1944 டெல்லி – எழுதிக் கொண்டிருக்கும் ‘ராமோஜியம்’ நாவலில் இருந்து

இது என்ன பார்க்?

கொக்கு பார்க் என்று சிரித்தாள் பூர்ணா.

நான் திரும்பிப் பார்த்தேன். பச்சைப் பசேல் என்று மாம்பலத்தில் பனகல் பார்க் மாதிரி, அதைவிட அழகான மரம் நிறைந்த, புல்வெளி கூடிய, ஒரு பார்வைக்கு முக்கோணமாகத் தோன்றும் பூங்கா. வாசலில் கொக்கு சுதை உருவம் வைத்திருந்தது. சீதோஷ்ண நிலையும் அற்புதமானதாக இருக்க, வியர்ப்பும் குளிருமில்லாத ஸ்திதியில் இங்கே பத்து நிமிடம் உட்கார்ந்து வர மனசு கூப்பாடு போட்டது. அவர்களோடு பார்க்குக்குள் நுழைந்தேன்.

உள்ளே நடைபாதையை ஒட்டிப் போட்டிருந்த சிமெண்ட் பெஞ்சுகளை நிராகரித்து விட்டு நாங்கள் உள்ளொடுங்கிய பாதையில் குழந்தைகள் ஊஞ்சல் அமைத்திருந்த இடத்திற்கு அருகே அமர்ந்தோம். ரத்னா பூர்ணாவின் கையை தன் கையில் வைத்துக் கொண்டு, “சொல்லுடா கண்ணா, நீ கேட்டபடி வந்தாச்சு..” என்றாள். என்ன சொன்னாள் பூர்ணா? எப்போது? வழக்கம் போல் முழித்தேன்.

”நேற்று பேசணும்னு சொன்னா இல்லையா. ராத்திரி தூங்கிட்டிருக்கும்போது கிட்டத்தட்ட ராத்திரி பனிரெண்டு மணிக்கு கூப்பிட்டு, அம்மா நாம் காலையிலே கரோல்பார்க் மார்க்கெட் போய்ட்டு வரலாமான்னு கேட்டா.. எம்பொண்ணு கேட்டு எப்படி தட்ட முடியும்?” ஆதரவாக பூர்ணாவின் தலையைத் தடவினாள் ரத்னா. சுமித்ரா பார்த்தால் என்ன நினைப்பாள் என்று நினைத்தேன்.

”ஒண்ணும் இல்லே அம்மா, சும்மாதான் கூப்பிட்டேன்… வெளியே போகணும்னு நேத்து தோணிச்சு”. பூர்ணா அவசரமாகப் பின் வாங்கினாள்.

“இல்லேடா செல்லம், எதையோ இப்போ நீ மறைக்கறே… எதா இருந்தாலும் அம்மா கிட்டே சொல்லு. உன் வயசுக்கு என்ன பிரச்சனை இருக்க முடியும்? ரெட்டை ஜடையா ஒத்த ஜடையா, குடிகூரா பவுடர் போட்டுக்கலாமா சாண்டல் பவுடர் போடலாமா, வீட்டுலே இருக்கறபோது பாவாடை தாவணியா, சூடிதாரா…இப்படித்தான் வரும்.. வேறே என்ன இருக்கமுடியும்?”

நான் பால்கோவா பாக்கெட்டை எடுத்துப் பிரித்தேன். ”அருவதா சருவதா ஏதாவது அசை போடணும்..”, ரத்னா சொன்னதும் பூர்ணா அடக்க முடியாமல் சிரிக்க, நான் ஒரு பெரிய விள்ளல் பால்கோவா எடுத்து வாயில் போட்டுக்கொண்டு பாக்கெட்டை அவளுக்கும் ரத்னாவுக்கும் கொடுத்தேன்.

“இது பால்கோவா. அசை போட முடியாது வாயிலே கரஞ்சுடும், கேர்ள்ஸ்”.

”எப்படி சின்னச் சின்னதா சண்டை உடனே சமாதானம், எல்லாத்துக்கும் ஒரு அன்பான சிரிப்புன்னு நீங்க ரெண்டு பேரும் இருக்கீங்க.. ஏன் டாடியும் மம்மியும் அப்படி இருக்க முடியலே”?

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன