A ton and a lot more for RVK sirஎங்க ஹெட்மாஸ்டர்

இன்று எங்க ஹெட்மாஸ்டர் வெங்கடகிருஷ்ணன் சார் 81-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். வாழ்த்த வயதெல்லாம் தேவையில்லை. பல்லாண்டு பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்துகிறேன்.

சிறந்த தேசபக்தரும் சிவகங்கையின் இரண்டாவது எழுத்தாளருமான கவியோகி சுத்தாநந்த பாரதியாரின் இளவலில் மகன். (சிவகங்கையின் முதல் எழுத்தாளர் முத்துக்குட்டி ஐயர் பற்றி சாவகாசமாக எழுதுகிறேன். அவர் தான் தமிழ் உரைநடைக்கும் முன்னோடி).

எங்க ஹெட்மாஸ்டர் சாரின் 80-ம் ஆண்டு நிறைவு சிவகங்கையில் விரைவில் சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளது. விழா மலருக்காக நான் எழுதிய கட்டுரை இது –

தெரியுமே
—————–
(இரா.முருகன்)

ரெட்டைத் தெருவில் இருந்து கோகலே ஹால் தெருவுக்குப் போக மூன்று வழிகள் உண்டு. மேற்கே உடைய சேர்வார் ஊருணிக்கரையில் நடந்து வடக்குக் கரை இறக்கத்தில் சைக்கிளைச் செலுத்த, கோகலே ஹால் தெரு. இது மகா சந்தோஷமான ஒரு வழி. பவழமல்லியும் சப்போட்டா மரத்தில் பழமும், வாதா மரத் தளிருமாக வழியெல்லாம் வாசம்.

அடுத்தது கொஞ்சம் சுற்றி வளைத்துக் கொண்டு வடக்கே காந்தி வீதி முழுதும் நடந்து செட்டியூரணிப் பக்கம் இடம் திரும்பி மேலூர் ரோடு மூலம் நேரே கோகலே ஹால். தீபாவளி நேரங்களில் கடை கடையாக வேடிக்கை பார்த்தபடி நடக்க நல்ல மார்க்கம்.

சட்டென்று போனேன் வந்தேன் என்று கோகலே ஹால் பப்ளிக் லைப்ரரி போக வேண்டி அவசியம் வரலாம். ஏதாவது புத்தகத்தைப் பொது நூலகத்தில் இருந்து இரவல் வாங்கி வந்து பதினைந்து நாள் இரவல் வேளை முடிகிற நாளாக இருக்கும். அடுத்த நாள் கொண்டு போய்க் கொடுக்கலாம் தான். ஒருநாள் தாமதக் கட்டணம் பத்து பைசா. அது கூட அவ்வளவு பெரிய தொகை இல்லைதான். ஆனால் லைப்ரரியில் ஒவ்வொரு எழுத்தராகப் போய் ஏதேதோ படிவத்தில் பத்து இடத்தில் பெயர் எழுதி, கடைசியில் நூலகரை சேவித்து அதில் கையொப்பம் வாங்குவதற்குள் போதும்டா சாமி என்றாகி விடும்.

இப்படியான தருணங்களில் லைப்ரரி போக உபயோகிக்கும் வழி, வீட்டு வாசலில் இருந்து கொல்லைக்கு ஓடுவது. மடார் என்று கொல்லைக் கதவை அறைந்து சார்த்தி, வீட்டில் சகலரின் ஆசிகளையும் உடனடியாக வாங்கிக் கொண்டு ஒற்றைத் தெரு வழியாக ஓட்டத்தைத் தொடர்வது. அடுத்த நிமிடம் மணிரங்க புரத்தில் புகுந்து உடைய சேர்வார் ஊருணிக் கரைக்கு உடனே போய்ச் சேர்ந்து அங்கிருந்து லைப்ரரியில் போய் விழுவது. மொத்தம் எட்டே நிமிடம் தான்.

சிவகங்கையில் வேறு எந்தப் பகுதிக்கும் தனிப் பெயர் இல்லை. சாத்தப்பையா சந்து, பாகனேரி மடத்துச் சந்து, எருமைக்காரத் தெரு என்று சந்து பொந்து, சின்னத் தெருவுக்கெல்லாம் கரிசனமாகப் பெயர் வைத்தவர்கள், அங்கங்கே இருக்கும் குடியிருப்புகளுக்கு நகர், காலனி என்றெல்லாம் பெயர் தர ஏனோ அப்போது நினைக்கவில்லை. விதிவிலக்கு மணிரங்கபுரம்.

இலக்கிய வீதி போல் பெயர் ஒலிக்கும் அங்கே பனிரெண்டு வயதுப் பையனாக, தண்டத் தீர்வையைத் தடுக்கும் உத்தேசத்தோடும் கையில் ‘ஆசு நகர மந்திரவாதி’ புத்தகத்தோடும் ஓடிக் கொண்டிருப்பவன் நானே தான். இன்னும் பதினைந்தே நிமிடத்தில் கோகலே ஹால் லைப்ரரி அடைத்து விடுவார்கள். அப்புறம் நாளைக்கு நாற்காலி நாற்காலியாக பத்து பைசா கட்ட யாத்திரை செய்யணும். சர்க்காரைப் பகைத்துக் கொண்டால் அதுதான் குறைந்தபட்ச தண்டனை.

மணிரஙக புரத்தில் நாலைந்து வீடு ரெண்டு சாரியிலும் கடந்து போக, அடுத்த வீட்டு வாசல் படியில் யாரோ உட்கார்ந்திருக்கிறார்கள். நெடியவர். இவரை எங்கோ பார்த்திருக்கிறேன். எங்கே? நினைவு வந்து விட்டது. சிவன் கோவில் தெருவில் பேங்க் மேனேஜர் வீட்டு வாசல் கொலுப்படியில். உச்சாணிக் கொப்பில் உட்கார்ந்து மேனேஜர் அவசரக் கச்சேரி நடத்தும்போது எதிரும் புதிருமாக டாக்டரும் இந்த நெடியவரும் இசை விமர்சகர்களாக உட்கார்ந்திருப்பார்கள். பாடப்பட்ட பாட்டை ஒட்டியும் வெட்டியும், ’சசமாரிகரி’யா ’சரிமாகரிநி’யா என்று ஏதோ செவ்வாய்க் கிரக மொழியில் விவாதித்துக் கொண்டிருப்பார்கள். காவிக் கலர் கதர் ஜிப்பா போட்ட நெடியவர். இவரா?

இவர் தானா? இவர் இல்லையோ பத்தாம் கிளாசுக்கு அரசர் உயர்நிலைப் பள்ளியில் மேள தாளத்தோடு பாடம் எடுக்கிறவர்? முந்தாநாள் ப்ரேயருக்கு அடுத்த வகுப்பில் நம்ம சீனுவாசனை, அதான் எனக்கு ரெண்டு கிளாஸ் மேலே.. நேரு பஜார் புண்ணாக்கு கடைக்காரர் மகன்.. அவனை சத்தம் போட்டுக் கொண்டு இருந்தாரே..

அவர் தொளதொளவென்று கருப்பு பேண்ட் போட்டிருந்தார். முழுக்கை சட்டை அணிந்தவர். இவர் வெள்ளை வேட்டி கட்டி இருக்கிறார். கை வைத்த பனியன். அவர் இவராக இருக்க மாட்டார் என்று அசசாபிச்சமாக மனம் வழக்கம்போல் தப்புக் கணக்கு போடுகிறது. ஜிப்பா இல்லாவிட்டாலும் பாட்டுக்காரர் தான். இல்லையோ?

சரி, கவனமாகத் தவிர்த்து விட வேண்டியதுதான். நேர்ப் பார்வையில் பார்த்தபடி ஓட்டத்தை ஆரம்பிக்க டிரவுசர் அபாயகரமாக கீழே இறங்குகிறது.

‘எங்கேடா போறே இப்படி மூச்சிறைக்க ஓடிண்டு? பெல்ட் என்னாச்சு’

நெடியவர் கேட்கவில்லை. பக்கத்தில் வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு குற்றாலத் துண்டைத் தோளில் போட்டபடி நிற்கிறவர் கேட்கிறார். அவர் ஆசுவாசம் தரும் பிம்பம். நெடியவர் மாதிரி மிரட்டல் பேர்வழி இல்லை.

‘லைப்ரரிக்கு போறேன் மாமா’ என்று சொல்லும்போதே நெடியவர் முறைக்கிற மாதிரி இருக்கிறதால் மாமா சார் என்று அதை அபத்தமாக முடிக்கிறேன்.

’ஓடாதே, நாய் கிடக்கு. பிடுங்கினா வயத்தைச் சுத்தி இருபது ஊசி போட்டுக்க வேண்டி வரும். உங்கப்பா வேறே ஊரிலே இல்லை. எக்ஸாம் டைம்’

நெடியவர் கரிசனமும் கடுமையுமாகச் சொல்கிறார். ரெண்டாவது நானாக அவர் முகபாவத்தை வைத்துக் கற்பனை செய்து கொண்டது. என் வீட்டு நிலைமை இவருக்கு எப்படித் தெரிந்தது? வயிற்றில் ஊசி போட்டால் குடல் வெளிவருமா?

எதுக்கு வம்பு? தெருக்கோடி வரை கொஞ்சம் மெதுவாக நடந்து அவர் பார்வையில் இருந்து விலகியதும் திரும்ப ஒரே ஓட்டம். விளைவு, பத்து பைசா வோடு சர்க்கார் தண்டனை அடுத்த நாள் கிடைக்கவில்லை என்று நினைவு.

கோகலே ஹால் லைப்ரரிக்கு அப்புறம் சைக்கிளில், லாம்ப்ரட்டா ஸ்கூட்டரில் போனேன். எடுத்து வந்த புத்தகங்களும் உயர்தரம். ந.பிச்சமூர்த்தி- காட்டு வாத்து, சுந்தர ராமசாமி- பிரசாதம், ராகுல் சங்கிருத்யான்- வால்கா முதல் கங்கை வரை, சார்லஸ் டிக்கன்ஸ் நாவலகள், டிலான் தாமஸ் கவிதைத் தொகுப்பு இத்யாதி. நான் வளர்கிறேனே…

எனக்கு இலக்கியம் தெரிந்தபோது மணிரங்கபுரம் நெடியவரையும் யாரென்று அறிந்து கொண்டேன். என் அன்புக்கும் மதிப்புக்கும் உரிய ஆர்விகே சார்!

கறார், கண்டிப்பு, கலகலப்பு என்று சம விகிதத்தில் கலந்து வங்கி கணக்கு முடித்து புதுக் கணக்கு ஆரம்பிக்கிறது போல் மார்ச் 31-ல் எண்பது வருடம் முந்தி 1933-ல் பிறந்தவர் நம் ஆர்விகே சார். அதான் எனக்குத் தெரியுமே!

அவருடைய சிவிகுல பரம்பரையை ஃபெவிகுலமாக கோந்து போட்டுக் கண்ணி கண்ணியாக ஒட்டியது கர்னாடக சங்கீதம். ஆர்விகே நல்ல பாடகர். இசை ரசிகர். அதுவும் தான் எனக்குத் தெரியுமே.

அப்புறம், பாரபட்சம் காட்டாத இசை விமர்சகர். மேல்படியில் இருப்பதாக நினைத்து மமதையோடு கானடாவில் மிடுக்காக ஆரம்பித்தால், அடாணாவால் அடக்கி கீழ்ப்படிக்கு உருட்டி விடக் கூடிய சங்கீத நேர்மை. முந்தைய பாராவில் வந்த பேங்கு மேனேஜர் விழுந்தார். அறிந்தார். விழாமலேயே அறிவேன் நானும்!

லைப்ரரி போக ஆரம்பித்த காலத்தில் ஆர்விகே சாரின் அப்பா திரு.ஜே.ரங்கசாமி ஐயரைப் பார்த்திருக்கிறேன். ஆர்விகே சாரை விட மிடுக்காக நடப்பார். சும்மாவா? அவரும் நல்லாசிரியர். சாரணர் படைத் தலைவர். சங்கீத நிபுணர். தேசபக்தரும் சிவகங்கையின் முதல் சிறுகதை எழுத்தாளருமான கவியோகி சுத்தானந்த பாரதியின் இளைய சகோதரர். அது கூடத்தான் எனக்குத் தெரியுமே.

சிவகங்கை மன்னர் சண்முகராஜாவுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்து ஹோம் ஒர்க் செய்ய வைத்த ராஜகுரு. ராஜா என்றால் ஹோம் ஒர்க் செய்யக் கூடாதா? செய்யாது வந்தால் பெஞ்சில் ஏறி நிற்கக் கூடாதா? அது எனக்குத் தெரியாது.

ஆர்விகே சாரின் அப்பா, திலகருக்கு நண்பர். வ.உ.சி சுதேசி கப்பல் கம்பெனி ஆரம்பித்தபோது சிவகங்கையில் கம்பெனி ஷேர் விற்க உதவியர். வ.உ.சியும் கவியரசர் சுப்பிரமணிய பாரதியாரும் சிவகங்கையில் அவருடைய விருந்தாளிகளாகத் தங்கியிருக்கிறார்கள். காந்தி மகான் கூட. இதுவும் எனக்குத் தெரியுமே.

ஆர்விகே சார் அரசர் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர். ஒக்கூர் சோமசுந்தரம் செட்டியார் உயர்நிலைப் பள்ளி முதல் தலைமை ஆசிரியர். சோழபுரம் சுத்தாநந்த பாரதியார் பள்ளி முதல் தலைமை ஆசிரியர். சென்னை டி.எல்.பதி அண்ட் கோவில் டைப்பிஸ்டாக 1955-ல் உத்தியோக வாழ்க்கையை ஆரம்பித்தவர் ரெண்டே மாதத்தில் ரெமிங்க்டன், ஹால்டா தட்டெழுத்து இயந்திர உலகில் இருந்து பிய்த்துக்கொண்டு வெளியேறி புத்தகம், நோட்டு, கரும்பலகை, சாக்பீஸ், டஸ்டர் உலக வாடை கவர்ந்திழுக்க அங்கே வந்தவர். அதுகூடத் தெரியுமே.

வந்தவர் வெளியேறவே விருப்பப்படவில்லை. நல்லா வேணும். அவர் அப்படி வந்து சந்தோஷமாக மாட்டிக் கொள்ளவில்லை என்றால் இரண்டு தலைமுறை சிவகங்கை, சுற்று வட்டாரம் கல்விக் கண் திறக்கப்பட்டு இன்று உலகம் முழுதும் நல்ல நிலையில் இருக்காது. நான் உள்பட. அதான் என் மனசுக்குத் தெரியுமே.

பின் என்ன தெரியாது?

முன்னால் குறிப்பிட்ட புண்ணாக்கு சீனுவாசனை ஏன் அடித்தார் ஆர்விகே?

இதை போன மாதம் எழுதியிருந்தால் இன்னும் தெரியவில்லை என்று முடித்திருப்பேன். இப்போது க்ளைமேக்ஸ் சேஞ்ச். தமிழ் சினிமாத் துறையில் வழக்கமாக நடக்கிறதுபோல் ஹீரோ மூக்கை நுழைக்காமலேயே.

ரெண்டு வாரம் முன்பு தற்செயலாக சென்னை இண்டர்நேஷனல் விமான நிலையத்தில் புண்ணாக்கு சீனுவாசனைப் பார்த்தேன். மாட்டுத் தீவனம் உலக அளவில் விற்கிற தொழிலதிபர். நுனி நாக்கு இங்க்லீஷ், கப்பல் மாதிரி பி.எம்.டபிள்யு கார். லண்டனுக்கு மிக அருகே க்ராய்டனில் வீடு கட்டி இருக்கிறான். லுப்தான்ஸாவின் ப்ராங்க்பர்ட் போகிறான்.

நீ எங்கேடா போறே என்று விசாரித்தான்.

டிம்பக்டூ என்றதும் ஜோக்கைக் கேட்டதுபோல் சிரித்தான். ’நிஜமாகவே இருக்குடா, ஜியாக்ரபியிலே சொல்லிக் கொடுத்திருப்பாரே ஆர்விகே சார்’ என்றேன்.

சட்டென்று நினைவு வரக் கேட்டேன்.

‘ஏண்டா ஆர்விகே சார் உன்னை அடிச்சார்?’

‘அதுவா? போர்டுலே தினசரி திருக்குறள் எழுதணும் இல்லே அப்ப எல்லாம்? அறத்தான் வருவதே இன்பம்னு ஆரம்பிக்கற குறள். ஆர்விகே கிளாஸ்லே நுழைஞ்சு சத்தமாக போர்டைப் பார்த்துப் படிச்சார் ‘அத்தான் வருவதே இன்பம்’

படுபாவி, ‘ற’வை விட்டுவிட்டு எழுதியிருக்கிறான்!

ஆக அதுவும் தெரியும் இப்போது.

ஆனாலும் தமிழ் சினிமாவிலும், இலக்கியத்திலும், உறவிலும் இந்த ‘அத்தான்’ ஏன் காணாமல் போனார் என்று தான் தெரியவில்லை.

(இரா.முருகன் மார்ச் 2013)
Like · · Promote · Sha

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன