வெள்ளையும் செள்ளையுமா உட்கார்ந்தவர்கள் – 1975 நாவலில் இருந்து

சீக்கிரம் போகலாம் என்று எட்டு மணிக்கே ஆபீஸ் படி ஏறினேன். நேற்று டாக்குமெண்ட் கைரேகைப்படுத்திய பெரிய கூட்டம் பணம் வாங்கிப் போகக் காத்திருக்கும் என்று நினைத்ததற்கு மாறாக ஒருத்தர் கூட அங்கில்லை.

“சாயந்திரம் நாலு மணிக்கு அரண்மனை வாசல்லே வச்சு லோன் கொடுக்கறாப்பல” என்றார் சைக்கிளில் வந்து இறங்கிய மெசஞ்சர் பழநி.

’போல’ என்பது ’போல தெரியுது’ என்பதன் குறுவடிவம் என்று தோன்றியது. அது எதற்காக எல்லா வாக்கியத்தையும் ’போல’, ’போல’ என்று பூசி மெழுகி முடிக்க வேண்டும் என்று புலவர்கள் தான் சொல்ல வேண்டும்.

நான் சும்மா சிரித்துக் கொண்டிருந்தபோது பழநி “ஸ்வீப்பர் வந்துட்டாங்களா, சார்?” என்று கேட்டார். ஓரமாக பூந்துடைப்பத்தால் சாவதானமாகப் பெருக்கிக் கொண்டிருந்த சவுந்தரம்மா “ஆஜர்” என்று சொல்லி ஒரு சல்யூட் அடித்தார்.

பழநி கடைநிலை ஊழியர் என்றால் ஸ்வீப்பர் சவுந்தரம்மா கடைநிலைக்கும் கடைப்பட்ட உத்தியோக அடுக்கில் இருப்பவர். ஆனால் என்ன, பேங்க் சம்பளம் அவருக்கும் உண்டு.

“ஸ்வீப்பரம்மா போய் சூடா ரெண்டு டீ மாயளகு கடையிலே வாங்கிட்டு வந்துடுங்க. அப்படியே ஒரு பாக்கெட் பிஸ்கட்டும். சார்ஜஸ் போட்டுத் தரேன்னு சொல்லுங்க”.

ஸ்வீப்பரம்மா விளக்குமாறைத் தூக்கியபடி ஒரு வினாடி நின்றார்.

“இன்னொரு டீ சாருக்கு. நேத்து புதுசா வந்திருக்கார்” என்று அவருடைய புரிந்து கொள்வதற்காகச் சொன்னார் பழநி.

“அவுகளையும் தெரியும், அவுக அப்பாரையும் தெரியும், எனக்கு கூடப் பொறக்காத தம்பி இவங்கப்பாரு. இவனுக்குப் பொறந்து ரெண்டு மாசம் வரை வெதைக்கொட்டை ஏறிப்போய் இளுத்து வச்சு மருத்துவம் செஞ்சது யாரு? எங்க ஆம்பளையாளு. எங்க வீட்டுக்கு வந்தா இந்தப் பயலுக்கும் உனக்கும் தேத்தண்ணி காச்சி தருவேன். ஆனா, யாருக்கும் டீ வாங்க இப்போ போகமாட்டேன். ஆபீஸை யார் பெருக்க? நீ பண்ணுவியா? இல்லே ஜெயலச்சுமி வந்து செய்வாளா?”

பழநி ஒரு அசட்டுச் சிரிப்போடு என்னிடம், ‘ஜெயலட்சுமி என் பொண்ஜாதிங்க. கிளவி ஒரு மார்க்கமா பதில் சொல்லுது. கண்டுக்காதீங்க” என்றார். பழநியே சீக்கிரம் ரிடையர் ஆக வேண்டிய நபர். சவுந்தரம்மாவை கிழவி என்று அவர் அழைக்க சிறப்பு தைரியம் தேவைப்படும்.

நான் என் மேஜையைத் திறக்க முயற்சி செய்து கொண்டிருந்தேன். சாவி துளையில் போய் திரும்பவும் மாட்டேன், வெளியே வரவும் மாட்டேன் என்று மக்கர் பண்ணிக் கொண்டிருந்தது.

இந்த ஊருக்கு வராமல் மதறாஸில் இருந்து இங்கே பக்கத்தில் மதுரை, சிங்கம்புணரி, புலியடிதம்மம் என்று மாற்றல் வாங்கிப் போயிருந்திருக்க வேண்டும். யாரும் பழங்கதை, உறவு முறை என்று நினைவு வைத்துக்கொண்டு போடா பயலே என்று தலையில் தட்டிவிட்டுப் போயிருக்க மாட்டார்கள். ஊர் முழுக்க, பேங்க் முழுக்க நம்ம சனம் என்பது ஒரு விதத்தில் நிம்மதி தரும் என்றாலும், அந்தரங்கம் என்று ஒன்று இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. விதைக்கொட்டை வெளியே தெரிகிற மாதிரி தோணுதல்.

அந்தரங்கம் கிடக்கட்டும், எனக்கு என்று ஒதுக்கிய மேஜையைக் கூடத் திறந்து என்னுடையது என்று எதையும் வைக்க முடியவில்லை. நாற்காலி வேறே ஆடுகிறது.

யாரோ உள்ளே வந்தார்கள். வேட்டியை கிட்டத்தட்ட உள்ளாடை தெரிய மடித்துக் கட்டிக் கொண்டு கரளை கரளையாகக் கையும், முறுக்கு மீசையுமாக விழித்துப் பார்த்தபடி வந்தவர் ஒருத்தர் கவுண்டருக்கு அந்தப் பக்கம் வாசலில் இருந்து மறுகோடி வரை மெல்ல நடந்தார். திரும்பவும் அதேபடி நடந்தபோது என்னை முறைத்து, பழநியையும் துச்சமாகப் பார்த்தார். மூன்றாம் முறை மறுகோடிக்கு ஏதோ சடங்கு சம்பிரதாயம் போல நடந்தவரை வழிமறித்து ஸ்வீப்பரம்மா “என்ன வேணும்?” என்று ஃபேனை சுவிட்ச் ஆஃப் செய்தபடி விசாரித்தார்.

“லோன் தருவீங்களா?” க்ரீச் என்று தகர சிலேட்டில் சாக்பீஸ் எழுதினது போல கீச்சிட்டார் வந்த பிரமுகர்.

“இன்னிக்கு இல்லே” என்று வேண்டா வெறுப்பாகச் சொன்னார் பழநி.

வந்தவர் என்னை ஒரு வினாடி பார்க்க, நான் மேஜையை வெற்றிகரமாகத் திறந்தபடி இல்லை என்று தலையாட்டினேன்.

“ஏன், வெள்ளையும் செள்ளையுமா உடுத்திக்கிட்டு சும்மாத்தானே உக்காந்திருக்கீங்க? குடுத்தா என்ன கொறஞ்சா போயிடுவீங்க?”.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன