1944 பிர்லா மந்திரில் ஒரு மாலை நேரம் – எழுதிக் கொண்டிருக்கும் ‘ராமோஜியம்’ நாவலில் இருந்து

ரயிலில் சும்மா உட்கார்ந்து வந்தாலும், தூங்கி விழித்து சாப்பிட்டு மறுபடி தூங்கி ரெண்டு ராத்திரி ரெண்டு பகல் வந்தாலும், ஏதோ சாரத்தில் கல்லும் மண்ணும் சுமந்து எடுத்துப்போய் இடுப்பொடிய வேலை பார்த்த மாதிரி அசதி. சுமித்ரா அண்ணி வேறே வயிறை வஞ்சிக்காமல் சரபோஜி மகாராஜா அரண்மனை விருந்து போல சமைத்து வைத்து சாப்பிடச் சொன்னாள். மூன்று மணி நேரம் அடித்துப் போட்டது போல் தூங்கியிருக்கிறேன்.

சாயந்திரம் ரெண்டும் கெட்ட ஆறேகாலுக்கு எழுந்திருந்த போது ரத்னா பேஸ்ட் வேணுமா பல் தேய்க்கறீங்களா என்று கிண்டல் செய்தாள். அவள் பக்கத்தில் ”குட் மார்னிங் அங்கிள்’ என்று உரக்கச் சொல்லிச் சிரித்துக் கொண்டு நிற்கிற பெரிய மனுஷி, பூர்ணா தான்.

சொந்தம், நட்பு என்று குடும்பத்துக்கு வேண்டியவர்களில் ஆண்களை அங்கிள் என்றும் பெண்களை ஆண்ட்டி என்றும் கூப்பிடும் டெல்லிப் பழக்கம் அவளுக்குப் படிந்திருந்தது.

”ராம் அங்கிள், ஆபீஸ்லே இப்படித் தான் தூங்குவீங்களா?”.

அவள் ரத்னாவுக்குப் பின்னால் இருந்து எட்டிப் பார்த்துக் கண்ணில் குறும்பு மின்னக் கேட்டான். ரத்னா அவளை முன்னால் இழுத்தபடி சொன்னாள் –

“இல்லேடா தங்கம், அங்கே வேறே மாதிரி தூங்குவார்” என்று மோடாவில் உட்கார்ந்தபடி தூங்கிக் காட்ட, வீடே சிரிப்பில் மூழ்கியது

மெட்றாஸ் செயிண்ட் ஜார்ஜ் கோட்டை வாட்டர் போர்ட் ஆபீஸ்லே இது வரைக்கும் திவான், மோடா எல்லாம் போட்டு தூங்கறவங்க தூங்குங்க, வேலை பார்க்கறவங்க பாருங்க என்று உத்தரவு போடவில்லை என்பதை ரத்னாவிடம் மரியாதையோடு எழுந்து நின்று தெரியப்படுத்தினேன்.
—- —– —– —–
பெரிய மனுஷி ஆகும்போது இந்த பயமும் எரிச்சலும் கொஞ்ச நாள் வரும். குழந்தை தானே. நாம்தான் கூட இருந்து உற்சாகப் படுத்தணும் என்று சுமித்ராவிடம் ரத்னா சொன்னதை அரைகுறையாகக் கேட்டேன்.

”உங்களுக்கு இங்கே என்ன வேலை ஜீஜாஜி? போய் மூஞ்சி அலம்பிட்டு வாங்க.. பிர்லா மந்திர் போயிட்டு வரலாம்” என்று சுமித்ரா விளையாட்டுக் கண்டிப்போடு சொல்ல எழுந்து போய் வந்தேன். பீமாராவ் சுடச்சுட காப்பி கொடுத்தான். ஞாயிற்றுக்கிழமை எல்லா ஊரிலும் ஒரே போல் அசமஞ்சமாகத் தான் போய்க் கொண்டிருக்கிறது.
—- ————— ————-
சுமித்ரா பீமாராவை விட நேர்த்தியாகக் கார் ஓட்டினாள். பிர்லா மந்திர் காந்திஜி வந்திருக்கும் போது பரபரப்பாகவும், கோவிலுக்கான கூடுதல் பக்தி சூழ்நிலையுமாகவும் இருக்கும் என்றாள் அவள். காந்தி எங்கே? ரத்னா கேட்டாள்.

“பாவம், கஸ்தூர்பாவும் இறந்து போயாச்சு.. தனியாயிட்டார் காந்திஜி.. போன மாசம் பம்பாய்க்குப் போய் ஜனாப் ஜின்னாவை சந்திச்சு பேசினது தோல்விதான்.. மனம் உடைஞ்சு போயிருப்பார்.. வார்தாவிலே சேவாகிராமம் ஆசிரமத்துக்கே திரும்பிப் போய்ட்டார்..” என்றாள் சுமித்ரா.

பளிங்குத் தரையில் உட்கார்ந்து ராமநாமம் ஜபித்தபோது பக்கத்தில் பார்க்க, சுமத்ரா கண்ணிலிருந்து தாரை தாரையாகக் கண்ணீர் வடிந்து கொண்டிருந்தது. பக்தியால் மட்டும் அது என்று ஏனோ நம்ப முடியவில்லை.

அருகில் இருந்த ரத்னாவுக்குக் கண் காட்டி சுமத்ராவைப் பார்க்கச் சொன்னேன். பார்த்தவள், விட்டுடுங்க என்று ஜாடை காட்டினாள்.

தேவையில்லாமல் அடுத்தவர் அந்தரங்கத்தில் தலையிடக்கூடாது என்ற அவள் கண்ணோட்டத்தோடு ஒரு நிமிடம் மாறுபட்டேன்.

நம்மால் மாற்ற முடிகிற துக்கம் அல்லது குழப்பம் இருந்தால் உதவிக் கரம் நீட்ட என்ன ஏது என்று தெரிந்து கொள்ள வேண்டாமா?

பிர்லா மந்திரில் இருந்து வெளியே வரும்போது சுமித்ரா அண்ணி பழையபடி கலகல என்று ஆகியிருந்தாள். பீமாராவின் எடுத்தேன் கவிழ்த்தேன் அவசரத்துக்கு நேர் எதிர் எதையும் நிதானமாக சாதக பாதகம் சீர்தூக்கி முடிவெடுப்பவள் அவள்.

ரத்னா ஒரு தடவை குழந்தை இல்லையே கல்யாணம் பண்ணி ஆறு வருஷமாக, தத்தெடுத்து வளர்க்கலாமா என்று மனம் ஏங்கி சுமித்ராவும் பீமாராவும் மதறாஸ் வந்தபோது கேட்க, அப்படி செய்தால் என்ன சந்தோஷம், என்ன பிரச்சனை பின்னால் வரலாம் என்று சுமித்ரா அலசி ஆராய்ந்ததை நானும் பேசாமல் கேட்டுக் கொண்டிருந்தேன்.

இன்னும் ஐந்து வருஷம் பொறுங்க என்று அவள் சொல்லி இரண்டு வருஷம் கழிந்திருக்கிறது. அடுத்த வருடம் எங்களுக்கு சந்தானப் பிராப்தி என்று புலியூர் ஜோசியன் சொல்லியிருக்கிறான்.

அவனுக்கு தந்தத்தில் ஒரு பொடி டப்பி முழுக்க இங்க்லீஷ் பொடி நிரப்பி ரத்னா வெகுமதி கொடுத்தது இந்த இடத்தில் சொல்வதற்கானதில்லை.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன