கல்யாண விசாரிப்பு – 1970 நாவலில் இருந்து ஒரு சிறு பகுதி

யாராரோ சலிக்காமல் ஒவ்வொருத்தராகப் பார்த்து, சிரித்து “வாங்க” என்று வாசலில் நுழையும் ஒவ்வொருத்தரையும், குழந்தைகள் உட்பட தனித்தனியாக வரவேற்றார்கள். மேனேஜர் அப்படி அழைத்த ஒவ்வொருத்தருக்கும் ஒரு தடவை “ஆமா” என்று வரவேற்பை அங்கீகரித்தார்.

நாங்களும் ஆமா சொல்லியபடி உள்ளே போக, மெட்றாஸ் பிலிம் பெஸ்டிவல் ஜப்பானியத் திரைப்படங்கள் நினைவு வந்தன. குனிந்து வளைந்து பொறுமையாக வரவேற்று நன்றி சொல்லும் சமூகம் அது.

”ஒரு பத்து நிமிசம் காத்தாட உக்காருங்க. சின்னப் பிள்ளைங்க பலகாரம் தின்னுக்கிட்டிருக்கு”.

பழுத்த பழமாக ஒரு ஆச்சி இரண்டு கையும் குவித்து வணங்கி வாசல் பந்தலில் உட்காரக் கைகாட்டினாள். கூடவே வந்த முதியவர் அவுக வீட்டுக்கார செட்டியாராகத்தான் இருப்பார்.

“பள்ளிக்கூடம் முடிச்சு வெளயாடிட்டு பிள்ளைங்க வந்து சேர கொஞ்சம் சொணங்கிடுச்சு. இதோ பலகாரம் தின்னு முடிக்கற நேரம்தான்”

செட்டியாரும் மன்னிப்புக் கேட்கும் தொனியில் சொல்ல, மேனேஜர் கைகாட்டி ஆதரவாகக் கூறினார் :

“அதுக்கென்ன, ஆபீசெல்லாம் எடுத்து வச்சுட்டுத்தான் வந்திருக்கோம். நேரம் சென்னா ஒரு கயிஷ்டமும் இல்லே.. அய்யா நீங்க?”

“நான் சொக்கலிங்கம். சூரத்திலே சொக்கு ஃபைனான்ஸ்னு லேவாதேவி கடை வச்சிருக்கேன். சுப.கண அவுகளுக்கு அண்ணன்முண்டி உறவு நம்ம ஆச்சி”.

“அப்படியா? நான் பேங்கு ஏஜெண்ட்”

பரஸ்பர அறிமுகம் முடிந்ததும் மேனேஜர் கேட்டார், “சூரத் எல்லாம் எப்படி இருக்கு?”

“ஏன் கேக்கறீங்க, கயிஷ்டப்படறவன் கயிஷ்டப்பட்டுட்டுத்தான் இருக்கான். சுகப்படறவன் சுகமாத்தான் இருக்கான். இங்கே அதிகாரத்திலே இருக்கறவங்க கொஞ்ச இதமா பதமா நடந்துப்பாங்க. அங்கே அப்படி இல்லே. அதான் வித்தியாசம். இப்படி நல்லபடிக்கு ஊரை அழச்சு சிறுசு பெரிசுன்னு பார்க்காம கல்யாணத்துக்கு விருந்து வைக்கறது அங்கே கொஞ்சம் கயிஷ்டம். ஏற்கனவே அப்படித்தான். எமர்ஜென்சியிலே கூடியிருக்கு”.

அவர் சொன்னது எனக்குப் புதிய விஷயமாக இருந்தது. வீட்டு விசேஷம் என்று என்ன நடத்தினாலும் இருபத்தைந்து பேருக்கு மேல் கூப்பிட்டு விருந்து வைக்க தடை இருக்கிறதாம். நாடு முழுவதற்குமான தடை என்றாலும் அவர் மாநிலத்தில் அவ்வப்போது அதை நடப்பில் கொண்டு வருகிறார்களாம். கல்யாண விருந்து எதுவும் ஓஹோ என்று நடக்கிறதில்லையாம். ஏற்கனவே எமர்ஜென்சிக்கு நூறு கோணல். இதுவும் அதிலே சேர்கிறது என்று சிரித்தார் சொக்கு செட்டியார்.

”கோதுமை, அரிசி, சர்க்கரை எல்லாத்துக்கும் தட்டுப்பாடு இருந்த சீன யுத்த காலத்துலே கெஸ்ட் கண்ட்ரோல் ஆக்ட் வந்தது, அடுத்து பங்களாதேஷ் யுத்தம் முடிஞ்சு இப்போ எமர்ஜென்சியிலும் அது உண்டு. நிலைமை முன்னைக்கு இப்போ எவ்வளவோ பரவாயில்லே ஆனாலும் சட்டம் இன்னும் இருக்கு. தெற்கிலே அதை பொதுவா அமல் படுத்தறதில்லே. கிழக்கிலே வங்காளத்திலும் அப்படித்தானாம். தில்லியிலே கூட கிட்டத்தட்ட அதான் கதை. ஆனா மேற்கிலே என்னமோ அப்படி இல்லை”.

பள்ளிக்கூடக் குழந்தைகள் சாப்பிட்டுப் போனபின் ஈரம் உலரும் ஹாலில் வரிசையாக இலை போட்டுக் காத்திருந்தார்கள்.

போட்டி வங்கி சகாக்களும் நாங்களும் ஒரே பந்தியில் இருந்து சாப்பிட்டோம். இனிப்பு, கந்தரப்பம், வெள்ளைப் பணியாரம், சொதி, இட்லி, உளுந்து வடை என்று அடுத்தடுத்து வந்து கொண்டே இருக்க, ஓடி ஓடி உபசரித்தார்கள்.

“கேட்டுப் போடுங்க .. கேட்டுப் போடுங்க” என்று பரிமாறுகிறவர்களிடம் சதா சொல்லிக் கொண்டு சொக்கு செட்டியார் பந்திவிசாரிப்பு செய்தபடி நடந்தார். எதுவும் வீணாகாமல் இருக்க வேண்டும் என்ற கரிசனம் தெரிந்தது.

பசியாறிய பிறகு பூவும் மஞ்சள் அரிசியும் இரைந்து கிடந்த பெரிய ஹாலில் நாலைந்து பெரிய பத்தமடைப் பாய்கள் விரிக்கப்பட்டன. நாங்கள் ஒரு பக்கமும், எதிரில் மற்ற பேங்க் கூட்டமுமாக உட்கார்ந்தோம். சம்பந்திகள், கல்யாண தம்பதி அடுத்து வந்து நடுவே உட்கார்ந்தார்கள். ஒரு நாற்காலியும் இல்லாத சூழல் அது. எல்லோரும் தரையில் தான் கால் மடித்து உட்கார்ந்திருந்தோம்.

மணமக்களுக்கு வாழ்த்து, நன்றி என்று சாங்கோபாங்கமாக பத்து நிமிடம் போக, மேனேஜர்கள் இரண்டு பேரும் கொண்டு வந்த பரிசுப் பொருட்கள் அவர்களுக்குத் தரப்பட்டன. இரண்டு மேனேஜர்களுமே ஆளுக்கு நூற்று ஒரு ரூபாய்க்கு கிஃப்ட் செக் உருட்டி உருட்டி எழுதி பெரிய கட்டைப் பேனாவால் கையெழுத்து போட்டு மங்கிய பூப்போட்ட கவர்களில் பேங்க் முத்திரையோடு எடுத்து வந்திருந்தார்கள். அங்கே குவிந்திருந்த பரிசுப் பொருட்களைப் பார்க்க, இது ஒன்றுமே இல்லை என்று தோன்றியது.

மரியாதையோடு எழுந்து நின்று எங்கள் கைதட்டலுக்கு இடையே மணமக்கள் கிஃப்ட் செக்குகளை வாங்கி, முகத்தில் மகிழ்ச்சியைக் காட்டி, பெரியவர்களிடம் கொடுத்து விட்டு திரும்ப வணங்கி உள்ளே போனார்கள்.

“ இனிமேல் தான் விசேஷம்” என்றார் கேஷியர் கருப்பையா. ’சோ. நா. அரு. தங்கநகை வியாபாரம், கோலாலம்பூர்’ என்று போட்ட மஞ்சள் துணிப்பைகளோடு உள்ளே இருந்து இரண்டு வீட்டு மூத்த பெண்மணிகளும் வந்தார்கள். நிறைந்து வழிந்த துணிப்பைகள் அவை.

பொதுவில் அந்தப் பைகளைக் கவிழ்த்துக் கொட்டி ஆளுக்குக் கொஞ்சமாக எண்ணி தொகை சொல்லி வீட்டுப் பெரியவர் சொக்கு செட்டியாரிடம் ஒப்படைத்தோம். ஐந்தே நிமிடத்தில் அதெல்லாம் எண்ணப்பட்டு மொத்தத் தொகை கணக்கிடப்பட்டட்டது. சரிசமமாக இரண்டாக அது பிரிக்கப்பட்டது.

“இப்பதிக்கு ஒரு வருஷம் ரெண்டு பேரும் பிக்சட் டெபாசிட்லே போட்டுக்குங்க”.

மேனேஜர் கேஷியரிடம் “கல்யாணப் பத்திரிகை கொண்டு வந்திருக்கீக தானே” எனக் கேட்க, நான் விழித்தேன். கல்யாண வீட்டுக்குப் போக கல்யாணப் பத்திரிகை எதற்கு அட்மிஷன் கார்டு போல. அதற்குள் போட்டி பேங்க் மேனேஜர் அவர் கைப்பையில் இருந்து ஒரு அழைப்பைக் கொடுத்தார். மேனேஜர்கள் மேனேஜர்கள் தான். யாருடைய நிர்வாகியானால் என்ன?

முப்பத்துரெண்டாயிரத்து முன்னூற்று ஏழு ரூபாய் புது மணத் தம்பதிகளின் பெயரில் ஒரு வருடம் நிரந்தர வைப்புக் கணக்கில் ஏற்றி நான் ரசீது எழுதினேன். மேனேஜர் கையொப்பம் இட, பிளாஸ்டிக் உறையில் வைத்து அதை மேனேஜர் மரியாதையோடு அவர்களிடம் நீட்டினார். “இன்னும் நிறைய வரணும்” என்று கோரிக்கையும் வைக்கப்பட்டது.

இன்னொரு ப்ளாஸ்டிக் உறை.

“இன்னும் நிறைய வரணும்”, மேனேஜர் சொன்னார். ஆமா என்றார் மற்றவர்.

நாங்கள் எழுந்தோம். இரண்டு கேஷியர்களும் தோல்பையில் பத்திரமாகப் பணத்தை எடுத்து வைத்தபடி சிரித்துப் பேசிக்கொண்டு வந்தார்கள்.

”வேறே பேங்க் வந்துதுன்னா மூணா பிரிப்பாங்களா?” நான் ரவீந்திரனைக் கேட்டேன்.

“இங்கே இந்த ரெண்டு பேங்க் தான் ரெண்டு தலைமுறையா தொழில் நடத்தறது. இவங்களைத் தவிர வேறே யாருக்கும் டிபாசிட் இல்லே”.

“தாம்பூலம் வாங்கிட்டுப் போகலாம், வாங்க”

ஒருத்தர் வந்து அழைத்தார். உள்ளே ஆளோடியை ஒட்டி இருந்த பெரிய ஒரு அறைக்கு எல்லோரும் போனோம். அங்கே பாத்திரக்கடை போல ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் வாளிகளை வரிசையாக வைத்திருந்தார்கள். ஒவ்வொன்றும் குறைந்தது இரண்டு லிட்டராவது பிடிக்கும் எவர்சில்வர் பக்கட்கள் அவை. அம்மா, பாட்டி போன்ற குடும்பப் பெண்களின் பிரியத்தைக் கவர இப்படி மாதாமாதம் ஒரு வாளி வாங்கிக் கொடுத்தால் போதும். அவர்களுக்கு அடுத்த தலைமுறைப் பெண்கள் எங்கள் வயது உள்ளவர்களான அவர்களுக்கு பாத்திர மோகம் எதுவும் கிடையாது. நல்ல பட்டு, வாயல் புடவைகள், கேசட் டேப் ரிக்கார்டர், இளையராஜா இசையமைத்த பாட்டுகள் அடங்கிய கேசட், குட்டி கத்தரிக்கோல் இப்படியான சமாசாரங்கள் இருந்தால் இப்போது கியாரண்டியாக பிரியம் கிடைக்கும்.

ஆளுக்கு ஒரு பக்கெட் கொடுக்கப்பட்டது. என் கையில் வந்ததைத் தூக்கவே முடியவில்லை. அவ்வளவு கனம். உள்ளே லட்டு, அதிரசம், முறுக்கு என்று தின்பண்டங்கள். பெரிய கொப்பரைத் தேங்காய். வெற்றிலை, பாக்கு பிஸ்கெட் பாக்கெட். ஒரு சுருக்குப் பையில் பாரிஸ் தேங்காய் சாக்லெட்கள். ‘தோத்திரத் திரட்டு’ என்று தேவாரம், திருவாசகப் பதிகங்கள் கொண்ட புத்தகம்.

நான் வாசலுக்குப் போக, மற்ற பேங்க் தோழர் “பஸ் இறங்கி நீங்க விரசா போயிடுங்க” என்றார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன