’ராமோஜியம்’ புதினத்தில் இருந்து – ராமோஜி கடிதங்கள் 1945

ராமோஜி கடிதங்கள் – 1945

மதிப்புக்குரிய மதறாஸ் ரேடியோ ஸ்டேஷன் டைரக்டர் சார்,

பூரண சௌக்கியம். உங்கள், ஆபீஸில் மற்ற சிப்பந்திகளுடைய சௌகர்யம் தெரிவிக்க வேண்டியது.

நேற்று ராத்திரி மகாவித்வான் டி என் ராஜரத்தினம் பிள்ளைவாள் நாகஸ்வரக் கச்சேரி கேட்பதற்காக ரேடியோவை ஆன் செய்தேன். என் பிரியமான மனைவி ரத்னா பாய் அருகிலேயே வந்து நின்றாள். கச்சேரி கேட்க இல்லை. அவளுக்கு கர்னாடக சங்கீதத்தில் அவ்வளவாக நாட்டம் இல்லை. அபங்க் என்ற மராத்தி பஜனைப் பாடல்களை ரெக்கார்டுகளில் கேட்பதிலும் கூடப் பாடுவதிலும் தான் இஷ்டம். எப்போதாவது ஹிந்துஸ்தானி சினிமா பாட்டுகளையும் ப்ளேட்டுகளில் கேட்கிற வழக்கம்.

”எனக்கு ஒரு சந்தேகம். வாத்தியத்தோட பெயர் நாகஸ்வரமா, நாதஸ்வரமா?”.

அவள் எழுப்பிய சந்தேகத்தை அண்டை வீட்டு ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர், எதிர் வீட்டு கேளப்பன் தம்பதிகள், அடுத்த தெரு மிருதங்க மேதை வேலப்ப நாயக்கர் என்று இன்று ஞாயிற்றுக் கிழமையாக இருப்பதால் வேலை மெனக்கெட்டு வீடு வீடாகப் படி ஏறிக் கேட்டு வருகிறேன். யாரும் சரியான பதில் சொல்லவில்லை.

உங்கள் கச்சேரி ஒலிபரப்புக்கு முன்னும் பின்னும் அறிவிப்பு தருகிறவர்களில் சிலர் நாதஸ்வரம் என்றும் வேறு சிலர் நாதசுவரம் என்றும் உச்சரிப்பதால் குழப்பம் தான் கூடுகிறது. என்னதான் அந்த வாத்தியத்துக்குப் பெயர்?

நான் சீதோஷ்ண நிலமை திருப்திகரமாக இருக்கும் பட்சத்தில் திருச்சி வானொலி கூட கேட்பது வழக்கம். போன ஞாயிறன்று பிற்பகலில் இப்படித்தான் திருச்சி ரேடியோவில் பாப்பா மலர் கேட்டுக் கொண்டிருந்தேன். ஸ்ரீரங்கம் பள்ளிக்கூடத்துப் பையன்கள் பாட்டு, நாடகம் என்று பிரமாதமாக, பெரியவர்களுக்கே சவால் விடும் தரத்தில் அது இருந்தது.

என்றாலும், ரங்கராஜன் என்ற பையன் ‘ஆழ்வார்கள் இல்லாத ஸ்ரீரங்கமா’ என்று ஏதோ பேசத் தொடங்கியபோது ரேடியோ அண்ணா அவனை பேச விடாமல் உடனே நிறுத்திவிட்டு வேறொரு சிறுவனைப் பாடச் சொன்னது எதேச்சாதிகாரமாக இருந்தது. ஸ்ரீரங்கம், ஆழ்வார்கள் இதெல்லாம் பெரியவர்கள் பாட்டும் இல்லாமல் பேச்சும் இல்லாமல் வினோதமான ஒரு மெட்டில் இழுத்து இழுத்து நீட்டி வழங்க வேண்டிய விஷயங்களா?

இருக்கட்டும். நான் கடிதம் எழுதுவது மேலே கண்ட சந்தேகங்களின் நிவர்த்திக்காக இல்லை……

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன