ஏ.ஜெ, ஈழத் தமிழர்கள், இந்து ராம்

 

AJ Canagaratna Festschrift முன்னிலைப்படுத்தி

நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுத் தமிழியல் வெளியீடாக வந்திருக்கும் ‘AJ: The Rooted Cosmopolitan’ படித்துக் கொண்டிருக்கிறேன். என் அன்புக்குரிய நண்பர் லண்டன் பத்மநாப ஐயர் முயற்சியில் வெளியாகி இருக்கும் அஞ்சலித் தொகுப்பு – festschrift. அன்புச் சகோதரி மதி கந்தசாமி போன்றவர்களின் பங்களிப்பும் உண்டு என்று அறிய மகிழ்ச்சி.

ஏ.ஜெ பற்றி தமிழவன், ஏ.எஸ்.பன்னீர்செல்வன், எஸ்.வி.ராஜதுரை, நுஃமான் போன்ற ஆய்வியல் அறிஞர்களின் கட்டுரைகளோடு, ஏ.ஜெ எழுதிய கட்டுரைகளையும் சேர்த்து இந்நூலைத் தொகுத்தவர் செல்வா கனகநாயகம்.நூலின் கடைசிக் கட்டுரையில் தொடங்கி பின்னிறங்கிக் கொண்டிருக்கிறேன். ஏஜெயின் சரளமான நடை ஒரு புதினம் போல் நூலை சுவாரசியமாகப் படிக்க வழிசெய்கிறது.

ஏஜெ பற்றிய எந்தப் புரிதலும் அவர் ரெஜி ஸ்ரீவர்த்தனா மேல் கொண்டிருந்த பெருமதிப்பு பற்றியும் ரெஜி ஸ்ரீவர்த்தனா பற்றியும் அறிந்து கொள்ளாமல் பூர்த்தியாகாது. ஏ.ஜெ தொகுத்த ரெஜி ஸ்ரீவர்த்தனா எழுத்துகள் (பாகம் ஒன்று) – ஏற்கனவே படித்த – புத்தகத்தையும் பக்கத்திலேயே வைத்துக் கொண்டுதான் படிக்கிறேன். ஸ்ரீவர்த்தனாவின் எண்ணப் போக்கின் நீட்சியாக ஏஜெயின் thought process அவ்வப்போது தோன்றுவதைத் தவிர்க்க முடியாவிட்டாலும், ஏஜெயின் தனித்துவமான சிந்தனை நம்மை ஆட்கொள்கிறது.

ஏஜெக்கு மேஜிக் ரியலிசம் அலர்ஜி என்று இந்த நூலைப் படிக்கும் போதுதான் தெரிந்தது (தமிழவன் கார்லோஸ் சாருக்குத் தெரிந்திருக்கலாம்!!). மார்க்வெயின் One Hundred Years of Solitude மகா காவியத்தை ‘magic has gobbled up the realism’ என்று ஒற்றை வாக்கியத்தில் ஒதுக்கி விடுகிறார் ஏஜெ. மாஜிக் ரியலிசத்தை ஸ்பெயினுக்கு (லத்தீன் அமெரிக்காவுக்கு) வெளியே பதியன் போட்டால் வளராது என்று கட்சி கட்டுவதைத் தொடங்கி வைத்தவர் அவராகத்தான் இருக்கும்.

ஏஜெ புத்தகத்தில் ஆழ்ந்திருந்தபோது லண்டன் பத்மநாப ஐயரின் தொலைபேசி அழைப்பு. கனடா, அமெரிக்க பயணம் முடிந்து வந்த அசதியும், இருமலும் சிரமப் படுத்தினாலும் அன்போடு அழைத்துப் பேசினார்.

அவரிடம் ஏஜெ பற்றிச் சொல்ல எத்தனையோ செய்திகள் உண்டு என்று எனக்குத் தெரியும். ஆனாலும் எங்கள் உரையாடல் கிளிநொச்சியில் சிங்கள ராணுவம் நடத்தி வரும் தமிழ் இனப் படுகொலை பற்றிய துயரப் பகிர்வாகவே அமைந்து விட்டது.

ஒரு வேளை உணவுக்கும் வழி தடைப்பட்டுப் போய் குழந்தைகளும், பெண்களும், போரோடும் தீவிரவாதத்தோடும் எந்தத் தொடர்பும் இல்லாத அப்பாவி ஆண்மக்களும் சுருண்டு மடிகிற கோரம் எந்த இனத்துக்கும் நேரக் கூடாதது. இங்கே நேர்ந்து கொண்டிருக்கிறது.

ஹிந்து பத்திரிகையில் மாலினி பார்த்தசாரதியும் என்.ராமும் மனிதாபிமானம் என்பதே சற்றுமில்லாமல் கிளிப்பிள்ளை போல் ‘இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சனையில் இந்தியா தலையிடக் கூடாது’ என்று ஆர்பரித்துக் கொண்டிருக்கிறார்கள். ராமின் மார்க்சிசத்தின் சாயம் வெளுத்துக் கொண்டிருக்கிறது. நெஞ்சில் ஈரம் இல்லாத மார்க்சிசமும் மண்ணாங்கட்டியும் யாருக்கு வேண்டும்?

ஏஜெ நூல் பற்றிய குறிப்புகள் :

AJ: The Rooted Cosmopolitan

தமிழியல் வெளியீடு

27B High Street, Plaistow, London E13 OAD, United Kingdom

email info@tamiliyal.org.uk

telephone +44 208 472 8323

Price INR 250

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன