நாவல் ‘தினை அல்லது சஞ்சீவனி’யில் இருந்து – பாடலிபுரத்துப் பெண்கள்

வைத்தியர் உள்ளே இருந்து வந்தார். ஆறடி உயரம், குச்சி போன்ற தேகம். நாற்பது வயது இருக்கலாம். முப்பத்தைந்தும் இருக்கக் கூடும். சந்தன முத்திரையும் கீழே குங்குமமுமாகக் கோவிலில் பூசை வைக்கிற சாயல் அவருக்கு. அவர் அசைவில் அவசரம் அகப்பட்டது.

ஐயா என்று குயிலியும் வானம்பாடியும் அழைத்தபோது அவர்களுக்கே யாசகத் தன்மை குரலில் ஏறியிருந்தது தெளிவாகத் தெரிந்தது.

யாரம்மா என்ன வேணும்? நடந்து கொண்டே கேட்டார்.

நாங்க வடக்கில் இருந்து வரோம் மூலிகை வைத்தியம் பார்க்கிற குடும்பம். நான் குயிலி. இவள் என் தங்கை வானம்பாடி.

பொறுமை இழந்து உதவியாளனைக் கூப்பிட்டார். இந்தப் பெண்களை ஏன் உள்ளே விட்டீர்? கோதுமை ஆட்பட்டு நின்றோர். இவர்களை நம் குழுவினில் புகுதலொட்டோம். வெளியே அனுப்புக. அயர்ந்து மறந்தால் மூலிகையைக் களவாடிப் போயிடுவார்கள் என்றார்.

பெரியவர் அப்படிப் பேசுவது பீடன்று உமக்கு. குயிலி சொன்னாள்.

சும்மா சுத்திப் பார்க்கற பொண்கள் என்னத்துக்கு உபயோகம்?

அவர் சொல்ல, குயிலி சொன்னது – நாங்கள் ரெண்டு பேரும் பசிப்பிணியும் சாவும் தவிர வேறு எல்லாப் பிணியும் தீர்க்கும் ஆயுர்வேதத்தில் சிறப்புத் தேர்வானவர்கள்.

நீங்கள் போகலாம்.

வாசலுக்குக் கொண்டு வந்து விட்டான் வைத்தியரின் மாணவன் ஒருவன்.

ஒன்றும் பேசாமல் திரும்பினார்கள் குயிலியும் வானம்பாடியும்.

அடுத்த மூன்று நாளும்-

குயிலி சொன்னது – நாங்கள் ரெண்டு பேரும் ஆயுர்வேதத்தில் சிறப்புத் தேர்வானவர்கள்.

நீங்கள் போகலாம்.

வாசலுக்குக் கொண்டு வந்து விட்டார் வைத்தியரின் மாணவன் ஒருவர்.

ஒன்றும் பேசாமல் திரும்பினார்கள் குயிலியும் வானம்பாடியும்.

நான்காம் நாள் குயிலி சொன்னது – நாங்கள் ரெண்டு பேரும் பாடலியில் ஆயுள் நீட்டிக்கச் செய்யும் ஆயுர்வேதத்தில் சிறப்புத் தேர்வானவர்கள்.

கேட்டுக்கொண்டிருந்த மருத்துவருக்கு முகத்தில் மலர்ச்சி. இந்த மாதிரி மாணவர்களைத்தான் தேடிக்கொண்டிருக்கிறார்.

ஆயுசு நீட்டிக்கும் மருந்து உருவாக்க, சோதிக்க விஷயம் தெரிந்த உப வைத்தியர்கள் வேண்டியுள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் எந்த மூலிகை எவ்வளவு, எப்படி என்று தெரிந்து ஆயுசு நீட்டிக்கும் மருந்து உருவாக்க, சோதிக்க விஷயம் தெரிந்த உப வைத்தியர்கள் வேண்டியுள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் எந்த மூலிகை எவ்வளவு, எப்படி எளிவாகத் தெரியும். சோதனை எலிகளைப் பிடிக்க இந்த மாதிரி எழிலான பெண்கள் அவசியம் தேவை.

பார்க்கலாம். ஊதியம் கூரையைத் தொடும் அளவு கேட்டால் கெஞ்சிக் கூத்தாடிக் குறைக்க வைக்கலாம். எல்லா மகிழ்ச்சியும் மேலெழும்ப அவர்களைப் பார்த்துக் கையசைத்து ஆசியருளினார்.

பாடலிபுத்திரம் பல்கலைக் கழகத்தில் தன்வந்திரி மருத்துவம் தேர்வானதற்கான சிறப்பு ஓலை இது. என் தங்கச்சியிடமும் ஒன்று உண்டு என்றபடி வடமொழி எழுத்துகளை உருட்டித் தொங்க விட்டு எழுதியிருந்த அந்த ஓலையை மருத்துவரிடம் கொடுத்தாள் குயிலி.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன