என் நூல்கள் – முன்னுரைகள்

நாவல், சிறுகதை, குறுநாவல், கட்டுரைத் தொகுப்புகள் அச்சுக்குப் போகும்போது பின்னட்டை வாசகங்களை எழுதுவது வரம். பா.ராகவன் இதைப் பற்றி அவருடைய முகநூல் காலக்கோட்டில் (டைம்லைனில்) எழுதியதைப் படித்தபோது புத்தகங்களுக்கு முன்னுரை எழுதும் இதே போன்ற, கடினமான இன்னொரு பணி நினைவு வந்தது.

என் முதல் புத்தகமான சிறுகதைத் தொகுப்பு ‘தேர்’, அசோகமித்திரன் முன்னுரையோடு வெளிவந்தது. புத்தகம் பரவலான கவனத்தைப் பெற அந்த அற்புதமான முன்னுரையும் ஒரு காரணம்.

அதற்கு அடுத்த மெலிந்த சிறுகதைத் தொகுப்பு ‘ஆதம்பூர்க் காரர்கள்’ புத்தக்த்தில் முன்னுரை போட இடமில்லை. என்றாலும் சுஜாதா சுபமங்களாவில் நூல் விமர்சனம் எழுதி அந்தப் புத்தகத்தையும் பேசப்படச் செய்தார். அவரிடம் முன்னுரை வாங்கியிருந்தால் கூட அந்தக் கவன ஈர்ப்புக் கிட்டியிருக்காது.

அதற்கப்புறம் வந்த ‘முதல் ஆட்டம்’ சிறுகதைத் தொகுப்பு பதிப்பாளர் (நர்மதா பதிப்பகம்) ராமலிங்கம் எழுதிய முன்னுரையோடு வெளியானது. “நானே எழுதிட்டேன் சார்” என்றார் அவர். ”பரவாயில்லேங்க” என்று பதில் சொல்லிக் கடந்து போனேன்.

அதற்கு அடுத்து ’சிலிக்கன் வாசல்’, ‘ஐம்பது பைசா சேக்‌ஷ்பியர்’, ‘மந்திரவாதியும் தபால் அட்டைகளும்’ என்று நான்கைந்து சிறுகதைத் தொகுப்புகள் என்னுடைய முன்னுரையோடு வந்தன. ஒவ்வொன்றும் எழுதி முடித்து அனுப்ப முதலில் சிரமமாக இருந்தாலும், அடுத்தடுத்து வரவே பழகிவிட்டது.

தொடர்ந்து வந்த ‘சைக்கிள் முனி’ சிறுகதைத் தொகுப்பு மாலன் எழுதிய செறிவான முன்னுரையோடு வந்தது. அடுத்து ‘பத்து கதைகள்’ தொகுப்பு கலாப்ரியாவின் விரிவான முன்னுரையோடு வெளியானது.

அதற்கு அப்புறம், தற்போது வெளியாக இருக்கும் ‘மயில் மார்க் குடைகள்’ சிறுகதைத் தொகுப்பு வரை மீண்டும் நானே எழுதிய முன்னுரையோடு அச்சேறியவை.

நாவல்களில் ‘ரெட்டைத் தெரு’வுக்கு கிரேசி மோகன் முன்னுரை கொடுத்திருந்தார். அரசூர் வம்சம் பி.ஏ.கிருஷ்ணன் முன்னுரையோடு வந்த நாவல். பேசப்பட்ட முன்னுரை அதுவும். மற்ற அனைத்து நாவல்களுக்கும், அண்மையில் வெளியான ’ராமோஜியம்’ உட்பட நான் எழுதிய முன்னுரையோடு வெளியாகின.

’கொறிக்கக் கொஞ்சம் கம்ப்யூட்டர் சிப்ஸ்’ அறிவியல் கட்டுரைத் தொகுப்பு முன்னுரை கல்கி ராஜேந்திரன் அவர்கள் எழுதியது. ‘கம்ப்யூட்டர் கொஞ்சம் கலகலப்பு கொஞ்சம்’ ஞாநி முன்னுரையோடு வந்தது. ’ராயர் காப்பி கிளப்’ தொகுப்பு திண்ணை ஆசிரியர் கோ.ராஜாராம் எழுதித்தர வெளியானது. மற்ற அனைத்தும் நானே எழுதியவை.

புத்தகம் அச்சுக்கு அனுப்பும் முன் முன்னுரை எழுதிச் சேர்த்து அனுப்ப இப்போது பழகி விட்டது.
என்னிடம் முன்னுரை கேட்டு அணுகும் நண்பர்களின் படைப்புகளை முடிந்தவரை படித்து அவ்வப்போது எழுதுகிறேன். சமீபத்தில் முன்னுரை கோரிக்கைகள் கணிசமாக அதிகரித்திருக்கின்றன. சொந்த சோகமான அண்மை நிகழ்வு காரணமாக அந்த முன்னுரைகளை எழுத இயலாமல் போனதில் வருத்தம்தான்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன