முன்கூட்டியே எழுதப்பட்ட ஆபிசுவரி

இது ஆபீசுவரி இல்லை. நாளது தேதிவரை மொத்தமே ரெண்டு ஆபிசுவரி தான் எழுதியிருக்கிறேன். முதலாவது, தோழர் ஈ.கே.நாயனாருக்கு. கண்ணூர் பய்யாம்பலம் மாயானத்திலிருந்து பெங்களூர் வந்து இறங்கியதும் மிச்சக் கண்ணீர் பார்வையை மறைக்க மாத்ருபூமி ஸ்டைல் இரங்கல் நடையில் எழுதியது. திண்ணைக்கு அனுப்பும் முன்பு ஒரு தடவை படித்தேன். ‘நல்லா வந்திருக்கு’ என்று மனம் நிறைய ஆனந்தம். ஆபிசுவரிக்கு இதைவிட அவமானம் கிடையாது. டெலிட் செய்துவிட்டு பய்யாம்பலம் பயணக் கட்டுரையாக்கி அனுப்பி வைத்தேன்.

 

ஆர்தர் சி கிளார்க் இறந்தபோது மனுஷ்யபுத்ரன் ஒரு சாயந்திரம் கூப்பிட்டு விடிகாலைக்குள் எழுதி அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொண்டார். அது என் கல்யாண வெள்ளிவிழா நாள். ராத்தூக்கம் விழித்து மாஞ்சுமாஞ்சு எழுதி – அதைவிட முக்கியமாக வெள்ளிவிழா ராத்திரியில் கொண்டாட வேறே என்ன இருக்கு?- அனுப்பி வைத்தேன். சொன்ன சொல் காப்பாற்றிய நிம்மதி தான் அப்போது. ஆபிசுவரிக்கு ஒத்து வராத உணர்வு இந்த நிம்மதியும்.

 

இனிமேல் நானே போனால் கூட ஆபிசுவரி எழுத மாட்டேன் என்று சத்தியம் செய்தேன். சுஜாதா இறந்து போனார். மலர் வளையத்தோடு அஞ்சலி செலுத்தப்போய் சீனியர், ஜூனியர், சக எழுத்தாளர்களோடு சுஜாதா நினைவுகளை அசை போட்டுக் கொண்டிருந்தபோது பக்கத்தில் கனிமொழி அழுதபடி நின்றிருந்தார். அவரைப் பாதித்த துக்கம் என்னை பாதிக்காதபடிக்கு குமுதம் ரிப்போர்ட்டரிலிருந்து கூப்பிட்டு ‘ஃபாரம் ரெடி பண்ணனும். அனுப்புங்க’ என்று அடிக்கடி விரட்டிக் கொண்டிருக்க, சுஜாதா பற்றி உடனடி கட்டுரை எழுதி அனுப்பினேன். நினைவுக் கூட்டத்திலும் சொன்னேன் – சுஜாதா வாழ்க்கையைக் கொண்டாடும் கூட்டம் இது. Celebrating life  is  better than mourning  a death.

 

இந்த வாரம் புதன்கிழமை விடிந்தபோது இன்னொரு இழப்பு.

 

காலை ஐந்தரை மணிக்கு கஸ்தூரி ரங்கன் காலமாகி விட்டார்.

 

இந்திரா பார்த்தசாரதி மொபைலில் குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். தொடர்ந்து திருப்பூர் கிருஷ்ணனின் இ-மெயில். பிரமை பிடித்தமாதிரி ஒரு நிமிடம் இருந்தது.

 

அப்பாவோ பெரியப்பாவோ இறந்து போன துக்கத்தின் déjà vu நிழலிட்டது. கல்யாணச் சாவு. மனதைத் தேற்றிக் கொள்ளலாம். இது கணையாழிச் சாவு ஆச்சே. எல்லா சாவுச் செய்தியும், பேசி முடித்து வெதுவெதுவென்று வென்னீரில் குளித்து விட்டு சூடாக ரெண்டு தோசை சாப்பிட்டு  ஆபீஸ் கிளம்புகிற அன்றாட நிகழ்வில் கிளைக்கதையாவது போல் இது இல்லை. ரெண்டு வரி ட்விட்டரீல் கீச்சு பதிவது மாதிரி அவ்வப்போது நமநமவென்று நினைவில் வந்து கொண்டே இருப்பது. வந்தது

 

சென்னைக்கு 75-ல் பேங்கு கிளார்க் வேலைக்கு வந்தேன். தி.நகர் ராமநாதன் தெரு கட்டைப் பிரம்மச்சாரி மடத்தில் நிழல்கள் ரவி இருந்ததற்கு ரெண்டு அறை தள்ளி ரூம் கிடைத்தது. அன்றைக்கு சாயந்திரம் கணையாழி ஆபீசுக்கு முதலில் போகணும் என்று மனசில் முடிபோட்டு வைத்துக் கொண்டு அப்புறம் தான் பக்கத்து வீட்டு ஜன்னலில் நடிகை கவிதாவை நோட்டமிட்டேன். அந்தப் பொண்ணு நடித்த காற்றினிலே வரும் கீதம் கலர்ப் படம் வெளியாகியிருந்த நேரம் அது.

 

சாயந்திரம் சீக்கிரம் திரும்பிய  மற்ற பிரம்மசாரிகள் இன்னும் ஜன்னலே கதியாக தய்யர தய்யா என்று கவிதா தரிசனத்துக்குக் காத்து நின்றார்கள். நான் பஸ் பிடித்துப்போய் கணையாழி ஆபீஸ் என்று அனுமானம் செய்த, காலம் உறைந்து போன ஒரு கட்டிடத்தில் படியேறினேன். மவுண்ட் ரோடு ஈசானிய மூலையில் தர்பார் ரெஸ்டாரண்டை ஒட்டி நல்லதம்பி செட்டி தெருவில் இருந்த கட்டிடம்.

 

அது தீபம் பத்திரிகை ஆபீஸ். கணையாழியும் அங்கேதான் பிரசுரமாவதாக சொந்த ஊரில் நண்பர்கள் சொன்னதால் தீபம் நா.பாவிடம் கணையாழி சந்தா கட்ட முயன்று தோற்றேன். ஆனால் தீபம் சந்தாவும் நா.பா பரிச்சயமும் கிடைத்தது.

 

இதுக்கு இடையில் தான் எப்போதோ கவிதை எழுத ஆரம்பித்தேன். எண்பதுகளில் கணையாழி அலுவலகம் சென்னைக்கு மாறிய பிறகும் நான் கணையாழி, தீபத்தில் புதுக்கவிதையைத் தாண்டி வெளியே கால் வைக்கவில்லை.

 

பெல்ஸ் ரோடில் கணையாழி அலுவலகத்தில் ஒரு ராத்திரி உள்ளே நுழைந்தபோது எளிமையாக உடுத்திய வயசர் ஒருத்தர் வாசல் அறையில் டெலிபோனில் மென்மையாகப் பேசிக் கொண்டிருந்தார். உள்ளே கம்பாசிட்டர் தாத்தா தமிழ் இலக்கியத்தின் தலைவிதியை நிர்ணயிக்கக் கூடிய எழுத்துகளை படு வேகமாக, எழுத்துப்பிழை பற்றிய கவலையே இல்லாமல் ‘ஈசனை ஈசலாக்கி’, ‘காகித சேதி’ யை ‘காகித சோதி’யாக்கி எழுத்து அடுக்கி பாரம் தயார் செய்து கொண்டிருந்தார்.

 

அவர் சொன்னபோது தான் நான் வாசலில் கடந்து வந்த பெரியவர் கணையாழி ஆசிரியர் கி.கஸ்தூரிரங்கன் என்று தெரிந்தது. ஆசிரியரிடமே அற்பமாக அறுபது சில்லரை ரூபாய் சந்தாவைக் கட்டலாமா? அவரை அவமதித்ததாக எடுத்துக்கொண்டு எழுந்து போய்விட்டால், 1960-களில் இருந்து (அப்போது) இருபத்தைந்து வருடமாக நிற்காமல் மாதாமாதம் வெளியாகிற இலக்கியப் பத்திரிகையை முடக்கிய காரணத்துக்காக, ‘தமிழ் இலக்கியத்தில் சிறு பத்திரிகைகளின் ஓசோன் அடுக்கு ஓட்டை அடைப்பு பற்றிய பங்களிப்பு’ போன்ற தலைப்புகளில் டாக்டர் பட்டத்துக்கு பதிவு செய்து மெனக்கெடுகிறவர்கள்  எனக்கு ஒரு foot note போட்டு நாதுராம் கோட்ஸே ஆக சித்தரித்து விடுவார்கள்.

 

கி.க நான் கட்டிய சந்தாவை மௌனமாக வாங்கிக் கொண்டு ரசீதும் பொறுமையாக எழுதிக் கொடுத்தார். அடுத்து நான் மனதில் பல தடவை ஒத்திகை பார்த்து வைத்திருந்த கேள்விகள், தகவல்கள். ‘சார், நானும் கணையாழியிலே கவிதை எழுதறேன். போன மாசம் ‘சமாதியில் இருந்து கோவில் வரைக்கும்’னு.

 

படிச்சேன் என்றார் கி.க. எப்படி இருந்தது சார்? முகவாய்க்கட்டையைத் தடவிக் கொண்டு யோசித்து விட்டு ‘தொடர்ந்து எழுதுங்க’ என்றார். படிக்கலை போல.

 

அப்போது அவர் தினமணி ஆசிரியரும் கூட. அவருக்கு முன்னால் தினமணி கதிரில் ஆசிரியராக இருந்து விலகிய நா.பா தினமணி சூழலைக் கிண்டல் செய்து இன்னொரு பத்திரிகையில் தொடர்கதை எழுதினார். தினமணி சிவராமனில் இருந்து, ‘மேட்டூர் நீர்மட்டம்’ வருஷம் பூரா எழுதி சம்பளம் வாங்குகிற ஒரு செல்லப் பிள்ளை உதவி ஆசிரியர் வரை விலாவாரியாக நா.பா எழுதிய கதையில் உண்டு. பரிமளரங்கனாக கஸ்தூரி ரங்கனையும் அதில்  நடமாட விட்டிருந்தார்.

 

‘என்ன சார் இப்படி?’ என்று வம்பு விசாரிக்க, ‘why don’t you ignore him?’ என்று ப்ரூப் பார்த்துக் கொண்டே பதில் சொன்னார் கி.க.  அடுத்து விசாரிக்க மனதில் அடுக்கி இருந்த இலக்கிய வம்புகளை ஓரம் கட்டி விட்டு சொல்லிக் கொண்டு கிளம்பினேன். ஆனாலும் கணையாழியிலும் தீபத்திலும் எங்கேயோ இருக்கிற யாரோ ஒரு வாசகனுக்காக (நான் தான்) கவிதை, மேலும் கவிதை நெய்தேன். ஆமா, ஏழெட்டு வருடம் அப்படி கவிதைத் தவம் செய்யாமல் உரைநடையில் புகுந்திருந்தால் இந்நேரம் சாகித்ய அகாடமி வாங்கியிருப்பேன், போங்கப்பா.

 

கரோல்பாக் நடராஜன் மெஸ் பக்கத்து தமிழ்க் கடை. சிவகங்கை சின்னிகிருஷ்ணன் (தபால்காரர்). ‘விநாயகர் விசர்ஜன ஊர்வலம். தர்மகர்த்தா வரதராஜ முதலியார்’ என்று நாயகன் வரதாபாய் பற்றிய சாதுவான நோட்டீஸ் ஒட்டிய மும்பை மாதுங்கா ஸ்டேஷன் வாசல் கடை. மற்றும் சந்தா கட்டினாலும் கவிதை வந்ததை உறுதி செய்ய அட்வான்ஸ் காப்பியாக வாங்க தி.நகர் நாதன்ஸ் கபே அருகே நாயர் கடை. இங்கெல்லாம் கணையாழியைத் தேடி என்னை அலைய வைத்தது என் கவிதை மட்டும் இல்லை. சுஜாதா வார்த்தையில் ‘கணையாழியில் எழுதுகிற எல்லோரும் பத்திரிகைக்குள் அவரவர் கணையாழியை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்’ என்ற சத்தியமான வார்த்தையும் தான். எழுதுகிறவர்களுக்கும் வாசிக்கிறவர்களுக்கும் சந்தோஷம் தரும் சுதந்திரம் அது.

 

தொண்ணூறுகளில் கணையாழி ஆழ்வார்ப்பேட்டை அம்புஜம்மாள் தெருவுக்குக் குடி பெயர்ந்தபோது அந்தத் தெரு குண்டு குழிகளையும் கடந்து இலக்கிய வீதியாகி விட்டிருந்தது. முப்பத்தைந்து வருடத்துக்கு மேலாக இலக்கியச் சிந்தனை மாதாந்திரக் கூட்டம் மாதம் தவறாமல் நடக்கிற சீனுவாச காந்தி நிலையத்தின் எதிரே சரவணா அபார்ட்மெண்டில் சுஜாதா வீடு. எதிரே இ.பா இல்லம். தெருக்கோடியில் காந்தி சிலையும், காந்தி பாதம் பதித்த சுவட்டை ஏந்திய பீடமுமாக இருந்த இடம்தான் கி.க வீடு. கீழே வசிக்குமிடம். மாடியில் கணையாழி, ஸ்வசித் என்று அவர் ஆசிரியராக இருந்த பத்திரிகைகளின் அலுவலகங்கள்.

 

மாதாந்திர இலக்கியக் கூட்டம் கணையாழி அலுவலகத்திலும் சில சாயந்திரங்களில் நடக்கும். முந்தின மாதக் கணையாழியை யாராவது விமர்சித்துப் பேச விமர்சனத்துக்கு விமர்சனம், வி.வி.விமர்சனம், வி.வி.வி.வி என்று போய்க் கொண்டே இருக்கும் விவாதத்தை முடித்து ‘வீட்டுக்குப் போய்ச் சாப்பிடுங்க’ என்று அனுப்பி விட்டு அடுத்த இதழ் ப்ரூப் பார்க்க உட்கார்வார் கி.க. அவர் மேஜையில் ஒரு பெரிய பூதக்கண்ணாடியும் இருக்கும். பார்வைக் குறைவை பகீரதப் பிரயத்தனமாக  ஈடு கட்டிக் கொண்டு கணையாழிக்கும் தமிழுக்கும் கி.க செய்த சேவை இது. இதைவிட பெரிசு, முப்பத்தைந்து வருடத்துக்கு மேலாக கணையாழியை தொடர்ந்து நடத்தினாரே அதுக்கே அவரை வழிபடலாம்.

 

கணையாழி வாசகன், கணையாழி கவிஞன், கணையாழி சிறுகதை எழுத்தாளன், கணையாழி குறுநாவல் எழுத்தாளன் என்று கொஞ்சம் கொஞ்சமாக எனக்கும், கொஞ்சம் போல் வித்தியாசம் இருந்தாலும் என்னோடு எழுத வந்த மற்ற புத்திளைஞர்களான பாவண்ணன், எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன் போன்றோருக்கும் களம் அமைத்துக் கொடுத்ததில் கி.க கணையாழிக்கு முக்கியப் பங்கு உண்டு.

 

முக்கியமாக கணையாழிக் குறுநாவல். அந்த மூணு நாள் குறும் டெஸ்ட் மேட்ச் இலக்கிய வடிவமே அருகிப் போய்க் கொண்டிருக்கும் இந்த ட்வண்டி-20 அரைப்பக்கக் கதை காலகட்டத்தில் பழசை ஊன்றிப் படித்தால், கி.க கணையாழி அளித்த நிழற்குடை-கொடையின் அருமை புரியும்.

 

நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை சிறப்பு நிருபராக இருந்து கற்றதையும் பெற்றதையும் கி.க குடும்பத்துக்குப் பயன்படுத்தியதை விட கணையாழிக்கு செலவழித்தது நிச்சயம் பத்து சதவிகிதமாவது அதிகமாக இருந்திருக்கும். இ.பா தினமணி கட்டுரையில் சொல்கிறது போல், இங்கிலீஷ் நியூயார்க் டைம்ஸ் செய்தியாளர் என்பதை விட தமிழ்க் கணையாழி ஆசிரியர் என்ற பொறுப்பு தான் அவருக்கு ஆத்மார்த்தமானதாக இருந்திருக்கும்.

 

தொண்ணூறுகளின் மத்தியில் அவர் கணையாழி ஆசிரியர் பொறுப்பில் இருந்து விடுபட்டு ஒரு வருடம் ராம்ஜி கணையாழி ஆசிரியராக இருந்தபோது பின்னணியில் நானும் தீவிரமாகச் செயல்பட நேர்ந்தது. கி.கவை அவ்வப்போது சந்திப்பது வழக்கம். சுஜாதா, இ.பா சந்திப்பு அடிக்கடி நிகழும்போது ‘கணையாழி கவிதை முந்தைய தரத்தில் இல்லை’ என்ற சாகாவரம் பெற்ற வரியோடு ஒரு போஸ்ட் கார்ட் நிச்சயம் வந்திருக்கும். அதைக் காட்டி சுஜாதா என்னை குறுக்கு விசாரணை செய்வார். ‘ஏம்பா போன மாசம் ஒரு கவிதைகூட தேறலியாமே?’

 

முதல் கட்ட கவிதைத் தேர்வாளன் என்ற முறையில் நான் அடுத்த கட்டத் தேர்வாளர் ஞானக்கூத்தனைக் கைகாட்டி, சுஜாதாவின் சந்தேகத்தை நிவர்த்தி செய்ய கி.க பாராட்டிய கவிதைகளையும் மறக்காமல் குறிப்பிடுவேன். இக்கட்டான சந்தர்ப்பம் ஏற்பட்டால் சிலாகிக்க எப்போதும் பசுமையாக கி.க எழுதிய கவிதையே துணை – கடவுளையும் சர்க்காரையும் பழிக்காதே. பழித்தால் உனக்குக் கிடைப்பது இன்னொரு சர்க்கார்’. நான் சொல்வது ‘கடவுளையும் கவிதையையும் பழிக்காதே. பழித்தால் உனக்குக் கிடைப்பது ஓராயிரம் கவிதை’.

 

கி.க கவிதையை யார் எழுதியது என்று தெரிந்தோ தெரியாமலோ இன்னும் மேற்கோள் காட்டுகிறார்கள். நான் கலந்து கொண்ட ஒரு ப்ராஜக்ட் ரிவ்யூ மீட்டிங்கில் பவர்பாயிண்ட் பிரசண்டேஷன் செய்த இலக்கிய ரசிகரான (அப்போ நிச்சயம் கவிஞரும் தான்) பிராஜக்ட் மேனேஜர் கூட இதில் உண்டு. கி.கவுக்கும் சுஜாதாவுக்கும் சொல்ல விட்டுப்போன தகவல் இது.

 

கி.க சொல்லி நான் முடிக்காமல் போன ரெண்டு காரியம் உண்டு. முதலாவது கணையாழித் தொகுப்புகளாக நல்ல படைப்புகளைத் தேர்ந்தெடுத்து புத்தகமாக வெளியிட என்னை தொகுப்பாசிரியனாக இருக்கச் சொன்னார். கூடவே ரெண்டு கள்ளியம்பெட்டி நிறைய பழைய கணையாழி இதழ்களையும் பொறுப்பாகக் கொடுத்து அனுப்பினார். ஒவ்வொரு கணையாழியாக எடுத்து நான் வரிவரியாகப் படித்து சிலாகிப்பதற்குள் பிரிட்டன் அழைத்து விட்டதால் கள்ளியம்பெட்டிகளை கி.கவின் கொட்டிவாக்கம் வீட்டில் திருப்பிக் கொடுத்து விட்டுப் பறந்து விட்டேன். வெ.சபாநாயகம் பொறுமையின் திலகமாக அப்புறம் செய்து முடித்த அருஞ்செயல் அது.

 

சுஜாதா நினைவுக் கூட்டத்தில் பின்னரங்கில் உட்கார்ந்திருந்த கி.க சொன்னார் – ‘யுகமாயினி பத்திரிகையில் சுஜாதா படைப்புகள் பற்றி ஒரு கட்டுரைத் தொடர் எழுதேன்’. நான் எழுதவில்லை என்றாலும் தேவகோட்டை மூர்த்தி சிரத்தையாக எழுதி வந்தார். யுகமாயினி தான் நின்று போய்விட்டது.

 

சுஜாதா நினைவுக்காக இலக்கியச் சிந்தனை நடத்திய கூட்டத்தில் பேசும்போது கி.க சொன்னார் –‘என்னை விட வயசிலே சின்னவன்(ர்). அவர் போனதுக்குப் பதில் நான் போயிருக்கலாம்.’. பத்திரிகை ஆசிரியர்கள் கண்கலங்க வைப்பதில்லை. கி.க விதிவிலக்கு. அவர் வாழ்க்கையை என்னைப் போல் மற்ற நண்பர்களும் கொண்டாடிக் கொண்டிருப்பார்கள் என்ற நினைப்பே இதமாக இருக்கிறது.

 

அன்னை அணிந்தாள் அனுமன் சுமந்திட்டான்

பின்னையும் யார்க்கோ கிட்டியதாம் – என்னாபோ

அஸ்கா இனிப்பாய் கணையாழி என்றதுமே

கஸ்தூரி ரங்கன் நினைப்பு

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன