பப்பட வெட்டும் கொப்பியளவும் பாரதப் புழை தீரமும்

நினைவுகளின் ஊர்வலம்

பத்திரிகையாளரும், ஆஷியாநெட் தொலைக்காட்சி வைஸ் சேர்மனும் ஆன வி.கே. மாதவன் குட்டியின் ‘ஓர்மகளுடெ விருந்நு’ என்ற மலையாளச் சுயசரிதையை இரண்டாம் முறையாகப் படித்துக் கொண்டிருந்தேன்.

முதல் தடவை படித்தது, ‘கலாகௌமுதி’ பத்திரிகையில் பத்து வருடம் முன்னால் நம்பூத்ரியின் உயிரோட்டமுள்ள கோட்டுச் சித்திரங்களோடு இந்த வாழ்க்கை வரலாறு வெளியான நேரத்தில்.
அப்போது அந்தப் பத்திரிகையே ஓர் ஒளி வட்டத்தில் இருந்தது. கலாமண்டலம் கிருஷ்ணன் நாயர் வாழ்க்கை வரலாறு, அச்சுத மேனோனின் டயரிக் குறிப்புகள், மாதவிக் குட்டி (கமலாதாஸ் என்ற சுரையா)வின் ‘நீர் மாதளம் பூத்த காலம்’ என்று வரிசையாக அருமையான தொடர்களும், புரபசர் கிருஷ்ணன் நாயரின் ‘சாகித்ய வாரபலனும்’, ஒ.வி.விஜயனின் ‘பிரவாசகண்டெ வழி’ நாவலும் வெளிவந்த காலம் அது. பத்திரிகை ஆசிரியர் ஜனார்த்தனன் நாயரும் வாரபலன்காரரும் ‘மலையாள நாடு’க்குக் குடிபெயர, மற்ற இலக்கியத் தரமான எழுத்துக்களும் இல்லாமல் போய் தற்போது வெளிவரும் கலாகௌமுதி நம் தமிழ்ப் பத்திரிகைகள் பலவும் போலத்தான். போகட்டே.

மாதவன் குட்டி, சுயசரிதம் என்ற பெயரில் சுய தம்பட்டம் அடிக்காமல், அறுபது வருடம் முந்திய பாலக்காட்டுப் பக்க மலையாளக் கிராமத்தைக் கண்முன் கொண்டு வந்து நிறுத்தும் பதிவுகளின் தொகுதி ‘ஓர்மகளுடெ விருந்நு’ புத்தகம்.

புத்தகத்திலிருந்து –

பொழுது புலரும்போது ஆண்டிகளும் காக்கைகளோடு விழித்து எழுந்து கிராமத்திலும் அதன் அருகிலும் பிச்சை தேடுவார்கள். காவடிக் காலங்களில் அவர்கள் காவடி எடுப்பதால் வருமானம் கூடும். காவடி எடுத்தால் பழனிக்குப் போகவேண்டும். பழனிக்குப் போனாலும் போகாவிட்டாலும் காவடி எடுப்பார்கள் சிலர். பாவைக்கூத்து (பொம்மலாட்டம்) கலையில் தேர்ச்சி பெற்ற இரண்டு ஆண்டிகள் அங்கே உண்டு. அவர்கள் கம்பராமாயணக் கதைகள் சொல்வார்கள்.

மழை பொய்த்துப்போன வருடங்களில் ஆண்டிப் பெண்கள் வீடு வீடாகப் போய், மழைக்காகப் பிரார்த்தனை செய்வார்கள். கையில் ஒரு தீச்சட்டி இருக்கும். சட்டியின் கழுத்தில் பூமாலை சுற்றி இருக்கும். அந்தச் சட்டியை முற்றத்தில் வைத்து திருவாதிரைக்களி போல் அதைச் சுற்றி ஆடியபடியே பாடுவார்கள் :

“மானத்தே மகாதேவா, மழை பெய்தால் ஆகாதோ” என்று ஒருத்தி பாடுவாள்.

“கொப்பியாள..கொப்பியாள..” என்று மற்றவர்கள் இரண்டு கையும் கொட்டி இப்படியும் அப்படியுமாகச் சரிந்து ஆடுவார்கள்.

“மேலத் தெருவில் பெய்த மழை, கீழத் தெருவில் பெய்யாதோ” இன்னொருத்தி பாடுவாள்.

“கொப்பியாள..கொப்பியாள”…
*********
சின்னான் நாயர்களுக்கு மட்டுமே முடிவெட்டுவான். அவனுக்கு இரண்டு தம்பிகள். அவர்களில் கிருஷ்ணன், பட்டன்மாருடைய (பார்ப்பனர்கள்) நாவிதன். பாலன், ஈழவருக்கும் மற்ற தாழ்த்தப் பட்டவருக்கும் நாசுவம் செய்வான். இவர்களில் கிருஷ்ணனுக்கு வருமானம் குறைவு. சுற்றிப் பற்றி மொத்தமே மூன்று பட்டர் குடும்பங்கள் தான். உச்சிக் குடுமி வைத்து இருப்பார்கள் அங்கே. முகச் சவரமும் வாரம் ஒரு முறைதான். கிருஷ்ணன் முகச் சவரத்திற்கான கட்டணத்தை உயர்த்திப் பார்த்தான். பட்டர்கள் இரண்டு வாரத்துக்கு ஒரு தடவை சவரம் போதும் என்று வைத்து விட்டார்கள்.

கிராமத்தில் ஆட்களைப் பார்த்தால் அவர்களின் ஜாதியைச் சொல்லி விடலாம். நாயர்களுடைய தலை நன்றாக கிராப் செய்யப் பட்டிருக்கும். தாழ்த்தப் பட்டவர்களுக்குப் பப்பட வெட்டு தான் (அப்பளத்தைப் பரத்தியது போல தலையில் முடி வெட்டியிருக்கும்). சிலருக்கு எலி பிராண்டியது போல இருக்கும்.

ஒரு தடவை கிருஷ்ணனுக்குப் புத்தி பேதலித்துப் போனது. சாமிநாதய்யருடைய குடுமியைச் சீராக்குவதற்குப் பதில் அவருக்குப் பப்பட வெட்டு நடத்தி விட்டான். செய்து விட்டு, விசுவநாதய்யரைப் பார்த்துச் சிரித்தான். சுப்பாணிக்கு மொட்டையும் அடித்தான். அப்புறம் கிருஷ்ணன் கத்தியோடு வந்தாலே கிலிதான்.
********
ஆப்ரகாம் தபால்காரனாக கிராமத்துக்கு வந்தான். கிராமத்தில் முதல் கிறிஸ்துவன் அவன் தான். சுருட்டை முடியும், கனத்த புருவங்களும், கொஞ்சம் பூனைக் கண்ணுமாக வந்தவனைக் கிராமமே ஆர்வத்தோடு பார்த்தது. ஆப்ரகாம் தொட்டு எடுத்துக் கொடுத்த கடிதங்களை முதலில் நாயர்கள் கையில் வாங்கவில்லை. புரயத்தெ நாராயணன் நாயர், “இவன் தொட்டால் தீட்டில்லை” என்று சொல்லிய பிறகே அவர்கள் ஆப்ரகாம் கையிலிருந்து கடிதம் வாங்கினார்கள். நாராயணன் நாயர் கோட்டயத்தில் உத்தியோகம் பார்க்கும்போது அங்கே கிறிஸ்துவர்களோடு நாயர்கள் பழகுவதைப் பார்த்திருக்கிறாராம். என்றாலும் ஆப்ரகாம் வீட்டிற்குள் வர அவர்கள் அனுமதிக்கவில்லை. தண்ணீரோ சாயாவோ கொடுத்தாலும் தூக்கிக் குடிக்க வேண்டும். ஆனால் அப்புறம் குவளையைக் கவிழ்த்து வைத்துவிட்டுப் போக வேண்டாம் என்று ஒரு சலுகை மாத்திரம் உண்டு.

ஆப்ரகாம் கிராமத்துக்கு வந்து சிறிது காலத்தில் போஸ்ட் ஆபீஸ¤க்கு எதிரே ஒரு தோட்டம் விலைக்கு வாங்கினான். அங்கே சின்னதாக ஒரு வீடும் கட்டிக் கொண்டான். கப்பை பயிரிட்டான். அமோக விளைச்சல். ரப்பர் செடி வைத்தான். கோட்டயத்திலிருந்து திரேசம்மையைக் கல்யாணம் கட்டி வந்தான்.

தலமைத் தபால்காரனானான். அவனுக்குக் கீழே பணிபுரிய நியமிக்கப் பட்டவன் ஒரு நாயராக இருந்தான். கிராமத்தில் கிறிஸ்தவக் குடும்பங்களின் எண்ணிக்கை எட்டு ஆனது.

ஆப்ரகாம், அவரச்சன் என்று மரியாதையோடு விளிக்கப்பட்டு இறந்த காலத்தில் கிராமத்தில் கேரள காங்கிரஸ் தலையெடுத்திருக்கவில்லை.

(வி.கே.மாதவன் குட்டியின் “ஓர்மகளுடெ விருந்நு” – டி.சி.புக்ஸ், கோட்டயம் வெளியீடு)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன