Nappinnai and the God who is a transgenderநப்பின்னையும் அலியாகி நின்ற இறைவனும் (நாயுடுவும் உண்டு)


திருப்பாவை -18

உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்,
நந்தகோ பாலன் மருமகளே! நப்பின்னாய்!
கந்தம் கமழும் குழலீ! கடைதிறவாய்;
வந்தெங்கும் கோழி அழைத்தனகாண்; மாதவிப்
பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்;
பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர்பாட,
செந்தா மரைக்கையால் சீரார் வளையொலிப்ப
வந்து திறவாய், மகிழ்ந்தேலோ ரெம்பாவாய். 18

திருவெம்பாவை – 18

அண்ணா மலையான் அடிக்கமலஞ் சென்றிறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தொகைவீ றற்றாற் போல்
கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத்
தண்ணார் ஒளிமழுங்கித் தாரகைகள் தாமகலப்
பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளிசேர்
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக்
கண்ணா ரமுதமுமாய் நின்றான் கழல்பாடிப்
பெண்ணே இப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய். 18

//

உடையவர் உகந்த திருப்பாவை இது. இந்த ஒற்றைச் சிறப்பே போதும். ராமானுஜர் இந்தப் பாடலைப் பாடி வரும்போது தான் சிறுமி அத்துழாயின் காலில் விழுந்து சேவித்தார் என்கிறது வைணவ வரலாறு.

//இப்பாட்டு எம்பெருமானார்விசேஷித்து உகந்தருளின் பாட்டு என்று நம் முதலிகள் மிகவும் ஆதரித்துப்போருவராம். அவ்வரலாறு வருமாறு:- எம்பெருமானார்திருப்பாவை அநுஸந்தாநத்துடன் மாதுகரத்திற்கெழுந்தருளுகிற அடைவில், ஒருநாள் பெரியநம்பி திருமாளிகைக்கு எழுந்தருள அப்போது திருக்காப்பு சேர்ந்திருக்கையாலே, அநுஸந்தாநத்தைக் கேட்டு அத்துழாய் திருக்காப்பு நீக்கியருள, எம்பெருமானார்அவளைக் கண்டவாறே மூர்ச்சித்துவிழ, அத்துழாய் பெரியநம்பி பக்கலிற் சென்று, “ஐயா! கதவைத் திறந்து சென்றேன்’ என்னைக் கண்டவுடனே ஜீயர்மூர்ச்சித்து விழுந்தார்” என்ன’ நம்பி ஸர்வஜ்ஞாராகையாலே “உந்து மதகளிறு அநுஸந்தாநமா யிருக்கவடுக்கும்” என்றருளிச் செய்ய, அதனைக்கேட்ட அத்துழாய் ‘ஆவதென்? என்ன’ “செந்தாமரைக்கையால் சீரார்வளை யொலிப்ப வந்து திறவாய், என்று அநுஸந்தியா நிற்க நீ திறந்தவாறே அவ்வாறே உன்னைக் கண்டு ‘நப்பின்னையை ஸேவிக்கப்பெற்றேன்’ என்று மூர்த்தித்தாராக வேணும்” என்று நம்பி அருளிச்செய்தார். ஆகையாலே இப்பாட்டு எம்பெருமானாருகந்ததென்று நம்முதலிகள் ஆதரிப்பாரென்//

பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சார்யார் உரை.
நன்றி http://dravidaveda.org/index.php?option=com_content&view=article&id=759&ml=1

1) நப்பின்னை யார்? கண்ணனின் துணைவி? தமிழ் வைணவத்தில் நப்பின்னைக்கு என்ன இடம் கொடுத்து மரியாதை செய்யப்படுகிறது? வட இந்திய, மற்ற பிரதேசத்து வைணவத்தில் இவர் உண்டா?

2) உன் மைத்துனன் – உன் கணவன். இந்தப் பிரயோகம் வேறு இலக்கிய ஆக்கங்களில் உண்டா? (மைதுனத்தால் மைத்துனனா? அப்போ, இன்றைய பிரயோகம் தவறானதல்லவா?)

3) விடிகாலையில் எத்தைக்காக நப்பின்னை பந்தார் விரலி (விளையாட்டுப் பந்தைக் கையில் வைத்தபடி) யாக இருந்தாள் என்று கேட்க நினைத்தேன். பிரதிவாதி பயங்கரம் அருமையாக விளக்கியிருக்கிறார் இத்தை – மேற்சொன்ன சுட்டியில்.

3) மணிவாசகர் பட்டியலாக இறைவனின் திருக்குணங்களை அடுக்கும் எந்தப் பாவைப்பாடலும் சிறக்காமல் போனதில்லை. இதுவும் தான்.

பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளிசேர்
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக்
கண்ணா ரமுதமாய் நின்றான்//

ஆரமுது மட்டுமில்லை, transgender-ம் வந்த பாடல் இது. இறைவன் ‘பெண்ணாகி ஆணாய் அலியாய்’ இருப்பவன். அந்தக் காலத்தில் transgender-களை இகழ்ந்தாரில்லை என்றும் அவர்களையும் இயல்பாக சமுதாயம் ஏற்றுக் கொண்டது என்றும் கொஞ்சம் நீட்டிப் பொருள் கொள்ளலாமா?

******************************************

நாயுடு சாயந்திரப் பேப்பர் படித்து உணர்ச்சி வசப்பட்டு விட்டாராம்.

நாயுடு மெஸ் – 23

ரேப்பு எவனாச்சும் கேப்மாரி ரேப்புசெஞ்சா
பேப்பய ஆள்காலி ஜேஜேன்னு டேப்படிப்பா
ஒட்ட நறுக்கி உருப்படாம போகவைக்க
சட்டம் உடனே வருது

ரேப்பு – தெலுங்கில் நாளைக்கு. டேப்படிப்பா – தாளம் கொட்டிப் பாடு

***************************

புலவரே உம் பாட்டில் பிழை இருக்கிறது.

இருந்தால் என்ன? எவ்வளவு பிழை இருக்கிறதோ அவ்வளவு குறைத்துக் கொண்டு பரிசைக் கொடுங்கள்.

இதுவரை ஆயிரம் தடவையாவது கேட்டிருப்பேன். சிரித்திருப்பேன்.

இப்போது ஆயிரத்தி ஒண்ணு.

நாகேஷை எப்படி மறக்க முடியும்?

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன