நேர்காணல் – எம்.டி : மலையாள எழுத்தாளர்களும் விருதுகளும்

எம்.டி.வாசுதேவன் நாயரோடு ஒரு நேர்காணல்

எம்.டி.வாசுதேவன் நாயர். மலையாளிகளின் மனம் கவர்ந்த கதைக்காரர். நீட்டி முழக்கி அவர் பெயரை முழுமையாகச் சொல்லாமல் சும்மா, ‘எம்.டி’ என்று சுருக்கி அவர்கள் விளிப்பதில் அபிமானமும், ‘எங்க ஆளாக்கும்’ என்ற பெருமையும் புரியும்.  ஐம்பது வருடமாக நாவல், நாடகம், சிறுகதை என எழுதி மலையாள இலக்கியத்தில் முக்கிய ஆளுமையாகத் திகழ்கிறவர். திரைக்கதை என்ற கலை – இலக்கிய வடிவத்தில் இவர் அளவு தொடர்ந்து சாதனை நிகழ்த்தி வருகிறவர்கள் இல்லை. மத்திய, மாநில சாகித்ய அகாதமி, ஞானபீடம், இன்னும் மலையாள மண்ணின் முக்கியமான இலக்கிய விருதுகள் அனைத்தையும் பெற்ற இலக்கியவாதி. இத்தனை சிறப்போடு, மாத்ருபூமி என்ற பாரம்பரியம் மிக்க தினசரியின் ஆசிரியராக இருந்த ஆற்றல் மிக்க பத்திரிகையாளரும் கூட. எம்.டி என்ற ஆளுமையின் பன்முகப் பரிமாணம் பிரமிக்க வைக்கிற ஒன்று.

எம்.டி. அண்மையில் பாரதி விருது பெற சென்னை வந்திருந்தார். ‘தி.நகரில் இருக்கேன்’ என்று தொலைபேசியில் விலாசம் சொன்னபோது ஒரு அற்ப சந்தோஷம். எங்க பேட்டை ஆளாக்கும்! பொடிநடையாக எம்.டி இருந்த குப்புசாமி தெருவுக்குப் போய்ச் சேர்ந்தேன்.

அடுக்குமாடிக் கட்டிடம். அடுத்த வீட்டுக்காரர் பெயரே தெரியாத கான்கிரீட் காடுகளில் ஒன்று. அடுத்த மாநில எழுத்தாளரை இங்கே எத்தனை பேர் அறிந்திருப்பார்கள்?

வாசலில் மர ஸ்டூலில் ஆரோகணித்திருந்த காவல் தெய்வத்திடம் அடையாளங்களைக் குறிப்பிட்டு விலாவாரியாக விசாரிக்க ஆரம்பிக்கும் முன் ‘வாசுதேவன் நாயர் சாரா?’ என்று பளிச்சென்று கேட்டார் அவர். ஆச்சரியம் அடங்கும் முன், வாசலுக்கு வந்த ஓர் இளைஞரைக் காட்டி ‘இவங்க மாமனாரு தான்’ என்று குறு அறிமுகம் வேறே செய்து வைத்தார்.

நான் மலையாளத்தில் அந்த இளைஞரிடம் குலமுறை கிளர்த்தி, வந்த காரியத்தைத் தெரியப்படுத்தியபோது அவர் கொஞ்சம் மிரண்டார். ‘சார், நான் தமிழ்தான். வீட்டுலே அவங்க தான் மலையாளம்’ என்றார் சிரித்தபடி.

மடிக் கணினியைப் பிரித்து எடுத்து வைத்துக் கொண்டு அறையை நோட்டமிட்டேன். தமிழ் மத்தியதர வர்க்க வீட்டு வரவேற்பரை. இல்லை, இது வித்தியாசமானது என்று அடுத்த வினாடி புரிந்தது. திரை விலக, பலமாகக் கவிந்த பீடிப்புகையோடு, உள்ளே இருந்து மெல்ல நடந்து வந்தார் எம்.டி. நெடிய உருவம். டபிள் முண்டு (எட்டு முழ வேட்டி), ஸ்லாக் ஷர்ட், பட்டை ப்ரேம் மூக்குக்கண்ணாடி. கேரள அரசியல்வாதிகளையும், எழுத்தாளர்களையும் ஒரேபடிக்குச் சேர்த்து நான் மனதில் வைத்திருக்கும் ஒற்றை பிம்பத்துக்குக் கொஞ்சம் நெருங்கிய பெர்சனாலிடி.

எம்.டி பீடிக்கட்டை மேஜை மேல் வைத்தார். ‘அப்புறம்?’ என்று விசாரிக்கிற  பார்வை. நான் விட்ட இடத்திலிருந்து பேச்சை ஆரம்பிக்கிறது போல் சுபாவமாக ஆரம்பித்தேன். அந்த நேர்காணல் இதோ –

(எம்.டி எழுதிய முதல் நாவல் ‘நாலு கெட்டு’. இந்தியா சுதந்திரம் அடைந்ததற்கு முந்திய காலகட்டத்தில் கேரளத்தின் பசுமை கொழிக்கும் வள்ளுவநாட்டுப் பகுதியில் ஒரு பழைய நாலு கெட்டு மனையின் – நாலு பிரிவு கொண்ட வீடு –  நிகழும் கதை அது. வயதான நம்பூத்ரிக்கு வாழ்க்கைப்பட்டு அந்த நாலுகட்டு வீட்டில் வாழப் புகுந்த யசோதராவின் கதையைச் சொல்கிற நாவலில் அப்புண்ணி ஒரு முக்கிய கதாபாத்திரம். அப்புண்ணியின் பார்வையில்தான் கதை நகர்கிறது.)

  • நான்: எம்.டி.சார். முதல் கேள்வியை நான் கேட்கலே. மலையாள எழுத்தாளர் வி.கே.ஸ்ரீராமன் உங்கள் நாலுகெட்டு கதாநாயகி யசோதராவை பேட்டி கண்டு ‘வேரிட்ட காழ்ச்சகள்’ புத்தகத்தில் எழுதியிருக்கிறாரே, அதில் அவர் சொல்கிறார் -– ‘எம்.டியை சந்தித்தால் நான் கேட்க விரும்பும் கேள்வி என்ன என்றால், ஏன் நாலு கெட்டு நாவலில் யசோதரா பெயரை அப்படியே பயன்படுத்திக் கொண்டு உங்கள் பெயரை மட்டும் அப்புண்ணி என்று மாற்றிவிட்டீர்கள்’?

 

எம்.டி: அது உண்மையில்லை. அவர் எந்த யசோதராவை சந்தித்தார் என்று தெரியவில்லை. நாலு கெட்டு ஒரு நாவல். நான் பிறந்த வள்ளுவநாட்டுப் பிரதேசத்தின், என் வீட்டுச் சூழலின், என் இளமைப் பிராயத்தின் நினைவுகளைத் தொட்டுத் தொடர்ந்து செல்லும் புதினம். அதில் எல்லா பாத்திரமாகவும் நான் என்னை உணர்கிறேன். அப்புண்ணியும் நான் தான்.  யசோதராவும் நான் தான். மற்றவர்கள் எல்லாரும் கூட நான் தான். அவர்கள் யாருமே நான் இல்லை என்பதும் உண்மைதான். நிறையக் கற்பனையும் ஓர் இழை நிஜமும், இழை பிரித்து அறிய முடியாதபடி பின்னிப் பிணைந்த  அற்புத உலகம் இல்லையா கதையும் காவியமும்?

 

  • நான்: யசோதரா இத்தனை காலம் அந்தப் பழைய மனையில் தனியாக வசித்துவிட்டு இனியும் அதில் இருக்க முடியாத சிதிலமடைந்த நிலையில் வெளியே ஒரு சிறிய வீட்டுக்குக் குடிபெயர்ந்ததாக சில மாதங்கள் முன்னால் மாத்ருபூமி தினசரியில் செய்தி வந்திருந்ததே. படிச்சீங்களா சார்?

 

எம்.டி: அப்படியா? பார்த்த நினைவு இல்லையே. வந்திருந்தாலும் அது சரியான வார்த்தை இல்லை. யசோதரா என் மற்ற கதாபாத்திரங்களைப் போல் அந்தக் கதையில் மட்டும் உலவிப் போன ஒரு பெண்மணி. அவள் வயதான நம்பூதிரியை மணந்து இளம் பெண்ணாக அடி எடுத்து வைத்த வீட்டில் இத்தனை வருடம் தனியாக இருந்தாள், இடிந்து சிதிலமடைந்து இனியும் இருக்கத் தகுதியில்லை என்ற நிலை ஏற்பட்டதும் அந்தப் பழைய மனையை விட்டுக் குடி பெயர்ந்தாள் என்பதெல்லாம் எனக்கு சுவாரசியம் தரும் செய்திகள் இல்லை. நாலுகெட்டு கதாபாத்திரங்களை ஆழமாக நேசிக்கிறவர்கள் இன்னும்  இருப்பதாகவே நான் இதிலிருந்து புரிந்து கொள்கிறேன்.

  • நான் : மலையாள மொழியில் சிறுகதை, நாவல், நாடகம் என்று ஏகப்பட்ட விருதுகள் ஆண்டு தோறும் படைப்பாளிகளுக்கு அளிக்கப்படுகின்றன. யாராவது எழுத்தாளர் காலம் சென்றால் உடனே அவர் பெயரில் ஒரு நினைவுப் பரிசு ஏற்படுத்தப்பட்டு விடுவது சர்வ சாதாராணமாக நிகழும் ஒன்றாகும். ‘இனிமேல் எந்த மலையாள எழுத்தாளரும் ஒரு பரிசு கூட வாங்க முடியாமல் இறக்க முடியாது’ என்று கூட சமீபத்தில் ஒரு மலையாள விமர்சகர் நகைச்சுவையாகக் குறிப்பிட்டார். இலக்கியத்துக்கு அங்கீகாரம் வேண்டியதுதான். அதுக்காக இப்படியா?

 

எம்.டி: மலையாள மொழியில் சிறுகதை, நாவல், நாடகம் என்று ஏகப்பட்ட விருதுகள் ஆண்டு தோறும் படைப்பாளிகளுக்கு வழங்கப்படுகின்றன. நவீன இலக்கியத்துக்கான நிறைய விருதுகள் கேரளத்தில் இருக்கின்றன என்பது உண்மைதான். எழுத்தை ஊக்குவிக்க அங்கங்கே தனித்தும் குழுவாக அமைத்தும் செய்யப்படும் முயற்சிகள் இவை. ஒவ்வொரு விருதும் ஒவ்வொரு மாதிரி.

நானே மூன்று முறை கேரள சாகித்ய அகாதமி விருது வாங்கியிருக்கிறேன்.  ஆனாலும் ஒவ்வொரு விதமான இலக்கியப் படைப்பாக்கத்துக்காக என்பதை மகிழ்ச்சியோடு திரும்பிப் பார்க்கிறேன். பரிசு பெற்ற ‘நாலுகெட்டு’ நாவல். ‘சுவர்க்கம் துறக்குன்னு’ சிறுகதைத் தொகுப்பு. அதேபோல, இன்னொரு சாகித்ய அகாதமி பரிசு பெற்ற ‘ கோபுர நடையில்’, நான் எழுதிய நாடகம்.

இதில் நாலுகெட்டு எனக்கு விசேஷமானது. கிட்டத்தட்ட ஐம்பது வருடம் முன்னால் எழுதிய என் முதல் நாவல். முதல் படைப்புக்கு அங்கீகாரம் கிடைத்த ஆரம்ப எழுத்தாளனுக்கு ஏற்படும் மகிழ்ச்சிதான் எனக்கும் அப்போது.  அந்த விருது கிடைத்திருக்காவிட்டாலும் தொடர்ந்து எழுதிக் கொண்டே தான் இருந்திருப்பேன். மத்திய சாகித்ய அகாதமி, ஞானபீடம் என்று எல்லா விருதுகளையும் பற்றியும் என் நிலைபாடு இதுதான்.

விருதுக்காக எந்த எழுத்தாளரும் எழுதுவதும் இல்லை. எழுதப் போவதுமில்லை. ஆனால் நல்ல இலக்கியம் என்று இனம் கண்டு பாராட்டப்படும் போது ஏற்படும் மகிழ்ச்சி தனியானது. பொருளாதார ரீதியில் இல்லாமல் எழுத்தை இன்னொரு தளத்தில் கௌரவிக்கும் இம்மாதிரி முயற்சிகளை தாராளமாக வரவேற்கலாமே.

  • நான்: சாதாரணமாக எல்லா மொழியிலும் கவிதை எழுத ஆரம்பித்து உரைநடைக்குப் போகிறதுதான் சாதாரணமாக நடப்பது. ஆனால், நீங்கள் நேரடியாக உரைநடைக்கு வந்து விட்டீர்களே?

 

எம்.டி: அதென்ன அப்படிக் கேட்டுட்டீங்க? கவிதை எழுதாமல் உரைநடைக்குள் ரைட் ராயலாக நுழைந்த ஒரு எழுத்தாளன் உண்டா இந்த உலகத்தில்? நானும் கவிதை எழுதிப் பழகிவிட்டுத்தான் கதை சொல்ல வந்தவன். என்ன, கல்லூரியில் படிக்கும்போதே எனக்குள் இருந்த கவிஞன் விடைபெற்றுப் போய்விட்டான், அவ்வளவே.

 

(தொடரும்)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன