தினை அல்லது சஞ்சீவனி நாவலில் மதுரைக்கு வந்த காந்தி

செவிமடுத்த அனைவரும் மெய் மறந்து நிற்க, கணீர் என்று சுவரம் உயர்ந்து எங்கும் பரவ, கூட்டத்தில் மூத்த விடுதலை வீரர்களெல்லாம் கை கூப்பி கண் மூடி கண்ணீருகுத்து நின்றார்கள்.

கர்ப்பூரம் அருமையான பாட்டுடா என்று இன்னொரு இளைஞன் சொல்ல ஏதோ சந்தேகம் வந்தது போல் கர்ப்பூரமய்யன் மேடைக்கு ஓட அவன் நண்பர்கள் பின்னாலேயே நடந்தார்கள். மேடையில் இறைவணக்கம், சற்று வித்தியாசமாக பாரதமாதா வந்தனையான வந்தேமாதாரம் முடிந்து கொண்டிருந்தது.

ஓராயிரம் பேரைக் குரலில் தேசபக்தி அளித்து இன்று ஒரு நாள் முழுக்க தேசம் பற்றிய சிந்தனைகளில் ஆழ்த்தும் அந்தப் பெண் யாரென்று அறிந்தபோது கர்ப்பூரமய்யனுக்கு ஆச்சரியமில்லை.

பாபுஜி. காந்தி காதில் டாக்டர் ராஜன் கிசுகிசுக்க, அவர் இரு கையும் வானத்தை நோக்கி உயர்த்தி ஹே ராம் என உரக்கச் சொன்னார். டாக்டர் கைகாட்ட, அந்தப் பெண் கதர்க்கொடி கப்பல் காணுதே விஸ்தாரமாகப் பாட, அனைவரும் மெய்மறந்தனர். அடுத்த பதினைந்து நிமிடத்தில் பாரத சமுதாயம் வாழ்கவே ஒலித்து கைதட்டலோடு ஓய்ந்தது.

காலை சந்திப்புகள் பாட்டு கொஞ்சம், பேச்சு கொஞ்சம் என்று கொஞ்சம் லேசாக இருப்பதாக காந்திஜியே சுட்டிக்காட்டினார். நான் இசை விரோதி இல்லை என்றாலும் கடவுள் வாழ்த்தை வந்தேமாதரம் பாடலாக்கி கிட்டத்தட்ட முக்கால் மணி நேரம் பாடியது நன்றாக இருந்தது என்றாலும் அந்த நேரத்தில் ஒரு முழுப் பஞ்சுக் கதிரை ராட்டையில் வைத்து நூற்றிருக்கலாம். நாம் இங்கே கூடியிருக்கும் மைதான ஓரத்தில் சிறுநீர் கழிக்கும் இடத்தில் தண்ணீரை அடித்து ஊற்றிச் சுத்தப்படுத்தியிருக்கலாம் என்றார் அவர் பேச்சுக்கு நடுவே.

பாபு இங்கே வருடக் கணக்காக தண்ணீர் கஷ்டம் என்று கூட்டத்தில் இருந்து யார்யாரோ எழுந்து சொல்ல, காந்தி ஆச்சரியப்பட்டு, வைகை நதி ஓடும் பூமி ஏன் தண்ணீர் கஷ்டம் என்று கேட்டார். மேடையில் ரெண்டு நிமிடம் கூட இருந்தவர்களிடம் பேசி சரி சுதந்திரம் வரட்டும், வைகையில் தண்ணீர் வரும் என்கிறார்கள் உங்கள் தோழர்கள். சீக்கிரம் சுதந்திரம் வரட்டும் என மேலே அழகாகத் தொடர்ந்தார்.

போனால் போகட்டும், அற்புதமான குரலில் நேர்த்தியாக வந்தேமாதரம் பாடிய இந்தக் கன்யகைக்கு கைத்தட்டல் மூலம் நன்றி சொல்வோம் என்றார் அடுத்து. தாமரை மலர்வது போல் கூட்டத்தில் நடுவில் இருந்து இருகை தலைக்கு மேல் வைத்து ஆண்டவனை வழிபடுவது போல் எழுந்தாள் அவள். கைத்தட்டு காதைப் பிளந்தது.

கர்ப்பூரமய்யனுக்கு ஏனோ அந்தப் பெண் பெற்ற பாராட்டு தனக்கே கிடைத்த மகிழ்ச்சி. ஆனால் அந்தப் பெண்ணின் பெயர் தெரியாமல் அவனுக்குத் துன்பமாக இருந்தது.

நீ அற்புதமாக வங்காளிப் பாடல் பாடினயே பிறப்பால் வங்காளியா என்று காந்தி கேட்டார். கும்பகோணத்துக்காரி வங்காளம் தெரியாது என்று காந்திக்கு பதில் கிட்டியது.

எல்லா மொழியும் எம்மொழி என்று நீங்கள் தமிழோடு பிற இந்திய மொழி ஒன்றாவது கற்றுக்கொள்க எனச் சொன்னார் அவர்.

சாப்பாடு நேரம் எல்லோரும் வரிசையில் நின்று இலையில் கட்டிய எலுமிச்சம் சாதம், தேங்காய்ச் சாதம், தயிர்சாதத்தை வாங்கி உண்ணலாம். பணம் படைத்தவர்கள் என்றால் அல்லது கட்டணம் கட்டி உணவு வாங்க ஆர்வமிருந்தால் ஒரு ரூபாய் ஒரு செட்டுக்குக் கொடுத்து தேசசேவை நிதியில் சேர்க்கலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன