பெரு நாவல் ‘மிளகு’ – Royal Soldiers’ Retreat and a Requiem for Nemi

An excerpt from my forthcoming novel MILAGU

உங்களை நாற்பது கல் கொத்தடிமைகளாக நடக்க வைக்க லச்சுவுக்கு எப்படி மனம் வரும் மக்களே. சாரட்டுக்கு ஐந்து பேராக ஏறிக் கொள்ளுங்கள்.

குரலில் அன்பும் வாத்சல்யமும் நிறைந்து வழிய உடனே இளவரசர் ஜயவிஜயிபவ என்று வாழ்த்தும் ஒலி மைதானத்தில் எதிரொலித்தது.

செல்வோம் ஜெருஸூப்பா என்று லட்சுமணன் அடியெடுத்து வைக்க, செல்வோம் ஜெருஸூப்பா என்று இருநூறு குரல்கள் ஆதரித்து முழங்கின.

ஜெருஸூப்பா போய் என்ன செய்வீர்கள்? அடுத்த கேள்வியைக் கேட்டபடி குதிரையேறி நகர்ந்தான் லச்சு. போரிடுவோம் என்றது படையணி. யாரோடு போரிடுவீர்? இந்தக் கேள்விக்கு பதில் இல்லை.

இன்னொரு தடவை கேட்டான் லச்சு. அப்போதும் குழப்பமான மௌனம் ஓங்கியடித்தது. பதில் இல்லை ஏன் என்று கேட்டபடி அந்த சாரட் அணிவகுப்பை இடவலம் குதிரையேறிச் சுற்றி வந்தான் லச்சு. வெகு திருப்தியாக அவன் இருந்ததை முகக்குறிப்பு சொன்னது.

யாரோடு யுத்தம் என்றால் பதிலுரைக்க மாட்டீரோ? என்றால் நானே உரைப்பேன். யாரோடும் போரிட நாம் போகவில்லை. அங்கே எந்தப் படையும் இல்லை. அங்கிருப்பவர்கள் எல்லோரும் சென்னபைரதேவியின் பேயாட்சிக்கு எதிரே திரண்டெழுந்த பொதுமக்கள். போராட்ட உணர்வு மிகுந்து ஒவ்வொருவரும் அடுத்தவரை அதிகச் செல்வம் வைத்திருப்பதற்காக அடித்து உதைத்து பறிப்பவர்கள். அரசு கட்டிடங்கள், மாளிகைகளை இடித்துத் தள்ள, சூறையாட முனைந்தவர்கள். நாமிருக்கும்போது அவர்களை சூறையாட விடலாமா?

இந்த இடத்தில் கூட்டமாக ஒலித்தது சிரிப்பு சத்தம். லச்சுவும் சிரித்தான்.

நான் வேறே எந்த அர்த்தத்திலும் சொல்லவில்லை. நீங்களும் வேறெந்த அர்த்தத்திலும் புரிந்து கொள்ளவில்லை. ஆகவே நாம் அங்கே ஏன் போகிறோம்? அமைதியை நிலைநாட்டப் போகிறோம். சலோ ஜெருஸுப்பா.

ஒற்றைக் குரலில் சலோ ஜெருஸூப்பா சொல்லியபடி படையணி உற்சாகமாக சாரட்களில் நகரந்தது. ஜெருஸூப்பாவுக்கு இந்தப் படையணி போய்ச் சேரும்போது பிற்பகலாக இருக்கும்.

ஜெர்ஸூப்பா காலைப் பொழுது.

ரோகிணி பரபரப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தாள். ஜெருஸூப்பாவில் தான் இருக்கிறாள்.   மனம் ஹொன்னாவரில்  இருக்கிறது.

நேமிநாதன் அனுப்பும் தினசரி தூதன் காலை விடியும்போது வந்து விடுவான். இன்றைக்கு விடிந்து ஒரு நாழிகையானது, இரண்டுமானது. அவன் வருகிற வழியாகவே தெரியவில்லை.

தகவல் அறிவிக்க நேமிநாதனிடம் ஏகத்துக்கு இருக்கக் கூடும். ரோகிணியிடமும் இன்று நேமிநாதனுக்குச் சொல்லியனுப்பத் தகவல் உண்டு.

சின்னக் குருவி வராது.

அது அவர்களுக்குள் ஆன பரிபாஷை. அடுத்த கருத்தரித்தது உதிர்ந்து விட்டது. இதைச் சொல்லி அனுப்பினால் போதும்.

இதை வண்டிக்காரத் தகவல் பரிமாற்றத்தில் எடுத்துப் போகமுடியாது.

வண்டிக்காரர்கள் ஜெருஸூப்பா, ஹொன்னாவர், கேலடி, கோகர்ணம், உள்ளால் இப்படி அங்கிருந்து இங்கே, இங்கிருந்து அங்கே என வண்டி ஓட்டி வரும்போது வழியில் சந்திக்கிற வேறு வண்டிக்காரர்களோடு முக்கிய செய்திகள் பரிமாறிக் கொள்வது வழக்கம்.

போர் ஆரம்பித்த பிறகு போக்குவரத்து தடை செய்யப்பட்டிருக்கிறது. வரட்டும், வரும்போது வரட்டும் என்று ரோகிணி வீட்டுக்குள் சுற்றிச் சுழன்று அதிகாலையிலும் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறாள்.

வேறு வேலை இல்லை. வீட்டுக் கூடத்தில்  மழை, பனிக்காலத்தில் வெதுவெதுப்பாக தட்ப வெப்பம் நிலவ குளிர் காய சுவரில் பதித்த அமைப்பின் பின்னால் ஒரு கதவு வைத்து அதன் பின் வெற்றிடம் ஏற்படுத்தியிருக்கிறது.

ரோகிணி சேர்த்து வைத்த பொன்னை எல்லாம் கட்டுகளாக உள்ளே இருந்து எடுத்து வந்து சுவரில் வைத்து கதவை இழுத்து மூடுகிறாள். என்னமோ நினைப்பு வர, ஒரு மரப்பெட்டியை எடுத்து வருகிறாள்.

நீலச் சாயம் அடித்த பெட்டி. உள்ளே குழந்தை கிண்கிணி, குழந்தை மோதிரம் என்று சில தங்க நகைகளையும் மஞ்சுவின் உடைகள் சிலதையும், அவனுடைய பழைய துணிப் பொம்மை ஒன்றையும் எடுத்து வைக்கிறாள்.

ஏன் அப்படிச் செய்தாள் என்று அவளுக்கே தெரியவில்லை. முதுகில் பதியும் விழிகள். ஆறாம் புலன் சுறுசுறுப்பாக வேலை செய்ய, பின்னால் திரும்பிப் பார்க்கிறாள். யாருமில்லை.

பெட்டியை மற்றப் புதையலோடு பத்திரமாக வைத்து திரும்புகிறாள்.  உள்ளே குழந்தை மஞ்சுநாத் அம்மா என்று அழைக்கும் குரல்.

பொன் புதையலின் கதவை பேய் மிளகு கொண்டு மறைக்கும் முன் அந்த இரும்புக் கதவை பூட்டி சாவியை கழுத்தில் தாலியில் பிணைத்துக் கொள்கிறாள். அப்போது பரமனை நினைக்கிறாள்.

அவன் கட்டிய தாலிக்கு இப்படி சாவி தொங்கவிடும் சங்கிலியாக அமைவதுதான் ஒரே பயன் போல.

அம்மா அம்மா என்று மறுபடியும் மஞ்சுநாத் குரல். அவள் உள்ளே போகும்போது வாசலில் கனமான வேறு குரல்.

ரோகிணி, நல்லா இருக்கீங்களா?

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன