கும்பளங்காய் மகாத்மியம் நூலைத் தேடி எடுத்தவரே எழுதியவருமாவார்

வாழ்ந்து போதீரே = அரசூர் நாவல் வரிசை நான்கில் நான்காவது. அதிலிருந்து அடுத்த சிறு பகுதி

 

நாலைந்து பித்தளைத் தாம்பாளங்களை ஒருசேர உயர்த்திப் பிடித்து செப்புக் கரண்டிகளால் தட்டி ஒலி எழுப்ப, நாளைக்கு நேரத்துக்கு வரணும் என்று சொல்லி சிஷ்யர்கள் சும்மா வேடிக்கை பார்க்க வந்த வெளியூர் டூரிஸ்டுகளை வெளியே அனுப்பினார்கள். குண்டுராயர் ஓட்டலில் சாப்பாடு நன்றாக இருக்கும் என்ற தகவலும் அவர்களிடம் சொல்லப்பட்டது. ஓட்டல் உரிமையாளார் அதற்காக மாதாமாதம் தனியாக ஒரு தொகையை உபகாணிக்கையாக அவர்களுக்குத் தருவது தர்ம காரியமாகத் தினசரிக் கதையில் சொல்லப்படுவதைத் தியாகராஜன் அறிவார்.

 

நொடி நேரம் பிரார்த்தனையில் இருந்த கொச்சு தெரிசா கண் திறந்து பார்க்க, சிஷ்யகோடிகளிடம் ஏதோ சொன்ன தியாகராஜன் வெளியே பார்த்து முசாபரையும் உள்ளே வரச்சொல்லிக் கைகாட்டினார்.

 

படமாக மாட்டியிருந்த தெய்வங்களோடு கடைசி வரிசையில் வைத்திருந்த நேரு, காந்தி படங்களை சிஷ்யை அகற்றி அவற்றை அரிசிக் காணிக்கைப் பானைக்குள் வைத்ததை சாஸ்திரிகள் திருப்தியோடு பார்த்தார்

 

கொச்சு தெரிசா பொதுவாக நோக்கிச் சொன்னாள் –

 

நான் என் குடும்ப வேர்களைத் தேடி அம்பலப்புழை போனேன். அங்கே அம்பலத்துலே மேல்சாந்தி உண்டு. அவரோட மனைவி என் கிட்டே இருந்த தகவல்களைப் பார்த்து, என்னை அரசூர் போ, இன்னும் நிறையத் தகவல் கிட்டும்னு சொன்னாங்க. அம்பலப்புழையிலே ஏதோ சர்க்கார் மகாநாடு நடக்கறதாம். மினிஸ்டர்கள் எல்லாம் வர்றதாலே அங்கே எதிரி நாட்டுக் காரங்க யாரும் தங்கக் கூடாதாம். இன்னும் ஒரு வாரத்துக்கு இங்கே வராதேன்னு எங்களைத் துரத்தி விட்டுட்டாங்க

 

சிஷ்யர் பட்டாளம் எல்லா விதமாகவும் பரிதாபத்தையும் பச்சாதாபத்தையும் வெளிப்படுத்த, தியாகராஜன் கொச்சு தெரிசாவைக் கேட்டார் –

 

நீங்க இங்கிலாந்திலே இருந்துதானே வர்றீங்க. அது எதிரி தேசம்ன்னு கோட்டுலே ரோஜாப்பூ செருகிண்ட கபோதி சொல்லிட்டானா என்ன?

 

ரோஜாப்பூ சூடியவர்களை எனக்குத் தெரியாது, போகச் சொன்னவர்களைத்தான் தெரியும். என் புருஷன் பாகிஸ்தானில் இருந்து குடியேறிய குடும்பத்தில் வந்தவன். அவன் ஒரு வேளை எதிரியாக இருக்கலாம்.

 

முசாபர் மேலே பெரிதாக வழிந்த ஜிப்பாவில் கை விட்டு ஒரு பத்து பவுண்ட் கரன்சி நோட்டை எடுத்துக் காணிக்கை வட்டிலில் வைத்துக் குனிந்து சலாம் செய்தான்.

 

என் தரப்பில் இருந்து இந்தச் சிறு காணிக்கையை எடுத்துக் கொள்ளுங்கள்.

 

அவன்  நேர்த்தியான ஆங்கிலத்தில் சொன்னதை அங்கே எல்லோரும் பிரியத்தோடு அங்கீகரித்தார்கள். மற்ற எல்லாவற்றையும் விட இந்த மிலேச்ச பாஷை இங்கே சகலரையும் சேர்த்து வைக்க வல்லமை படைத்தது என்று மனதில் தோன்றியதை வலுக்கட்டாயமாகச் சொல்லாமல் மறைத்துப் புன்னகை பூத்தான் முசாபர். அவனுடைய அத்தர் வாசம் எங்கும் நிறைந்தது.

 

உள்ளே இருந்து வந்த ஒரு சிஷ்யன் ஏதோ புத்தகத்தின் பிரதிகளை கொச்சு தெரிசாவிடமும் முசாபரிடமும் கொடுத்தான்.

 

கும்பளங்காய் மகாத்மியம்னு உன்னத நூல். சிரௌதிகள் எழுதியதை அமெரிக்காவிலே ஒரு ப்ரபசர் இங்கிலீஷ் பண்ணினது.

 

அவன் விளக்க, தியாகராஜன், அந்தப் புத்தகம் இருநூறு வருஷம் முந்தி எழுதின நகைச்சுவைப் பாட்டு ஆச்சே. சிரௌதிகள் எங்கே இதிலே வந்தார் என்று விசாரித்தார்.

 

பழைய புத்தகமாகவே இருக்கட்டும். அண்ணா அதை ஏடு தேடி எடுத்துச் செப்பம் பண்ணி புஸ்தகமாக்கினதாலே அது அவர் எழுதியது தான்

 

அந்த சிஷ்யன் மூக்கு விடைக்கச் சொல்லி தியாகராஜனைத் துச்சமாகப் பார்த்தான். இந்த மனுஷன் இங்கே ஏன் வந்து எழவு கூட்டுகிறான் என்று அதற்கு அர்த்தம் என்று தியாகராஜனுக்குத் தெரியும்.

 

மேல்சாந்தி மகாராஜா இங்கே வந்து ச்ரொதிகளை மரியாதை செஞ்சுட்டுப் போனதாக பெரியவங்க சொல்லி இருக்காங்க.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன