மிளகு பெருநாவலில் இருந்து Caught in a four dimensional space

சாரட்டில் மனமே இல்லாமல் ஏறிக்கொண்டார் பரமன். குழந்தை மஞ்சுநாத் மட்டும் பிடிவாதம் பிடிக்கவில்லை என்றால் அவர் எல்லாவற்றையும் எல்லோரையும் உதறிவிட்டுப் போயிருப்பார். எங்கே? ஜெரஸோப்பாவில் கோவில்கள் நிறைந்த ராஜவீதிக்கு. அங்கே இருக்கவும் உண்ணவும் வண்டிக்காரன் சத்திரம் உண்டே, அங்கே வண்டிக்கார நண்பர்களும் உண்டே

சீன மந்திரவாதியால் என்ன செய்ய முடியும் என்று பரமன் காத்திருக்க வேண்டும்? யோசித்துப் பார்த்தார். புரியவில்லை. மாசேதுங்கின் சிவப்புப் புத்தகத்தை மராட்டியின் கிளைமொழியில் மொழிபெயர்த்த இடதுசாரி பரமனா இப்போது சீன மந்திரவாதிக்காகக் காத்திருப்பது?

என்ன செய்ய? முப்பரிமாண உலகில் எல்லோரும் சுக ஜீவனம் நடத்தும்போது பரமனுக்கு மட்டும் இன்னொரு பரிமாணமாகக் காலமும் சேர்ந்திருக்கிறது. எடுத்தது எடுத்தது போல் அவரை பௌதீகமாக எந்த மாற்றத்துக்கும் உள்ளாக்காமல், டெல்லியில் இருந்து பம்பாய்க்கு வரும் வழியில் நானூறு வருஷம் பின்னால் போகவைத்து பழைய உலகத்தில் மூச்சுவிடச் செய்து வேடிக்கை பார்க்கிறவர் யார்?

நான்காவது பரிமாணத்தை ஒரு சாளரம் மாதிரி மூடினால் அடுத்த வினாடியே இந்த சாரட்டும், ஜெருஸோப்பாவும், ஹொன்னாவரும், அருகனும், ரோகிணியும், மஞ்சுநாத்தும் எல்லாமும் எல்லாவரும் மறைந்து விடுவார்கள். இது ஜெருஸோப்பாவிலிருந்து ஹொன்னாவர் போகும் நெடுஞ்சாலையாக இருக்காது. வருடம் பதினேழாம் நூற்றாண்டு தொடங்கி ஐந்தாம் ஆண்டான 1605 ஆகவும் இருக்காது. பரமனைக் கைகழுவிய 1960-ஆம் ஆண்டாக இருக்கலாம்.

பம்பாயில் இப்போது என்ன வருஷம், உலகம் முழுக்க என்ன வருடம்? ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபது முடிந்து எத்தனை வருஷம் ஆகியிருக்குமோ.

யார் எல்லாம் பரமன் போனபோது இருந்தபடியே இன்னும் இருப்பார்களோ, யாரெல்லாம் இறந்திருப்பார்களோ, பம்பாயும் மெட்றாஸும் எப்படி மாறியிருக்குமோ எதுவும் தெரியவில்லை. நினைக்க நினைக்க ஆயாசமும் அயர்வும் ஏற்பட சாரட்டுக்குள் கண்மூடி இருந்தார்.

ஹொன்னாவர் தெருக்களில் மெதுவாகக் குலுங்கி ஓடிய சாரட் நின்றபோது குதிரைகள் கால்களை அழுத்தப் பதித்து கழுத்து மணிகள் ஒலியெழுப்ப நின்றன. பரமன் கண் திறந்து பார்க்க அவர் மடியில் படுத்து நித்திரை போயிருந்தான் மஞ்சுநாத்.

சூரியன் சுட்டெரிக்காத கார்த்திகை மாத வெய்யில் இதமாக மேலே படிந்திருந்தது. மஞ்சுநாத் கடை மாடிப்படிகளில் ஏறி இறங்கி விளையாடிக் கொண்டிருந்தான்.

”மஞ்சு ஓடாதே படியிலே தடுக்கி விழுந்தா பல் உடஞ்சுடும். வா, நாம் கீழே ஒளிஞ்சு பிடிச்சு விளையாடலாம்” என்றார் பரமன்.

மஞ்சு வந்துட்டேன் அப்பா என்று அவருக்கு முன்னால் வந்து நின்றான். கண்டு பிடிச்சுட்டேனே என்று பரமனின் கையைப் பிடித்து இழுத்தான்.

”பொடியா, நான் இன்னும் ஒளியவே இல்லை, எப்படி பிடிச்சே?” பரமன் கேட்க மஞ்சுநாத் சிரித்தான். அவன் பரமனின் கண்களைத் தீர்க்கமாகப் பார்த்தான்.

திடீரென்று அவனைச் சுற்றியும் பரமனைச் சுற்றியும் மிளகு வாடை கனமாக எழுந்து வந்தது.

”நீ எங்கே ஒளிஞ்சாலும் பட்டாம்பூச்சி மாதிரி பறந்து வந்து கண்டுபிடிச்சுடுவேன். நான் உன்னோடுதான் எப்பவும் இருக்கேனே அப்பா”.

அவன் சொல்லும்போது பரமனின் கண்களில் நீர் நிறைந்தது. மிளகு வாசனை சன்னமாகச் சூழ்ந்திருந்தது.

அப்பா வரட்டுமா என்று பின்னால் இருந்து குரல். இரு ஒளிஞ்சுக்கறேன் என்று பரமன் சந்த்ரய்யாவின் ஜவுளிக்கடை ஓரமாக அரச மரத்தின் பின்னால் போய் ஒளிந்து நின்றார். மறுபடியும் மிளகு வாடை.

அப்பா அப்பா. மஞ்சுநாத் தெருவில் நின்று அழைத்தபடி இருந்தான். அவன் குரல் பரமனின் உள்ளே இருந்து கேட்டது. அது தெருக்கோடியிலிருந்தும், மரத்தின் மேலிருந்தும், பறந்து போகும் பறவைகளோடும் சேர்ந்து ஒலித்தது.

”அப்பா அப்பா”.

“மஞ்சு மஞ்சு”.

பரமன் ஒளிந்த இடத்தில் இருந்து பார்க்க, எதிரே சிதிலமான சமண சதுர்முக வசதி உள்ளே இருந்து கால்களில் தாங்குகட்டைகள் வைத்துத் தாங்கி பரமன் நடந்து வந்து கொண்டிருந்தார்.

’அப்போ, மரத்தடியில் ஒளிந்திருக்கும் நான் யார்’?

”அப்பா அப்பா”.

மஞ்சு குரல் அண்மையில் ஒளித்தது. அவனுடைய பிஞ்சுக் கரங்கள் பரமனின் கையை இறுகப் பற்றிக் கொண்டன. மிளகு வாடை நின்று போயிருந்தது.

கட்டைகள் தாங்கி சிதிலமான சதுர்முக வசதியிலிருந்து இறங்கி வந்து கொண்டிருந்த இன்னொரு பரமனைக் காணோம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன