மிளகு நாவலில் இருந்து – A diary of amourous moments logged chronologically

அவர் இன்னும் அப்சர்வேஷன்லே இருக்கார். நிறைய ஓய்வு எடுக்கச் சொல்லியிருக்கா. பழச்சாறு, ரசம் சாதம், குழம்புக் கருவடாம், அரிசிப் புட்டு இப்படி சாத்வீகமாக சாப்பிட, குடிக்கன்னு சீலம் மாற்றி வச்சுண்டா இந்த கர்க்கடகத்துலே சரியாயிடும்னு சொல்றா. பார்ட்டி எல்லாம் இப்போ கூப்பிட வேண்டாம் தயவு செய்து. கெட்டக் கனவு கண்டு டயாபரை மாத்தி விட நான் தான் கஷ்டப்படவேண்டி வரும். சின்னக் குழந்தை மாதிரி சுத்திவர மூச்சா போய் முழங்காலைக் கட்டிண்டே படுக்கையிலே உக்கார்ந்திருக்கார்”.

”வசந்தி உனக்கு ஞாபகம் இருக்கோ?” சங்கரன் நடுராத்திரி போன ரெண்டுங்கெட்டான் பொழுதான ரெண்டரை மணிக்கு வசந்தியின் கட்டில் பக்கம் போய்த் தரையில் உட்கார்ந்து ரொம்ப சகஜமாகப் பேச்சை ஆரம்பிப்பார்.

“வசந்தி, இதுக்கு மட்டும் பதில் சொல்லு. 1960லே இல்லே 1961லே நம்ம பகவதியை கர்ப்பத்திலே வச்சிண்டிருந்தியே”

“அதுக்கென்ன?”

“அதுக்கு ஒண்ணுமில்லே. அந்த கர்ப்பத்துக்கு ஆறு மாதம் முந்தி ஒருதடவை நீ ப்ரக்ணண்ட் ஆனே ஞாபகம் இருக்கா? பிள்ளைதான், வயத்துலே உதைக்கறான்னு சொன்னே. திடீர்னு ஒரு நாள் காலம்பற, அன்னிக்கு ஞாயிற்றுக்கிழமை.. உங்கப்பா, தம்பி, சித்தப்பா கரோல்பாக்கிலே வீட்டு செப்டிக் டாங்க் ரிபேர் பண்ணிண்டு இருக்கான்னு வந்து டாய்லெட்டை நாறடிச்சாளே, நம்பூதிரி தந்தசூரணம் பல்பொடி நெடி எங்கேயும் அடிச்சுண்டிருக்க நீ என்னை பாத்ரூமுக்கு கூப்பிட்டே. அந்தக் கர்ப்பம் கலைஞ்சு போச்சுன்னு அழுதுண்டே சொன்னே. ஞாபகம் இருக்கா. அது ஆம்பளைக் குழந்தைதானே. அந்த கரு இன்னும் உசிரோட இருக்கு. நான் பார்க்கலே. அப்பா அப்பான்னு கண்ட்ஹர்லே ப்ளேன்குள்ளே வந்து என்னைத் திட்டறதோ, நல்லதா நாலு வார்த்தை சொல்லறதோ தெரியலே. நல்ல வார்த்தை சொல்ல நான் ஒண்ணுமே செய்யலியே. திட்டுதான். என்னமோ அந்தக் குழந்தை கனவுலே வரும்போதெல்லாம் வீடு முழுக்க மிளகு வாடை. அது கூப்பிட்டுண்டு இருக்கும்போதே ஐஞ்சு கட்டாலேபோவான்கள் என் சிரசுக்கு துப்பாக்கி வைச்சிண்டு நிற்கறான். குடம் குடமா மூத்திரம் எப்படி வருதுன்னு தெரியலே. இவ்வளவுக்கும் ராத்திரி படுத்துக்கப் போறபோது போய்ட்டுத்தான் படுக்கறது. சரி சரி விஷயம் என்னன்னா அந்தக் குழந்தைக்கு நல்லதா ப்ரீதி பண்ணனும். அதுவரை வந்துண்டு தான் இருக்கும். ஞாபகம் இருக்கோ?”

”இல்லே நான் அப்படி எல்லாம் கர்ப்பம் தாங்கலே. உங்க தொடுப்பு வெள்ளைக்காரியைக் கேட்டுப் பார்த்தேளோ?”

ஒரு பத்து நிமிஷம் கனமான மௌனம் நிலவும் அங்கே.

”இல்லே, இது அதுக்கெல்லாம் ரொம்ப முன்னாடி.”

“அப்போ தில்ஷித் கவுரை ஃபோன் பண்ணி வரச் சொல்லுங்கோ. கேட்டுண்டு மஞ்சள் குங்குமம் பிளவுஸ் பீஸ் கொடுத்து அனுப்பலாம்”.

வசந்தி சகஜமான மனநிலைக்கு வந்திருப்பாள்.

“அவள் அப்புறம் முழுசா பத்து வருஷம் கழிச்சுத்தான் ஹோம் மினிஸ்ட்ரியிலே இருந்து டைப்பிஸ்டா ட்ரான்ஸ்பர்லே வந்தா”.

“சரி அப்போ ஏதாவது நடந்திருக்கும்”.

“சே அதெல்லாம் இல்லே. ரிகார்ட் ரூம்லே பழைய ஃபைல் தேடறபோது ஒரு தடவை கரண்ட் போய் இருட்டாச்சா? என்னைக் கட்டிப் பிடிச்சு பச்சுபச்சுன்னு முத்தம் கொடுத்தா”.

கொஞ்ச நேரம் பேசாமல் யோசித்துக் கொண்டிருப்பார் சங்கரன். திரும்பப் பேச ஆரம்பிப்பார்.

”அப்படித்தானா, இல்லே நான் தான் அவளுக்கு கொடுத்தேனா?”

“யார் யாருக்கு கொடுத்தேளோ, போன வருஷம் அவ ரிடையர் ஆனபோது திராட்சைப் பழம் வாங்கிண்டு வந்து கொடுத்து சாதாரணமா பார்த்து பேசிட்டு போனா. நீங்க தான் அலைஞ்சீங்க போல இருக்கு”.

“அப்படி இருக்க, அவளுக்கு எப்படி கர்ப்பதானம் பண்ணியிருக்க முடியும்?”

“அதான் வெள்ளைக்காரியைக் கேளுங்கோன்னு சொல்றேன்”.

“சொல்லிண்டே இருக்கேனே தெரிசா பழக்கமானது 1970லே. நான் கேக்கறது அதுக்கு பத்து வருஷம் முந்தி 1960லே. ஒரு ஞாயிற்றுக்கிழமை காலம்பர தான் பாத்ரூம்லே வென்னீர் வேம்பா பக்கத்துலே நின்னுண்டு கலைஞ்சு போச்சுன்னு அழுதே. ஞாபகம் இருக்கா. நீ சட்டுனு சொல்வேன்னு நினச்சேன்”.

”ஆமா, என்னிக்கு க்ரீடை பண்ணினது, என்னிக்கு சூல் பிடிச்சது, என்னிக்கு கலைஞ்சதுன்னு ஹோ அண்ட் கோ டயரி போட்டு குறிச்சு வச்சுக்கணுமா என்ன? திருக்கல்யாண வைபோக விவரண டயரி. அரசூர் சங்கரய்யர் தர்மபத்னி வசந்தாளோடு ரமித்த விவரங்கள் ஈண்டுக் காணலாம்னு முதல் பக்கத்துலே எழுதி வச்சு”.

சங்கரன் தூங்கியிருந்தான். வசந்தியும் அடுத்த பத்து நிமிஷத்தில் நெருங்கி அடித்துக்கொண்டு அதே கட்டிலில் கிடந்தாள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன