திருச்செந்தூரார் சாப்பாட்டுக்கடையை முன்வைத்து – 2

நுழையும்போதே சல்யூட் அடித்த
காவல்காரர் சின்னச் சிரிப்போடு
அப்புறம் கொடுங்க என்றார்
நக்கலான சென்னைச் சிரிப்பில்லை
நேசமான செட்டிநாட்டுப் புன்னகை.

அந்தக்கால சோவியத் நாட்டு
ஏரோஃப்ளோட் விமான சேவையில்
கண்டிப்பான உபசரிணிபோல்
ஓவர்கோட் பெண்கள்
வாழை இலைவிரித்த மேசைமுன்னே
இருந்துண்ண இடம் சுட்டினர்.

உளுந்து வடையா உழுந்து வடையா
பட்டிமன்றம் நீண்டுபோக வேகம் உண்ணும்
நான் பார்த்த நாலு பேரும்
இன்னும் தொலைவில் ஒரு சிலரும்
மென்றபடிக்கிருந்தது வடைகளே
என்ன வேண்டும் சொல்லும்முன்
எனக்கும் கொணர்ந்தார் வடைகள்
திருச்சீரலைவாய் வழக்கமோ என்னமோ.

சிவப்பும் பச்சையும் சற்றே கருப்புமாக
சட்டினி துவையல் சாம்பார் நிரம்பி
வாளிகள் அணிவகுக்க பாதுகாப்பில்
இட்லியோடு இன்னொரு வடையும்
மேசை வந்தது வேண்டாம் எனும்முன்;
எள்ளெண்ணெய் கூட இருந்த நினைவு.
இத்தனை அமர்க்களமாய் இட்லி தின்றால்
சீரணமாவது சிரமமன்றோ.

சுவையாய் இருப்பதாய்த் தோன்றும் முன்னர்
உண்டு முடித்து காப்பி அருந்தல்
நல்ல சுவையென டாக்டரே சொல்கிறார்
நண்பர் மற்றவர் கரித்துக் கொட்டுவார்
எனக்கு ஆழ்நினைவிலோர்
உளுந்து வடை காப்பியில் நனைந்து.

இலை எடுக்கணுமா என்று கேட்டேன்
இன்னும் சாப்பிட்டு முடிக்கலை என
அவசரக் குரல்கள் அருகே எழுந்தன.

(தொடரும்)
இரா.முருகன்
டிசம்பர் 12, 2019

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன