எழுதி வரும் ‘ராமோஜியம்’ நாவல் குறித்து

சுருக்கமாகச் சில விஷயங்கள்

1) எழுதி வரும் நாவலின் பெயர் ‘ராமோஜியம்’ என்று மாற்றப்படுகிறது. இதுவும் tentative தலைப்புத்தான்

2) எழுதியதில் 30 -40% இங்கே அவ்வப்போது சிறு நாவல் பகுதிகளாகப் பகிர்ந்து கொள்கிறேன். நாவல் எழுதி எடிட் செய்து புத்தகமாக வெளியாகும்போது முழு வடிவம் படிக்கக் கிட்டும்.

3) சாப்பாடு அடிக்கடி நாவலில் வருகிறதே. ஆமாம், வரும். ராமோஜி போஜனப் பிரியன்.

4) உலகமே கொரோனா வைரஸ் கவலையில் இருக்கும்போது, புது நாவல் எதற்கு? கவலையோடு சும்மா இருக்காமல், அழுகிற நேரத்தில் உழுது கொண்டிருக்க விரும்புவதால் எழுத்து தொடர்கிறது.

//ராமோஜியம் நாவலில் இருந்து ஒரு சிறு பகுதி

திரும்பும் வழியில் பெட்ரோல் பம்ப்பில் நிறுத்தி டாஷ் போர்டில் இருந்து எதையோ எடுத்தாள் சுமித்ரா.

“ரேஷன் கார்ட். பெட்ரோல் மாசத்துக்கு ஐந்து காலன் ஒரு காருக்கு. ரேஷன் கார்டுலே பதிஞ்சு பெட்ரோல் பம்ப்லே கொடுப்பாங்க”.

ரத்னா ”இந்த ரேஷன் தான் இதுவரை நின்னதில்லே” என்றாள். சீக்கிரம் ராம்ஜி நிப்பார் என்றபடி சுமத்ரா பெட்ரோல் போட்ட வண்டியை ஸ்டார்ட் செய்தாள்.

நான் கார் வாங்குவதை ரத்னா தவிர எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள் என்று தோன்றியது.

திரும்பி வந்தபோது வீட்டு வாசலில் விளக்கைப் போட்டுக்கொண்டு நின்றிருந்த பூர்ணாவைப் பார்த்தோம். ”பாவம் நமக்காக காத்துக்கிட்டுருக்கா, இல்லேன்னா சீக்கிரம் தூங்கப் போற பிள்ளை”, என்றாள் ரத்னா.

இரண்டு வருஷம் முன்னால் மெட்றாஸ் வந்தபோது ராத்திரி எட்டு மணிக்கே உறங்கப்போய் காலை நாலு மணிக்கு ஊருக்கு முந்தி எழுந்து உட்கார்ந்து, தெருக்கோடி வரை நடந்து திரும்பும் சின்னப் பெண் எனக்கு நினைவு வந்தாள்.

ராத்திரி தனியா நடக்கக் கூடாது என்று அவளிடம் சுமத்ரா கண்டிப்பாகச் சொன்னபோது, ”அதிகாலைன்னா நாலு மணி தானே, அந்த நேரத்திலே என்ன செஞ்சாலும் எளிதாகச் செய்யலாம், சீக்கிரம் செய்யலாம்னு நீங்க தானே சொல்லிக் கொடுத்தீங்க” என்று அவளிடம் சொல்லிச் சிரித்த சின்னப் பெண் இல்லை இப்போது இங்கே இருப்பவள்.

ரத்னாவின் கையைப் பிடித்துத் தட்டாமாலை சுற்றிக்கொண்டே பூர்ணா சொன்னாள் –

”அம்மா, ஜோரா நிம்பு பிழிஞ்சு, கருகப்பிலை, பச்சை மிளகாய், முந்திரிப்பருப்பு எல்லாம் போட்டு ரவா உப்புமா பண்ணிக் கொடுங்க. வேறே எதுவும் வேண்டாம். தொட்டுக்க சர்க்கரையும் மாங்கா ஊறுகாயும் போதும்”.

லங்கணம் பரம ஔஷதம் என்று ராத்திரி பட்டினி கிடக்க உத்தேசித்திருந்த நான் ஒரு ஸ்பூன் மட்டும் சும்மா ருஜி பார்க்க ரவை உப்புமா கேட்டேன். சின்ன தட்டுலே வச்சுத் தரேன் என்று நாலு ஸ்பூன் உப்புமா மேலே தூவலாகக் காராபூந்தி அணிந்து கொண்டு சூடு பறக்க வந்தது. அதைச் சாப்பிட எங்கே இருந்தோ அழிச்சாட்டியமாக ஒரு பசி. ஒரு பெரிய தட்டில் பரிவார தேவதைகளான மத்தியான சாம்பார், அஸ்கா, ரொம்ப கம்மியாகவும் இல்லாமல் பெரியதாகவும் இல்லாமல் ஒரு விள்ளல் ஊறுகாய்த் துண்டு என்று நல்ல சாப்பாட்டு வாடை ஆவி பறக்க வந்த அந்த உணவை காசி விசுவநாதனும், ராமேஸ்வரம் ராமநாதனும் கூட இறங்கி வந்து பாம்பன் பாலத்தில் உட்கார்ந்து ஒரு சிட்டிகையும் வீணாகாமல் உண்டு போவார்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன