சில புதிய வெண்பாக்கள்

 

சமீபத்தில் எழுதியவை

காலம் முடியவே கண்ணாடிப் பெட்டியில்
ஞாலம் புகழ்ந்திடும் நந்தலைவர் – ஓலமிட்டே
சுற்றும் ஒலிவாங்கி சூழத் திறந்ததே
வெற்றிகளை வெல்வாய் விரைந்து

காவியும் பச்சையும் காற்றில் அசைந்திட
ஏவிய கைகள் இயங்கிடும் – பாவிகள்
பாஸ்பரஸ் கொண்டு எரித்ததின் சொச்சமே
ஈஸ்வர அல்லதெரெ நாம்.
முக்கால் முழுசென சொக்காய் அவிழ்த்து
சிக்கனமாய் தேடிச் சிலரையே – பக்குவமாய்க்
கொன்றார் நனைந்த கொலைவாள் சுமந்து
நின்றார் குறியும் தொலைந்து.

காற்று விலக்கும் குடைக்குள் முழுநிலாக்
கீற்றைப் புலரும் பரிதியே தீற்ற
புழையின் கரையில் படகுவர யாரோ
மழையில் நகரும் ரயில்.

அம்பல முற்றம் அசையும் திரையாக
கம்பளம் நெய்திடும் கார்முகில் – பம்மித்
தடவித் தரையைத் தழுவி அணைக்கும்
இடவத்துப் பாதி மழை.

ஓலைக் குடைபிடித்து வந்து உலகளந்த
மாலவா உன்நடையில் நிற்கிறேன் – காலையிலே
கொட்டும் மழைகொச்சி பந்தாம் (Bandh) கடையில்லை
பட்டுத் துணி,குடை தா.

பக்கெட்டு சாம்பார் பரவசமாய் மெய்கலந்த
கிக்கின் லகரி உசுப்பேற்ற – பக்குவமாய்
சட்டினி சக்களத்தி தொட்டணைத்து முத்தமிடும்
இட்டலிக்கு உண்டோ இணை.

அம்பாடிக் கண்ணன் அம்பலத்தில் பாயசம்
கும்பாவில் மாந்தி மடுத்த்ப்போள்- ‘சும்மாவா!’
சேட்டன் விளிகேட்டு சாக்லெட் பொதிகொள்ள
ஓட்டமாய் வந்நது இன்னு.

வேரெங்கே விழுந்து விலகித் தழுவுமழை
நீரெங்கே நீந்திடும் மீனெங்கே – நாரையெங்கே
ஓசையின்றித் தேடி உருகுமே என்மர
மேசையில் தாமரைப் பூ.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன