இன்னொரு குதிரை

 

இன்னொரு குதிரை இரா.முருகன்

குப்பன் நகரசபைத் தேர்தலில் நாலாம் வார்ட் வேட்பாளராக நிற்பதாக அறிவிப்பான். அஸ்து தேவதைகள் ஆமோதிப்பதாக ராமாமிர்த பாட்டி சொல்வாள்.

வாஸ்து தேவதைகளைத் தெரிந்தவர்களுக்குக்கூட அஸ்து தேவதைகளை அவ்வளவாகத் தெரியாது. இதுகள் சதா வானத்தில் சஞ்சரித்தபடி, யாராவது ‘எழவு விழ’, ‘நாசமாகப் போக’, ‘சனியன் பிடிக்க’ போன்ற அசுபமான பிரயோகங்களை உதிர்த்தால் உடனடியாக ஆமோதிப்பு தீர்மானம் நிறைவேற்றி அந்தப்படிக்கு காரியங்கள் நடக்க வைப்பதையே முழுநேரம் வேலையாகக் கொண்டவை.
கங்கையூரில் நகரசபை தேர்தல் அறிவித்ததுமே ஒட்டுமொத்தமாக அஸ்து தேவதைகள் இங்கே திரண்டு வந்து விடும். அதில் கொஞ்சம் லேட்டாக வந்து சேர்ந்த ஒன்று குப்பனை சபிக்க, சீனியர் தேவதை லிஸ்டில் முதல் இடம் பெறும் பிரமுகர்களில் சிலர் – டாக்டர் கண்ணுக்கினியான், பெட்டிக்கடை சாமி, முறுக்கு மொத்த சப்ளை முனியாண்டி, மளிகைக்கடை ராவுத்தர், ஸ்தானிஸ்லால் வாத்தியார்.

மொத்தம் பனிரெண்டு வார்ட் ஊரில். ரெண்டாம் வார்டில் டாக்டர் கண்ணுக்கினியானும், பெட்டிக் கடைக்கார சாமியும் மோத, நாலாம் வார்டில் குப்பனும் முறுக்கு முனியாண்டியும் போட்டி. வேட்பாளர் பட்டியலில் இடம் பெறும் மற்ற பல பெயர்கள் ஊரளவில் இல்லாவிட்டாலும் தெருவளவிலாவது பிரபலம்.

நகரசபை எலக்ஷனுக்கு தேர்தல் சின்னம் ஒதுக்குகிறது யாரென்று தெரியவில்லை. கடியாரம், குதிரை வீரன், மோட்டார் கார், ரயில் இஞ்சின், கதவு, ரேடியோ, ரோடு ரோலர், விசிறி, பனைமரம், குடை, கிணறு, இரும்பு வாளி, டிராக்டர் இப்படி.

குப்பனுக்கு குதிரைவீரன் கிடைக்கும். முறுக்குக் காரருக்குக் கிணறு. பெருமாள்கோவில் தெரு, ஒற்றைத் தெருவில் ஐம்பது வீடு, இதுதான் தொகுதியின் அளவு. வீட்டுக்கு வீடு இருக்கப்பட்ட நண்டு சிண்டு நார்த்தங்காய் தள்ளி இருநூறு பெரிசுகள். இவர்கள் தான் ஓட்டுச் சாவடிக்குத் திரண்டு வந்து வாக்களித்து கிணறையோ குதிரையையோ முனிசிபல் ஆபீஸ் படியேற்ற கடமைப்பட்டவர்கள்.

மற்ற வார்டுகளிலும் இதே நிலைதான். ஏழாம் வார்ட் மாட்டு ஆஸ்பத்திரி வார்ட் என்ற வெட்டினரி ஹாஸ்பிடல் அமைந்த ஒன்று. அங்கே நாலு கால் பிராணிகளே அதிகம். அவை தவிர மிச்சம் நூறு பேர் வாக்களிக்கத் தேறினால் அதிசயம்.

கடைசியாக பத்திரிகை தாக்கல் செய்தாலும் குப்பன் முதல் ஆளாக சூறாவளி பிரசாரத்தில் இறங்கிவிடுவான். அவனுடைய மூணு சீட்டு கோஷ்டி தேர்தல் கமிட்டியாக உருமாறி இறங்கி பாட்டியின் முதல் வசவுக்குப் பாத்திரமாகும்.

‘தடித் தாண்டவராயன்கள். பேசறான், கொட்டிக்கறான், காப்பி எங்கேடி கிழவிங்கறான். இவன்கள் கட்டேலே போற வரைக்கும் யார் நித்யப்படிக்கு வடிச்சு கொட்டி பிண்டம் படைச்சு லோல்படறது?’. பாட்டி உருட்டி விட்டெறிந்த சாம்பார் சாதம் மூளையைச் சூடேற்ற கோஷ்டி முதல் தேர்தல் தந்திரத்தை எட்டும்.

நாளைக்கு சாயந்திரம் நாலு மணிக்கு தொகுதியில் இருக்கப்பட்ட எல்லா வீட்டுக்கும் அப்பம் வடை போட்டுவிட்டு வருவது. கூடவே தேங்காய்ப்பால் ஒரு லோட்டா, வடைக்கு புதினா சட்னி என்று பக்கவாத்தியங்கள் இலவச இணைப்பு.

‘ஏண்டா தோசி, யாராவது மண்டையைப் போட்டா இல்லே பத்தாம் நாள் காரியம் முடிஞ்சு சாயந்திரம் அண்டை அயல்லே அப்பம் வடை போடற சம்பிரதாயம். இங்கே என்ன எழவு விழுநதுடுத்துன்னு அப்பம் வடை போட அலையறே?’

பாட்டியின் பிரம்மாஸ்திரத்தை புன்முறுவலுடன் எதிர்கொண்டு குப்பன் ‘எங்க தாத்தா அதான் உன் வீட்டுக்காரர் போனதுக்கு இப்போ தான் அதைப் போட நேரம் குதிர்ந்திருக்கு’ என்பான். ‘அட எழவே’ என்று பாட்டி வாழ்த்துவாள்.

குப்பன் குழு அப்பம் வடை சப்ளையை முத்துப்பட்டி கருமாதி சமையல்கார கோஷ்டியிடம் காண்ட்ராக்ட் விடும். சொன்ன நேரத்துக்கு சரக்கை ரெட்டை மாட்டு வண்டியில் கொண்டு வந்து முத்துப்பட்டி ஆட்கள் இறக்கும்போது வண்டி மாடு ‘ம்ம்மா’ என்று உச்சத்தில் கொடுக்கும் சத்தத்தில் இருந்து உருளும் வண்டிச் சக்கரம் வரை ஒரே சீராகப் பூண்டு வாசனை. இந்தப் பண்டத்தை ஏறிட்டும் பார்க்காத பெருமாள் கோவில் தெரு வீடுகளில் இப்படி ஒரு நெடியோடு அப்பம் வடையை எப்படிப் போட? தாத்தா கடைசி விருப்பம் என்று சொல்லித் தான்.

ஒண்ணு தெரியுமோ?தெருவில் யாரும் பூண்டு விரோதியில்லை. பல தலைமுறையாக வீட்டுச் சமையலில் சேர்க்காத ஒரே காரணத்தால் உள்ளே நுழையாதது அது, யாரோ ஒரு மகானுபாவரின் கடைசி விருப்பம் மூலம் சூடான அப்பம் வடையோடு ஓசியில் உள்ளே வந்து விழ யாருக்கும் எந்தத் தடையும் இருக்காது.

இந்த எதிர்பாராத வரவேற்பால் மலைத்துப் போகும் குப்பன் கோஷ்டி, அவன் ஜெயித்தால் ஒவ்வொரு அமாவாசைக்கும் இதேபோல் மணக்க மணக்க தாத்தா நினைவில் பலகாரம் போடுவதாக வடையோடு தேர்தல் வாக்குறுதியும் தரப்படும்.

தொகுதி முழுக்க வினியோகம் செய்துவிட்டு வீடு திரும்ப, ‘பாடையிலே போக. ஊருக்கு தானம் கொடுக்க முந்தி வீட்டுக்கு எடுத்து வைக்கணும்னு இந்த பிரம்மஹத்திக்குத் தெரியாதா’ என்றபடிக்கு முன் ஜாக்கிரதையாகப் பதுக்கி வைத்திருந்த தேர்தல் பிரசார சாதனங்களை பூண்டு சட்னி சகிதமாக கபளீகரம் செய்துகொண்டிருக்கும் ராமாமிர்த பாட்டியைக் காண நேரும். அவர்கள் ஒன்றும் சொல்ல முடியாது. பாட்டியின் ஓட்டும் இதே தொகுதியில் தான் என்பதே காரணம்.

நாலாம் வார்ட் இப்படி சாப்பாட்டு வாசனையோடு தேர்தலை எதிர்கொள்ள, ரெண்டாவது வார்டில் டாக்டருக்கும் பெட்டிக்கடை சாமிக்கும் நட்பான மோதல். டாக்டர் தினசரி ராத்திரி அரைக் கவுளி வெற்றிலை மென்றுவிட்டு கோலி சோடா குடிக்க, ஊர் வம்பு பேச வசதியாகத் தேர்ந்தெடுத்திருப்பது சாமி கடையைத்தான்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதுமே தன் கடையில் இருந்தபடிக்கே சாமி பிரச்சாரத்தைத் துவங்கிவிடுவார். அவருக்குத் தேர்தல் சின்னமாக வெற்றிலை வழங்கப்படும். யார் எது வாங்க வந்தாலும் வெற்றிலையில் பேச்சை முடித்து காசு வாங்கிப் போட்டபடி சாமி பிரசாரம் நடத்த, டாக்டருக்கு மகா பெரிய பிரச்சனை.

எதிர்த்து நிற்கிற வேட்பாளரின் கடையில் மணிக்கணக்காக வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு நின்று எதிரியின் தேர்தல் சின்னமான வெற்றிலையை ரசித்து மென்று தான் பலவீனப்பட்டுப் போவதை டாக்டர் விரும்பமாட்டார். மேலும் அவருக்கு கடியாரச் சின்னம். சாமி தேர்தல் சின்னத்தை பிரசாரத்தோடு விற்றுக் காசாக்குவதுபோல் அவர் கடியாரத்தை வைத்துக்கொண்டு ஒன்றும் செய்ய முடியாது. ஒரு பாட்டில் கார்பனேட் மிக்சர் அல்லது இஞ்செக்ஷன் சிரிஞ்ஜ் இப்படி சின்னத்தை அவருக்கு ஒதுக்கி இருந்தால் சௌகரியமாக இருக்கும். அமையாதே.

சாமி கடை வாசலில் ராத்திரி வம்பு மடத்தை உடனே நிறுத்திவைக்க டாக்டர் மனசே இல்லாமல் முடிவு செய்வார். அடுத்து பழனியின் குதிரை வண்டி டாக்டர் பிரச்சார சாதனமாக்கப்படும். இது அவருடைய ஆதரவாளர்களான பள்ளிக்கூட ஹெட் மாஸ்டர், பேங்க் ஏஜெண்ட் ஆகியோர் யோசனைப்படி நடக்கும்.

டிஸ்பென்சரிக்கு வரமுடியாத நோயாளிகளுக்கு நேரடியாகக் காட்சியளிக்க அவர் அந்த வாகனத்தைத்தான் அல்லும் பகலும் பயன்படுத்துவது வழக்கம். ஊரில் வேறே குதிரை வண்டிகள் இருந்தாலும் அதில் எல்லாம் ஏறுவதில்லை. குதிரைராசி பார்த்து, அவர் தொழிலுக்கு பழனியின் வண்டி தான் பொருந்தி வந்த ஒன்று.

திட்டத்தின் படி குதிரை வண்டி ஓட்டுகிற பழனிக்குப் பின்னால் வழக்கம் போல் வண்டிக்குள் உட்காராமல் பழனி பக்கத்திலேயே டாக்டர் உட்கார்ந்து கருடாழ்வார் போல் ரெண்டு கையையும் கூப்பிக் கொண்டு வரவேண்டும். வண்டியில் ரெண்டு பக்கமும் கடியாரம் படம் எழுதிய படுதா தொங்க விடப்படும்.

தொகுதி முழுக்க பிரசார வாகனம் பதினைந்து நிமிடத்தில் சுற்றி வந்துவிடும் என்பதால் அங்கங்கே வண்டியை நிறுத்தி டாக்டர் மினி அரட்டை கச்சேரிகளை அரங்கேற்றிய வண்ணம் பிரசாரத்தில் ஈடுபடுவார். நாலு ரவுண்ட் இப்படி தொகுதி சுற்றி வருவதற்குள் பெரும்பாலான வாக்காளர்களை சந்தித்து விட முடியும். கூடவே நலம் விசாரித்து, கொஞ்சம் சுகவீனம் என்று புகார் செய்தவர்களை அடுத்த நாள் டிஸ்பென்சரிக்கு வரச்சொல்லி தொழிலுக்கும் வழிவகுக்க முடியும்.

இப்படி ஒரே கல்லில் ஏகப்பட்ட மாங்காய்களை அடிப்பதில் டாக்டர் வெற்றிபெற, பெட்டிக்கடை சாமி தேர்தல் உத்தியை மறுபரிசீலனை செய்ய வேண்டிப் போகும்.

‘குப்பா, உன் தொகுதியிலே குதிரை வீரன் தானே உனக்கு சின்னம்’?. சாயந்திரம் பாட்டி கண்ணில் படாமல் ஒரு சிகரெட் பற்றவைக்க வரும் குப்பனை அக்கறையோடு விசாரிப்பார் சாமி. பூரிப்போடு சிரிப்பான் குப்பன்.

‘அப்போ எதுக்கு அப்பம் வடைன்னு வீடு வீடா சப்ளை பண்ணிட்டு இருக்கே’?

குப்பனும் யோசித்துப் பார்ப்பான். சாமி சொன்னது நியாயமாகப் படும்.

‘குதிரை மேலே ராஜபவனி வரணும் நீ’. சாமி அஸ்திரத்தை வீசுவார். ‘அப்பம் வடை சில்வர் தூக்கை எப்படி பிடிச்சுக்கறது?’ இது குப்பனின் சந்தேகம்.

‘ரெண்டு நாளைக்கு பலகாரத்தை நிறுத்து. கடிகாரத்தையும் நிறுத்திடலாம்’ சாமி மர்மப் புன்னகை புரிவார். அவருக்கும் குப்பனுக்கும் நல்லது செய்கிற யுக்தியாம்.

பகல் நேரத்தில் டாக்டர் சின்னத் தூக்கம் போடுவது ஊருக்கே தெரியும் சங்கதி. சாமி பழனியை அந்த நேரத்தில் வரவழைத்து குப்பனையும் பக்கத்தில் வைத்துக் கொண்டு ஒரு உடன்படிக்கை ஏற்படுத்துவார். அதன்படிக்கு இந்த வாரம் முழுக்க சாயந்திரம் ஐந்து முதல் இரண்டு மணி நேரம் பழனியின் குதிரை குப்பன் வீட்டு வாசலில் நிற்க வேண்டும். மிச்சத்தை குப்பனும் குழுவும் பார்த்துக் கொள்வார்கள்.

குப்பன் வகையில் சாயந்திர வண்டி வாடகை. டாக்டர் ஏழு மணிக்கு அப்புறம் தான் குதிரைவண்டிப் பிரசாரம் கிளம்புவார் என்பதால் பழனிக்கு அந்த சவாரியும் கிடைக்கும். வருடம் பூரா எலக்ஷென் என்று சட்டம் வந்தால் பழனியும் அவன் குதிரையும் முதலில் வரவேற்பார்கள். சாமியின் திட்டம் உடனே ஏற்கப்படும்.

சாமி பழனிக்குச் சொல்லாமல் விடுவது ஒன்று உண்டு. குதிரைக்கு டியூட்டி ரெண்டு மணி நேரம் என்றாலும் நடுவில் ஒரு சிறிய இடைவேளை ஒரு மணி நேரத்துக்கு. ஆக, ராத்திரி டாக்டர் பிரசாரத்துக்குக் கிளம்பும்போது குதிரை வண்டி கிட்டாது.

குப்பன் டிராயிங் மாஸ்டர் வேலப்பன் சகாயத்தோடு சாயந்திரம் குதிரை வீரனாக அவதாரம் எடுப்பான். கரி மீசையும் கன்னத்தில் குங்கும வர்ணமும் வரைந்து கொள்வான். அவன் முதுகில் டிராயிங் மாஸ்டரின் ஸ்பெஷல் சித்திரமான முண்டாசுக்கார படகோட்டி, தென்னை மரம் தான் இல்லாது போகும்.

அட்வான்ஸ் பணத்தை மடியில் முடித்துக் கொண்டு உடம்பு புஷ்டியாக ஏதோ லேகியத்தை விழுங்கி விட்டு குப்பன் வீட்டுத் திண்ணையில் குப்புறப்படுத்து விடுவான் பழனி. அது அபின் என்று யாரோ சொல்வது அவனுக்கு தெரியாது.

‘சனியன்கள், உசிரை வாங்கறதுக்குன்னே பொறந்து வச்சிருக்கு எல்லா ஜந்துவும்’ என்று பாட்டி குப்பனையும் குதிரையையும் பொதுவாகப் பார்த்துத் திட்டி விட்டு திருஷ்டி படாமல் இருக்க குதிரைக்கு வெகு அருகே கற்பூர ஆரத்தி எடுப்பாள். வெப்பம் தாங்காத குதிரை அவளை ஒரு முட்டு முட்டி தட்டுத் தடுமாறி விழச் செய்யும். ‘பொணமே, உனக்கு எழவு விழாதா?’ என்று குதிரைக்கு இன்னொரு உடனடி வசவு தானம் செய்து விட்டுப் பாட்டி தரையில் விழுந்து மயக்கமாவாள்.

அவள் திரும்ப எழுந்து எந்த நிமிடமும் அடுத்த அசுப வார்த்தையை தன்னைப் பார்த்துச் சொல்வாள் என்று எதிர்பார்த்து குப்பன் அதற்குள் குதிரையை விட்டிறங்க நினைப்பான். குதிரை வளைந்து கொடுக்க மாட்டேன் என்று நேரே நிற்பதோடு பெரிய பற்களைக் காட்டிக் கொண்டு வில்லன் போல் கனைக்கும். வேறு வழி இன்றி குப்பன் குதிரை மேலேயே ஆரோகணித்திருக்க, மணி ஏழரை.

குதிரை வண்டிக்குத் தயாராக டாக்டர் வீட்டு வாசலில் காத்திருப்பார். வண்டி தான் அவருக்காகக் காத்திருப்பது வழக்கம். கம்பவுண்டர் வைரவனை அழைத்து என்ன விஷயம் என்று விசாரிக்கலாம் என்று நினைப்பார். ரகசியமாக வெற்றிலையும் சீவலும் வாங்க அவனை சாமி பெட்டிக்கடைக்கு அனுப்பியிருப்பது அப்போதுதான் நினைவு வரும். டாக்டருக்காக இல்லை, அவன் வீட்டில் விசேஷம் என்று தான் வாங்கி வரவேண்டும் என்பது ஹெட்மாஸ்டரின் திட்டத்தின் சிறு பாகம்.

வெற்றிலையும் வராமல், குதிரையும் வராமல் டாக்டர் காத்திருக்க, குப்பன் வீட்டில் கூச்சல் குழப்பம். ராமாமிர்தப் பாட்டி கண்ணைத் திறக்காமலேயே ஈன ஸ்வரத்தில் நாட்டு அளவில், மாநில அளவில் இருக்கப்பட்ட பிரபலங்களை ‘பாடையிலே போற பீடைகளா’ என்று வைய ஆரம்பிப்பாள். நடுநடுவே குதிரை மாதிரி வேறே கனைக்கவும் செய்வாள். பாட்டிக்குப் பல் இல்லாத ஒன்று தான் குறைச்சல்.

டாக்டர் கண்ணுக்கினியான் வந்தால் தான் பாட்டி பிழைப்பாள் என்று தெருவே குப்பன் கணக்கில் பூண்டு வெங்காய வடை தின்ற திருப்தியோடு ஏப்பம் விட்டபடி சொல்லும். அதற்குள் கையில் வெற்றிலைப் பொட்டலத்தோடு வைரவன் தகவல் அறிந்து குதிரையை பறித்துக் கொண்ட விஷயமாக சண்டை பிடிக்க குப்பன் வீட்டுக்குப் போய்ச் சேர்வான்.

அவன் பேசவே தேவையில்லாமல் நிலைமை புரிபட்டுப் போகும். வைரவன் குதிரை பக்கம் நெருங்கி குப்பனை இறக்கி விட என்ன செய்யலாம் என்று யோசிக்க வெற்றிலைப் பொட்டலம் இப்போது குதிரை மூக்குக்கு முன். டாக்டருக்கு வருடக் கணக்காக சேவகம் செய்து செய்து அந்த வாசனை அதற்குப் பிரியமான ஒன்று. வெற்றிலை வாசனையை முகர்ந்துகொண்டு குதிரை முன்னால் நகர ஆரம்பிக்கும்.

வைரவன் வெற்றிலையைக் காட்டியபடி முன்னால் நடக்க, பின்னால் குப்பன் தாறுமாறாக எந்த நிமிஷமும் விழுந்து விடும் பயத்தோடு குதிரை ஏறி வர அந்த ஊர்வலம் ரெண்டாம் வார்டில் டாக்டர் வீட்டை நோக்கிப் புறப்படும்.

டாக்டரையும் குதிரை ஏறச் சொல்வான் குப்பன். எடை மொத்தமும் தாங்காது என்று டாக்டருக்குப் பட அந்த ஊர்வலம் குப்பன் வீட்டுக்கு கால்நடையாகத் திரும்ப நடக்கும். ஊர்வலக் கடைசியில் ஆனந்தமாக வெற்றிலை மென்றபடி டாக்டர் நடப்பார். அவர் கொடுத்த வெற்றிலையைக் குதிரை அசைபோடும்.

பாட்டிக்கு ஒன்றும் கேடு வராது. வெறும் மயக்கம். கிரகசாரங்களே என்று டாக்டர் தொடங்கி சகலரையும் சபித்துக் கொண்டு அவள் எழுந்து உட்கார்ந்து விடுவாள். பழனி எழுந்து எல்லாப் பழியையும் குதிரை மேல் போட்டு விட்டு வண்டியில் அதைப் பூட்ட, டாக்டர் குதிரை வண்டி ஏறிப் போவார். அவர் வரும் முன்பே பெட்டிக்கடை சாமி கடையைப் பூட்டி விட்டு வீட்டுக்கு சவாரி விட்டு விடுவார்.

எல்லோருக்கும் சந்தோஷம் என்றாலும் நாலாம் வார்ட் வாக்காளர்கள் தான் குழம்பிப் போவார்கள். நாலாம் வார்ட் குதிரை வீரன் குப்பனும் ரெண்டாம் வார்ட் கடிகார டாக்டரும் சேர்ந்தது என்ன மாதிரி அவசர கூட்டணி? ஏன் சேரணும்? டாக்டரை எதிர்த்த வெற்றிலை சின்னம் எதுக்கு நடுவில் வரணும்? யார் யார் பக்கம்? எது எது பக்கம்? அப்பம் வடை தேர்தலுக்கு அப்புறமும் கிடைக்குமா?

குப்பன் தோற்றுப் போவான்.

‘சவண்டித் தீனி எழவுகள். வாய்க்கு ருஜியாக் கொட்டிக்க தயார். ஓட்டுப் போட வீட்டை விட்டு வரமுடியாதா இந்த சவங்களுக்கு? நாசமாப் போக’.

பாட்டியின் வசவை கடன் வாங்கி அவன் ஒலிக்கும்போது ரெண்டாம் வார்டில் டாக்டருடைய வெற்றியின் வேட்டு முழக்கம் கேட்டுக் கொண்டிருக்கும். கொண்டாட்டத்தின் பகுதியாக சாமி கடைக்கு வந்து ஆனந்தமாக வெற்றிலை போட்டுக் கொண்டு குப்பனைப் பற்றிய ஊர்வம்பில் ஆழ்ந்திருப்பார் டாக்டர்.

குதிரை வண்டிப் பழனி மேல் ஏழாம் வார்ட் மளிகைக்கடை ராவுத்தருக்கு வருத்தம் வரலாம். ஒரு ஓட்டில் ரிடையர்ட் வாத்தியார் ஸ்டானிஸ்லாசிடம் தோற்றுப் போவார் அவர். பழனிக்கு அந்த வார்டில் தான் வீடு. அவன் ஓட்டு நிச்சயம் அவருக்குக் கிடைத்திருக்கும். தேர்தலுக்கு முதல்நாள் அந்தத் தெரு வெட்டினரி ஆஸ்பத்திரியில் சக வண்டிக் குதிரை ஒன்றுக்கு முரட்டு ஊசியைப் போட்டு வதைத்தது பழனியின் வண்டிக் குதிரையின் பார்வையில் படாமல் இருந்தால் அது தேர்தல் தினத்தில் தெருவை பூரணமாக பகிஷ்கரித்திருக்காது. பழனியையும் வீட்டுக்காரியையும் தன்னைத் தேடி நாள் முழுக்க அலைய வைத்திருக்காது.

தேர்தல் வெற்றியை குதிரைகள் நிர்ணயிக்கக் கூடாது என்று சட்டமா என்ன?

இரா.முருகன்
மார்ச் 20, 2011

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன