பாடுகள் நடந்து வருகிறதாகவும், அதற்காக புதுசாக பேண்ட், சட்டை தைக்க மதுரையில் துணி எடுத்து, ஓரியண்ட் டெய்லர் கடையில் தைக்கப் போட்டுவிட்டு, யாரோ சொந்தக்கார வீட்டு விசேஷம் என்று தாழையூத்து போனதாகவும் பேச்சு காதில் விழுந்தது. ராஜபாளையத்தில் இருந்து பஞ்சு ஏற்றி வந்த லாரி முன்புறமாக மோதியதில், பக்கவாட்டு சீட்டில் முதல் ஆளாக உட்கார்ந்திருந்த மௌலி அந்த இடத்திலேயே உடல் நசுங்கி இறந்து போனதைக் கேட்டு பாட்டியும் கலங்கினாள்.

ஆறு மணிக்கு இருட்ட ஆரம்பித்தபோது நாலைந்து பெட்ரோமாக்ஸ் விளக்குகளை தெலுங்கு வக்கீல் வீட்டு வாசலில் வைக்க தருமபுத்திரன் ஏற்பாடு செய்ததையும், வடுவூரும், பாலபாஸ்கரனும் நாலைந்து மணி நேரம் தெருமுனையிலும் வீட்டு வாசலிலும் நின்று கூட்டத்தைக் கட்டுப்படுத்தி அமைதியாக வைத்ததையும், ஏழு மணி சுமாருக்கு சவப்பெட்டி மதுரையில் இருந்து வந்து சேர்ந்ததையும், வீட்டு வாசலில் முகம் மட்டும் வெளியே தெரிய மௌலி கிடத்தப்பட்டதையும், ‘என் குழந்தே’ என்று பாட்டி வாய்விட்டு கதறியபடி தெலுங்கு வக்கீல் மனைவியை கட்டிப் பிடித்து அழுததையும் சொல்ல வேண்டாம்.

சவ ஊர்வலத்தைத் தொடர்ந்து சைக்கிளைத் தள்ளிக் கொண்டு பாலபாஸ்கரன், வடுவூர், தருமபுத்திரன், தமிழ் ஆண்டாள்தாசன் போன்ற பேராசிரியர்கள் அமைதியாக நடந்து போனார்கள். புரபசர் கே.கே.ஜி.பாலசுப்ரமணியன் நடக்க முடியாத காரணத்தால் தங்கு ரிக்ஷாவில் எல்லோருக்கும் பின்னால் வந்தார். நான், கிரி, சௌந்தர் என்று ரெட்டைத்தெரு பட்டாளம் ஆகக் கடைசியாக நடந்தது.

கே.கே.ஜி வீட்டு வாசலைக் கடக்கும்போது தங்கு ரிக்ஷா நின்றது. வீட்டு வாசலில் நின்ற மனைவியிடம் தணிந்த குரலில் கே.கே.ஜி சொன்னது எனக்குக் கேட்டது – ‘வெதுவெதுன்னு வென்னீர் போட்டு வை. வந்து குளிக்கணும். மெல்லிசா நாலு தோசையும் இஞ்சி போட்டு கொத்தமல்லி சட்னியும் போதும் ராத்திரி சாப்பிட’.

போன வாரம் ஊருக்குப் போனபோது தங்கு ரிக்ஷா இன்னும் ஓடிக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். குதிரை வண்டிகளும், தங்கு ரிக்ஷாவுக்குப் போட்டியாக வந்த இதர ரிக்ஷாக்களும் ஓடி ஓய்ந்து ஆட்டோ ரிக்ஷா விரைகிற காலம் இது. தங்கு மட்டும் தங்கக் காரணம்?

‘மாதவன் போன பிற்பாடு, ஊர்லே நல்லது கெட்டதை அறிவிக்கறது நான் தான் தம்பி. மைக் செட் எல்லாம் கிடையாது. அங்கங்கே ரிக்ஷாவை நிறுத்தி தாக்கல் சொல்லுவேன். இதிலே வர்ற ஊர்க்காசுலே தான் வண்டி ஓடிட்டு இருக்கு’.

தங்கு சிரித்தார். இன்னும் இருபது வருஷமாவது அவர் தாக்கல் சொல்வார் என்று எனக்குத் தோன்றியது. சாகுருவிக்கும் ஜீவிக்க வேண்டி இருக்கே.

‘ஆகக் கடைசியா யார் போனதைச் சொன்னீங்க?’ தங்குவை விசாரித்தேன்.

‘பேப்பர் போடுற நல்லையா போன வாரம் போய்ச் சேர்ந்தாரே. அதான்’.

‘ஓடிப் போனவர்கள்’ செய்தி சொல்ல நல்லையாவுக்கு அப்புறம் வேறே யாராவது இல்லாமலா போயிருப்பார்கள்? தங்குவிடம் கேட்க நினைத்து சும்மா நகர்ந்தேன்.

(Yugamayini March 2011)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன