ஹர் ஹைனஸ் மகாராணியம்மா சொன்னாங்க : ”டாக்டர் ப்ரோவன், என் கையில் முதல்லே அம்மை குத்தி விடுங்க”.

நான் பிறந்த தினத்தில், லந்தன்பத்தேரியின் கிழக்கிலும், மேற்கிலும் ஓடும் சிற்றாறுகளில் தெளிந்த நீர் ஓடியது. தீவுக்காரர்களின் பேச்சு வழக்கில் அதை ‘தண்ணி மாறிடுச்சு’ என்பார்கள். பெரியாறு அதன் நீர்ப் பெருக்கில் கலந்த உப்பைக் கடலுக்கே திருப்பி அனுப்பும்போது இது நடக்கும்.

தொடர்ந்து வெள்ளத்தில் பெரும் இடப்பெயர்ச்சி உண்டாகும். சாத்தானின் அம்புமுனை போன்ற வாலோடு திரண்டிமீன் கூட்டங்கள் முதலில் சிற்றாற்றிலிருந்து புறப்பட்டுப் போகும். மேற்கோள் குறிகள் போல் சுருண்டிருக்கும் இறால்கள் நீர்ப்பரப்பில் நீண்ட வசனம் எழுதிப் போகும். அயிரை மீன், கணவாய் மீன், துறைமுகத்து முகப்பில் சீன வலைகளுக்குள் விழுந்து சாகும் சோம்பேறியான மடவை மீன்கள் எல்லாம் கிளம்பிப் போகும். சினை வைத்த கரிமீன்கள் மட்டும் தொலைவில் தண்ணீர்முக்கத்தில் இருந்து, நல்ல தண்ணீருக்குத் திரும்பும்.

வெள்ளப் போக்கு மடை மாறியதைக் கண்ட பையன்கள், பீரங்கி மைதானத்தில் வளர்ந்து நிற்கும் தூங்குமூஞ்சி மரங்களிலிருந்து சடசடவென்று புழையில் குதிக்கும் சத்தத்தைக் கேட்டேன். நான் கிடந்த நீரும் அமைதியாக இருந்தது. திடீரென்று அங்கே புயலடித்தது. அம்மாவின் குதிகாலில் புறப்பட்ட ஒரு நடுக்கம் என்னைச் சுற்றிச் சூழ்ந்து, கடந்து போனது. நாங்கள் இருவரும் ஒன்றே என்ற நிலை தகர்ந்தே ஆகவேண்டிய தருணத்தில் அம்மா ‘அம்மே’ என்று அலறினாள்.

இதே சமயம், எரணாகுளம் ஹஸூர் நீதிமன்றத்திற்கு முன், திருச்சூர் கலெக்டர் ராமகிருஷ்ணய்யா, திருவனந்தபுரம் – கொச்சி அரசுக்குச் சொந்தமான மோரிஸ் ஆக்ஸ்போர்ட் காரில் வந்திறங்கினார். கணையன்னூர் தாசில்தாரின் அறையில் முப்பது சொச்சம் பேர் – அம்மை குத்துகிறவர்கள், காயத்துக்குக் கட்டுப் போடுகிறவர்கள், மருந்து கலக்கும் கம்பவுண்டர்கள், சானிடரி இன்ஸ்பெக்டர்கள், பப்ளிக் ஹெல்த் ஆபீசர் – எல்லோரும் கலெக்டருக்காகக் காத்திருந்தார்கள்.

மலையாளத்தில் சரளமாகப் பேச முடியாத தன் இயலாமையை கிருஷ்ணய்யா சத்தம் போட்டுப் பேசுவது மூலம் தவிர்க்கப் பார்த்தார்.

”ஃபோர்ட் கொச்சி ஆர்.டி.ஓ அவர்களே, கணையன்னூர் வட்ட தாசில்தாரே, எரணாகுளம் நகரசபை பப்ளிக் ஹெல்த் ஆபீசர் அவர்களே, , மருந்து கலக்கும் அப்போதிகிரிகளே, அம்மை குத்துகிற உத்தியோகஸ்தர்களே, சகோதரர்களே”.

அப்போதுதான் அம்மை குத்துகிறவர்களில் ஒரு பெண்ணும் இருந்ததைக் கவனித்து அவர் தொடர்ந்தார்: ”அம்மை குத்துகிற அம்மாவே, அம்மை குத்தும் தங்கச்சியே, எல்லோருக்கும் வணக்கம்.

”ஒரு நூற்றிருபத்தைஞ்சு வருடம் முன்பு, ஈஸ்ட் இந்தியா கம்பெனியின் திருவிதாங்கூருக்கும் கொச்சிக்குமான ஒரே ரெசிடெண்ட், அதாவது அரசாங்க அதிகாரி இருந்தார். அவர்தான் கர்னல் மன்றோ. மன்றோ துரை. அந்தக் காலத்தில், வைசூரிக் கிருமிகள்..வைசூரி அணுக்கள் காற்றில் எங்கும் நிறைந்தன”.

எல்லா சப்தத்துக்கும் ஒரு எழுத்து உருவாக்க முயலும் மலையாளத்தில் அவர் பேச முற்பட, அது சமயத்தில் தடம் புரண்டு மென்மையான தமிழாகி இருக்கும்:

“அப்போள் நான் எந்தாணு பறஞ்சு வந்நது? திருக்கொச்சிக்கு ரெசிடெண்ட் ஒருத்தர். கர்னல் மன்றோ. கொச்சியில் வைசூரி தொற்றுநோயாகப் பரவின காலம். அம்மை வந்தா அது மாரியம்மன் விளையாடறான்னு அர்த்தம். மாரியம்மன் காவடி எடுத்து ஆடறா. ஹரஹரோ ஹரஹரோ. அப்படி சொன்னா, வைசூரி போகுமா? போகாது. வைசூரியை ஒழிக்க மருந்து வேணும். நம்ம ரெசிடெண்ட் துரை கர்னல் மன்றோ, கொச்சி அரண்மனையில் ராஜாங்க வைத்தியர் ப்ரோவன் துரை கிட்டே சொன்னார் : “ப்ரோவா, அக்கரை சீமையிலிருந்து வைசூரி தைலம்# கொண்டு வாங்கோ”. ப்ரோவன் டாக்டருக்கு ஒரே சிரிப்பு. ”கர்னலே, யாருக்காக வைசூரி தைலம் இங்கிலாந்திலே இருந்து வரவழைக்கணும்?

மலையாளத்தானுங்க எல்லாம் பயந்தாங்குளிகள். எறும்பு கடிச்சால் கூட வாய்விட்டு அழுவாங்க. அம்மை குத்தினா பொறுத்துப்பாங்களா? குத்தினா வலிக்குமேன்னு பயந்து இந்தப் பைத்தியங்களெல்லாரும் ஓடிப் போக மாட்டாங்களா”?

அப்போத்தான் கேட்டது அனந்தபுரம் அரண்மனையில் ஒரு ஃபீமேல் வாய்ஸ். ஒரு பெண்குரல். ராணி சேது பார்வதி பாய் குரல் அது. ஹர் ஹைனஸ் மகாராணியம்மா சொன்னாங்க : ”டாக்டர் ப்ரோவன், என் கையில் முதல்லே அம்மை குத்தி விடுங்க”.

”ராணி கையிலே அம்மை குத்தின ரெண்டு வடு விழுந்தது. ராஜ வம்ச ரத்தத்தில் வைசூரி தடுக்கற மருந்து கலந்தது. திருவிதாங்கூரிலே அம்மை குத்தறது ஜெயமாச்சு. கொச்சியிலே என் ஊர்க்காரர், அதாவது கோவை நகரத்துக்காரர், ஒரு வகையிலே எனக்கு மாமா உறவு, திவான் நஞ்சய்யா, ரெசிடெண்ட் மன்றோ துரை சொன்னபடிக்கு பத்து அம்மை குத்தற உத்யோகஸ்தர்களை உத்தியோகத்தில் நியமிச்சார். முதல்லே அம்மை குத்தறவங்க, அவங்க பின்னாடியே காயத்துக்குக் கட்டுப் போடும் டிரஸ்ஸர், அப்புறம் மருந்து கலந்து கொடுக்கும் அபோதிகரிகள், கடைசியா டாக்டர்கள். அம்மை குத்தற ஊழியர்களே, நீங்க தான் ஹெல்த் டிபார்ட்மெண்டை தொடங்கி வச்சவங்க. மலையாளிகள் எப்பவுமே சீக்கு பிடித்தவங்க. ஆகவே டிபார்ட்மெண்ட் மேன்மேலும் வளரட்டும்.

”போன வருஷம் சம்மர்லே, எரணாகுளம் காயல் தீவுகளிலே வைசூரி அம்மை போட்டு செத்துப் போனவங்க எத்தனை பேர் தெரியுமா? இருபத்து நாலு. எத்தனை பேர்?”

”இருபத்துநாலு”, அம்மை குத்துகிறவர்கள் சொன்னார்கள்.

”அந்தத் தீவுகளிலே இருக்கப்பட்டவங்க எல்லாம் முழுமூடர்கள். ரெண்டு மாசம் முன்னாடி பிப்ரவரியிலே தலையெண்ணி ஜனத்தொகை கணக்கெடுக்க அங்கே போன சென்சஸ் ஊழியர்களைப் பார்த்ததும் எல்லோரும் ஒரே ஓட்டமா ஓடிட்டாங்க. முதல்லே ஜனத்தொகை கணக்கெடுக்க வருவாங்க. பின்னாலேயே அம்மை குத்தறவங்க வருவாங்க. அதுதான் அவங்க பயம். சின்ன சின்ன தீவுகளிலே வைசூரிக் கிருமி வெளியே வர முடியாமல் அங்கேயே சுத்திக்கிட்டிருந்தது. பாட்டு பாடற பிரபலமான வித்வான் டைகர் வரதாச்சாரி மாதிரி மாரியம்மனுக்கும் பெரிய கூட்டம்னா ரொம்ப பிடிக்கும். கூட்டம் இல்லேன்னா கடுங்கோபம் ஏற்படும். சர்வநாசம்.

”மாரியம்மனை தடுக்க யாராலே முடியும்? அந்த மாரியம்மனைத் தடுக்க முடிந்தவங்க நீங்க. நீங்க மட்டும் தான். அம்மை குத்துறவங்களே, ஹெல்த் டிபார்ட்மெண்டில் முன்னணி உத்தியோகஸ்தர்களே. முளவுகாடு, பனம்புகாடு, கடமகுடி, பொன்னாரிமங்கலம், எடவனகாடு, போஞ்ஞிக்கர, ஞாறய்க்கல், பைப்பின், லந்தன்பத்தேரி, முளகுபாடம், முரிக்கில்பாடம், வல்லார்பாடம் அப்படி சகலமான இடங்களுக்கும் நீங்கள் செல்லுங்கள். ஜெயில்ஜெட்டி படகுத்துறையில் படகுகள் ரெடி. படகோட்டிகள் ரெடி. வீடு வீடாகப் போய்த் தேடுங்கள். ஒரு வீடு விடாமல் தேடுங்கள்.

“புதுசா பிறந்த ஒரு குழந்தையையும் விடக்கூடாது. பிரசவம் பார்க்கிற மருத்துவச்சிகளை முதலில் போய்ப் பார்த்து இனிமையாக கேளுங்கோ : ‘அம்மா, இங்கே புதிய பிரசவங்கள் ஏதும் உண்டோ?”. அவங்க சொல்லவில்லை என்றால் பயமுறுத்துங்கோ. பிறந்த குழந்தைகள் உண்டா என்று சோதனை போடுங்கோ. புது சிசுக்களுக்கு எத்தனை அம்மை குத்தணும்?”.

“ரெண்டு அம்மை குத்தணும்”, அம்மை குத்துகிறவர்கள் சொன்னார்கள்.

“குட்டிக் கையில் அம்மை ரெண்டு. இது அரண்மனை பிரபு பாலராம வர்மா கட்டளை இட்டபடிக்கு. இது இந்தியாவோட பிரதமர் ஜவஹர்லால் நேரு ஆணை”.

ராமகிருஷ்ணய்யா சொந்த விஷயம் பேசுகிற மாதிரிக் குரலைத் தாழ்த்திக் கொண்டார். “அம்மை குத்துறது நாம் கொடுக்கற அன்பு முத்தம். ஒரு தடவை தான் அரசாங்கம் அன்போடு வேதனை கொடுக்கும் : அம்மை குத்தும் பொழுது. அது நம் கருணையின் சின்னம். புதுசாகப் பிறந்த சிசுக்களைக் கண்டுபிடிக்க என்ன வழி, சொல்லுங்க பார்க்கலாம்?”

“கண்டுபிடிக்க என்ன வழி?”, அம்மை குத்துகிறவர்கள் கேட்டார்கள்.

“சிசுக்களோட லட்சணம் எது? அதுங்க செய்யற ஒரே ஒரு காரியம் எது?”

“அழுகை”. அழுதுகொண்டு இருக்கும் குழந்தைகளை மட்டும் பார்த்திருக்கும் அம்மை குத்துகிறவர்களின் நடுவே இருந்து பெண்குரல்.

“நோ நோ நோ. தப்பு. புதுசாப் பிறந்த சிசுக்களுக்கு ஒரே வேலை வெளிக்கி போறது. மலம் கழிக்கறது”

”மலம் கழிக்கறதா?”, ஆச்சரியத்தோடு அம்மை குத்துகிறவர்கள் கேட்டார்கள்.

“அதேதான்”, கலெக்டர் சொன்னார். “கழியறது, கழியறது, கழிச்சலோ கழிச்சல்”.

“கழிச்சலோ கழிச்சல்”, புத்தறிவு பெற்ற அம்மை குத்துகிறவர்கள் முழங்கினார்கள்.

“கழிச்சலோ கழிச்சல். ஹரஹரோ ஹரஹர. வீடுவீடாகப் போங்க. துவைத்த துணி காயப் போடும் கயிற்றுக் கொடிகளைக் கவனிச்சுப் பாருங்க. எங்கே சின்னக் குழந்தை உண்டோ, அங்கே கொடியிலே குட்டித் துணிகள். மாரியம்மன் திருமஞ்சன சேலை போல, குழந்தைத் துணி மஞ்சளோடி இருக்கும். அந்த வீட்டுக்கு உள்ளே போ. குழந்தை கையிலே அம்மை குத்து”.

அம்மை குத்துகிறவர்கள் நீதிமன்ற வளாகத்திலிருந்து படகுத்துறைக்குப் போனார்கள். அங்கே படகுக்காரர்கள் காத்திருந்தார்கள். ரெட்டைத் துடுப்போடு பதினெட்டு மச்சுவா படகுகள் வரிசையாக நின்றிருந்தன.

ஒற்றை வரிசையில் அம்மை குத்தும் அணி முன்னேறிப் போனது. ஆடி ஆடிப் போகும் ஒவ்வொரு படகிலும் ஒரு அம்மை குத்துகிறவர் உட்கார்ந்திருந்தார். சிறிது நேரம் கழிந்த போது, படகுகளின் அணி சிதறிப் போனது. ஒவ்வொரு படகும் அததற்காக ஒதுக்கப்பட்ட தீவை நோக்கித் திரும்பியது.

# வைசூரி தடுப்புமருந்து; வாக்சின்
—————————————————————————————-
என்.எஸ்.மாதவனின் மலையாள க்ளாசிகல் நாவல் ‘லந்தன் பத்தேரியிலெ லுத்தினியகள்’ – ஒரு சிறு பகுதி
தமிழ் மொழிபெயர்ப்பு : பீரங்கிப் பாடல்கள்
மொழிபெயர்ப்பாளர் : நான்தான்.
நாவல் வெளியீடு – கிழக்கு பிரசுரம்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன