வரலாற்றை எளிமையாக்க அதைப் பெரும்பாலும் இல்லாமல் செய்தல்

வாழ்ந்து போதீரே -அரசூர் நான்கு நாவல் வரிசையில் நாலாவது = அடுத்த சிறு பகுதி அதிலிருந்து

==================================================================================

 

மேல்சாந்தி மகாராஜா இங்கே வந்து ச்ரொதிகளை மரியாதை செஞ்சுட்டுப் போனதாக பெரியவங்க சொல்லி இருக்காங்க.

 

சிஷ்யன் தன்னை முக்கியமானவனாகக் காட்டிக் கொள்ளும் ஆவலில் கைகட்டிக் கம்பீரமாக நிற்க முயற்சி செய்தபடி சொல்ல, தியாகராஜன் எகிறினார் –

 

ஓய், மேல்சாந்தி ஒரு புரோகிதர். அம்புட்டுத்தான். மகாராஜா எல்லாம் இல்லை. அம்பலப்புழை ஒரு காலத்திலே செம்பகச்சேரி மகாராஜா ஆட்சியிலே இருந்தது. அது அப்புறம் திருவாங்கூர் மகாராஜா கிட்டே போனது

 

சொன்ன வரைக்கும் தப்பு எதுவும் இல்லை என்று தியாகராஜ சாஸ்திரிக்குத் தெரியும். அந்த நேருவுக்கு ப்ரீதியான ஒரு வரலாற்று ஆசிரியன் எழுதியது தான் அவருக்குப் படிக்கக் கிடைத்திருந்தது. போகிறது, நம்பித்தான் ஆகணும்.

 

அப்படி இல்லை.

 

சிஷ்யை வீணை வாசிக்க உட்கார்ந்தது போல் பாய் போட்டு சபை நிறைந்து அமர்ந்திருந்தாள். அவள் பார்வைக்கு ரொம்ப அழகாக இருந்தாள். இப்படியான பெண்கள் பெரிய குடும்பத்தை நிர்வாகம் செய்கிறவர்களாக, கலெக்டர் போன்ற பெரும் பதவிகளில் மலேரியா ஒழிக்கும் தீவிரத்தோடு ஜீப்பில் சதா பயணப்படுகிறவர்களாக இருப்பார்கள் என்று இங்கே படிக்கக் கிடைத்த பத்திரிகைச் செய்திகளிலும், இந்த இரண்டு மாதத்தில் நாலு மலையாள, இந்தி சினிமாக்களிலும் பார்க்கக் கிடைத்ததன் அடிப்படையிலும் முசாபர் நினைத்தான், மின்சார விசிறி கூட இல்லாத கட்டடத்தில் அந்தப் பெண் வியர்ப்பின் சுவடே இல்லாமல் இருந்ததை அவன் கவனிக்கத் தவறவில்லை.

 

மேல்சாந்தி உலக ஷேமத்துக்காக, சாந்தியும் சந்துஷ்டியும் நிலவப் பகவானை அனுதினம் பிரார்த்திக்கிற சாது ஜீவன். மகாராஜா செய்ய வேண்டிய இந்தக் கடமைகளை அவர் நிறைவேற்றுவதால் ராஜா போல தான். அதுக்கும் மேல்.

 

அவள் வேற்று மொழியில் பாட்டு மாதிரிச் சொல்லி நிறுத்தாமல் போய்க் கொண்டிருக்க, தியாகராஜ சாஸ்திரி வெளியே நடந்தார். கொச்சு தெரிசா அந்தப் பெண் நிறுத்தும் வரை காத்திருந்து பொதுவாக நமஸ்காரம் சொல்லி வெளியே வந்தாள்.

 

உன் வம்சம் பற்றி இந்தக் குடும்ப மரங்கள் சொல்வதை விட நிறைய உண்டு. சோழிகள் அதில் கொஞ்சம் தான் சொல்லும். அரசூரில் கதாபிரசங்கக் காரருக்கு ஒருவேளை அதற்கு மேலேயும் தெரிந்திருக்கலாம். அல்லது அங்கே இதெல்லாம் அறிந்த வேறு யாராவது பழக்கமாகலாம். அது சின்ன ஊர்தான்.

 

சோழி உருட்டிப் பார்த்த மேல்சாந்தி மனைவி இப்படிச் சொல்லி இருந்தாள். அவள் நாசுக்காகக் குறிப்பிட்ட, நான்கு தலைமுறைக்கு முந்தி ஆவி போகம் அனுபவித்த அரசூர்க்காரனைப் பற்றிய செய்தி போன்ற எதையும் செம்புத் தண்ணீர்க் குரலும், சிஷ்யகோடிகளும், இல்லாத வீணை வாசிக்கும் சிஷ்யையும் தருவார்கள் என்று கொச்சு தெரிசாவுக்குத் தோன்றவில்லை.

 

சைக்கிள் ஓட்டி விழுந்து எழுந்து வந்த சிநேகிதமான புரோகிதர் மூலம் ஏதும் கிடைக்குமானால் சரி, இல்லாவிட்டால் வந்த படிக்கு ஊரைப் பார்த்து விட்டு மதுரைக்குப் போவாள் கொச்சு தெரிசா. அவளுடைய வேர்களோடு தொடர்பு உடைய ஊர் அல்லவா அரசூர்.

 

அரசூர் மட்டுமில்லை, இந்தப் பூமி முழுவதுமே அவளோடு சம்பந்தப்பட்டது தான்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன