இருபது அம்சத் தேனீக் கணக்கு – 1975 நாவலில் இருந்து

இருபது அம்சத் தேனீக் கணக்கு
————-
“தேனீ வளர்ப்பு .. கேளு நாயர் அப்ளிகேஷன் நேத்துதான் வந்தது”.

“நீங்களும், கேஷியர் கருப்பையாவும் சாயந்திரம் போய் அவர் என்னத்தை வளர்க்கறார், என்ன வருமானம் கெடைக்கும், எப்போ கிடைக்கும்னு எல்லாம் தெரிஞ்சுக்கிட்டு வாங்க. அப்ளிகேஷனை அப்புறமா பார்க்கலாம். அக்ரிகல்சர் ஆபீசர் அடுத்த வாரம் வருவார். அவர் கிட்டேயும் கேட்டுக்கலாம். லீட் பேங்க் மீட்டிங் இருக்கு. நான் கிளம்பறேன்”. மேனேஜர் புறப்பட்டுப் போனார்.

சாயந்திரம் ஸ்கூட்டரைக் கிளப்பிக் கொண்டு வந்து கேஷியரைப் பில்லியனில் உட்கார வைத்து ஓட்டத் தொடங்கும் முன் அவர் ரகசியம் சொன்னார்:

“கீழே அடிபட்டு ஒரு மாசம் படுத்திருந்தேன். கொஞ்சம் மெல்லவே போங்க. கைகால்னா பாத்துக்கலாம். வெதர் சமாசாரமாச்சே”.

அவருடைய ஹைட்ரோசில் பயங்கள் இல்லாமல் செய்ய வண்டியை ஊர்கிற வேகத்தில் நகர்த்திப் போக, நாலாம் கியரில் ஓட்டிப் பழக்கப்பட்ட லாம்ப்ரட்டா ஸ்கூட்டர் விட்டுடுடா என்னை என்று கேவி அழுது, அமுதா டூரிங் டாக்கீஸ் பக்கத்தில் நின்றே விட்டது.

“பனி இல்லாத மார்கழியா?” என்று டி எம் சௌந்தர்ராஜன் இலக்கில்லாமல் விசாரிக்கும் பாட்டு முடிந்து நியூஸ் ரீல் போடுகிற சத்தம். சாத்தப்பன் ஊருணிக் கரையில் இருட்டும் காற்றும் கலந்து வந்து கொண்டிருந்தது. இன்னும் இருநூறு மீட்டர் போனால் கேளு நாயர் வீடு.

“வண்டியை உருட்டிட்டுப் போயிடலாமா?”, கேஷியரைக் கேட்டேன்.

“வேணாம், விட்டுக்கிட்டே போயிடலாமே?”

“உங்களுக்கு எங்கேயாவது படாத இடத்திலே பட்டு வீங்கிடுச்சுன்னா? ஏற்கனவே அடிபட்டு படுத்திருந்திருக்கீங்க”

“அது இருபத்தைஞ்சு வருஷம் முந்தி, நான் ஏழாம் கிளாஸ் படிச்சபோது”.

வண்டியைப் பேய் உதை உதைக்க அது கூச்சலிட்டுக் கொண்டு புறப்பட்டது.

தென்னோலை வேய்ந்து நிரந்தரமாகப் பந்தல் போட்ட கேளு நாயர் வீட்டு வாசலில் ஸ்கூட்டரை நிறுத்த, நான்கு நாய்கள் பாதையைக் கடந்து ஓடின. வாசல் கதவு மட்ட மல்லாக்கத் திறந்திருக்க உள்ளே கொல்லைப் புறம் வரை தெரிந்தது. ஒருத்தர் கூடத் தட்டுப்படவில்லை வீட்டில் எங்கேயும்.

“இந்த வீடுதானா?” கேஷியர் மீண்டும் கேட்டார்.

“ரொம்ப நாள் முந்தி வந்திருக்கேன்” என்றேன்.

“தேனீக்கு ராத்திரி கண்ணு தெரியுமோ?” அடுத்த கேள்வியை எடுத்து விட்டார் அவர். எனக்குப் பதில் தெரிந்திருந்தால் நான் அப்படியே ஸ்கூட்டரைக் கிளப்பிக் கொண்டு திரும்பியிருப்பேன். ரைட் ராயலாக நுழைந்திருப்பேனா.

உள்ளே பூ மணமும், முட்டை அடித்து ஊற்றித் தோசை சுடும்போது ஓரம் கருகின வாசனையும், கூடை போட்டுக் கவிழ்த்து ஓரமாக வாசலில் வைத்த கோழிகளில் இருந்து கிளம்பிய திவ்விய சுகநத வாடையும் சேர்ந்து எழுந்தது.

“அம்மாவா”, நான் தான் கூப்பிட்டேன்.

“அவங்க அம்மா எதுக்கு வரணும்? நாயரைக் கூப்பிடுங்க” என்று மொழிக் குழப்பத்தை விதைத்தார் கேஷியர்.

“அம்மாவன் அப்படீன்னா மாமன்”, அவருக்குச் சொல்ல, “அவர் மகளை என்ன கூப்பிடுவீங்க?” என்றார் ஆர்வமாக. அவளை எதுக்குக் கூப்பிடணும்?.

ஆனாலும் குட்டிப் பிசாசு மாதிரி பாருகுட்டி (பாருக்குட்டி இல்லை, பாருகுட்டி) தான் உள்ளறையில் இருந்து வெளியே வந்தாள். தலைமுடியை விரித்து விட்டிருந்தாள். கிட்டத்தட்டத் தரை வரை அது தட்டிக் கொண்டே வர, கண்ணை வேறே அகட்டி ஒரு முழு ஐடெக்ஸ் டப்பி கண்மையை வழித்துப் பூசிக் கருப்பாக்கி வந்து அவள் விழித்தாள். அடி வயிற்றில் பயம் தான் எட்டிப் பார்த்தது. அவள் வேண்டுமானால் காதல் பார்வை என்று நினைத்திருக்கலாம்.

”இப்பத்தான் வழி தெரிஞ்சுதா?” அவள் என்னைச் சம்பிரதாயத்துக்குக் கேட்க, “அப்ளிகேஷன்லே வீட்டு விலாசம் இருந்துச்சு, எடுத்து வர மறந்து தியேட்டர் பக்கம் போயிட்டோம்” என்று படு சீரியஸாக கேஷியர் பதில் சொன்னார்.விதி

”அச்சன் முத்துப்பட்டி போனாரு. இன்னும் வரலை. வர்ற நேரம் தான். அம்மையை காப்பி எடுக்க சொல்லட்டா?”

எடுக்கட்டும் என்றேன். ’அதை எடுப்பானேன், போட்டாப் போறாதோ?’ என்று கேஷியர் அவள் உள்ளே போகத் திரும்பியதும் கேட்க, சுருக்கமாக ’மொழி’ என்றேன். இவரை இந்த நாய், பூனை, பாருகுட்டி, வாத்து, வான்கோழி உலகில் விட்டுவிட்டுத் தப்பிப் போய்விடலாம் என்று தோன்றியது.

பின்னால் இருந்து பார்க்க, பாருகுட்டி ரம்யமான யட்சி போல தெரிந்தாள். இவளை இவ்வளவு தலைமுடியோடு கல்யாணம் செய்து கொண்டு எப்படி ராத்திரியில்.

மனதைத் தறிகெட்டுப்போக விடாமல் நெகேஷன் ஆஃப் நெகேஷன், க்வாலிட்டி சேஞ்ச் பற்றி எங்கேல்ஸ் சொன்னதை நினைவு கூர்ந்தேன். பாரு பாரு என்றார் எங்கேல்ஸும். கெப்ளர் தியரம் அடுத்து நினைவில் வர, கிண்ணென்று கையில் சிடுக்குவாரிச் சீப்போடு வந்தாள் பாருகுட்டி.

நாங்கள் வாசல் முன்னறை நாற்காலிகளில் உட்கார்ந்ததுமே ஏதோ கடிக்க உணர்ந்து துள்ளினோம். கேளு நாயர் மற்ற உயிரினங்களோடு, மூட்டைப் பூச்சியும் சிறு அளவில் வளர்த்து வருவதாகத் தெரிந்தது.

“அது போன மாசம் நிறைய இருந்து மருந்து அடிச்சுக் கொலை செஞ்சாச்சு. இன்னும் கொஞ்சம் இருக்கு. அதுவும் இன்னிக்கு ராத்திரி போய் ஒழிஞ்சுடும்”.

தலை கலைத்து வாராமல் விட்ட யட்சிக் களையோடு அவள் சொல்ல, “இன்னிக்கா பௌர்ணமி?” என்று திடீரென்று சந்தேகம் கேட்டார் கேஷியர்.

நான் அமாவாசை, பவுர்ணமி எல்லாம் இருபத்தைஞ்சு அம்சத் திட்டத்துக்குக் கிடையாது என்று சொல்ல, பாருகுட்டி சிவந்த நாக்கைத் துருத்திக் காட்டினாள். இன்னும் ஒரு மணி நேரம் அவளுடைய சார்ம் அஃபென்ஸிவ் ஆன அழகுத் தாக்குதலுக்கு ஆட்பட்டால் என்னை அவள் தலைமுடிக்குள் பிடித்துப் போட்டு, ஈரோடும் பேனோடும் இருட்டுச் சிறை பிடித்துவிடுவாள்.

”எதுக்கு லோன் அப்ளை பண்ணியிருக்கீங்க?”

கேஷியர் கேட்க, பாருகுட்டி தொண்டையைக் கனைத்துக் கொண்டு சும்மாதான் என்றாள். சும்மா எல்லாம் பேங்க் கடன் கிடைக்காது என்று அவர் சொல்ல, திட்டப்படியான லோன் என்றாள் அவள்.

என்ன திட்டம் என்று கேஷியர் விடாமல் பிடித்தார். சளைக்காமல், ரேடியோ நாள் முழுக்கப் பாடும் பாடலைப் பாடத் தொடங்கினாள் பாருகுட்டி :

’இருபதம்சத் திட்டம் அது இந்தியாவின் சட்டம், நம் இந்தியர்க்கு மட்டும், இனி இன்ப வாழ்வு கிட்டும்’

இவ்வளவு அபத்தமாக ஒர் அரசு விளம்பரம் எப்போதுமே வெளியானதில்லை. பாருகுட்டியின் பாட்டை பாதியில் நிறுத்தினேன்.

“தேனீ வளர்ப்புக் கடன் தொகையை என்ன செய்வீங்கன்னு கேட்கறார்”, விளக்கினேன்.

“செலவு செய்வேன்” என்று கச்சிதமாகப் பதில் சொன்னாள் பாருகுட்டி.

(என் நாவல் 1975-இல் இருந்து ஒரு சிறு பகுதி)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன