தமிழ் சினிமா Meme (Me2)

 

Meme on Tamil cinema

நாகார்ஜுனனும் நண்பர் ராஜநாயகமும் ஆரம்பித்து வைத்த மெமே.

நண்பர் ஜெ.ராம்கி அழைத்ததால் கலந்து கொண்டு, இதோ பதில்கள்

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

ஆறு வயதில். சிவகங்கையில் அப்பா வங்கி நிர்வாகியாக (ஏஜெண்ட் என்பார்கள் அப்போ எல்லாம்) இருந்தபோது பேங்க் வாட்ச்மேன் கருப்பையாவோடு ஸ்ரீராம் தியேட்டரில் மாட்னி ஷோ பார்க்க அனுப்பப்பட்டேன் (அவர் வாட்ச்மேன் என்பதால் மாட்னி தான் வாச்சது). ‘மணிமேகலை’ என்று ஒரு சினிமா. யார் நடிச்ச்துன்னு நினைவு இல்லை. 1959-ல் ஆகஸ்ட் மாசம். பக்கத்து சீட்டுலே மூக்குப்பொடி வாடையோடு ஒரு பெரிசு உட்கார்ந்து ரசித்துப் பார்த்தது நினைவு இருக்கு. ‘ஆண்டவனே இல்லையே’ன்னு பாட்டு ஆரம்பிச்சதும் அவர் திட்டினார். அடுத்த வரியிலே ‘தில்லைத் தாண்டவனே உன் போல் ஆண்டவனே இல்லையே’ ன்னு பாடினதும் அவர் முகத்தில் வந்த ஆனந்தம் இன்னும் மறக்கலே.
2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

தசாவதாரம். ப்ரீவ்யூ கூப்பிட்டிருந்தார் கமல். இந்தப் பக்கம் ரஜனி, பின்னால் பிரபு, முன் சீட்டில் குளிரில் நடுங்கியபடி மனோரமா, கோடியில் நாகேஷ், அருகே கே.பாலச்சந்தர், ரவிகுமார் இப்படி ஒரு ஆடியன்ஸ். படம் ஆரம்பிக்கும் முன்னால், இண்டர்வெல்லில், முடிஞ்சதும் கமல் ‘எப்படி இருக்கு’ என்று மறக்காமல் கேட்டார். மர்மயோகி பற்றி சின்னச் சின்னதாகச் சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்ளவும் மறக்கவில்லை.

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

போனவாரம் டி.வியில் சபாபதி. மச்சி மச்சின்னு முதலியார் குலத்தின் பேச்சுமொழி எத்தனை இயல்பாக வந்திருக்கு பாருப்பா. பம்மல் சம்பந்த முதலியார் விறுவிறுன்னு கதையை நகர்த்திப் போயிருப்பார். நாடகத்துக்கு எழுதினதுன்னாலும் சினிமாவுக்கும் அப்படியே பொருந்து வந்திருக்கு. டி.எஸ் துரைராஜும் டி.கே.ராமச்சந்திரனும் போட்டி போட்டுட்டு நடிச்சிருக்காங்க.

4. மிகவும் தாக்கிய தமிழ் சினிமா?
தாலாட்டு. ஏன்னு தெரியலை. ஒரு மழைநாள் பகலில், ரெட்டைத் தெருவில் ஒரு பெரிய சாவு விழுந்து சோகம் கனமாகக் கவிந்திருந்த வேளையில் மாட்னி ஷோ இந்தப் படம். பட்மும் துக்கம்தான். அதுக்கு அப்புறமும். ஹீரோ ராஜபாண்டியன் தற்கொலை செஞ்சுக்கிட்டார். ஹீரோயின் விஜயஸ்ரீயும். தயாரிப்பாளர் கூட. இன்னிக்கும் தாலாட்டு படம்னு சொன்னா அழுகை வருது.

5. உங்களை மிகவும் தாக்கிய தமிழ் சினிமா-அரசியல் சம்பவம்?

எம்.ஜி.ஆரை திமுகவிலிருந்து வெளியேற்றியது. ரெண்டு நாள் சாப்பிடலை சார்.

6. தமி்ழ் சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

நிறைய. சினிமா இல்லாமல் தமிழ் வாசிப்பு ஏது? அதுவும் 40-களின் சினிமா (டாக்கி) பற்றி எழுதிய எதையும் படிக்காமல் விடுவதில்லை.

7.தமிழ் சினிமா இசை?

நான் பிறக்கும் முன் வந்த எம்.கே.டி, சின்னப்பா படப் பாடல்கள் தொடங்கி நேற்று வந்த நாக்க முக்க வரை எல்லாம் காதில் விழுந்து கொண்டுதான் இருக்கிறது. விவித்பாரதியில் தினசரி ரஞ்சனி ஸ்ரீரஞ்சனி கேட்டபடி தான் ஆபீஸ் பயணம். கும்பகோணம் கோபிநாத்தும் வி.எல்.குமாரும் கர்னாடக சங்கீதத்தையும் தமிழ் சினிமா இசையைய்ம் அருமையாக இசைத்துத் தருகிறார்கள்.

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

அரவிந்தன், அடூர், பத்மராஜன், ஷாஜி கருண், எம்.டி படங்கள் – மலையாளம்

சத்யஜித்ராய், ம்ருணாள் சென், ரித்விக் கதக் – வங்காளி

பாசு சாட்டர்ஜி, பாசு பட்டாசார்யா, கமல் அம்ரோஹி, குல்சார், முசாபர் அலி, ஷ்யாம் பெனகல், கோவிந்த் நிஹலானி, குந்தன் ஷா, சாயி பரஞ்ச்பே – இந்தி, உருது

கிரிஷ் கர்னார்ட், கிரீஷ் காசரவள்ளி, பிவி கராந்த், அனந்த் நாக் – கன்னடம்

மாதள ரங்காராவ் – தெலுங்கு

ஷாந்தாராமின் பிஞ்ச்ரா போன்ற பழைய மராத்திப் படங்கள்

ஐசன்ஸ்டீன், லூயி புனுவல், ராபர்ட்டோ ரோசலினி, ஆல்பர்ட் ஹிட்ச்காக், பெட்ரோ ஆல்மடோவர், டோனி ரிச்சர்ட்சன் (லோன்லினெஸ் ஓஃப் லாங்க் டிஸ்டன்ஸ் ரன்னர் சட்டுனு நினைவுவருது),
பெர்டிலூசி, நாகேஷ் குக்கானூர், உடி ஆலன், மெல் ப்ரூக்ஸ், இஸ்மாயில் மெர்ச்சண்ட், தீபா மேத்தா, அபர்ணா சென், அகிரா குரசவா, மாண்ட்டி பைதான் மைக்கேல் பாலின், ஜான் க்ளீஸ் (ஹோலி க்ரெய்ல்ஸ் போல) – இன்னும் எத்தனையோ பேர் விட்டுப் போச்சு. வெரைட்டி காக்டெயில் தான். ஸ்மட்டியான படம்னா லெஸ்லி நீல்ஸன், Carry On சீரீஸ் எல்லாம்.

என் அன்புக்குரிய தோழி (மகளை விட ரெண்டே வய்சு மூத்த) சாரிகா திரணகம நடித்து, அவருடைய சித்தி நிர்மலா நித்தியானந்தன் இயக்கிய ரஜினி திரணகம (சாரிகாவின் அன்னை) பற்றிய டோக்குமெண்டரியான ‘No more tears, sister’.

9. தமிழ் சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா?

மர்மயோகியிலும் கூடவே கமலில் அடுத்த இரண்டு படங்களுக்கான திரைக்கதையாக்கத்திலும் மும்முரமாக இருக்கிறேன். இந்தியில் கோவிந்த் நிஹலானியோடு இரண்டு கதைகளை விவாதித்து வருகிறேன். எல்லாமே நல்ல அனுபவம் தான்.

10. தமிழ் சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பாட்டுப் பாடிக் கொண்டு, டான்ஸ் ஆடிக்கொண்டு, ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டு இன்னொரு நூறாண்டு இருக்கட்டும். தமிழ் சினிமா இல்லாத வெற்றுவெளியைக் கற்பனை செய்ய முடியவில்லை.

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாசாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்?

மலையாள சினிமா இருக்குமில்லே.

நான் அழைக்கும் நண்பர்கள்

1) கவிஞர் சுகுமாரன்
2) கவிஞர் கலாப்ரியா

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன