1975 நாவலில் இருந்து – சீப்போடு வந்த யட்சி

1975 நாவல் வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

“எங்கே தேனீ வளர்க்கறீங்க? கிச்சன்லேயா? ”

நான் கேட்க, என் அறியாமையை எண்ணிச் சிரித்தாள் அந்தத் தலைவிரித்த கோல அழகி. அவள் சிரித்தபடி என் நாற்காலிக்குக் கீழே பார்க்க, பயந்து போய் சாடி எழுந்தேன். தேன் கூட்டில் உட்கார்ந்து கடி வாங்கி காலை அகல விரித்துக் கொண்டு நடந்து மீதி வாழ்க்கை கழியக் கூடாது. முக்கியமாகப் பாருகுட்டியையே கல்யாணம் செய்து கொள்ள நேர்ந்தால்.

யட்சி கையில் டார்ச் விளக்கோடு பின்கதவைத் திறந்து வாங்க என்று தலையசைத்துக் கூப்பிட்டாள்.

‘ஆத்தா, நான் பிள்ளை குட்டிக்காரன், சாமி வந்து என்னை அடிச்சு நிமித்திடாதே’ என்று வணங்கினார் கேஷியர். சமர்த்தாக அவளுக்குப் பின்னால் நாங்கள் நடந்தோம்.

தோட்டத்தில் ஒரு சிறு கூரை போட்டு ஒரு பெரிய பெட்டி போல அமைப்பு. அங்கங்கே சின்னச் சின்ன சதுரமாக ஓட்டை. நடுவில் பெரிய கதவு போல் ஒரு அமைப்பு. அது மூடி வைத்திருந்தது. மருந்துக்கு ஒரு தேனீயைக் கூட காணோம் எங்கேயும். கொல்லையில் தாழம்பூ பூத்த வாசம் காற்றில் கலந்து வந்தது. மார்கழிக் குளிர் காற்று. நான் மூச்சை உள்ளிழுத்தேன்.

“இதுக்குள்ளே தான் எல்லா தேனீயும் இருக்கு” என்றாள் பெட்டியைக் காட்டி.

“எத்தனை இருக்கு?”

ஒரு கூட்டம் என்றாள்.

“அப்படிச் சொன்னா எப்படி தாயீ? ஐநூறு? எழுநூறு?ஆயிரம்?”

கேஷியர் அடங்கவில்லை. கணக்கில் இருந்து பணம் எடுக்கும் யாருக்கும் அவர் கரன்சி நோட்டை ஒரு தடவைக்கு நாலு முறை எண்ணித்தான் தருவார்.

“நல்லவேளை சர்க்கார் நீளச் சதுரமா கரன்சி அடிக்கறதாலே பக்கத்துக்கு ஒண்ணா நாலு தடவைதான் எண்றார் நம்மாளு. அதுவே வட்டமா அப்பளம் மாதிரி கரன்சி நோட்டு போட்டிருந்தா எண்ணிக்கிட்டேயிருப்பாரு”.

பணம் எடுக்க வந்த எலக்ட்ரிசிடி போர்ட் லச்சுமணன் ஒரு தடவை சொன்னார். ஊரைக் கடந்து மாவட்ட அளவில் பரவிய பகடி அது.

எப்படி ராணித் தேனீயை முதலில் உள்ளே இருத்தியது, சிப்பந்தித் தேனீக்கள் தானே உள்ளே அடைந்தது எப்படி, என்ன ஆகாரம், தேனடை உள்ளே இருப்பது எங்கே, எப்படிப் பராமரிப்பது, தேன் எப்படி எடுப்பது, சுத்தப்படுத்துவது எப்படி, கூட்டுறவு சங்கத்துக்கு என்ன விலைக்கு விற்பார்கள் என்று தேனீ வளர்ப்பு பற்றிய சகல தகவலையும், தலையில் சீப்பைச் செருகிக்கொண்டு, வகுப்பு எடுப்பதுபோல் சொன்னாள் பாருகுட்டி.

தேனீ வளர்த்து, தேன் எடுத்து விற்றால் மாதம் ஆயிரம் ரூபாய் வரை வருமானம் கிடைக்கும். செலவு மாதம் இருநூறு ரூபாய்க்குள் முடிந்து விடும் என்றாள் அவள் விளம்பரப் படத்தில் ஆஸ்ப்ரோ டாக்டர் மாதிரி. கேஷியர் கூட இல்லாமல் இருந்தால் அவள் கையைப் பிடித்துக் குலுக்கியிருப்பேன்.

“இந்த தேனீக்கெல்லாம் என்ன தீவனம் தினம் போடுவீங்க? எவ்வளவு தடவை போடணும்?” கேஷியர் விசாரித்தார்.

இவருக்கு பதிலாக மேனேஜரையே கூட்டி வந்திருக்கலாம் என்று தோன்றியது.

”மோளே”.

உள்ளே இருந்து சத்தம் கேட்க, “வரேன் இருங்க” என்று உள்ளே போனாள் அவள். குட்டிச்சாத்தான் குட்டிச்சாத்தானாக கருப்பு நிறத்தில் கூடத்தில் ஓர் ஓரமாக ஏதோ நெட்டக்குத்தலாக உட்கார்த்தி வைத்து, மேலே அரைகுறையாக அழுக்குத் துணியால் மூடியிருந்ததைப் பார்த்தோம். எதுக்கும் விலகியே இருங்க என்று அது பக்கம் ஆர்வமாகப் போன கேஷியரை எச்சரித்தேன்.

”லோன் கொடுக்க வந்தால் வந்தோம் கொடுத்தோம் என்று இருக்க வேண்டும். ரொம்ப இழைந்தால் ஓரமாகக் கிடத்திய குட்டிசாத்தான்களின் ஒன்றை வளர்க்க எடுத்துப் போகச் சொல்லி விடக்கூடும்”.

“மோளே, வாசல்லே ரெண்டு ஜோடி செருப்பு கிடக்கே. ஆரு வன்னதா?”.

வாசலில் எங்கள் காலணிகளைப் பார்த்து விட்டு கூப்பிட்டபடி உள்ளே வந்த நாயர் நாங்கள் தேனீ வளர்க்கும் இடத்தில் சந்தேகத்துக்கு இடமான நிலையில் திரிந்து கொண்டிருந்ததைக் கூர்ந்து பார்த்தார். அடுத்து, கூடத்தில் துணி போட்டு நிறுத்தியிருந்த கருப்பு வடிவங்களையும் நோக்கினார்.

“வாங்க, வாங்க” என்றபடி அந்தக் களிமண் சிலைகளை நடுவாக நகர்த்தினார்.

“இது என்னங்க?” நான் கேட்டேன்.

“காவிலே நாகர் சிலையெ அடுத்து வைக்கறது. இங்கே ஐயனார் கோவில்லே மண்குதிரை வைக்கற மாதிரி” என்றார் அவர்.

குதிரை என்றால் குறைந்த பட்சம் நாலு காலாவது இருக்க வேண்டாமோ? இப்படி அடர்கறுப்பில் இவர் என்ன பிடித்து வைத்திருக்கிறார்?

அவர் முழுப் பாதுகாப்பாக ஜமுக்காளத்தைப் போட்டு அவற்றை மூடிவிட்டு எங்கள் பக்கம் அசட்டுச் சிரிப்போடு வருவதற்குள் சீப்போடு போன யட்சி, ”அம்மாவுக்கு இடுப்புப் பிடிப்பு, நானே போட்டேன்”, என்றபடி இரண்டு காப்பி டம்ப்ளர்களோடு மறுபிரவேசம் செய்தாள்.

குடித்துப் பார்த்தேன். அவளோடு நாளை மறுநாள் சாயந்திரம் ஊருணிக்கரையில் சிட்டை ஸ்வரம் கல்பனா ஸ்வரத்தோடு வசந்தா ராகத்தில் குதித்துக் குதித்துப் பாடியபடி காதலிக்கும் கற்பனைக்கு உடனடியாகத் தடைச் சட்டம் கொண்டு வந்தேன்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன