பெரு நாவல் ‘மிளகு’ – They came, they saw, they plundered

An excerpt from my forthcoming novel MILAGU

ரோகிணி, நல்லா இருக்கீங்களா?

சொத்தைப் பல்  தளபதி தான். இவ்வளவு அதிகாலையில் இவன் எங்கே வந்து தொலைந்தான்?

அம்மா அம்மா மஞ்சுநாத் குரல் மறுபடி. படுக்கையை நனைத்திருப்பான். வந்தாச்சு மஞ்சு. ரோகிணி சொல்லியபடி என்ன விஷயம் என்று தளபதியைப் பார்த்துத் தலையாட்டுகிறாள்.

உனக்கு ஒண்ணுமில்லே, வேலையப் பாரு என்று கையை அசைத்து விட்டு அவசரமாக உள்ளே போகிறான் ரோகிணியை முந்திக் கொண்டு. உள்ளிருந்து கதவை அவசரமாகத் தாழ் போட்டுக் கொள்கிறான்.

மஞ்சு மஞ்சு என்று அலறியபடி வெளியில் இருந்து கதவை முட்டுகிறாள். கதவு திறக்கிறது. உறங்கிக் கிடக்கும் மஞ்சுநாத்தை தோளில் சாய்த்துத் தூக்கிக்கொண்டு நடக்கிறான் தளபதி.

மயக்க மருந்து கொடுத்திருக்கேன். ஜாக்கிரதையா வச்சிருப்பேன். ஐயாயிரம் வராகனுக்கு தங்கம் கட்டியா கொண்டு வந்து அப்பாண்டை தோப்புலே சாயந்திரத்துக்குள்ளே கைமாற்றிட்டு பிள்ளையை லட்டு மாதிரி உசிரோடு வாங்கிட்டு போ. இல்லேன்னா உன் இஷ்டம்.

சொல்லிவிட்டு அவன் வெளியே நடக்கிறான்.

ஐயோ நில்லு நில்லு என்று ரோகிணி வாசலுக்கு ஓடுவதற்குள்   மஞ்சுநாத்தோடு குதிரை வண்டியில் அதி விரைவாக போயே போய்விட்டான்.

வாசலில் மற்ற நாளாக இருந்தால் இதற்குள் பெருங்கூட்டம் கூடியிருக்கும். தெரு கிட்டத்தட்ட முழு நிசப்தமாக இருந்தது. எல்லா வீடுகளிலும் வீட்டைப் பகுதி இடித்து பேய் மிளகு தாவரம்  வைத்து மூடிவிட்டுப் போயிருக்கிறார்கள்.

மஞ்சு என்று ரோகிணி அலறியது வெற்றிடத்தில் எதிரொலித்துத் திரும்ப வெறுமை பூசி வந்தது. பின்னால் என்னமோ சத்தம். திரும்பினாள் ரோகிணி.

எதிர் வீட்டு சிதிலமான தாழ்வாரத்தில் நின்று அவளையே பார்த்துக் கொண்டிருந்தது பரமன். பெட்டிபெட்டியாக புதையல் தயாரித்தபோது முதுகில் துளைத்த விழிகள் அவருடையவை தானா.

ரோகிணியைப் பார்த்ததும், சரியாகச் சொன்னால், ரோகிணி அவரைப் பார்த்ததும் பரமன் ஓட ஆரம்பித்தார். உயிருக்குப் பயந்த ஓட்டம் அது.

எதிர்காலத்தில் இருந்து வந்திருக்கும் தன்னைக் கொன்றால் காலக்கோடே கந்தர்கோளமாகி விடும் என்று அவருக்கு ரோகிணியிடம் விளக்க ஆசை தான். அவள் கேட்க மாட்டாள்.

ரோகிணி நினைப்பதோ வேறு விதத்தில். மஞ்சுநாத்தை திரும்ப கூட்டிவரப் பரமன் அச்சாணியாகச் செயல்படலாம். காசு சனியன் தொலைந்தால் போகிறது. மஞ்சுநாத் எந்த அபாயமும் இல்லாமல் திரும்பக் கொண்டு வந்து சேர்க்கப்பட வேண்டும்.

பரம-ரே ஓ பரமரே என்று குரல் எடுத்துக் கூப்பிட கைவண்டியில் தட்டு முட்டு பாத்திரங்களும் குழந்தைகளுமாக இருத்தி தள்ளிக்கொண்டு போகும் ரோகிணியைத் தெரிந்த யாரோ அவள் கணவன் பெயரைச் சொல்லி விளிப்பதை ஒரு வினாடி சுவாரசியமாகப் பார்த்து வேலையில் தொடர்ந்தார்கள்.

ஓ ஸ்வாமிவரே என்று கூப்பிட ஆரம்பித்தாள் அவள். பரமன் உயிருக்குப் பயந்து ஓடினது ஓடினதுதான். தெரு முனையில் பெரிய சத்தத்தோடு புழுதி பறக்க நான்கு குதிரை வீரர்கள் வந்து கொண்டிருந்தது தெரிந்தது.

வந்துவிட்டார்கள். கேலடி படையின் ஜெருஸூப்பா  கொள்ளையர்கள் ஊருக்குள், தெருவுக்குள் வந்து விட்டார்கள்.

வீட்டுக்குள் சாடி அடைத்து தயாராக வைத்திருந்த பெரிய சாக்குப்பைகளை சாரட்டில் கொண்டு போய் வைத்தாள். அப்பாண்டை பூங்காவை நோக்கி சாரட் விரைந்தபோது பின்னால் நூற்றுக்கணக்கான கொள்ளைக்காரர்கள். ஜெர்ஸோப்பா கேலடி படை

காலை ஏழு மணி.

கேலடி படை ஒவ்வொரு கட்டிடமாக வெளியே கூட்டமாக நிற்கிறது. ஊரை விட்டு தப்பி ஓடுகிறவர்களில் சிலரைப் பிடித்து வைத்துக் கொண்டு ஒவ்வொரு வீட்டுக்கு முன்னும் அந்த பிணைகைதியை இழுத்துப் போய் நிறுத்துகிறது.

சொல்லு இந்த வீட்டுக்காரன் என்ன தொழில் செய்கிறவன்?

எஜமான்களே அவன் நகையாசாரி.

அடுத்த வீடு?

அரண்மனை உத்தியோகஸ்தன். சுங்கத்துறை அதிகாரி.

அப்போது ஆசாரியை விட்டுவிட்டு அரண்மனைக்காரன் வீட்டைப் பிடியுங்கள். நிறைய சொத்து சேர்த்திருப்பான் மிளகுராணி பெயரைச் சொல்லி.

pic medieval plundering

ack fineartamerica.com

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன