திருவல்லிக்கேணி – 1975 நாவலில் இருந்து

3 செப்டம்பர் 1975

கடற்கரைக்குக் கூப்பிட்டால் போகலாம் என்று சொல்வதற்கு ஒவ்வொருத்தருக்கும் ஒரு காரணம்.

அங்கே நடைபாதையில் பழைய புத்தகக் கடைகளை மேயலாம் என்பது எனக்கு முக்கிய காரணம். பழைய புத்தகத்தில் ருசி கண்ட பூனைகளுக்கு புத்தம்புது எடிஷன் புத்தகங்கள் அறவே பிடிக்காது. அதுவும் நடைபாதையில் கிடைக்கிற பழைய தீபாவளி மலர்கள், பொன்னியின் செல்வன், தில்லானா மோகனாம்பாள் தொடர்கதை பத்திரிகையிலிருந்து வாராவாரம் கிழித்து எடுத்து பைண்ட் செய்து உருவாக்கிய புத்தகங்கள். புதுப் பதிப்பில் இல்லாத அந்தக்கால நகைச்சுவை, துணுக்குச் செய்தி, 1940-கால காபிப்பொடி விளம்பரம் என்று எங்கேயோ தூக்கிப் போய்விடும்.

பெல்ஸ் ரோடில் இருக்கும், நான் விரும்பிப் படிக்கும் இலக்கியப் பத்திரிகை ஆபீஸில் தலைகாட்டி விட்டு வருவது இன்னொரு சிறிய சந்தோஷம்.

அங்கே சதா மோனத்தில் மூழ்கி அச்சுக் கோர்த்துக் கொண்டிருக்கும் வயதான கம்பாசிட்டர் உலகே அழிந்து கொண்டிருந்தாலும் லட்சியம் செய்ய மாட்டார். போனால் போகிறதென்று ஒரு வினாடியில் காலே அரைக்கால் பாகம் நிமிரிந்து பார்த்து, “எடிட்டர் டில்லியிலே இருக்காரு. அங்கே போய்ப் பாருங்க” என்று தில்லி ஏதோ அடுத்த தெருவில் இருப்பதுபோல் கைகாட்டி வேலையைத் தொடர்வார் அவர்.

எடிட்டர் இருக்கும் பொழுதுகளில் நான் கட்டும் ஒரு வருட சந்தாவுக்காக, நியூயார்க் டைம்ஸில் இந்தியச் செய்தியாளரான அந்தப் பத்திரிகை ஆசிரியர், கருத்தாக ரசீது எழுதி பெரியதாகக் கையெழுத்துப் போட்டுத் தருவார்.

அவரிடம் பேச வேண்டும் என்பதற்காகவே இதுவரை நாலு தடவை சந்தா கட்டிவிட்டேன். இன்றைக்கும் அவர் இருந்தார்.

”எமர்ஜென்சி நல்லதுக்கு தானா?”

நான் சந்தா செலுத்தி விட்டு பத்திரிகை ஆசிரியரைக் கேட்டேன். அவர் அமைதியாக கம்பாசிட்டரைக் காட்டினார் :

“இவரைக் கேளுங்க. நான் டாக்டர் கிட்டே போய்ட்டிருக்கேன். Chest congestion”.

சொல்லி விட்டுப் போயே போய்விட்டார் அவர். கம்பாசிட்டர் மேல் அவருக்கு இருந்த நம்பிக்கை எனக்கு வியப்பாக இருந்தது.

நல்ல கடற்காற்று வீசிக் கொண்டிருந்தது. இன்றைக்கு பகல் ஒரு மணிக்கெல்லாம் காற்று துவங்கி விட்டதால் சூழலே அற்புதமாக மாறியிருந்தது.

நான் ஆபீஸ் முடித்து நேரே வந்து கொண்டிருக்கிறேன். மேன்ஷன் நண்பர்கள் ஏற்கனவே வந்து உழைப்பாளர் சிலைக்கு அருகே காத்திருக்கிறார்கள்.

ஒரு சனிக்கிழமை மாலை நேரத்தை இன்னும் ஒரு முறை கடற்கரையில் கழிக்கப் போகிற மகிழ்ச்சி எனக்கும்.

கடலை, யானையை, அரசனைப் பார்க்க அலுக்காது என்று நாராயணசாமி காளிதாசன் கவிதையை மேற்கோள் காட்டுவது வழக்கம். இதில் கடலும் யானையும் எப்போது பார்த்தாலும் இன்பம் தான். அரசு? எமர்ஜென்சி வந்த பிறகு கொம்பும் வாலும் முளைத்து சாத்தானாக பயம் காட்டுகிறது அது.

பெல்ஸ் ரோடு நடைபாதைக் கடையில் கொஞ்சம் பேரம் பேசி ஐந்து ரூபாய்க்கு ஜி.வி.தேசானியின் புதிய அலை நாவல், “ஆல் அபவுட் ஹெச் .ஹேட்டர்’ வாங்கினேன். 1953-ம் வருட தீபாவளி மலர் ஒன்றைப் புரட்ட தி.ஜானகிராமனின் சிறுகதை இருப்பதைப் பார்த்து அதையும் மூன்று ரூபாய்க்கு வாங்கி சந்தோஷமாக இரண்டு புத்தகங்களையும் கையில் சுமந்து கொண்டு கடற்கரைக்கு நடந்து போனேன்.

1975 நாவல் வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன