செல், சத்தமாகச் சொல்

 

குங்குமம் பத்தி – அற்ப விஷயம்-9

‘ஏதாச்சும் ப்ராப்ளம்னா உடனே கூப்பிடுங்க சார். என் செல்ஃபோன் நம்பரை நோட் பண்ணிக்குங்க’ இப்படிச் சொன்னவர் மத்திய அரசு தொலைபேசித் துறை ஊழியர். நீண்ட காலமாகப் பரிச்சயமானவர். தீபாவளி, பொங்கல், கையிருப்பு, பையிருப்பு குறைகிற நேரங்களில் அவருக்கு என் நினைவு வரும். டெலிபோன் இல்லாமல் ரிசீவரை மாத்திரம் பிய்த்து எடுத்துத் தோளில் தொங்கவிட்டுக் கொண்டு சர்ரியலிச ஓவியத்திலிருந்து இறங்கி வந்த மாதிரி வீட்டுப் படியேறுவார். அறைக் கோடியில் சின்ன மேசை போட்டு பிரதிட்டை செய்திருக்கும் கருப்புத் தொலைபேசியை அன்போடு பார்த்தபடி என்னை நலம் விசாரிப்பார். பத்து வருடம் முன்னால் தொலைபேசி மத்திய அரசு ஏகபோகமாக இருந்தபோது ஆடிக்கு அம்மன் கூழ் ஊற்ற, ஊரில் (செங்கல்பட்டு பக்கம்) அந்தோணியார் திருவிழா, பக்ரீத் விருந்து என்று சர்வமத சமரசமாக இவருக்கு அன்பளிப்பு கொடுத்து, என் தொலைபேசியில் டயல் டோன் வர காப்புறுதி செய்து வைத்திருந்தேன். இப்போது அவர் மார்க்கெட் இல்லாத நடிகை போல் சுரத்தே இல்லாமல், ஆனால் படுபிசியாகக் காட்டிக்கொண்டு அவ்வப்போது வந்து நலம் விசாரிக்கிறார்செல்போன் வந்தாலும் வந்தது. மத்திய சர்க்கார் ஆதிக்கம் இந்த ஒரு விஷயத்திலாவது போயே போச்சு. எம்.எல்.ஏ, எம்.பியிடம் எல்லாம் போய் சிபாரிசு கடுதாசி வாங்கி டெலிபோனுக்கு மனுப்போட்டு விட்டு டெபாசிட்டைக் கட்டிவிட்டு வருடக் கணக்காகக் காத்திருந்த அந்த நாள் இனி வரவே வராது. அப்போதெல்லாம் பத்திரிகையைத் திறந்தால் கட்டாயம் ஏதாவது ஒரு பக்கத்தில் படிக்கக் கிடைக்கும் செய்தி இந்த மாதிரி – ‘ஆனைக்கவுனி பகுதியில் ஒரு மாதமாக தொலைபேசிகள் வேலை செய்யாததால் வர்த்தகம் பாதிப்பு. வியாபாரிகள் தொலைபேசிகளோடு சவ ஊர்வலம் நடத்தி, போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.’

ஆனைக்கவுனியும் அமிஞ்சிக்கரையும் நல்லாவே இருக்கு. அங்கே கடைகண்ணியும் தான். கடையில் கல்லா பக்கம் வருடம் ஒருதடவை வைக்கும் சந்தனமும் குங்குமமும் நிரந்தரமாக அழியாமல் பழைய தொலைபேசி உட்கார்ந்திருக்கிறது. ஆனாலும் எந்த அண்ணாச்சியும் அதை எதற்காகவும் எடுப்பதில்லை. பையில் ஒன்றுக்கு ரெண்டாக செல் அடிக்க அடிக்க, வியாபாரம்.

யாரிடம் எல்லாம் செல்போன் இருக்கு என்று கணக்கு எடுப்பதைவிட யாரிடம் இல்லை என்று சர்வே எடுப்பது சுலபமான காரியம். தெருவில் வெய்யிலோ, மழையோ, சதா செல்லடித்துப் பேசியபடி தான் சகலரும் நடந்து போகிறார்கள். தலையை வளைத்து காதுப்பக்கம் சின்ன செல்போனை எப்படியோ கீழே விழாமல் பிடித்தபடி மோட்டார் சைக்கிளில் ஊர்ந்துகொண்டு பேசுகிறார்கள். நாற்சந்தியில் நிற்கும் போலீஸ்காரரும் அவ்வப்போது சட்டைப்பையில் செல்போன் அடிக்க சிக்னலை இயக்குகிறார். முந்தைய சந்திப்பில் பச்சை விளக்கு போட்டு அவர் சகபாடி ‘மிஸ்ட் கால்’ கொடுக்கிறார். கரபுர என்று வயர்லெஸ் தேவையே இல்லை.

பெண்களுக்கு செல்போன் என்னமோ மற்ற எல்லோரையும் விட அந்தரங்க சிநேகிதியாகிப் போயிருக்கிறது. கூட்டத்துக்கு நடுவிலோ, புது இடத்திலோ, யாரையாவது பார்க்கப் போய்க் காத்திருக்கும்போதோ கட்டாயமாக செல்போனில் பேசாத பெண்ணை இந்த ஜன்மத்தில் இனிப் பார்க்கப் போவதில்லை. வெளிநாட்டிலும் இதே கதைதான். மனோதத்துவ ரீதியாக ஆராய்ச்சி செய்து ஒரு லண்டன் பத்திரிகையில் வந்த செய்திப்படி இந்த மொபைல் பெண்பேச்சு பல நேரத்தில் ‘சும்மா’ தான். அந்தப் பக்கத்தில் யாரும் இல்லாமல் பொய்யாக இப்படி செல்லில் பேசுவது புது சூழலில் தனக்குத் தானே துணிச்சல் ஏற்படுத்திக் கொள்ளவும், ‘நான் தனியா இல்லே’ என்று பார்க்கிறவர்களுக்கு அறிவிக்கவுமான தன்னிச்சையான செயல் என்கிறார்கள். வெளுப்போ, கருப்போ, பயம் பயம்தான்.

நம்ம ஊரில் சாதாரணமாகவே மைக்கை முழுங்கின மாதிரித்தான் நாமெல்லாம் பேசுவது. அதுவும் நாலு பேர் இருக்கும் இடத்தில் செல்போனில் சத்தமாகப் பேசுவதில் என்னமோ ஓர் அலாதி இன்பம். போதாக்குறைக்கு ஐந்தும் பத்தும் கட்டணம் கொடுத்தால் விதவிதமான ரிங்க்டோனை மொபைலில் இறக்கிக் கொள்ள வசதி இருப்பதால், ஊருக்குப் போக ரயில் ஏறும்போது யார் மொபைலோ ‘மதுரைக்குப் போகாதடீ’ என்று கட்டளையிடுகிறது. தியேட்டரில் முதலிரவுக் காட்சி வரும்போது எங்கோ செல்போனில் அட்வான்ஸ் ஆகக் குழந்தை அழுகிறது. ஆபீசில் இருந்து சாயந்திரம் கிளம்பும்போது கவுசல்யா சுப்ரஜாராமா என்று வேறு யாரோ அகாலமாக திருப்பதிப் பெருமாளைப் பள்ளி எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள். காண்டோம் காண்டோம் என்று சர்க்கார் தயவில் புதுசாக ஒரு ரிங்க் டோன் அறிமுகமானதைக் கண்டோம் கண்டோம். சர்வம் சத்த மயம்.

ஜப்பானில் நூறுபேர் உட்கார்ந்தும் நெருக்கியடித்து நின்றும் பயணம் போகிற புறநகர ரயிலில் எல்லோர் கையிலும் செல்போன் உண்டு. ஆனாலும் ஆழ்ந்த அமைதி கம்பார்ட்மெண்டில் நிலவுவது வாடிக்கை. சுபாவமாகவே அதிர்ந்து பேசாத அவர்கள் எல்லோரும் மும்முரமாக எஸ்.எம்.எஸ் அனுப்பி வெளியே மற்றவர்களோடு தொடர்பு கொண்டிருப்பார்களாம். அந்த அப்பாவி ஜப்பானியர்கள் ஒரு மண்டலம் சென்னை வந்துபோனால் போதும். டோக்கியோ ரயிலும் சத்தம் போட்டுப் பேச ஆரம்பிக்கும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன