ராமோஜியம் – எழுதி வரும் நாவலில் இருந்து – ராமோஜி கடிதங்கள் 1945

ராமோஜியம் நாவலில் இருந்து
– கடிதங்கள் பகுதி

1940-களில் பிரிட்டீஷ் சர்க்கார் இந்தியப் பத்திரிகைகளில் ‘சிக்கனம் பேணுவோம்’ என்று மக்களைச் சிக்கன நடவடிக்கைகளைக் கைக்கொள்ளச் சொல்லி விளம்பரம் கொடுத்தது.

இதைப் பற்றி கும்பகோணம் விட்டோபா ஆறாம் ஜியார்ஜ் சக்கரவர்த்தி அவர்களுக்கு எழுதிய கடிதத்திலிருந்து.

1945-ல் தமிழில் எழுதப்பட்டது இந்தக் கடிதம்(சக்கரவர்த்திகள் எப்படியாவது படித்துக்கொண்டு விடுவார் என்று நம்பிக்கை)
பூவுலகம் எல்லாம் அரசாளும் மாட்சிமை மிகுந்த சக்கரவர்த்தி அவர்களுக்கு கும்பகோணம் டீ போர்ட் ஏஜண்ட் விட்டோபா எழுதுவது.

Safe. உங்கள் மற்றும் மகாராணியார் சௌக்கியத்துக்கு லெட்டர் எழுதச் சொல்ல வேண்டியது. நாங்கள் இங்கே எல்லாரும் சௌக்கியமாக இருக்கிறோம். நிற்க வேண்டியது.

இங்கத்திய கவர்மெண்ட் நியூஸ் பேப்பர்களில் தற்காலம் ஒரு விளம்பரம் கொடுத்து வருகிறது – சிக்கனம் பேணுவோம் என்று மேலே எழுதி வரும் அதனை மகாராஜா அனுமதியோடு அச்சுப்போட அனுப்பியிருப்பார்கள் என்று நம்புகிறேன். இருந்தாலும் சில சந்தேகங்கள் இது விஷயமாக எனக்குண்டு. சக்கரவர்த்தி அவர்கள் உங்கள் உசிதம் போல நேரம் ஒதுக்கி இவற்றை நிவர்த்திக்க முடியுமானால் மிக்க நன்றியோடு இருப்பேன்.

…. அப்புறம் அதென்ன சமையல்கட்டு சம்பந்தமான இந்த யோஜனை? பழைய பாத்திரங்களைப் பழுது பார்த்து உபயோகிக்கவும்.

இந்த யோஜனையைக் கொண்டு வந்தவர்கள் எந்தக் காலத்திலாவது சமையல்கட்டில் புகுந்து பாத்திரங்கள் எதெது, எந்தப் பாத்திரத்தை எந்த காரியத்துக்கு உபயோகப்படுத்துகிறார்கள் என்று பார்த்திருக்கிறார்களா?

பாத்திரத்தில் ரிப்பேர் என்றால் எப்படியான விஷயம் அது? வாலாம்புவில், அங்கத்திய பெயர் தெரியவில்லை, லண்டன் அரண்மனையில் வால் பாத்திரம் என்று சொல்வீர்களா, தாங்கள் அரண்மனை சமையல்கட்டுக்கு விசிட் அடித்ததுண்டா?

என்ன சொல்லிக் கொண்டிருந்தேன்? வாலாம்புவின் வால் பகுதி அப்பப்ப என்னை மாதிரி லூஸாகி விடும். ஸ்க்ரூ ட்ரைவரை வைத்து ஒரு முறுக்கு முறுக்கி நாலு தடவை மேலே அகப்பைக் கரண்டியாலோ பொடிக்கும் கைக்கு லகுவான சின்னக் குழவிக்கல்லாலோ தட்டினால் அப்புறம் நாலு மாசம் வாலாம்பு வாலை ஆட்டாமல் பால் காய்ச்ச சமர்த்தாக அடுப்பில் உட்காரும்.

மற்றபடி பாத்திரத்துக்கு பழுது என்றால்? அண்டா குண்டா வீட்டு புருஷன் பெண்டாட்டி யுத்தத்தில் விட்டெறிந்து அங்கே இங்கே நசுங்குவது உண்டு தான். டொக்கு விழுந்தாலும் அந்தப் பாத்திரத்தை யார் அழகு பார்க்கப் போகிறார்கள்?

என்றாலும் கொல்லருக்கு வேறு வேலை இல்லாத பொழுதில் கொண்டு போய்க் கொடுத்தால் ஒரு தட்டு தட்டிக் கொடுப்பார். அடுத்து நடக்கப் போகிற வீட்டுச் சண்டைக்கு தளவாடம் தயார். சக்கரவர்த்திகளின் அரண்மனையில் இந்த மாதிரி யுத்தமெல்லாம் நடப்பதில்லை போல. நடந்தால் தான் பத்திரிகைக்காரன் எழுதியிருப்பானே?

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன