shooting the messengerஎன்னைக் கோபித்து என்ன பயன்?

இந்தச் சந்தம் இணையத்தில் சுழல் அஞ்சலாகச் சுற்றி வருகிறது

தத்தோம் தகிதோம் ததிகிட தித்தோம் திகிதோம்

வாய்விட்டுப் பாடினால் வந்த பாட்டு …எந்தமிழ்.. எம்மக்கள்..

வந்தோம் வளர்ந்தோம் வளம்பெருக நின்றோம் நிலைத்தோம்
தந்தோம் எந்தம் தலைமுறையை தாய்க்குலத்தை மகவையெலாம்
எந்தோள் எரியும்வரை காத்தோம் எம்தேயம் வென்றோம்
எரித்தாலும் எம்மண்ணில் புதைத்தாலும் எக்களித்தோம் இன்றல்ல
என்றேனும் ஒருநாள் எதிர்வருவோம் பெரும்படையாய்த் தமிழ்.

*****************************

தொலைக்காட்சி தமிழன் விருது (இலக்கியம்) பரிந்துரைக்கக் கோரிப் படிவம் அனுப்பியிருந்தார்கள். பிரித்ததும் தான் தெரிந்தது இதை இணையத்திலேயே அவர்களின் இணையத் தளத்தில் செய்து விடலாம் என்று

பரிந்துரைக்கப்படுகிறவரின் பிறந்த தேதி, உத்தியோகம்,விலாசம், தொலைபேசி எண் எல்லாம் எனக்குத் தெரிந்திருக்க வேண்டும் என்று என்ன கட்டாயம்? இதை எல்லாம் தெரிந்து வைத்துக் கொண்டா கதையும் கவிதையும் படிக்க உட்கார்கிறோம்? அதெல்லாம் தராமல் கர்சர் நகர மாட்டேன் என்று அடம் பிடித்தது.

நல்ல வேளை எனக்கு நான் பரிந்துரைத்தவரின் தொலைபேசி எண் தெரியும்.விலாசம் உத்தேசமாகத் திருவல்லிக்கேணி என்றும் தெரியும். பிறந்த தேதியும் இணையத் தகவலாகத் தெரியும்.

விண்ணப்பப் படிவத்தில், பிரமுகர் பிறந்த தேதி கட்டத்திற்குப் போனேன். வருடத்தைத் தேர்வு செய்ய டிராப் டவுண் லிஸ்ட் வசதி உண்டு. ஒரே இடைஞ்சல், அது 2002 ஆண்டில் தான் ஆரம்பிக்கிறது. தமிழின் உன்னதக் கதைஞர், கவிஞர்,, நாடக ஆசிரியர் யாராவது பத்து வயதுக்காரர் உங்களுக்குத் தெரிந்திருந்ந்தால் சொல்லுங்கள்.

அது கட்டாயமாகப் பூர்த்தி செய்ய வேண்டிய தகவல் என்று  தளம் அடம் பிடித்ததால் 1938 அக்டோபர் 7-ல் பிறந்த 74 வயது ஞானக்கூத்தன் சாருக்கு நிஜார் போட்டு 2002 அக்டோபர் 7-ல் பிறந்தவராக்கி படிவத்தைப் பூர்த்தி செய்து பதிவு செய்தேன்!! அவர் தேர்வானால், ஒரு பெட்டி காட்பரீஸ் சாக்லெட் தருவார்களோ?

சொல்லு எனக்கூறி செல்ஃபோனில் கேட்டது
நல்ல திநகரில் நானிருக்கும் இல்லமெங்கே
அன்பாய் அழைத்தேதான் அத்தனையும் கூறாமல்
என்னைக்கோ வித்தென் பயன்?

***********************

அட, எங்க மோதிலால் தெருவில் தான் சிதம்பர சுப்பிரமணியன் இருந்திருக்கார். அசோகமித்திரன் சார், நன்றி. எங்க தெருவிலே அவ்வப்போது இலக்கிய வாசனையும் இருக்கும்..

http://www.thehindu.com/arts/magazine/if-only-he-hadnt-been-so-sure-of-the-street/article4252722.ece

****************************

என் இளமைப் பருவம் டோனி க்ரெய்க், க்ளைவ் லாய்ட், ஆண்டீ ராபர்ட்ஸ், டென்னிஸ் லிலீ, குண்டப்பா விஸ்வநாத், சுனில் கவாஸ்கர் இவர்களால் ஆனது.

டோனி க்ரெய்க் இன்று பெவிலியனுக்குத் திரும்பி விட்டார். நித்திய ஓய்வு கொள்க டோனி.

**********************

நியூயார்க் சப்வேயில் இருந்து ஒரு இந்தியரைத் தள்ளி விட்டுக் கொன்றது அமெரிக்கப் பெண்ணாம். ‘எனக்கு இந்துக்களையும் முஸ்லீம்களையும் கண்டாலே பிடிக்காது.. அதான் இப்படிச் செய்தேன்’ – அவர் வாக்குமூலம்.

அப்புறம் வழக்கம்போல் ஆந்திராக்காரர் ஒருத்தர் மர்ம மரணம்.. ஆந்திரா அமெரிக்க செய்தியிலே வராம இருக்காதா?

*****************************

ஐ.நா அவைத்தலைவர் பங்கி மூன் அவர்கள் நம் பிரதமரிடம் ‘ இந்தியப் பெண்களைப் பாதுகாக்கவும்’ என்று கோரியிருக்கிறார். அவருக்கு நன்றி.

ராஜபக்‌ஷேயிடம் இதே போல் தமிழ்ப் பெண்டிரைப் பாதுகாக்கச் சொல்லியிருக்கலாம்.
http://www.guardian.co.uk/world/2012/dec/30/india-gang-rape-un-call-action

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன